எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 02, 2013

காமதேனுவின் சரித்திரம் --பகுதி இரண்டு.

பசுவின் முதுகிலே முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பார்.  வாலிலே வருணர் இருப்பார்.  கிடையிலே லக்ஷ்மிதேவி இருப்பாள்.  பசுவின் வயிற்றிலே சனத்குமாரர் இருப்பார்.  கோமூத்திரத்திலே கங்காதேவி இருப்பாள்.  கோமியத்திலே சரஸ்வதி இருப்பாள்.  பிடரியிலே அக்னி தேவன் இருப்பான்.  பசுவின் நெற்றிச் சுழியும், நிறைந்த வடிவழகும், பசுவின் கொம்பிலே க்ஷத்திரியன் இருப்பான்.  நெற்றியிலே நீலகண்டன் இருப்பார்.  காதிலே கருணர் இருப்பார்.  கண்ணிலே சந்திர, சூரியர் இருப்பார். உதட்டிலே உத்தமி தேவி இருப்பார்.  பல்லிலே பார்வதி தேவி இருப்பாள்.  பசுவின் நாலு காலிலேயும் பூமாதேவி இருப்பாள்.  முகத்திலே மூதேவி இருப்பாள். பசுவின் பிறப்பு பிறந்தது தான் இச்சொல்லு நீ சொன்னால் இனிய பக்தி உண்டாகும். 


இனிய பக்தி உண்டானால் இனிய பாவம் தான் துலையும். இப்படிப்பட்ட குணம் உள்ள பசுவைக் கொம்புக்குப் பொன் கட்டி, குவலைக்கு வெள்ளி கட்டி, ஊட்டி வரும் கன்னுக்கு உடம்பெல்லாம் பொன் பூட்டி, நடந்து வரும் கால்களுக்கு வெண்டயங்கள் தான் பூட்டி, வீசி வரும் வால்களுக்கு வெண் சாமரங்கள் கட்டி, பட்டு வஸ்திரத்தினால் பசுவை அலங்கரித்து, மல்லிகை புஷ்பத்தால் மாலையது தான் போட்டு, பசுவை வலமாகப்பிரதக்ஷணங்கள் தான் வந்து, கோவை பூஜித்து கோவிந்தனை நினைத்து, வேதப் பொருளாலே, வேதாந்தம் வந்தவனாய், காமதேனுவை கருத்திலே தான் நினைத்து, அந்தணர்களை அழைத்து அக்ஷதையால் அர்ச்சித்து, அக்ஷய த்ருதியையிலே அழகான நாளையிலே ஆசாரியரை நினைத்து அந்தணர்க்கு தானம் செய்தால் இறப்பு, பிறப்பு உண்டோ!  இந்திர சத்துருவே, திரும்பிப் பிறப்பில்லை, வைகுண்டம் சேர்ந்திடுவார்.  ஜனன, மரணத்தை சோதித்து எரித்துவிடும்.  நித்யாசிரியரோட நிலை பெற்று தானிருப்பார்.  பஞ்சமா பாதகங்கள் பஞ்சாய்ப் பறந்துவிடும்.  

கொலை, களவு, சூது கொடியவர்கள் செய்தாலும்  இந்தப் பசுதானத்திலே பரமபதம் பெறுவார்.  கோதான பலனை கொத்தவனே சொல்ல வந்தேன். பசுவின் சரித்திரத்தைப் பாங்குடனே சொல்லுகிறேன்.  உத்தம குலத்தில் உதித்தவொரு நற்பசுவாம்.  அது தன் இனத்துடன் சேராமல், அங்கும், இங்கும் ஓடாமல் கட்டிடத்தில் நில்லாமல், காடு தனில் திரிந்து, பக்தியுடனே, அதுவும் பரமனை பூஜை செய்யும். சுந்தரமான அடர்ந்த ஒரு காடு தன்னில் சிவலிங்கத்தைக் கண்டு, சிந்தை மிகக் குளிர்ந்து கெங்கையிலே நீராடி, கிலேசத்தினை ஒழித்து, சிவலிங்கம் பூஜை செய்ய சிந்தையிலே தான் நினைத்து அது வாய் கொண்ட நீரை மகிழ்ச்சியுடன் தான் கொணர்ந்து வில்வமரத்தை வேருடனே தான் பிடுங்கி, வருகிற வழிதன்னில் வியாகரத்தைத் தான் கண்டு திடுக்கிட்டு நின்றதாம். தேஷ்டமுள்ள நற்பசுவும், வியாகரமும் அப்போது வழி தன்னைத் தான் மறித்து என் கொடிய பசியை அறிந்து உன்னைப் பரமன் அனுப்பி வைத்தார்.

என் கொடிய பசியை கோவிந்தன் கண் பார்த்தார்.  ஐந்தாறு நாளாக ஆகாரம் இல்லாமல் காட்டிலே அலைந்து, களைத்தும் இருக்கையிலே நல்ல தருணத்திலே நீ வந்து உதவி செய்தாய்.  நற்பசுவே! கோவ குணமுள்ள கொடிய புலியும் அப்போது ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து வர பக்தியுள்ள நற்பசுவும் மேல் பயந்து, நடுநடுங்கி, பரமனைத் தான் நினைத்து சித்தம் கலங்கி, சிவனை மனதிலே எண்ணி, புலிராஜனே, கேளும், உமக்குப் புண்ணியங்கள் ரொம்ப உண்டு. .பரமனை பூஜிக்க பக்தியாய் நான் போறேன்.  சிவலிங்கம் பூஜை செய்து திரும்பியே வந்திடுவேன்.  விக்கினங்கள் செய்யாதே. வியாகரமே சத்தியமாய் உனக்குத் தப்பாமல் வந்திடுவேன்.  கன்னுக்குப் பால்கொடுத்து கட்டாயம் வந்திடுவேன்.  வியாகர ராஜாவே, மனமிரங்க வேணுமய்யா! 


பசுவின் வாக்கியத்தைக் கேட்டும் அந்த வியாகரமும் கிடுகிடுவென்று சிரித்துவிட்டு ஏது சொல்லும்! கைப்பொருளை விட்டுக் காத்திருக்கக் காரணம் ஏன்?  உன் சாமர்த்தியத்தாலே தப்ப வழி பார்த்தாய்.  உன்னைப் புஜிக்காமல் விடுவேனா?  புத்தி கெட்ட நற்பசுவே, அறிவில்லாத ஜந்துவிற்கு ஆணை, சத்தியம் எல்லாம் உண்டோ?  தெய்வ பக்தி உண்டோ?  ஜன்ம விருதம் ஆகையாலே உன்னை அரை க்ஷணத்தில் கொன்றுவிட்டு என் பசியைத் தீர்த்து விட்டால் பரலோகம் தான் அடைவார்.  


புலி சொல்லைக் கேட்டு புதுமையுள்ள நற்பசுவும் என் வார்த்தை தன்னைக் கேளும். வியாகர ராஜாவே!  நான் சொன்ன சொல்லைத் தவறி நடந்தேனேயாகில் சூரியன் உதித்த பிறகு சாணி தெளித்தவளும், புருஷனுக்கு துரோகம் செய்து பூமியில் இருந்தவளும், பெரியோர் சொல்லைக் கேளாது இருந்தவரும், ஆகிய அந்தப் பாவியர்கள் அடையும் கெதியை நான் அடைவேன்.  கூலி குறைத்தவரும், குறை மரக்கால் போட்டவரும் அங்காடிக் கூடையிலே அதிக விலை இட்டவரும், பட்டாடை நெல்லிலே பதரைக் கலந்தவரும், அக்கொடியவன் போகும் வழி அதிநரகம் நான் போறேன்.  பசுவை அடித்தவரும், பர்த்தாவை வைதவளும் கன்னுக்குப் பால் விடாமல் கறந்தவரும் வந்த விருந்துக்கு வழங்காதிருந்தவரும், அக்கொடியவர் போகும் வழி அதி நரகம் நான் போறேன்.

பெத்த தாய் சொல்லைக் கேளாது இருந்தவனும், பெண்டாட்டி, பிள்ளைக்குச் சோறு போட்டாமல் புஜித்தவனும், தெய்வத்தை ஒரு நாளும் நினையாது இருந்தவனும் பிச்சைக்கு வந்தவரைப் பின்னே வா என்றவனும், ஆண்டி பரதேசிகளை அடித்துத் துரத்தினவரும், தர்மத்தை ஒருநாளும் செய்யாது இருந்தவரும், அக்கொடியவன் போகும் வழி அதி நரகம் நான் போறேன்.  ஏகாதசி என்னும் விரதத்தைக் கெடுத்தவரும், பஞ்சமாபாதகங்கள் பண்ணிய பாவியரும், அப்பாவியர்கள் போகும் வழி அதி நரகம் நான் போறேன். 

அடைக்கலம் என்று வாய்த்த சொத்தை அபகரித்தவரும், வீட்டில் நெருப்பிட்டு வேடிக்கை பார்த்தவனும், குருவை நிந்தித்துக் கொடும்பாவம் செய்தவனும், கூடப் பிறந்தவரைக் கொடும் தோஷம் சொன்னவனும், ஏழைகளை எதிரிட்டுக்கொன்னவனும் ஆற்றிலே இறங்கி அம்மணத்தோடு நின்றவனும், மாமி, மாமனுக்கு மரியாதை செய்யாதவனும் கர்ப்பத்தில் இருக்கும் கருவை அழித்தவனும் இக்கொடியவன் போகும் வழி அதிநரகம் நான் போறேன். குடியைக் கெடுத்தவன், குல துரோகம் செய்தவன், குல தர்மத்தை விட்டவன் கொடும்பாவம் செய்தவன், ஊரார் உடைமைக்கு உலை வைத்திருப்பவன், உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பவன், இக்கொடியவன் போகும் வழி நான் போறேன்.

(தொடரும்)


புஜித்தல்=புசித்தல்

கெங்கை=கங்கை

விருதம்= விரதம்

துலையும்=தொலையும்

குவலைக்கு வெள்ளி கட்டி= குளம்பைக் குவலைனு சொல்லி இருப்பதாக நினைக்கிறேன்.

வெண்டயங்கள் = தோளில் அணியும் ஒரு ஆபரணம்.

தெரிந்தவரை பொருள் சொல்லி இருக்கேன்.  தெரியாத இடத்தைச் சுட்டிக் காட்டவும். எனக்குத் தெரியலைனாலும் கேட்டுச் சொல்றேன்.

8 comments:

இராஜராஜேஸ்வரி said...

புஜிக்க வந்த வியாக்ரத்தையே பூஜிக்கவைத்த காமதேனுவின்
புதிய கதை அருமை..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

காமதேனுவின் சரித்திரம் மூலம் பல விஷயங்கள் அறிய முடிந்தது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

பசு, தான் வாக்குத் தவறினால் என்னென்ன பாவங்கள் வந்து சேரும் என்ற கம்பாரிசன் லிஸ்ட் சுவாரஸ்யமாய் உள்ளது!

Geetha Sambasivam said...

வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

நன்றி வைகோ சார்.

Geetha Sambasivam said...

ஸ்ரீராம், இவை முக்கியமாக மனிதருக்கும் பொருந்தும் இல்லையா? அதைத் தான் பசு சொல்வதாகச் சொல்கின்றனர். :)))))

RajalakshmiParamasivam said...

பசு ,பாவம் என்று சொல்லும் எத்தனையோ இப்பொழுது மீறப்பட்டு வருகிறது. அதற்கு யாரும் பயப்படுவதையும் இல்லை.

Geetha Sambasivam said...

வாங்க ராஜலக்ஷ்மி, நன்றிங்க. பாவம் என்றால் என்ன, எது எது செய்யக் கூடாது எனக் குறிப்பிட்டிருக்கிறதோ அனைத்தும் இன்றைய நாட்களில் அன்றாட வழக்கமாய் ஆகிவிட்டது! :)))) சுதந்திரம் என்றால் கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்றாகி விட்டது. :((