எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 10, 2013

அரங்கனின் தேரோட்டம்!

அரங்கனை ஊர் சுத்த விட்டுட்டு அப்புறமாத் தொடர முடியாதபடிக்கு வைகுண்ட ஏகாதசித் திருநாள், அடுத்து தெப்பம், மட்டையடித்திருவிழா, சித்திரைத் திருவிழா என முக்கியமான நாட்களைக் குறித்து எழுதும்படி ஆகிவிட்டது.  இதுவே சித்திரைத் திருவிழாவுக்கு ரொம்ப தாமதமாகப் பதிவு போடறேன். இதுக்கப்புறமா ஆனி கேட்டையில் ஜேஷ்டாபிஷேஹம், பவித்ராபிஷேஹம் எல்லாம் ஆகி, பெருமாளுக்குக் காப்பு நீக்கித் திருவடி தரிசனம் ஆரம்பிச்சு ஆடிப்பெருக்கும் கொண்டாடிட்டார்.  அரங்கனைக் கூடிய சீக்கிரம் தொடர்ந்து செல்வோம். அதான் துளசி தளங்களை வழி கண்டுபிடிக்கப்போட்டுட்டுப் போறாங்க இல்ல, அதனால் ஒண்ணும் பிரச்னை இல்லை. இப்போ சித்திரைத் திருவிழாவை ஒரு அவசரப் பார்வை பார்த்துடுவோம்.


மட்டையடித் திருவிழாவுக்குப் பின்னர் பெரிய திருவிழா என்பது ஶ்ரீரங்கத்தில் சித்திரைத் திருவிழா.  பனிரண்டு மாசங்களும் அரங்கன் திருவிழாக் கண்டாலும் இந்த முக்கியமான திருவிழாக்களில் தேரோட்டமும் உண்டு. இதை விருப்பன் திருநாள் என்றும் அழைக்கின்றனர். நம்ம ஊர் சுத்தி நம்பெருமாள் ஊரெல்லாம் சுத்திட்டுத் திரும்ப அரங்கம் வந்தப்போ கோயில் பாழடைந்து கிடந்தது.  கர்பகிரஹமும் மற்ற மண்டபங்களும் பாழாகக் கிடந்ததைக் கண்ட விஜயநகரப் பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரனின் புதல்வன் விருப்பன்ன உடையார் துலாபாரம் ஏறினார்.  இது நடந்தது கிட்டத்தட்ட கி.பி. 1377 ஆம் ஆண்டில் என்கின்றனர். துலாபாரம் ஏறிக் கிடைத்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு கோயில் மண்டபங்கள் சீரமைக்கப்பட்டன.  பின்னர் அறுபது ஆண்டுகள் வெளியே  இருந்த அரங்கனுக்கு உற்சவம் கண்டருள வேண்டும் எனவிருப்பன்ன உடையார் நினைத்தார்.  ஆகவே 1383 ஆம் ஆண்டில் உற்சவம் கண்டருளினார் நம்பெருமாள். இது பல்லாண்டுகளுக்குப் பின்னர் ஶ்ரீரங்கத்தில் நடந்தது என்பதால் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் மிகவும் விருப்பத்தோடு இந்த விழாவில் கலந்து கொண்டனர்.  இதைச் சித்திரை பிரம்மோத்சவம் என்றே சொல்கின்றனர்.

இந்தத் திருவிழாவில் அரங்கன் தேரில் வீதிவலம் வருவது முக்கிய நிகழ்ச்சியாகும். இந்தத் திருவிழாவை எடுப்பித்த விருப்பன்ன உடையார் அரங்கனுக்கு அருகில் உள்ள அழகிய மணவாளம் என்னும் ஊரைத் தானமாகச் சாசனம் செய்து கொடுத்தார்.  அரங்கன் ஊர் திரும்பும் முன்னர் சில நாட்கள் அந்த கிராமத்தில் தங்கி இருந்தார் என்பதாலும் ஊர் மக்கள் மிக மகிழ்வோடு கிராமத்தை நம்பெருமாளுக்கு சாசனமாக எழுதிக் கொடுக்கச் சம்மதித்தனர். தினந்தோறும் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் வீதிவலம் வந்தருளுவார்.  ஶ்ரீரங்கம் ரங்கராஜன் அனைத்துக் கோயில்களின் அரசர் என்பதால் குதிரை வாகனம் ஏறிபவனி வருவதைப் பல்வேறு புலவர்கள் வாழ்த்திப் பாடியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.  கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அரங்கன் மக்களை நலம் விசாரித்துச் செல்கிறாராம்.  அதோடு தேரையும் பார்வை இடுவாராம்.  இவை யாவுமே ஒரு மாபெரும் அரசன் அரச வீதி உலாவருவது போலவே இருக்கும் என்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நம்பெருமாள் பின்னர் நான்முகன் கோபுர வாயிலில் வந்து அமுது படைக்கப்படுவார்.  பின்னர் விஜயநகர அரசனான சொக்கநாத நாயக்கனால் நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் நம்பெருமாளுக்கு திருஷ்டி கழிக்கப்படும்  பின்னர் வாகன மண்டபத்தில் படி களைந்து நம்பெருமாள் முன்னர் கார்த்திகை கோபுர வாசலில் திவ்யப்ரபந்தங்கள் சாற்றுமுறை ஆகும்.  நம்மாழ்வார் சந்நிதியிலும் இயற்பா சாற்றுமுறை ஆகும்.  பின்னர் நம்பெருமாள் ரக்ஷாபந்தனம் செய்து கொள்வார்.  அதன் பின்னர் இந்தச் சித்திரைத் திருவிழா முடிந்து தீர்த்தவாரி நடைபெறும் வரையிலும் நம்பெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளுவார்.  அவர்  திருமேனியில் வெயில்படாவண்ணம் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள்.  அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.  விருப்பன் திருநாள் ஏழாம் திருநாளன்று அரங்கன் நெல் அளவை கண்டருளுவார்.  அன்று கோயில் முறைகாரர் நெல் அளப்பார்.  தங்க மரக்காலால் திருவரங்கம் ஒன்று, பெரிய கோயில் இரண்டு எனக் கணக்குப் பண்ணி நெல் அளக்கப்படும்.  நெல் அளவையைச் சரிபார்த்துக் கொள்வார் நம்பெருமாள்.

தேர் அன்றோ அக்கம்பக்கத்துப் பாமர மக்கள் தங்கள் தங்கள் வயல்களில் விளைந்தவற்றையும் பசுமாடுகள், கன்றுகள் என நம்பெருமாளுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிப்பார்கள்.  வெளி ஊர்களில் இருந்தெல்லாம் வண்டி கட்டிக் கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்தத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திருவிழா ஶ்ரீரங்கத்தில் நடந்து வருகிறது.  இந்தச் சமயம் அரங்கனுக்காகச் சிறப்பானதொரு பாத ரக்ஷை தைக்கப்படும் என்றும் அதன் வலக்கால் அளவிற்கு ஒரு குடும்பமும், இடக்கால் அளவிற்கு இன்னொரு குடும்பமும் தைத்துத் தனித்தனியாக எடுத்து வருவார்கள் எனவும், அரங்கனின் எந்தவிதமான அளவுமே இல்லாமல் அவர்கள் தைப்பது சரியாகப்பொருந்தும் எனவும், எந்தக் குடும்பம் எந்தக் காலுக்குத் தயார் செய்கிறது என்ற விபரம் எவருக்குமே தெரியாது என்றும் சொல்கின்றனர்.  இது குறித்து மேலும் விபரங்கள் திரட்டுகிறேன்.

முதல் இரண்டு படங்கள் எங்கிருந்து சுட்டேன் எனச் சொல்ல வேண்டாம் என எண்ணுகிறேன். :))) தெரியாதவங்களுக்கு வெங்கட் நாகராஜின் வலைப்பக்கத்தில் இருந்து சுட்டேன்.

கடைசிப்படம் தினமலர்.காம்.

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுட்ட பழமோ சுடாத பழமோ ருசி அருமையாக உள்ளது.

படங்களைத்தான் பழங்கள் என்று சொல்லியுள்ளேன்.

அரங்களின் தேரோட்டம் அழகோ அழகு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

அரங்கனைக் கூடிய சீக்கிரம் தொடர்ந்து செல்வோம். அதான் துளசி தளங்களை வழி கண்டுபிடிக்கப்போட்டுட்டுப் போறாங்க இல்ல, அதனால் ஒண்ணும் பிரச்னை இல்லை.

அரங்கனை நினைத்தாலே துளசிவாசம் மனதில் நிறைகிறதே..!

அருமையான பகிர்வுகளில் அரங்கனைத் தரிசிக்கவைத்தற்குப் பாராட்டுக்கள்..!

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தி சிறப்பித்தற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!

ஸ்ரீராம். said...

படிச்சாச்.....!

r.v.saravanan said...

தங்களது தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் வாழ்த்துக்கள்


http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_15.html

துரை செல்வராஜூ said...

அன்புடையீர்!.. வணக்கம் .
இன்று தங்களின் ஆன்மீக பயணம் - வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.
வாழ்த்துக்கள்!
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_15.html?

Ranjani Narayanan said...

இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

இன்றைய [15.10.2013] வலைச்சர அறிமுகத்தில் தங்கள் தளத்தினைக்கண்டேன். மிக்க மகிழ்ச்சி கொண்டேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான வாழ்த்துகள்.

http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_15.html

அன்புடன் VGK

கலையன்பன் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

RajalakshmiParamasivam said...

உங்களுடைய தளத்திற்கு வலைச்சரம் மூலமாக வந்தேன். வந்து உங்கள் archive பார்த்தேன். பிரமித்துப் போனேன். பிரமிப்பு அடங்கிய பின் மெதுவாக ஒவ்வொன்றாக படிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.
சிதம்பர ரகசியம் எந்தப் பதிவில் எந்த மாதம் என்று சொல்வீர்களா? படிக்க ஆசை.
நன்றி இத்தனை அருமையாக ஒரு ஆன்மீக வலை படிக்க கிடைத்தற்கு .

Geetha Sambasivam said...

வலைச்சரத்தில் என்னுடைய இந்தப் பதிவு பல முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தும் அன்பர்களுக்கு என் நன்றி.

திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம், சிதம்பர ரகசியம் தொடர் பதிவுகளை 2007 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை படிக்கலாம். உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.