எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, September 08, 2012

ஸ்ரீராமுக்கு ஒரு சின்ன(:D) பதில்


ஸ்ரீராம் முக்கியமான கேள்வி ஒன்றைக்கேட்டிருக்கிறார். அரங்கன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள சக்தியற்றவனா என அப்போது யாருமே கேள்வி எழுப்பவில்லையா எனக் கேட்டுள்ளார்.  அனைவருக்கும் தோன்றும் கேள்வி இது.  ஏன் நம் நாட்டு நாத்திகவாதிகள் கூட தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள வக்கில்லாத உங்கள் கடவுள் உங்களைக் காப்பாற்றுவார் என எப்படி நம்புகிறீர்கள் எனக் கேட்டது உண்டு தான்.  இங்கே அரங்கனுக்கு அந்த சக்தி இருந்தாலும், இப்போது அவனை நம் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.  மேலும் படை எடுத்து வந்திருப்பது யார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

படை எடுத்து வந்திருப்பதோ மாற்று மதத்தினர்.  விக்ரஹ ஆராதனையே கூடாது என்பவர்கள்.  விக்ரஹங்களை நொறுக்கித் தள்ளுபவர்கள்.  அப்படிப்பட்டவர்கள் கைகளில் இந்த அரிய பொக்கிஷங்கள் கிடைத்தால் என்ன ஆகும்னு சொல்ல வேண்டியதில்லை.  கை, வேறு கால் வேறாக இப்போதும் பல சிற்பங்களைக் காண்கின்றோம்.  பல சிற்பங்கள், விக்ரஹங்கள் பூமிக்கடியிலிருந்து தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கின்றன.  இவை எல்லாம் புதைக்கப்பட்ட காலம் எப்போது எனச் சொல்ல வேண்டியதில்லை.  நம் நாட்டுச் செல்வங்களைக் காக்க வேண்டியே மக்கள் இம்மாதிரியான ஒரு நடவடிக்கையை எடுத்தனர்.  மேலும் இது இயற்கைச் சீற்றங்களினால் விளைந்த ஆபத்து இல்லை.  மனிதரால் நேர்வது.  மனித மன வக்கிரங்கள் எப்படி நடந்து கொள்ளும் என்பதைச் சொல்ல முடியாது.  விக்ரஹத்தைப் பாதுகாக்கவில்லை எனில் கோயில் சொத்துக்களுக்கும் ஆபத்து நேரிடும் என்பதோடு, மூலவருக்கும் ஆபத்து நேரிடலாம்.  கோயிலும் பாதுகாக்கப்பட வேண்டும், அரங்கனின் சொத்துக்களும் பாதுகாக்கப் படவேண்டும், அரங்கனும் பத்திரமாக இருக்க வேண்டும்.  அதற்கு அரங்கனை அங்கிருந்து அகற்றுவதே சரி.  அழகிய மணவாளர் இல்லை எனில் அவர்கள் கோபம் வேறு விதத்தில் திரும்பும் என்பதை அறிந்திருந்தார்கள்.  எனினும் அப்போது இந்த முடிவே சரியெனப் பட்டது.  தொலைதூரம் கொண்டு போய்விட்டால் நல்லது என நினைத்தனர்.  விக்ரஹங்களில் இறைவனைக் காணும் அவர்கள் இப்போது தங்கள் சொந்தக் குழந்தையை எப்படிப் பாதுகாத்து ஒளித்து மறைத்து வைப்பார்களோ அவ்வாறே வேற்றிடம் தேடிச் சென்று மறைத்தும் வைத்தனர்.  இது ஒரு காரணம்.

இன்னொன்று ஸ்ரீரங்கத்து மக்கள் இயல்பாகவே ரங்கனிடம் பாசம் மிகுந்தவர்கள்.  அரங்கன் அவர்களின் உயிர்; நம்பிக்கை.  அவனை நினையாமல், அவனைப் பாராமல் அவர்களுக்கு அன்றாட வேலைகள் நடவாது.  நெல் படியளக்கையில் கூட முதல் அளவை ரங்கனுக்குத் தான்.  ரங்கா எனச் சொல்லி அளந்து போட்ட பின்னரே கணக்குத் தொடரும். இன்றும் இது நடக்கிறது. எனில் இந்த நிகழ்வு நடந்த கால கட்டத்தில் கேட்கவே வேண்டாம்.  அவர்களின் உயிரே அந்த அரங்கனிடம் தான் இருந்தது.  உயிருக்கு உயிரான அரங்கனைத் தன்னந்தனியே அந்நியர் கைகளில் மாட்ட விட்டு விட்டு அவர்கள் மட்டும் பாதுகாப்பான இடம் தேடிச் செல்வார்களா?  அப்படி விட்டு விட்டுப் போனால் மீண்டும் அரங்கனைக் காண முடியுமோ, முடியாதோ!  அதோடு தினம் தினம் அரங்கனைக் காணாமல் அவன் ஆராதனைகளைப் பாராமல் அவர்கள் ஒரு கவளம் அன்னம் கூட உண்ண மாட்டார்கள்.  அரங்கன் எங்கே இருப்பானோ அங்கே அவர்கள் இருப்பார்கள்.  அப்படிப் பட்ட மக்களிடமிருந்து அரங்கனைப் பிரிக்க முடியவில்லை.  தப்பிச் செல்லுங்கள்;  ஆபத்து காத்திருக்கிறது என்றாலும் கேளாமல் அரங்கனே இருக்கையில் நாங்கள் எப்படிச் செல்வோம் என அரங்கனைப் பாதுகாக்க நினைக்கும் மக்கள்.  இம்மக்களையும் காக்க வேண்டும்.  இவை எல்லாவற்றையும் யோசித்து  கோயில் நிர்வாகத்தினர் அரங்கனை நகரை விட்டு வெளியே கொண்டு போகத் தீர்மானித்தனர். அப்போது அரங்கனுக்காக அங்கிருந்த மக்கள் அவனோடு சென்று விடுவார்கள் என நம்பினார்கள்.  ஓரளவு அப்படியே நடந்தது.

மூலவரையும் கோயிலையும் பாதுகாக்கவேண்டியும் இருந்தவர்களும் மற்றும்  திருவரங்கத்தை விட்டுச் செல்ல மனமில்லாத மக்களையும் தவிரப் பெரும்பாலோர் அரங்கனின் உலாவைப் பின் தொடர்ந்து சென்று விட்டனர்.  இதன் மூலம் அரங்கன் ஏதேனும் செய்தி சொல்கிறான் எனில் அது மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத்துவதும், அதற்கு ஏற்ற மன உறுதியைப் பெறுவதும் தான்.  மக்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டதால் தானே இந்நிலைமை.  ஒரு வேளை அன்னை பரமேஸ்வரி சநாதன தர்மத்துக்கு இப்போது கஷ்டகாலம் என வித்யாரண்யரிடம் சொன்னதை உண்மையாக்கவும் நடந்திருக்கலாம்.     வித்யாரண்யரின் சீடர்களின் அவசரத்தினால் வெறும் 200 ஆண்டுகளோடு இந்து சாம்ராஜ்யம் முடிவடைந்தது. :((( அதெல்லாம் இங்கே வராது.  என்றாலும் ஒன்றைத் தொட்டு மற்றவை நினைவில் வந்தன.  வித்யாரண்யர் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்தவர் இல்லையா! அதான்.


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு கேள்விற்கு விளக்கமான பதில்... அதன் மூலம் என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது... மிக்க நன்றி அம்மா... ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி...

ஸ்ரீராம். said...

உண்மைதான். நீண்ட பதிலுக்கு நன்றி. இந்தக் கருத்து என் மனதிலும் இருந்தது என்பதற்கு சாட்சிதான் [!] அந்தக் காலத்தில் இருந்த மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையையும் பக்தியையும் குறித்து மனதில் ஏற்பட்ட ஆச்சர்யத்தைத் தெரிவித்திருந்தேன். மக்களுக்குள் இருக்க வேண்டிய ஒற்றுமையை வலியுறுத்திய அரங்கன் : இப்போதும் கூட இந்தியாவுக்கு ஒரு பொது எதிரி வரும்போது மட்டுமே இந்தியர்களுக்குள் ஒற்றுமையைக் காண முடிகிறது! அது விளயாகட்டும், மற்ற விஷயங்களாகட்டும்...

//பல சிற்பங்கள், விக்ரஹங்கள் பூமிக்கடியிலிருந்து தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இவை எல்லாம் புதைக்கப்பட்ட காலம் எப்போது எனச் சொல்ல வேண்டியதில்லை. நம் நாட்டுச் செல்வங்களைக் காக்க வேண்டியே மக்கள் இம்மாதிரியான ஒரு நடவடிக்கையை எடுத்தனர். மேலும் இது இயற்கைச் சீற்றங்களினால் விளைந்த ஆபத்து இல்லை.//
இது மாதிரி புதைக்கப் பட்டு மறைக்கப் பட்டவை மட்டுமல்ல, காலவெள்ளத்தால் மூடிக் கொண்ட கோவில்களும் அங்கு இருந்த விக்கிரகங்களும் கூட இந்தக் காலத்தில் கிடைக்கும் இந்த லிஸ்ட்டில் வரும்தானே...

எல் கே said...

எத்தனையோ சோதனைகளி தாண்டி இருக்கிறோம். இந்த சொதநிகளும் அவனோட விளையாட்டுதானே

வல்லிசிம்ஹன் said...

நல்ல பதில் கீதா.
மூலவரை விட்டு வைத்தார்களே.

கருவறை சுவற்றுக்குப் பின்புறம் சில உற்சவர்களை ஒளித்துவைத்ததாக்ப் படித்த நினைவு.
நன்றிமா.

நெல்லைத் தமிழன் said...

மூலவரைச் சுற்றி சுவர் எழுப்பினார்கள் என்பது தெரிந்திருக்குமே