எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, April 22, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், ப்ரணய கலஹம், மட்டையடி உற்சவம்


"ஆனால் நான் ஏன் இவ்வளவு தாமதமாய் வந்தேன் என நினைக்கிறாயா?  அதற்குக் காரணம் உள்ளது!"


 என்ற நம்பெருமாள் மேலும் தொடர்ந்தார்.  "வேர்க்க விறுவிறுக்க வேட்டையாடிவிட்டு நான் திரும்பி வரும் வேளையில், "நீலன்" என்றொருவன்.  யாரோ திருமங்கையாழ்வானாம், சொல்கின்றனர். அவன் பெரிய திருடனாய் இருக்கிறான் ரங்கா, என் திருவாபரணங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போயே விட்டான் என்றால்!  பார்த்துக்கொள்! மெதுவாக அவனைப்பிடித்துக் காலைப் பிடிக்கச் சொல்லி, நல்ல வார்த்தைகளைச் சொல்லி சமாதானம் செய்வித்து, திருவாபரணங்களை மெல்ல வாங்கி கொண்டு போய்க் கருவூலத்தில் சேர்க்கும்போது கணக்குப் பார்த்தேனா!  கணையாழியைக் காணவே இல்லை.  ஆஹா, அது நம் ரங்கநாயகி கொடுத்த கணையாழியாச்சே எனக் கவலையோடு விடிய விடியப்பத்து நாழிகைக்கு மேல் புறப்பட்டுத் திருவீதிகளெல்லாம் தேடித் தேடிப் பார்த்துக் கடைசியில் ஒருவழியாகக் கண்டு பிடித்துவிட்டேன்.  அங்கிருந்து உன்னைக் காண வேண்டி நேரே கிளம்பும்போது இந்த தேவதைகள் ஒரு கூடை புஷ்பத்தை எடுத்துக் கொண்டு வர்ஷிக்க வந்துவிட்டார்கள்.  விடுவேனா!  என் ரங்கநாயகி அருகில் இல்லாமல் புஷ்பங்களை நான் ஏற்பதில்லை என மறுத்துவிட்டேன்.  ரங்கநாயகிக்கும் சேர்த்துத் தான் என்றார்களா, அவர்களை முன்னே போகச் செய்து நாம் பின்னே வந்தோம்.  ஆகையினாலே இந்தப் புஷ்பங்களை ஏற்றுக் கொண்டு நம்மையும் உள்ளே அழைத்து ஆசுவாசம் செய்விப்பாய்.

மேலே குறிப்பிட்டவை நான் எழுதியவை:

நம்பெருமாளுக்காக அரையர்கள் சொல்லும் ப்ரகாரம்:

திருக்கண் சிவந்திருப்பானேன் என்றால் நாம் செங்கோலுடைய திருவரங்கச் செல்வரானபடியினாலே கவுரி முடித்ஹ்டு, கலிக்கச்சைக் கட்டி, வல்லயமேந்தி, குதிரை நம்பிரான் மேலே ராத்ரி முழுதும் நித்ரையின்றி ஜகரக்ஷணார்த்தமாக ஜாகரூகனாய் இருந்தபடியினாலே திருக்கண் சிவந்து போச்சுது.  திருக்குழல் கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேன் என்றால் காற்றடித்துக் கலைந்து போச்சுது.  கஸ்தூரித் திருமண் காப்புக் கரைந்திருப்பானேனென்றால் அதிகடோரமான ஸூர்ய கிரணத்தால் கரைந்து போச்சுது.  திருவதரம் வெளுத்திருப்பானேனென்றால் அஸுர நிரஸனார்த்தமாய் தேவதைகளுக்காக சங்கத்வானம் பண்ணினபடியினாலே வெளுத்துப் போச்சுது.  திருக்கழுத்தெல்லாம் நகச்சின்னமாயிருப்பானேனென்றால் அதிப்ரயாஸமான காடுகளிலே போகிறபோது பூமுள்ளு கிழித்தது.  திருமேனியெல்லாம் குங்குமப் பொடிகளாய் இருப்பானேனென்றால் தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷித்தபடியினாலே புஷ்ப ரேணு படிந்தது.  திருப்பரிவட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாயிருப்பானேனென்றால் ஸந்த்யா ராகம் போலேயிருக்கிற திவ்ய பீதாம்பரமானபடியினாலே உங்கள் கண்ணுக்கு மஞ்சள் வர்ணமாய்த் தோன்றுகிறது.  திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக் குழம்பாயிருப்பானேனென்றால், குதிரை நம்பிரான் மேலேறி அங்கவடிமேல் திருவடிகளை வைத்துக்கொண்டு போனபடியினாலே திருவடிகள் சிவந்து போயின.  இப்படிப்பட்ட அடையாளமேயொழிய வேறில்லை.  ஆனால், போது கழிந்து வருவானேன் என்றால் வேட்டையாடி வேர்த்து விடாய்த்து வருகிற ஸமயத்திலே, திருமங்கையாழ்வானென்பவன் ஒருவன் வந்து ஸர்வஸ்வாபஹாரத்தையும் பண்ணிக் கொண்டு போனான்.  அவனைச் சில நல்ல வார்த்தைகள் சொல்லித் திருவாபரணங்களை மெள்ள வாங்கிக் கொண்டு போய், கருவூலத்தில் எண்ணிப் பார்க்குமிடத்தில் கணையாழி மோதிரம் காணாமல் போச்சுது.  அதற்காக விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி, திருவீதிகளெல்லாம் வலம் வந்து கணையாழி மோதிரத்தைக் கண்டெ;டுத்துக் கொண்டு மீள வாரா நிற்கச் செய்தே அப்பொழுது தேவதைகள் பாரிஜாத புஷ்பங்கள் கொண்டு ஸேவிக்க வந்தார்கள்.  நாம் நம்முடைய பெண்டுகள் அன்றியிலே சூடுகிறதில்லையென்று தமக்கு முன்னமே வரக்காட்டி நாமும் பின்னே எழுந்தருளினோம்.  ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பங்களையும் வாங்கிக்கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்


அடுத்து நாச்சியார் ப்ரகாரம் தொடரும்.

6 comments:

ஸ்ரீராம். said...

மறுபடியும் உங்கள் எழுத்துகள் எளிமையாகப் புரிகின்றன. அரையர்கள் வாக்கை தட்டச்சு செய்யவே சற்று சிரமப் பட்டிருக்க வேண்டுமே...

திண்டுக்கல் தனபாலன் said...

என் ரங்கநாயகி அருகில் இல்லாமல் புஷ்பங்களை நான் ஏற்பதில்லை என மறுத்துவிட்டேன். !!!

!!! நல்லது... தொடர்கிறேன்...

Geetha Sambasivam said...

வாங்க ஸ்ரீராம், தமிழ்த் தட்டச்சில் ஹையர் பாஸ் பண்ணிட்டு இதெல்லாம் தட்டச்ச முடியலைனா சரியா இருக்காது! :))))) இதை விடக் கஷ்டமான பாடல்களை எல்லாம் மின் தமிழின் மரபு விக்கிக்காகத் தட்டச்சுகிறேன். :))))

Geetha Sambasivam said...

வாங்க டிடி, தொடர்ந்து படிப்பதற்கு நன்றிப்பா.

ஸ்ரீராம். said...

நானும் தமிழும் ஆங்கிலமும் ஹையர் பாஸ்! ஆனால் என் டைப்பிங் ஹி ....ஹி........! உங்களுக்குத்தான் தெரியுமே....! :)))

தமிழ் இப்போ எல்லாம் ய ள ன க ப க ; ட் ம தா த எங்கு அடிக்கிறோம்! எல்லாம் phonetic தான்!

ADHI VENKAT said...

கணையாழிக்கு ஒரு கதையா...:)

தங்களது வார்த்தைகளில் நன்றாக இருக்கிறது.