எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, March 20, 2013

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், இராப்பத்து உற்சவம்!



பல  மாதங்கள் கழித்து இந்தப் பக்கத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இராப்பத்து உற்சவம் தொடங்குவதில் நிறுத்தி இருந்தேன்.  அதன் பின்னர் அடுத்தடுத்து விருந்தினர் வருகை, உடல் நலக்கேடு எனக் கணினி கிட்டே அவசியத்துக்கு மட்டும் வரும்படி ஆகி விட்டது.  ஆகவே இந்தப் பதிவை இப்போது தான் எழுதவே ஆரம்பிக்கிறேன்.  எழுதிவிட்டு உடனே போட எண்ணம்.  இராப்பத்தின் ஒவ்வொரு நாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆஸ்தானமிருந்துவிட்டு மூலஸ்தானம் திரும்பும் பெருமாள் வீணாகானத்தை ஏகாந்த சேவையில் கேட்ட வண்ணம் திரும்புவார்.  இராப்பத்தின் ஏழாம் நாள் தான் பிரபலமான திருக்கைத்தல சேவை.  அன்று பட்டாசாரியார்கள் தங்கள் கரங்களிலேயே பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு நம்மாழ்வாருக்கு எதிரே சேவை சாதிப்பார்கள்.  நம்மாழ்வார் நாச்சியார் திருக்கோலத்தில் அன்று காணப்படுவார்.  இவரைத் தான் பராங்குச நாயகி என்பார்கள்.  அவர் பாடிய பிரபந்தப் பாடல் ஒன்று கீழே காணலாம்.

வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே?

இவர் தம்மை நாயகியாகவும், பெருமாளை நாயகனாகவும்  பாவித்துக் கொண்டு பாடியவை இவை.  இறைவனை மனக்கண்ணில் கண்ணாரக் கண்டு அவனோடு தாம் பெற்ற இன்பத்தை அப்படியே சொல்லுகிறார்.  நெஞ்சம் திருமாலைத் தவிர வேறொருவரை நினைக்கக் கூடாது;  நாவும் அவன் திருநாமத்தை வாழ்த்திப் பாட வேண்டும்.  இவ்வுலகைப் படைத்துக் காத்து ரக்ஷிக்கும் திருமாலை வாழ்த்திப் பாடுவது அல்லாமல் இப்பிறவி எடுத்ததன் பயன் என்ன என்று கேட்கிறார் நம்மாழ்வார்.   இந்த இராப்பத்துத் திருநாட்களில் நம்மாழ்வாருக்கே முக்கியத்துவம்.  இவ்விதம் ஸ்ரீரங்கநாதனிடம் வேண்டிப் பெற்றவர் பரகால நாயகி என அழைக்கப்பட்ட திருமங்கை ஆழ்வார்.  நம்மாழ்வார் பராங்குச நாயகியாகத் தம்முள்ளே தனது ஆழ்ந்த பக்தியில் கொண்ட விரகதாபத்தினால் பராங்குச நாயகியானார் எனில் பரகால நாயகியான திருமங்கை ஆழ்வாரோ பெருமாளையே கொள்ளை அடித்தவர்.  இந்த இராப்பத்துத் திருநாளின் ஏழாம் நாள் திருக்கைத்தல சேவைக்குப் பின்னர் எட்டாம் நாளன்று தான் இந்தத் திருநாட்கள் ஏற்படவே காரணகர்த்தாவான திருமங்கை ஆழ்வாரின் வேடுபறி உற்சவம் நடைபெறும். 

பெருமாளுக்குச் சேவை செய்வதற்காகப் பணம் இல்லை என வழிப்பறிக் கொள்ளை செய்தவர் திருமங்கை ஆழ்வார்.  இவர் பெருமாளிடம் கொண்ட பக்தி எப்படிப் பட்டது தெரியுமா?

“வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த
  வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
  எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்
  புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே”

வில்லால் இலங்கையையே ஒரு கை பார்த்த ஸ்ரீராமனின் பின்னே சென்றுவிட்டதாம் அவர் மனம்.  யார் என்ன சொன்னாலும் ஏன் அந்தப் பெருமானே பொய் சொல்லி இருந்தாலும் அதைக் கேட்டுக் கொண்டு நம்பி அவரையே வணங்கி வழிபட்டு இருப்பேன்.” அப்படினு சொல்கிறார்.  இவர் தான் ஒரு சமயம் வழிப்பறியின் போது ஒரு திருமண கோஷ்டி வருவதாய்க் கேள்விப் பட்டுப் போய்க் காத்திருந்தார்.  வந்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.  சாக்ஷாத் ஸ்ரீமந்நாராயணனும், ஸ்ரீதேவியுமே மணமகனும், மணமகளுமாய் வந்தனர்.  தேவாதி தேவர்கள் உறவினர் கோலத்தில் கூட வந்தனர்.  பார்த்தார் கலியன்.  (கலியன் யாருனு கேட்கிறவங்களுக்கு, திருமங்கை ஆழ்வாரின் பெயர் கலியன் ஆகும்.) ஆஹா, நல்லதொரு வேட்டை தான் இன்னிக்கு. அப்படினு நினைச்சார்.  திருமண கோஷ்டி எதிர்பாராவண்ணம் அவர்களைத் தாக்கினார்.  ஆஹா, ஆனால் இந்த கோஷ்டியோ இதுக்குத் தானே காத்திருந்தது!  அவர்கள் தப்பி ஓடுவது போல் ஓட, கலியன் துரத்த, அங்கே ஒரு நாடகமே நடத்தப் பட்டது. கலியனுக்கு அது புரியவில்லை. காரியத்திலேயே கண்ணாக இருந்தார்.  உறவினர்கள், கல்யாண கோஷ்டியினர் அனைவர் பொருட்களும் கவரப் பட்டன.  இனி மிச்சம் இருப்பது, பெண்ணும், மாப்பிள்ளையும் தான்.  அவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம்னு சுற்றி உள்ளவர்கள் கேட்கக் கேட்க கலியன் விடவில்லை. பெண்ணை நகைகளை எல்லாம் கழட்டித் தரச் சொல்ல ஸ்ரீதேவியும் அவ்வாறே செய்தாள்.  அடுத்து மணமகன்.  மணமகனின் அனைத்து ஆபரணங்களும் கழட்டப்பட்டன.  மணமகன் பயந்த வண்ணம் ஓடுவது போல் பாவனை செய்ய, கலியனோ விடவில்லை.  இரு கைகளாலும் மணமகன் கைகளைப் பற்றி எல்லா நகைகளையும் கொடுத்தாச்சா என சோதனை செய்தார்.

ஆஹா, காலில் மெட்டி காணப்படுகிறதே.  ஆம், அந்த நாட்களில் பெண்ணிக்குத் திருமங்கலநாண் பூட்டப் படுவது போல் ஆணுக்குக் காலில் மெட்டி அணிவிக்கப் படும்.  இது இந்த ஆண்மகன் திருமணம் ஆனவன் என்பதற்கான அடையாளம்.  அந்த மெட்டியையும் விடாமல் கலியன் கழட்டச் சொல்ல, பெருமாள் கழட்டுவது போல் நடிக்கிறார்.  அது வரவே இல்லை.  எப்படி வரும்! வரவிடாமல் தடுப்பது அவன் தானே.  கலியனுக்குக் கோபம் முற்றுகிறது.  மணமகனைப் பயமுறுத்துகிறான்.  பயந்தது போல் நடித்த மணமகன் கலியனையே கழட்டி எடுக்கச் சொல்கிறான்.  குனிந்து மணமகன் கால்களைப் பற்றுகிறான் கலியன்.  ஆஹா, என்ன பாக்கியம், என்ன பாக்கியம்.  ஆனாலும் புரியாமல் மெட்டியைக் கழட்டுவதிலேயே ஈடுபடுகிறான்.  அதுவா வராமல் சண்டித்தனம் செய்யத் தன் வாயை பகவானின் திருப்பாதங்களில் வைத்துப் பற்களால் கழட்ட முயல, கலியன் காதுகளில் மெல்லக் கேட்டது ஒரு உபதேசம்.

“ஓம் நமோ நாராயணாய!”



7 comments:

Ranjani Narayanan said...

போன வருடம் திருவாலி திருநகரியில் வேடுபறி சேவித்து விட்டு,அப்படியே ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரத்திற்கும் வந்திருந்தேன்.

உங்கள் பதிவைப் படித்துவுடன் பெருமாளை சேவிக்கும் அனுபவத்திற்கு ஈடு உண்டா எனத் தோன்றியது.

வெகு சிறப்பாக பராங்குச நாயகி, பரகால நாயகியரின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்கள் அருமை...

உடல்நலம், மனநலம் இவை சரியான பின் தொடர வாழ்த்துக்கள்...

வல்லிசிம்ஹன் said...

Dear Geetha.hope you get better soon.

You are blessed to have witnessed all these heavenly divine experiences.
I am envious of Ranjani too.:)

Thank you for this beautiful narration./
power is erratic.
so please excuse commenting in english.

Geetha Sambasivam said...

ஆஹா, நிஜம்மாவே வல்லி சொல்றாப்போல் உங்களைப் பார்த்துப் பொறாமையா இருக்கு ரஞ்சனி. நாங்களும் திருவாலி திருநகரி வேடுபறிக்குப்போக நினைச்சுப்போம். கூட்டத்தை நினைச்சுத் தவிர்ப்போம். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன். கண்ணாலாவது பார்த்துப் பரவசமடையலாம்.

Geetha Sambasivam said...

வாங்க டிடி, உடம்பு இப்போப் பரவாயில்லைப்பா. மனதுக்கு ஒரு குறையுமில்லை. என்னிக்குமே நல்லாவே இருக்கு. :)))) ஆண்டவனுக்கு நன்றி.

குறையொன்றுமில்லை கோவிந்தா!

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, சரியாகணும்னு தான் ஆசையா இருக்கு. ஒரு நாள் நல்லா இருந்தா அடுத்த நாள் கால் தகராறு. :))) என்ன இருந்தாலும் என்னோட காலாச்சே. தட்டிக் கொடுத்துத் தான் வேலை வாங்கணும். :))))

இங்கே பவரே அதிசயமா இருக்கு. அதான் சாயங்காலம் கூடக்கணினியில் உட்காருகிறாப்போல் இருக்கு. :))))

ஸ்ரீராம். said...

படிச்சுட்டேன்.