எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, March 24, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! இராப்பத்து எட்டாம் நாள்


அவ்வளவு நேரமாகத் தான் தன் குதிரையில் இந்த மணமகனைத் துரத்தியதும், நகைகளைக் கழட்டச் சொன்னதும், அவன் பயந்து ஓடியதும் நினைவில் வர மீண்டும் நிமிர்ந்து அந்த மணமகனைப் பார்த்தான் பரகாலன் என்னும் நீலன்.  அப்போது, “நீ கலியன்!” எனச் சொல்லிச் சிரித்தான் அந்த மணமகன்.  என்ன? என ஓங்கி அதட்டிவிட்டு மீண்டும் அந்த மெட்டியைக் கழற்ற முயன்ற காதுகளில்  மீண்டும் ஒலித்தது “ஓம் நமோ நாராயணாய!”  நிமிர்ந்து நோக்கினான் கலியன் என அழைக்கப்பட்ட நீலன்.  அங்கே அவன் கண்டது என்ன?



சங்கு சக்ரதாரியாக, மார்பில் வைஜயந்தி மாலையும், ஸ்ரீவத்ஸமும் துலங்க, ஸ்ரீயானவள் மார்பில் துலங்க அபய ஹஸ்தம் காட்டிக் கொண்டு, வாயில் குமிண் சிரிப்புடனும், கமல நயனங்களுடனும், பரிமள கந்த கஸ்தூரித் திலகத்துடனும், காட்சி கொடுப்பது யார்?  தான் காண்பது கனவா? தன்னைத் தானே உலுக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான் கலியன்.  அங்கே அவன் கண்டது கனவில்லை;  நனவே தான்.  சாக்ஷாத் பரந்தாமனைப் பார்த்தான் அங்கே.  அப்போது தான் தனக்கு உபதேசிக்கப் பட்ட மந்திரத்தின் முழுப்பொருளும் புரியவர, தன்னையும் அறியாமல் எம்பெருமானைத் துதிக்க ஆரம்பித்தான் கலியன் என அழைக்கப்பட்ட நீலன் என்னும் பரகாலன்.




வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்பெருந்துயரிடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்”


என்று ஆரம்பித்து பாசுரங்கள் பாட ஆரம்பித்தவர் பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்ய நூல்களை அருளிச் செய்து திருமங்கையாழ்வார் என்னும் பெயரைப் பெற்றார்.  இவர் பெயரில் ஸ்ரீரங்கம் கோயிலில் திருப்பணி செய்த குறிப்புகளும் கிடைக்கின்றன.  இவர் வேண்டிக் கொண்டதால் ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி அன்றும் முன்னர் ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரிலிருந்து நம்மாழ்வார் புறப்பட்டு வந்து பரமபத சேவையையும் மோட்சத்தையும் பெற்று வந்தார் என அறிகிறோம்.  தற்சமயம் ஸ்ரீரங்கம் கோயிலிலேயே நம்மாழ்வார் விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதால் இங்கேயே நம்மாழ்வார் எழுந்தருளி இருக்கிறார்.  அடுத்து நாம் பார்க்கப் போவது நம்மாழ்வார் மோட்சம் தான்.


3 comments:

வல்லிசிம்ஹன் said...


வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்பெருந்துயரிடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்”//

வாழ்வின் அத்தனை பொருளும் அடங்கி இருக்கும் இந்தப் பாசுரத்தைத் தினம் சேவிக்க வேண்டும்.அப்போதாவது புத்தி தெளியுமோ என்னவோ. உயர்வான பதிவு கீதா.

திண்டுக்கல் தனபாலன் said...

நம்மாழ்வார் தரிசனம் கிடைத்தது...

தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

படிச்சுட்டேன். படம் திருவரங்கன் வீதி உலா விலிருந்து எடுக்கப் பட்டதா?