எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, March 26, 2013

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், வைகுண்ட ஏகாதசி முடிவு!


இராப்பத்தின் முடிவு நாளன்று நம்மாழ்வார் மோட்சம் தான்.  பத்து நாட்களாக பரமபதமாகிய வைகுந்த வாசலுக்கு ஒவ்வொரு படியாக வந்து கொண்டிருந்த நம்மாழ்வாருக்கு அன்று இறைவன் பரமபதத்தை அருளுகின்றான்.

“கெடுமிடராய வெல்லாம் கேசவாவென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும்குறுககில்லார்” 

நம்மாழ்வார் ஆழ்ந்து அநுபவித்துத் தம் திருவாய்மொழியில், “கேசவன்” என்னும் பெயரைச் சொன்னாலே போதும்;  துன்பங்கள் அனைத்தும் கெட்டு ஓடிவிடும்;  நமக்கு இந்த ஞானம் பிறக்கும் முன்னர் நாம் செய்த பாவங்களும், பிறந்த பின்னர் மறந்து போய்ச் செய்யும் அனைத்துப் பாவங்களும்,  அனைத்தும் அழிந்து போகும்.  நாள்தோறும் எவருடைய உயிரையேனும் எடுக்க வேண்டி கொடிய செயலைச் செய்து கொண்டிருக்கும் யமனும் நெருங்க மாட்டான்.” என்கிறார்.  இதைத் தான் ஆண்டாள்,”தீயினில் தூசாகும்!” என்றாள்.

தினம் போலவே இன்றும் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளுவார்.   இராஜ நடை, சிம்ம நடை போன்ற நடைகளில் நடந்து ஆஸ்தானம் எனப்படும் மணிமண்டபத்துக்கு வந்து சேருவார்.  சாற்றுமுறை துவங்குகிறது. 

“தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே”  

என்னும் பாசுரத்துடன் தொடங்கும் சாற்றுமுறை எட்டாம் திருவாய்மொழியுடன் நிறுத்தப்படுகிறது.  நம்மாழ்வாருக்கு மோட்சத்தை அளிக்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார் என்பதை உறுதி செய்யும் வகையில் பரமபத வாசல்கள் திறக்கப்படுகின்றன.  பட்டர்கள் மிக மிக அருமையாக ஒரு குழந்தையைக் கையாளுவதைப் போல திருக்கைத்தல சேவையின் மூலம் நம்மாழ்வாரை எம்பெருமான் திருவடியில் சரணாகதி செய்விக்கின்றனர்.  அப்போது அவர்கள்


சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின
பூரணபொற்குடம் பூரித்தது 
உயர் விண்ணில் கீதங்கள் பாடினர் 
கின்னரர்கெருடர்கள் கணங்கள்
வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்

வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும்வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர்
பதியினில்பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும்நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

என்ற பாசுரங்களைப் பாடுகின்றனர்.  பின்னர் பத்தாம் திருவாய்மொழி துவங்குகிறது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
தனியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே!”


என்றெல்லாம் பாடி நம்மாழ்வார் எம்பெருமானை என்னை எங்கேயும் அனுப்பிவிடாதே!  உன் பக்கமிருந்து உன் திருவடி சேவை தவிர வேறெதுவும் வேண்டாம் என வேண்டுகிறார்.   நம்மாழ்வார் எம்பெருமானின் திருவடி தொழுதல் என்னும் இந்நிகழ்வுக்காக பட்டர்கள் நம்மாழ்வாரைத் தங்கள் கரங்களில் தாங்கிய வண்ணம் எம்பெருமானை மூன்றுமுறை சுற்றி வந்து நம்மாழ்வாரைப் பெருமாளின் திருவடிகளில் தொழ வைக்கின்றனர்.  நம்மாழ்வாரை நம்பெருமாளின் திருவடிகளில் சேர்ப்பித்ததும், துளசியால் அபிஷேஹம் செய்து அவரை மூடுகின்றனர்.  பின்னர் சாம்பிராணிப் புகை போடவும் சிறிது நேரம் அந்தப் புகையில் நம்மாழ்வாரும், நம்பெருமாளும் தனித்துப் பேசிப்பாங்க போல!



எம்பெருமானிடம் சரணாகதி செய்து வைணவப் பரிபாஷையில் திருநாட்டுக்கு எழுந்தருளிய நம்மாழ்வாரை, பட்டர்கள் இவ்வுலகத்து மாந்தர்கள் உய்ய வேண்டி திரும்பத் தரும்படி வேண்டுகின்றனர்.  நம்பெருமாளும் அதை ஏற்று,  “தாம், தோம், தீம், தந்தோம், தந்தோம், தந்தோம்!” எனத் திரும்பத் தருகின்றார்.  நம்மாழ்வாரின் மேலுள்ள துளசிதளங்கள் அகற்றப்பட்டு நம்மாழ்வார் திரும்ப  ஆஸ்தானம் எழுந்தருளுகிறார்.  பின்னர் அனைவருக்கும் தீபாராதனை காட்டிய பின்னர் நம்மாழ்வார் மோட்சம் நிறைவு பெறுகிறது.

இந்த மோட்சத்தன்று நேரில் பார்க்கும் பக்தர்களில் கண்ணீர் விடாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

4 comments:

வல்லிசிம்ஹன் said...

கண்ணீர் விடாமல் இருக்க மாட்டார்கள். இது நானே பார்த்திருக்கேன்.

ஆழ்வார்திருநகரில் ,அம்மா அப்பா எல்லோரும் போய்ப் பார்த்துக் கண்ணும் கண்ணீராகத்தான் வந்தார்கள்.
கொஞ்ச நஞ்ச உணர்ச்சி இல்லை.
அப்படியே நாமே வைகுண்டத்தை எட்டிப் பார்த்தது போல ஒரு உணர்வு. நம்மாழ்வார் பதம் பணிந்து நாரணனை அடைவோம்.

ஸ்ரீராம். said...

படிச்சுட்டேன்.

நெல்லைத்தமிழன் said...

//சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின
பூரணபொற்குடம் பூரித்தது
உயர் விண்ணில் கீதங்கள் பாடினர்
கின்னரர்கெருடர்கள் கணங்கள்
வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்// பாசுரங்கள் முழுமையா இல்லை, ஒரு வரிசையாகவும் இல்லை.

சூழ்விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கையெடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே

திருநாட்டுக்குச் செல்லும் (இறந்த பிறகு) ஸ்ரீவைணவர்கள் எவ்வாறு வரவேற்கப்படுகிறார்கள் என்று சொல்லும் பத்துப்பாட்டுகள் இது. பிறகு திருவாய்மொழியின் கடைசிப் பத்தான,

'முனியே நான் முகனே முக்கண்ணப்பா என் பொல்லாக்
கனிவாய் தாமரைக் கண் கருமாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே'

இந்தப் பாசுரம் (பத்துப் பாட்டும்) சேவா காலங்களில் கேட்கும்போதே உணர்ச்சிவசப் படுத்தும். நம்மாழ்வார் மோட்சத்தின்போது.... நினைக்கவே அதில் பங்குபெறணும் என்று தோன்றுகிறது.

Geetha Sambasivam said...

நெல்லைத் தமிழரே, பாசுரங்களை அந்த நிகழ்வின் முக்கித்துவத்துக்கு ஏற்றாற்போல் தேர்வு செய்து முடிந்தவரை பகிர்வதே என் கருத்து. முழுசும் சில சமயம் போட்டிருக்கலாம், பல சமயங்கள் விடுபடலாம். மற்றபடி இங்கே நம்மாழ்வார் மோக்ஷம் குறித்துப் பேசுவதே முக்கியமானது இந்தப் பதிவுக்கு.