இந்த கோபுரம் தாக்குதல் நடந்த காலத்தில் இல்லை; இது குறித்துப் பின்னர் வரும். கோயில் அடையாளத்துக்காகச் சேர்த்துள்ளேன்.
அரங்கனின் பல்லக்கும், பரிவாரங்களும் அக்கரையை அடையும்வரை பொறுத்திருந்து பார்த்த சிலர் மீண்டும் திருவரங்கம் நகருக்குள் திரும்பினார்கள். கணுக்கால் ஆழத்துக்கும் மேல், முட்டளவு ஆழத்துக்கும் மேல் இடுப்பளவு ஆழமாக இருந்த இடங்களையும் தாண்டி அரங்கன் சென்று கொண்டிருந்தான் ஒரே ஒரு தீவர்த்தியின் உதவியோடு ஒளிந்து மறைந்து திருடனைப் போல் சென்று கொண்டிருந்தான்.கோலாகலமாகச் செல்ல வேண்டியவன், அரசனைப் போல் செல்ல வேண்டியவன். இக்கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மக்கள் குவித்த கரங்களைப் பிரிக்கவில்லை. கண்ணீர் தாரை தாரையாக வழியப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அரங்கன் பத்திரமாய் மறுகரையை அடைய வேண்டுமே என்பதே அவர்கள் கவலையாக இருந்தது. அரங்கன் அக்கரையை அடைந்துவிட்டான். இவர்களும் திரும்பினார்கள். இதில் அரங்கனோடு அரங்கன் சென்ற பாதையிலேயே செல்ல விரும்பினவர்களும் அப்பாதையிலேயே செல்ல ஆரம்பிக்க, திருவரங்கத்தின் மூலவரைக் காக்கும் எண்ணத்தோடு மற்றவர்கள் நகருக்குள் திரும்பினார்கள்.
விரைவில் ஒரு போர் இருக்கிறது என்ற எண்ணமும் அவர்களிடையே எழுந்தது. கோயிலில் அரங்கன் கிடைக்கவில்லை என்றதும், கோயிலின் சொத்துக்கள், நகைகள், ரத்தினங்கள் கிடைக்கவில்லை என்றதும் வரப் போகும் கொடியவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். சென்ற முறைத் தாக்குதலின் போது அருகிலுள்ள ஆதிநாயகன் கோயிலின் மூலவரான ரங்கநாதரைக் கைகளை உடைத்துச் சேதப் படுத்தி, சேஷன் மடியிலிருந்து கீழே இறக்கிப் போட்டு என்ன என்ன என்னமோ செய்து விட்டனர். அப்போது எப்படியோ இங்கே ரங்கநாதரைக் காப்பாற்றி விட்டார்கள். ஆனால் இம்முறை அவர்கள் முக்கியக் குறியே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தான். ஆகவே மூலவர் காக்கப்பட வேண்டும்.
கோயிலின் ஆர்யபடாள் வாயில் கதவைத் திறந்தால் உள்ளே நிலைவாயில் அருகே கற்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்களோடு நின்று வேலையை மேற்பார்வை மட்டுமில்லாமல் கூட நின்று தானும் வேலை செய்து கொண்டிருந்தார் பெரியவர் அவர் பெயர் வேதாந்த தேசிகர். முக்கியமான ஜனங்கள் ஊரை விட்டு வெளியே போய்விட்டாலும் கோயிலைச் சார்ந்த முக்கியமான பணியாளர்களில் பலருக்கும் மூலவரான பெரிய பெருமாளை விட்டுப் பிரிய மனமில்லை. அவர்களைப் பொறுத்தவரை மூலவர் பெரிய பெருமாள் வெறும் சுதையால் ஆன விக்ரஹம் இல்லை. சாந்நித்தியம் நிரம்பிய உயிர்ச் சக்தி ததும்பிய சொரூபமே அவர் தான். அவர்களை எல்லாம் அவர் தான் இத்தனை நாட்களாகக் காத்து வந்திருக்கிறார் என்பது உண்மை தான். ஆனால் இப்போது அவர்களை எல்லாம் வெட்டிக் கொன்றுவிட்டு அவரையும் துண்டு துண்டாக உடைக்க ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது. அந்தக் கூட்டத்தினின்று பெரிய பெருமாளை எப்பாடு பட்டேனும் காக்க வேண்டும். அதற்கு நம் உயிர் போனாலும் லட்சியம் இல்லை.
அப்படிப்பட்ட மக்கள் அனைவரும் அன்று கோயிலுக்குள் கூடி அரங்கனை மறைக்கும் திருப்பணியைச் செய்து வந்தனர். முதலில் ஆர்யபடாள் வாயிலுக்கருகே கல்சுவர் எழுப்பிக் கோயிலைக் கோட்டை போல் மாற்றிவிட்டால் உள்ளே இருப்பவர்களுக்கு ஆபத்து வராது எனப் பூரணமாக நம்பினார்கள். அதே போல் எம்பெருமான் அடியார்களான பல பெண்களும் அங்கேயே தங்கி இருந்தனர். அவர்கள் அரங்கனுக்கு முன்னால் மட்டுமே ஆடிப் பாடுவார்கள். அரங்கனைத் தவிர மற்றவர்களுக்கு அவர்களின் இனிமையான சங்கீதமோ, ஒயிலான நாட்டியமோ காணக் கிடைக்காது. அரங்கன் இங்கே இருக்க நாங்கள் வெளியே செல்வதா? பின் வேறு யார் முன்னிலையில் எங்கள் கலையை நாங்கள் காட்டி ஆனந்திப்பது? திட்டவட்டமாக மறுத்தனர் அந்தப் பெண்களும். இதைத் தவிர வயது முதிர்ந்த பல பெரியவர்களும் கோயிலையே கதி என நம்பி வந்தவர்களும் அங்கே இருந்தனர். அனைவரையும் காக்கவேண்டி நகரப் படையினர் அனைவரும் மும்முரமாக இருந்தனர்.
அழகிய மணவாளர் காவிரியைக் கடந்து தெற்கே சென்று கொண்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்ததும், திருவரங்க நாச்சியாரின் உற்சவ விக்ரஹத்தையும் ஒரு பல்லக்கில் வைத்து அணிமணி ஆபரணங்களைப் பெட்டியில் வைத்து சில ஆட்கள் காவிரிக்கரை வழியாக மேற்கு நோக்கிப் பயணப்பட்டனர். அரங்கன் தெற்கே சென்று கொண்டிருக்க, நாச்சியாரோ, மேற்கே. இனி இருவரும் சேர்வது எப்போது? யாருக்குத் தெரியும்! :( அடுத்ததாக அவர்கள் செய்த முக்கியக் காரியம் கோயிலின் தானியக் களஞ்சியத்தைக் காப்பது. அதையும் செய்து முடித்தார்கள். ஆயுதங்களைத் தயார் செய்து வரப் போகும் எதிரியைத் தாக்குவதற்கு ஆயத்தம் செய்து கொண்டார்கள். எல்லாம் சரி, பெரிய பெருமாள்?? ஆஹா, இதோ, அவரையும் பாதுகாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால்.........ஆனால்........ இது என்ன, சந்நிதியை மறைத்துச் சுவர் ஒன்று! ஆம், அரங்கன் சந்நிதியை மறைத்துக் குலசேகரன் படியின் மேலேயே கல்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொத்து வேலையில் முக்கியமாக வேதாந்த தேசிகரும் ஈடுபட்டு முழு முனைப்போடு செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு கல்லாக வைக்க, வைக்க பாம்பணையில் துயிலும் அரங்கன் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்தான்.
இதோ அவன் திருவடி, அனைவரும் நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள், பின்னால் எப்போது பார்ப்போமோ! பார்க்கையில் எத்தனை பேர் உயிரோடு இருப்போமோ, தெரியாது! இதோ அவன் திருமுகம். தெற்கே நோக்கிய வண்ணம் இருக்கும் அந்த அருள் விழிகளை இதோ இந்தக் கல்சுவர் மறைக்கப் போகிறது. அனைவரும் பாருங்கள்; நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரங்கனின் அருளை உங்கள் மனதில் நிரப்பிக் கொள்ளுங்கள். இந்த அருளின் பலத்திலேயே வரக்கூடிய கடுமையான சோதனை நாட்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். அத்தகைய சக்தியை இதோ அரங்கன் நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறான். ஆகவே உங்கள் கண் நிறைய, மனம் நிறைய அரங்கனை நிரப்பிக் கொள்ளுங்கள். அவன் அருள் பிரவாகத்தில் மூழ்குங்கள்.
அனைவரும் கண்ணீர் வடிய வடிய வேலை செய்தார்கள். ஒரு சமயம் அரங்கனைப் பாரத்த வண்ணம். மறு சமயம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுத வண்ணம். அவர்கள் பார்வையிலிருந்து மெல்ல மெல்ல அரங்கன் மறைந்தான். தினம் தினம் வழிபாட்டில் சிறிது நேரம் போடப்படும் திரையையே எப்போது தூக்குவார்கள், எப்போது அவனைக் காணுவோம் எனத் துடிக்கும் அந்த மக்கள் இப்போது போடப்பட்டிருக்கும் இந்தக் கல்திரையைக் கண்டு உடலும், மனமும் பதறத் துடிதுடித்து அழுதார்கள்.
உதவி செய்த நூல்கள்: ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா, மற்றும் வைணவஸ்ரீ, Ulugh Khan’s expedition and the sack of Srirangam temple.
படங்கள் உதவி: தற்சமயம் கூகிளார் தான். படங்கள் எடுக்கணும். கொஞ்சம் வெயில் கடுமை. போகமுடியலை. மாலை வேளைகளில் கூட்டம். :)))))
11 comments:
இப்பொழுது கண்முன் நடப்பது போலவே
வர்ணிக்கப்பட்டு இருப்பதும்
அந்தப் பெருமாள் அருளே
.
சுப்பு ரத்தினம்.
ஸ்ரீ வேதாந்த தேசிகர் இந்தத் திருப்பணியைச் செய்தாரா.?
புதுப் புது தகவலகள் கொடுத்து அசரவைக்கிறீர்கள் கீதா.உள்ளில் இருந்த பெருமான் இவ்வுள்ளூர் பெருமான். அவன் திருப்பாதங்கள் சரணம். புகைப்படத்தத் தனியாகப் போட்டால் போகிறது. வெயிலில் செல்ல வேண்டாம்.
நீங்கள் என்னைவிடச் சிறியவராக இருந்தாலும் கிடைத்தற்கரிய விஷயங்களை சொல்வதால் உங்களுக்குப் பாத நமஸ்காரங்கள் செய்கிறேன்.
//இப்பொழுது கண்முன் நடப்பது போலவே
வர்ணிக்கப்பட்டு இருப்பதும்
அந்தப் பெருமாள் அருளே//
உண்மை ஐயா. அவனருள் இன்றி இதை எழுதும் சந்தர்ப்பமே வாய்த்திருக்காது. வருகைக்கு நன்றி.
.
ஆமாம், வல்லி, வேதாந்த தேசிகர் இதுக்கு அப்புறமும் அழகிய மணவாளர் திரும்பி வரும் வரைக்கும் இருந்திருக்கார். ஒவ்வொண்ணா எழுதணும். குருபரம்பரை படிச்சிண்டிருக்கேன் இப்போ. அவங்க ஸ்ரீரங்கத்திலே செய்த சேவைகளை எல்லாம் பத்தித் தெரிஞ்சுக்கணும். அந்தக் காலத்துத் தமிழ் தான் கொஞ்சம் நடு நடுவிலே ஹிஹிஹி...... ஒரு மாதிரி சமாளிக்கலாம்.
சொல்ல மறந்திருக்கேனே, அழகிய மணவாளர் பிள்ளை லோகாசாரியர் தலைமையில் ஸ்ரீரங்கத்தை விட்டுச் சென்றார். பதிவிலேயும் அதை எழுத விட்டுப் போயிருக்கு! :(
//நீங்கள் என்னைவிடச் சிறியவராக இருந்தாலும் கிடைத்தற்கரிய விஷயங்களை சொல்வதால் உங்களுக்குப் பாத நமஸ்காரங்கள் செய்கிறேன்.//
நாராயணாயேதி சமர்ப்பயாமி!
-ஸ்ரீரங்கம் கோவிலில் ஒரு கோபுரம் சமீபத்தில் இளையாராஜா கைங்கர்யத்தில் (லும்) கட்டப் பட்டதோ?
-உணர்ச்சிகரமாக இருக்கிறது....
-//.....அணி ஆபரணங்களையும் ஒரு பெட்டியில் வைத்து உடன் எடுத்துச் சென்றனர்//
இந்தக் காலமாக இருந்தால் அவற்றை எப்படி அடிப்பது என்று வேகமாக யோசித்திருப்பார்கள்!
//ஸ்ரீரங்கம் கோவிலில் ஒரு கோபுரம் சமீபத்தில் இளையாராஜா கைங்கர்யத்தில் (லும்) கட்டப் பட்டதோ?//
ஆமாம், படத்தில் காணப்படும் இந்த தெற்கு கோபுரம் தான் எண்பதுகளில் கட்டப்பட்டது. இதன் கதை தனியாக வரும். இதைக் கட்டக்கூடாது என ஒரு சாராரும், கட்டவேண்டும் என மற்றொரு சாராரும் கூறி இருக்கிறார்கள். இலங்கையைப் பார்த்தபடி பெருமாள் இருப்பதால் கோபுரம் கட்டினால் மறைக்கப்படும் என்பது சிலர் கருத்து. சிலருக்கு அது மூட நம்பிக்கையாய்த் தோன்றியது.
உணர்ச்சிகரமாக இருக்கிறது....//
எது இளையராஜா கைங்கரியமா???????????
ஆமாம், இந்தக் காலத்தில் எல்லாருக்கும் அவங்க அவங்க சம்பாதனை தான் முக்கியம். :((( கலியுகம்!
காட்சிகள் கண் முன் வந்து போகிறது அம்மா... நன்றி...
ராஜகோபுரத்தில் உள்ள ஆறாம்நிலை மட்டும் இளையராஜாவின் பொருளுதவியால் கட்டப்பட்டது. கோவிலிலும் மாடர்ன் டே கல்வெட்டு இதைச் சொல்லி இருக்கு.
உங்க ரங்கன் பதிவுகளுக்கு அப்பப்ப நம்ம துளசிதளத்தில் லிங்க் கொடுக்கணும்.நம் பயணத்திலமினி திருவரங்கம்தான் சில நாட்களுக்கு.
அட்வான்ஸ் நன்றிகள் கீதா.
Post a Comment