அரங்கனைத் தேடிச் செல்பவர்கள் தொடர வசதியாகத் துளசிச்
செடிகளைக் கொத்துக் கொத்தாகப் பிய்த்து வழி நெடுகப் போட்டுக்கொண்டே சென்றனர் அரங்கனோடு
திருவரங்கத்திலிருந்து கிளம்பியவர்கள் அனைவரும்.
அதோடு மட்டுமில்லாமல் அரங்கனுக்குப் பூசப்பட்ட பரிமள கஸ்தூரியின் வாசனையும்
சேர்ந்தே அரங்கன் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்தது. இந்த விஷயம் தான் அவர்களுக்குக் கவலை அளித்து வந்தது. இந்த அதிசயமான நறுமணத்தின் மூலம் அரங்கன் இருக்குமிடத்தைக்
கண்டு எதிரிகள் பின் தொடர்ந்தால் என்ன செய்வது எனக் கவலைப் பட்டனர். எனவே காடுகளுக்குள்ளும், சோலைகளுக்குள்ளுமே புகுந்து
சென்றனர். அந்நாட்களில் இயற்கை அன்னையின் வளத்தைக்
களவாடும் அளவுக்கு மனிதர் துணிய ஆரம்பிக்கவில்லை.
ஆகவே பூமித்தாய் தன் அனைத்து வளங்களோடும் பரிபூர்ண சர்வாலங்கார பூஷிதையாகவே
காட்சி அளித்தாள். விரைவில் திருச்சினாப்பள்ளி நகரின் கரையைக் கடந்து அருகிலுள்ள தொண்டைமான்
காட்டில் புகுந்தனர். அந்நாட்களில் திருச்சிராப்பள்ளி
சிறியதொரு நகரம். கோட்டையும், அகழியும் இருந்தன. நகரை அடுத்துக் கழனிகளும் சோலைகளும் கண்ணுக்கெட்டிய
தூரம் வரை காணப்பட்டன.
தொண்டைமான் காட்டில் ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்லலாம்
என பிள்ளை உலகாசிரியர் முடிவு செய்தார்.
ஏனெனில்
திருவரங்கத்திலிருந்து வேதாந்த தேசிகரும் மற்றப் பெரியவர்களும் வந்து சேர்ந்து கொள்வதாய்ச்
சொல்லி இருந்தனர். இன்றிரவு இங்கே தங்கினால்
அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். பின்னர்
நாளை பயணத்தைத் தொடங்கலாம் என நினைத்தனர்.
ஆனால் மறுநாள் பொழுது விடிந்தும் எவரும் வரவில்லை. எனவே அரங்கனோடு இருப்பவர்களுக்குக் கவலை அதிகரித்தது. ஆனாலும் இங்கே தங்குவது ஆபத்து என்று புரிந்து கொண்டிருந்தார்கள். ஆகவே அங்கிருந்து கிளம்பினார்கள். காட்டிலேயே பெரும்பாலும் சென்றனர். பிரதான சாலைகளைத் தவிர்த்தனர். சுற்று வழியாகவே சென்றனர். கூடச் சென்ற மக்களில் வசதி படைத்தோர் பல்லக்குகள்,
குதிரைகளில் பிரயாணம் செய்தனர். கால்நடையாகச்
சென்றவர்களே அதிகம். பரிசனங்கள் எனப்படும் கோயில் ஊழியர்கள் முன்சென்று வழிகாட்டுகையிலேயே
துளசிக் கொத்துக்களை அவர்கள் பறித்துக் கீழே போட்டுக் கொண்டு சென்றனர். பின்னால் பிள்ளை உலகாசிரியரும் அவர் சீடர்களும்
மற்ற மக்களும் செல்ல அரங்க்கன் பல்லக்கு அவர்களைத் தொடர்ந்தது. இரு தினங்கள் இவ்விதம் யாத்திரை செய்தவர்கள் களைப்புத்தாங்காமல்
ஓர் இடத்தில் தங்கினார்கள்.
அப்போது வேதாந்த தேசிகரின் சீடர்களில் ஒருவரான “பிரம்ம
தந்திர சுதந்திர ஜீயர்” என்பார் கவலையுடன் பிள்ளை உலகாசிரியரை அணுகி வேதாந்த தேசிகர்
இன்னமும் வந்து சேரவில்லை என்பதைக் குறித்த தம் கவலையைப் பகிர்ந்து கொண்டார். துளசிக் கொத்துக்களைப் பார்த்துக்கொண்டு வந்து சேர்வார்கள்
எனத் தாம் நம்புவதாப் பிள்ளை உலகாசிரியர் கூறி அவரைச் சமாதானம் செய்ய எச்சரிக்கை முரசு
அடித்தது. திடுக்கிட்ட அனைவரும் அரங்கனைப்
பல்லக்கோடு மறைத்துவிட்டுப் பார்க்க, வந்தவ்வர்கள் ஸ்ரீரங்கத்து வாசிகளான சில நண்பர்களே.
அவர்கள் போர் மூண்டு ஸ்ரீரங்கம் எதிரிகள் கைகளில் சிக்கிக் கோயிலிலும் 12,000-க்கும்
மேற்பட்ட அந்தணர்கள் உயிர் விட்டதையும், பல பெண்கள் அரங்கன் சேவையைத் தவிர வேறொன்றும்
அறியாப் பெண்கள் எதிரிப்படைகளால் பிடித்துச் செல்லப்பட்டதாகவும், அரங்கனுக்குத் தவிர
மற்றவருக்கு ஆடியோ, பாடியோ காட்டாத பெண்களைத் துன்புறுத்தி தங்களுக்காக ஆடும்படியும்,
பாடும்படியும் செய்வதையும் கூறிவிட்டு, அழுது கொண்டே தாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக்
கூறி வருந்தினார்கள்.
அவர்களில் சொந்த சொத்துக்கள் பறிபோனதால் கவலைப்படுவதாக
நினைத்த மற்றவர்கள் அவர்களைச் சமாதானம் செய்ய அவர்களோ, அரங்கமே எரிந்து போனதை நினைத்துத்
தாங்கள் வருந்துவதாய்க் கூறிவிட்டு, பேரழகு வாய்ந்த திருவரங்க நகரம் இன்று விதவைக்
கோலம் பூண்டு கழுகுகளும், ஓநாய்களும் திரிந்து கொண்டிருக்கக் காணப்படுவதாய்க் கூறினார்கள். இவற்றைக் கேட்ட பிரம்மதந்திர ஜீயர் தம் ஆசானுக்கு
என்ன நேர்ந்ததோ என்ற கவலையில் திருவரங்கத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார். இங்கே இருந்தவர்களுக்கு அவரைத் திரும்ப அழைத்து
வருவது பெரும் பிரம்மப் பிரயத்தனமாகி விட்டது. ஆனாலும் அதையும் மீறிக்கொண்டு ஓட ஆரம்பித்த
அவர் கண்களில் இருந்து தாரையாய்க் கண்ணீர் மழை பொழிந்தது. இதைக் கண்ட பிள்ளை உலகாசிரியர், திகைத்துப் போய்
அரங்கா, இதுவும் உன் சோதனையோ எனக் கலங்கி நின்றுவிட்டார்.
மனம் தளர்ந்த உலகாசிரியரைத் தேற்றிய கூரகுலோத்தமதாச
நாயனார் என்பவர் அவர் நம்பிக்கையும், தைரியமும் கொண்டு விளங்கினாலேயே மற்றவர்களும்
அந்த நம்பிக்கையும் தைரியமும் இழக்காமல் இருப்பார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அவரை
மேற்கொண்ட பயணத்துக்குத் தயாராக்கினார். தில்லிப்
படைகள் காட்டுக்குள்ளேயும் அரங்கனைத் தேடி வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம்
மேலோங்க அந்த ஊர்வலம் அந்த இடத்தை விட்டு அகன்றது. மாலை மயங்கும் நேரம். காட்டினிலே தங்குமிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்
அரங்கனோடு பயணித்தவர்கள். பிள்ளை உலகாசிரியர்
மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது
திடீரெனக் காட்டிலிருந்து திடு திடு வென சப்தங்கள். சுற்றிலும் சூழ்ந்திருந்த காட்டுச் செடிகளும், மரங்களும்
அசைந்தன. மனிதர்கள் காலடி சப்தங்கள். தங்களுடன் வந்தவரல்லாது வேறு யார் இங்கே வந்திருப்பார்கள்? திகைத்த கூட்டம் சுற்றிச் சுற்றிப் பார்க்கக் கைகளில்
தூக்கிப் பிடித்த ஈட்டிகளோடும், வாள்களோடும் ஒரு சிறு கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. நீண்ட கொடிய மீசைகளோடும், ஆஜாநுபாகுவாகவும், திரண்ட
புஜங்களோடும் காணப்பட்ட அவர்கள் கள்ளக் கூட்டத்தைச்
சேர்ந்தவர்கள். சில கணங்களிலேயே அனைவருக்கும்
புரிந்து விட்டது. அந்த நாட்களில் தொண்டைமான்
காடும், அதன் சுற்றுப்புறங்களும் கள்ளர் கூட்டங்களுக்குப்பெயர் பெற்றிருந்தது. அத்தகையதொரு கூட்டத்திலேயே அவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.
என்ன செய்யப் போகிறார்கள்?
4 comments:
திருமங்கை ஆழ்வாரைக் திருத்தி
மாற்றி ஆட்கொண்ட அரங்கன் மீண்டும் கொள்ளையரிடமா மாட்டிக் கொண்டான்.
ஏன் இவ்வளவு சோதனை. எத்தனை அருமையாக வரலாற்றைக் கொண்டு செல்கிறீர்கள் கீதா. நன்றி.
அரங்கன் காரணமில்லாமல் சோதனையை வரவழைத்திருக்க மாட்டாரே...
வாங்க வல்லி, நன்றி.
வாங்க ஸ்ரீராம், இங்கே காரணம்லாம் ஒண்ணும் இல்லை. கள்ளர்கள் கும்பலாய்ச் செல்லும் மக்களை வழி மறித்து வழிப்பறிக்கொள்ளை அடிப்பது அந்நாட்களில் சகஜமான ஒன்று.
Post a Comment