மட்டையடித் திருவிழாவில் நம்மாழ்வாரின் எந்தப் பாசுரத்தைப் பாடுவாங்கனு தெரியலை. யாரையானும் கேட்கணும். இன்னும் யாரும் வசமா மாட்டிக்கலை. :))) இரண்டு நாட்கள் முன்னர் கோயிலுக்குப் போனப்போ நம்பெருமாளைப் பார்த்தேன். ஊர்சுத்தப் போகாமல் மூல'ஸ்தானத்திலேயே உபய நாச்சியார்களுடன் வீற்றிருந்ததோடு நின்று முழுசாய் ஒரு நிமிடம் பார்க்கவும் முடிந்தது. போங்க, போங்கனு விரட்டலை. பட்டாசாரியார் யாரோ ஷிஃப்ட் மாறும் வேளை போல! அதில் கவனமாய் இருந்தாங்க.
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்
இருநிலம் கைதுழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்
இவள்திறத்து என் செய்கின்றாயே
என் செய்கின்றாய் என் தாமரைக்கண்ணா
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என்செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்
என்னும் வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா தகுவதோ என்னும்
முன்செய்திவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய்
என்கொலோ முடிகின்றது இவட்கே
நாச்சியார் காது கொடுத்துக் கேட்டுவிட்டு மனம் மகிழ்கிறாள். உடன் பெருமாளைப் பார்த்துச் சொல்கிறாள்.
"தாம் வருஷாவருஷம் அடமாயெழுந்தருளி தமக்குச் சரிப்போனபடி நடந்து போட்டுப் பின்னும் இங்கே வந்து நாமொன்றும் அறியோமென்றும், ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்றும் பரிஹாசங்களைப் பண்ணி, இப்படிப்பட்டிருக்கிற அக்ருத்யங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறீர். நாமானால் பொறுக்கிறதில்லை. நம்முடைய ஐயா நம்மாழ்வார் வந்து மங்களமாகச் சொன்ன வாய்மொழியாலே பொறுத்தோம். உள்ளே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.
"ஐயா, நீர் ஒவ்வொரு வருடமும் இவ்வாறே அடம் பண்ணிக் கொண்டு வருகிறீர். உமக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதைத் தான் செய்து வருகிறீர். இப்படி எல்லாம் நடந்த பின்னர் இங்கே வந்து எனக்கு எதுவுமே தெரியாது என அப்பாவி போல் வேஷம் போடுகிறீர். அதற்காகப் பொய்யாய்ப் பல சத்தியங்களைப் பண்ணுகிறோமென்று சொல்கிறீர்/ என்னைப் பரிஹாசம் பண்ணுகிறீர். நீர் செய்வது அனைத்தும் அக்கிரமங்கள். எனக்குப் பொறுக்கவே இல்லையே! ஆனாலும் அதோ, நம் நம்மாழ்வான் இப்போது இங்கே வந்து மங்களமாய்ச் சில வார்த்தைகளைச் சொல்லுகிறான். அவனெதிரில் நம் சண்டையைப் போட்டுக் கொள்ள வேண்டாம். அவனுக்காக நாம் உம்மைப் பொறுத்தோம். உள்ளே எழுந்தருளிக்கொள்ளும்!"
ப்ரணய கலஹம் முடிந்து நம்பெருமாள் ரங்கநாயகியோடு ஒரே சிம்ஹாசனத்தில் எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிக்கிறார்.
வாழித்திருநாமங்கள்
திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடத் தாய்மகனார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கு மீமையவர் கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலையெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியா மித்துவமு மாயினான் வாழியே
பெருகி வரும் பொன்னி நடுப்பின் துயின்றான் வாழியே
பெரியபெருமாளெங்கள் பிரானடிகள் வாழியே
பெரிய பிராட்டியார்
பங்கயப்பூ விற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழிற்சேனை மன்னர்க்கிதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ் சுட்பொருள் மாலியம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே!