எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, May 11, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! மட்டையடித் திருவிழா! ப்ரணய கலஹம்!


நாச்சியார் அருளிச் செய்த ப்ராகாரம்:


ஒருவருக்கொருவர் ஸம்சயப்பட்டால் அந்த ஸம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமற்போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக்கொள்ளுவார்கள்.  லோகத்திலே ப்ராஹ்மணனுக்கும் ப்ராஹ்மணனுக்கும் வாக்குவாதம் வந்தால் ப்ராஹ்மணன் ப்ராஹ்மணனைத் தாண்டிக் கொடுப்பான்.  தாம் தேவாதி தேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறோமென்று சொல்ல வந்தாரே!  அந்த தேவதைகள் தம்முடைய திருவடிகளை எப்போ காணப்போகிறோம்! எப்போ காணப்போகிறோம்! என்று சதா பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறவர்களை வலுவிலே தாண்டித் தருகிறோமென்றால் வேண்டாமென்பார்களா?  ஸமுத்ரத்திலே மூழ்குகிறோமென்று சொல்ல வந்தாரே! ப்ரளய காலத்திலே ஸகல லோகங்களையும் திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்து ஒரு ஆலிலைத் தளிரிலே கண் வளர்ந்த தமக்கு ஸமுத்ரத்திலே முழுகுகிறது அருமையா!  அக்னி ப்ரவேசம் பண்ணுகிறோம் என்று சொல்ல வந்தாரே! ப்ரஹ்மாவுக்காக உத்தரவேதியில் ஆவிர்ப்பவித்த தமக்கு அக்னியில் மூழ்குகிறோம் என்றால் அக்னி சுடுமா?  பாம்புக் குடத்திலே கை இட்டுத்தருகிறோமென்று சொல்ல வந்தாரே!  "சென்றாற்குடையாம், இருந்தாற் சிங்காசனமாம்" என்று ஸதாஸர்வ காலமும் திருவனந்தாழ்வான் மேலே திருக்கண் வளர்ந்திருக்கிற தமக்குப்பாம்புக் குடத்திலே கைவிட்டால் பாம்பு கடிக்குமா?  மழுவேந்துகிறோம் என்று சொல்ல வந்தாரே!  கோடி ஸூர்யப்ரகாசமான திருவாழியாழ்வானை ஸதா திருக்கையிலே தரித்துக் கொண்டிருக்கிற தமக்கு அப்ரயோஜகமான இரும்பு மழுவேந்துகிறது அருமையா?  நெய்க்குடத்திலே கையிடுகிறோமென்று சொல்ல வந்தாரே! க்ருஷ்ணாவதாரத்திலே பஞ்ச லக்ஷம் குடியிலுள்ள நெய்யுண்ட தமக்கு நெய்க்குடத்தில் கையிடுவது அருமையா?  இப்படிப் பட்டிருக்கிற பரிஹாஸ ப்ரமாணங்களையெல்லாம் தமக்குச் சரிப்போன இடத்திலே தானே பண்ணிக் கொண்டு இன்றைக்கும் அங்கேதானே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.


நாச்சியார் சொல்கிறாள்:

ஒருத்தர் மேல் ஒருத்தர் சந்தேகப்பட்டால் அந்த சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ப்ரமாணங்கள், சத்தியங்கள் ஆகியவற்றால் தீர்த்துக் கொள்ளத் தான்செய்வார்கள்.  மேலும் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் அல்லவா?  ஒரு பிராம்மணன் இன்னொரு பிராம்மணன் மேலே சந்தேகப்பட்டால் ப்ராம்மணனைத் தாண்டிச் சத்தியம் செய்து கொடுப்பான். ஆனால் தாமோ தேவாதி தேவனல்லவா? ஆகவே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறதாய்ச் சொன்னீரோ!  அந்த தேவதைகளோ எப்போது உம்முடைய திருவடி தரிசனம் கிடைக்கும் எனக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  அவர்கள்  நோக்கமே உமது திருவடி தரிசனத்தைக் காண்பது தான். அவர்களிடத்திலே நீர் போய் வலுவிலே உங்களை எல்லாம் தாண்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னால் வேண்டாமென்பார்களா?  ஆஹா,அப்படியானும் நமக்குத் திருவடி தரிசனம் கிடைக்கலாச்சு என ஆனந்தம் தான் அடைவார்கள்.

ஐயா, உம்முடைய கள்ளத் தனம் எனக்குத் தெரியாததா?  சமுத்திரத்திலா மூழ்குகிறீர்?  சமுத்திரத்தில்?? ஆஹா, நன்றாக மூழ்குமேன்!  ஏன் ஐயா,இந்த ஸமுத்திரத்திலே தானே தாங்கள் ப்ரளய காலத்திலே சகல லோகங்களையும் தம்முடைய திருவயிற்றிலே வைத்து ரக்ஷிக்கின்றீர்?  அதுவும் ஒரு ஆலிலைத் தளிரிலே கண் வளர்ந்த வண்ணம் சகல லோகங்களையும் தாங்கிக் கொண்டு  சமுத்திரத்திலே மிதக்கும் தமக்கு சமுத்திரம் ஒரு அருமையா?  அதில் மூழ்குவது தான் அருமையா!  நல்ல வேடிக்கைதான் ஐயா! அடுத்து என்ன சொன்னீர்?? அக்னி ப்ரவேசமா?  ஆஹா, தங்களால் இயலாததா அதுவும்! யாரிடம் ஐயா சொல்கிறீர்?  உத்தரவேதியில் பிரம்மன் யாகம் செய்கையில் அவனிடம் கோபம் கொண்ட சரஸ்வதி இவ்வுலகையே இருட்டாக்கினாளே.  அப்போது விளக்காக ஒளிர்ந்தது யார்?  நீரன்றோ!  உமக்கு அக்னியில் ப்ரவேசம் பண்ணுவது கஷ்டமானதா? அக்னி உமக்குச் சுடுமா?  அடுத்து என்ன சொல்கிறீர்? பாம்புக் குடத்திலே கைவிட்டுத் தருகிறீரா? இதை விட நகைச்சுவையான விஷயம் வேறில்லை ஐயா!  நீர் சென்றால் குடை பிடிப்பது அனந்தாழ்வான்!  படுத்தால் படுக்கையாவது அனந்தாழ்வான்!  இருந்தால் சிம்மாசனம் ஆவதும் அனந்தாழ்வான்!  நீர் பாம்புக் குடத்தில் கை விடுகிறீரா?  உம்மை எந்தப் பாம்பு என்ன செய்ய முடியும்?

அடுத்து மழுவேந்துகிறீரா?  ஆஹா, நன்றாக ஏந்துங்கள்.  ஆனால் உம் கைகளில் எப்போதும் நீர் ஏந்தி இருக்கும் திரு ஆழி ஆழ்வான் என்னும் சக்கரத்தாழ்வானின் கோடி சூர்யப் ப்ரகாசத்திற்கு முன்னால் அந்த மழுவால் நிற்க முடியுமா என யோசியும்!  திருவாழியாழ்வானையே ஏந்தியுள்ள தமக்கு மழுவேந்துகிறது பெரிய விஷயமா?  நெய்க்குடத்திலே கை விடுகிறீரா?  ஐயா, நீர் கிருஷ்ணாவதாரம் செய்த போது கோகுலத்தில் பஞ்ச லக்ஷம் குடியிலுள்ள அனைவரின் வீட்டிலிருந்தும் நெய்யுண்ட தமக்கு நெய்க்குடத்தில் கைவிடுவது ஒன்றும் புதிதல்லவே!  இப்படி எல்லாம் என்னைப் பார்த்துக் கேலி செய்யும்படியான ப்ரமாணங்களைச் செய்யாதீர்.  உமக்கு எந்த இடத்தில் இருந்தால் சரியாக இருக்குமோ அங்கேயே போய் இரும்!  இன்றைக்கும் நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே தானே போய் எழுந்தருளிக்கொள்ளும். இங்கே வர வேண்டாம்."

நாச்சியார் மீண்டும் கதவடைக்கிறாள்.  மலர்மாலைகள், பூச்செண்டுகள், பழங்கள் வீசி எறியப்பட்டு பெருமாளின் பல்லக்கு வேகமாகப்பின் வாங்குகிறது.  பெருமாள் நிஜம்ம்மாவே பயந்துட்டார் போல! :)


ஆச்சு இன்னும் ஓரிரு பதிவிலே மட்டையடி முடிஞ்சுடும், அடுத்து சித்திரைத் தேர் குறித்த ஒரு சின்ன குறிப்புக்கு அப்புறம் மீண்டும் வரலாற்றைத் தொடரலாம்.  அதுக்குள்ளே அடுத்த திருநாள் வந்துடும். :))))

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

டம்.. த்ப்... டுப்... சராமாரியான கேள்விகள்... பெருமாள் இதுக்கெல்லாம் பயப்படுவாரா...?

வல்லிசிம்ஹன் said...

பெருமாள் இதற்கெல்லாமா பயப்படுவார்!!
கள்ளன்னிலயும் மகாக் கள்ளன். ஏதாவது சமாதானம் சொல்லிப் பாவம் தாயாரைச் சரி செய்துவிடுவார். நல்ல கலஹம் போ:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இப்படி எல்லாம் என்னைப் பார்த்துக் கேலி செய்யும்படியான ப்ரமாணங்களைச் செய்யாதீர். உமக்கு எந்த இடத்தில் இருந்தால் சரியாக இருக்குமோ அங்கேயே போய் இரும்! இன்றைக்கும் நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே தானே போய் எழுந்தருளிக்கொள்ளும். இங்கே வர வேண்டாம்."

நாச்சியார் மீண்டும் கதவடைக்கிறாள். மலர்மாலைகள், பூச்செண்டுகள், பழங்கள் வீசி எறியப்பட்டு பெருமாளின் பல்லக்கு வேகமாகப்பின் வாங்குகிறது. பெருமாள் நிஜம்ம்மாவே பயந்துட்டார் போல! :)//

அருமையான பேச்சுக்கள். அற்புதமான காட்சிகள். பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

படிச்சுட்டன்!சுவாரஸ்யமான காட்சிகள்.

Geetha Sambasivam said...

@ டிடி,

@வல்லி,

@வைகோசார்,

@ஶ்ரீராம்,

அனைவருக்கும் நன்றி.