எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, January 01, 2013

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!


கிட்டத்தட்ட மற்ற ஊர்களின் பிரம்மோற்சவம் போல ஸ்ரீரங்கத்தின் வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகும்.  இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிக்கிறார்.  இப்போதைய காலகட்டத்தில் தான் இது வைகுண்ட ஏகாதசி உற்சவம் என அழைக்கப் படுகிறது.  ஆனால் இதன் பெயர் உண்மையில் திரு அத்யயன உற்சவம் என்றே அழைத்து வந்தனர்.  விஷ்ணு ஆலயங்களின் ஆகம முறைகளை முறையே பாஞ்சாராத்ரம், வைகானஸம் என இரண்டாகப் பிரித்துள்ளனர்.  அவற்றில் பாஞ்சராத்ர ஆகமத்தில், ப்ரசின ஸம்ஹிதையில் மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை தொடங்கி இருபது நாட்கள் ஸ்ரீமஹா விஷ்ணுவான பெரிய பெருமாளுக்கு உற்சவம் செய்ய வேண்டும் எனச் சொல்லப் பட்டிருப்பதாக அறிகிறோம்.  அதன் படி மார்கழி மாத சுக்லபக்ஷத்தின் பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக அமைந்துள்ளது.  இதன் முதல் பத்து நாட்கள் பகல் பத்து எனவும், அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் அழைக்கப் படுகிறது.

பகல் பத்து என்ற முதல் பத்து நாட்கள் நடைபெறுவதே திரு அத்யயன உற்சவம் ஆகும்.  இந்தப் பத்து நாட்களிலும் பெருமாளின் முன்பு பன்னிரு ஆழ்வார்களும் பாடிய நாலாயிர திவ்ய ப்ரபந்தம் முழுதுமாகப் பாடப்பட்டு, அரையர்களால் அபிநயமும் பிடித்துக் காட்டப்படும்.  இந்தப் பகல் பத்து உற்சவம் தொடங்குவதற்கு முன்னர் முதன் முதல் திருமங்கை ஆழ்வார் பாடியருளிய திருநெடுந்தாண்டகம் பாடப்படும்.  இதுவே வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் ஆரம்பக் கொடியேற்றம் எனலாம்.  இதைத் தொடர்ந்து நடப்பதுதான் புகழ் பெற்ற அரையர் சேவை.  அரையர்கள் என்றால் அரசர்கள் என்னும் சொல்லின் திரிபு எனச் சொல்கின்றனர்.  இவர்களும் அரசர்கள் மகுடம் சூட்டிக் கொள்வதைப் போல் தலையில் பட்டுக்குல்லாய் அணியும் உரிமை பெற்றிருக்கின்றனர்.  அந்தக் குல்லாய்களை அணிந்து கொண்டே அபிநயம் பிடிப்பார்கள்.  அதோடு மட்டுமா?  இந்தப் பட்டுக்குல்லாய், நாம் குலசேகரன் படியில் நுழையும் இடத்தில் உள்ள ஜய, விஜயர்கள் தலையிலும் காணலாம்.  பெருமாளுக்கும் பட்டுக்குல்லாய் அணிவிக்கப்படுவது உண்டு.  கம்பளி போர்த்துவார்கள்.  மழை பெயதால் பெருமாள் நனையாமல் இருக்கத் துணிக்கூடாரம் குடை போல் விரிந்து அவரை மழையிலிருந்து பாதுகாக்கும்.  பெரிய பெருமாளுக்கும் குல்லாய் உண்டு. தாயாருக்கும் குளிரிலிருந்து பாதுகாப்புக் கொடுக்கின்றனர்.

அரையர் சேவையின் அரையர்கள் தங்கள் கைகளில் தாளங்களை ஏந்திக் கொண்டு பாசுரத்தின் பொருள் விளங்குமாறு அபிநயம் செய்தபடியே பாடுவார்கள்.  நடிப்பு, முத்திரைகள், இசை என நுணுக்கமான இந்தக் காட்சியானது பாசுரத்தின் பொருளை அப்படியே மனக்கண்ணில் தோன்றும்படிச் செய்துவிடும்.  பார்ப்பவர்கள் மெய்ம்மறந்து பார்க்கின்றனர்.  பகல் பத்து உற்சவத்தின் பெரும் சிறப்பு இந்த அரையர் சேவை. பத்து நாட்களிலும் தினம் இருமுறை நடைபெறும்  ஒவ்வொரு முறையும் குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெறும்.  அர்ச்சுன மண்டபத்தில் பெருமாள் ஆஸ்தானம் இருந்து அரையர் சேவையைக் கண்டு களித்துக் கொண்டே பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.  பாசுரங்கள் புரியாதவர்கள் கூட மனம் ஒன்றிப் போய் ஆழ்வார்களின் உள்ளம் பெருமாளின் கருணையில் தோய்ந்திருந்ததை நன்கு உணரும்படிச் செய்வதே அரையர் சேவையின் மகத்துவம்.

அடுத்தது நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து அர்ச்சுன மண்டபத்துக்குப் புறப்பாடு காணுதல்.  சாதாரணமாக எல்லாம் கிளம்பமாட்டார் நம்பெருமாள்.  நல்ல லக்னமாக நிர்ணயிக்கப் பட்ட வ்ருச்சிக லக்னத்தில் தங்கக்குடை பிடித்து முன்னே தீப்பந்தம் ஒளி வீசிச் செல்ல, வாத்தியங்கள் முழங்க ஆண்டாளம்மாள் ரங்கா, ரங்கா என அழைக்க சிம்ம கதியில் செல்வார் பெருமாள்.  பெருமாளைத் தோளுக்கு இனியானில் காண இயலாது.  இதற்கெனத் தனிப் பல்லக்கு உண்டு.  அந்தப் பல்லக்கில் பெருமாளைத் தோளில் தாங்கி வருபவர்களை "ஸ்ரீபாதம் தாங்குவார்" என அழைக்கின்றனர்.  இன்றைய நாட்களில் இது மருவி சீபாதந்தாங்கி என்றாகிவிட்டது.  நம்பெருமாளுக்குத் திரையிட்டு அலங்காரங்கள் செய்து முடித்தவுடன், "அருளப்பாடு ஸ்ரீபாதம் தாங்குவார்" எனக் குரல் கொடுத்து அழைப்பார்கள். ஸ்ரீபாதம் தாங்கிகள் உள்ளே செல்லக் கதவுகள் மூடப்பட்டுப் பின்னர் திறக்கையில் பேரொளிப் பிழம்பாய், அழகான அலங்காரங்களுடன், முகத்தில் குறுநகை விளங்க, கைகள் அபயம் காட்ட வெளிப்படுவார் நம்பெருமாள்.  பார்ப்பவரைப் பித்துப் பிடிக்கச் செய்யும் அலங்காரம்.  மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் அர்ச்சுன மண்டபம் நோக்கிச் செல்வார்.

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!"

எண்ணற்ற முறை தரிசித்து மகிழ்ந்த நாட்களை மனக்கண்களில் காட்சியாக்கிய அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.


இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

ஸ்ரீராம். said...

ஏகப்பட்ட விவரங்கள். அரையர்கள் அபிநயம் பிடித்துக் காட்டுவார்கள் என்றால் இப்போதுமா? இந்தமுறை நீங்கள் பார்த்தீர்களா? புகைப்படம் இருந்தால் பகிரலாமே! பிரபந்தப் பாடல்கள் அத்தனையும் தினமும் அந்தப் பத்துநாட்கள் முழுமையாகப் படிக்கப் படுமா?

தக்குடு said...

ரெங்கநாதர் நேர்லையே வந்த மாதிரி இருக்கு!! அரையர் சேவையோட விஷேஷம் பத்தி ஏற்கனவே கொஞ்சம் தெரிஞ்சு இருந்தாலும் நீங்க சொல்லும்போது அழகா இருக்கு. ரெங்க நாதர் சன்னதி தவிர வெளில எங்கையும் இதை அரெங்கேற்றம் பண்ணமாட்டா & இதை வீடியோ/புகைபடம் எடுக்க அனுமதியும் கிடையாது அப்பிடிங்கர்து உபரி தகவல்!

தக்குடு said...

அந்த ஊருக்கு குடி போனதுல நிறைய போஸ்ட் தேத்த முடியர்து போலருக்கே! நல்ல விஷயம் தான் ! :)

Geetha Sambasivam said...

வாங்க ராஜராஜேஸ்வரி, கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

வாங்க ஸ்ரீராம், இந்த வருஷம் அரையர் சேவை பார்த்தோம். புகைப்படம் எடுக்க அநுமதி இல்லை. நாலாயிரமும் அந்த பகல்பத்து, இராப்பத்து உற்சவ தினங்களில் பாடப் படும். முழுமையாகத்தான்! :))))

Geetha Sambasivam said...

அட தக்குடு! ஆச்சரியம், ஆச்சரியம், ஆச்ச்ச்ச்சரியம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.