எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, December 04, 2013

காமதேனுவின் சரித்திரம் -- பகுதி மூன்று

பசு உரைத்த வாக்கியத்தைக் கேட்டும் அந்த வியாகரமும், மூடத்தனமுள்ள ஹிருதயமும் குலை செய்ய நினைத்த கொடும்புலியும் மனமிரங்கி அதன் இருளடைந்த ஹிருதயமும் இரக்கம் கொண்டு ஏது சொல்லும்.

நான் தோஷத்தை எண்ணாமல் தும்சங்கள் செய்திடுவேன்.  நீ எந்த இடம் போனாலும் இழுத்து வந்து கொன்றிடுவேன்.  கானகத்தில் சென்றாலும் கண்டு வந்து சம்ஹரிப்பேன்.  சத்தியத்தை எண்ணித் தானாக வந்துவிடு.  புலி உரைத்திடவே, புத்தியுள்ள நற்பசுவும் பாக்கியம், பாக்கியம் என்று பசுவும் நடந்ததுவாம்.

நான் பரமனை பூஜிக்க பாக்கியங்கள் செய்தேனோ, லிங்கத்தை பூஜிக்க நான் என்ன தவம் செய்தேனோ! ஈசன் அருளாலே என் இடர்கள் தீர்த்து வைத்தான் என்று ஆனந்தத்தாலே, அங்கமெல்லாம் பூரித்து கானகத்தில் சென்று லிங்கத்தைத் தான் பார்த்து, சுற்றி வலம் வந்து ஸ்தோத்திரங்கள் தான் செய்து பக்கம் வலம் வந்து, பகவானை தியானித்து, புலியின் பசி தீரப் புண்ணியரே, நான் போறேன்.  உம்முடைய  பக்தி எனக்கு ஒரு நாளும் மறவாதே. சொல்லிய பசுவும் இருண்ட வனம் தான் தாண்டி, காடு கடந்து கரிமலை கடந்து, ஆறு கடந்து அடர்விகளைத் தாண்டி, தெரு கடந்து, தேர் ஓடும் வீதி வந்து கன்று இருக்கின்ற கட்டிடத்தே தான் புகுந்து கண்டதும்  அந்தக்கன்றும் காராம்பசு தன்னை அம்மா நீ இந்நேரம் வராமல் இருந்ததற்குக் காரணமேன்?  பாதகர்கள் கூடி உன்னைப் பட்டியில் அடித்தாளோ, துஷ்டர்கள் கூடி உன்னைத் துரத்தி அடித்தாளோ, மாட்டுடன் கலந்து மந்தையுடன் சேர்ந்தாயோ?  என்னைத் தனியாக விட்டு இருந்ததென்ன சொல்லம்மா!


கன்று சொல்லப் பசுவும் கண்ணாலே ஜலம் விட்டு, என் குஞ்சலமே, கண்மணியே, என் குறைகள் என்ன சொல்வேன், நான் கொடிய புலியால் கொலை நடுங்கி ஓடி வந்தேன்.  சத்தியங்கள் பண்ணி வந்தேன்.  தப்பாமல் போக வேண்டும்.  நான் உன்னை நினைத்து உறுதியாக இங்கே வந்தேன்.  நான் உனக்குப் பாலை ஊட்டி பாலகனே போக வேணும். இச்சொல்லைக் கேட்டு இளங்கன்னு ஏது உரைக்கும்.  அம்மா நீ ஆண்ட புலிக்கு நான் ஆண்டால் ஆகாதோ.  என் மாதாவே, நீ இருந்தால் வம்சங்கள் விருத்தி உண்டாகும்.  தாயாரே நீ இருந்தால் சந்ததிகள்  உண்டாகும்.  நான் இருந்து நீ போனால் இந்நாடு சகிக்குமோ?  பெற்றோர்கள் கஷ்டத்தை புத்திரனும் நீக்க வேண்டும்.  தாயைப் பறி கொடுத்துத் தரை மேல் இருப்பாரோ?  புலிக்கு இரையாக உன்னைப் போகவிட்டு நான் இருந்தால் பூமி சகிக்குமோ?  புதுமை வந்து நேராதோ?  கன்று சொல்லப் பசுவும் கன வருத்தம் தானாகிக் கண்ணாலே கண்ணீர் விட்டுக் கதறியே, ஏது சொல்லும்.  என் அழகுள்ள கண்ணே, அப்படிச் சொல்லாதே.  என் குஞ்சரத்தின் கண்ணே, அப்படிச் சொல்லாதே.  என் பரிதாபம் நீக்க வந்த பாக்கியமே அப்படிச் சொல்லாதே. என் குறை நீக்க வந்த குஞ்சலமே சொல்லாதே..

பேச்சுத் தவறின பேர் பூமியில் இருப்பாரோ!  சத்தியம் தப்பி தரணியில் இருப்பாரோ?  பொய் சொன்னவருக்குப் புண்ணிய லோகங்கள் உண்டோ?  நான் சொன்ன புத்தியை நலமுடனே நீ கேளு..  பாயிலிருந்து நெல்லை பதறிப் போய் தின்னாதே.  திறந்ததொரு வீடு தன்னில் தடதடவென்று போகாதே. பாவியர்கள் கூடி உன்னைப் பதற அடிப்பார்கள்.  நட்டிருக்கும் பயிரை நஷ்டப்படுத்தாதே.  துஷ்டர்கள் கூடி உன்னை தொந்திரவு செய்வார்கள்.  கொல்லையில் பூந்து கொடுமைகளைச் செய்யாதே.  பத்தினியால் இட்ட பயிரை அழிக்காதே.  இனத்துடன் சேர்ந்து இங்கும், அங்கும் திரியாதே.  பாழும் கிணத்துப் புல்லைப் பதறிப்போய்த் தின்னாதே.  பரமனைத் தான் நினைத்தால் பரமபதம் சேர்ந்திடலாம்.  சிவாயம் என்றவருக்கு ஒருநாளும் அபாயம் இல்லை.

இப்படிக்குச் சொல்லி ஏற்றமுள்ள நற்பசுவும் போகுது பார்.  பசுவும், புலியிருக்கும் இடம் தேடி வருகிற வழி தன்னில் மறையவர் போல் ஒருவர், சிவசிவா என்று சொல்லித் திருநீறைத் தான் அணிந்து அறிவுள்ள பசுவே, அவசரமாய்ச் செல்லுவதேன்!  காரியங்கள் ரொம்ப உண்டோ!  காராம்பசுவே என்றார்.  அந்தணர் உரைக்க அறிவுள்ள நற்பசுவும் வந்தனங்கள் செய்து மறையவரைத் தான் பார்த்து வேதம் கரைகண்ட விப்ரரே சொல்லுகிறேன்.  நான் ஈசனை பூஜிக்க நாடியே செல்லுகையில் கொடும்பசியால் புலியும், என்னைக் கொல்ல வந்தப்போ, சத்தியம் செய்து வந்தேன்.  தப்பாமல் போக வேணும்.  வியாகரமும் பசியோடு வழி பார்த்துத் தான் இருக்கும்.  வழியது விலகி நில்லும்.  மறையவரே!  சரணம் ஐயா.


பசுவின் வாக்கியத்தைப் பரமனும் தான் கேட்டு, பசுவினுடைய உறுதியைப் பரமசிவன் தான் அறிந்து, சித்தம் குளிர்ந்து தேகமெல்லாம் பூரித்து, பசுவின் பக்தியைப் பரமனும் தான் உகந்து இன்னும் பார்ப்போம்.  இதனுடைய உறுதிகளை என்று பரமனும் வந்து நின்று பசுவைத்தான் மறைத்துப் போக விட மாட்டேன்.  புத்தி கெட்ட பசுவே, திரும்பிப் போய்விடு சீக்கிரத்தில்.  நில்லாதே போ.  பரமனும் உரைக்கலுமே விவேகமுள்ள நற்பசுவும் என்ன பாவத்தினால் இப்பாப்பான் மறைத்தாரோ.  பரமன் உரைத்ததைப் பசுவும் தான் கேட்டு, வாக்குத் தவறி நடப்பானோ வையகத்தில்.  ஒரு புறாவுக்காக உயிரைக் கொடுத்த  கதை கேட்டும் இருக்கையிலே கிருபையுள்ள அந்தணரே பேய், கழுகுகள் கூடிப் பிச்சுண்ணும் தேகத்தைப் புலியின் பசியைத் தீர்த்தால் புண்யலோகமுண்டாம்.  சத்தியத்தை எண்ணாமல் தானிருக்க நியாயமுண்டோ என்று கோபத்துடனே குலாவாம் பசுவமப்போ குறுக்காய் நின்றவரைக் கொம்பாலே தள்ளிவிட்டு ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து உத்தமமான பசுவும் புலி இருக்கும் அக் கானகத்தை புத்தியுள்ள நற்பசுவும் காடுகளெல்லாம் திரிந்து கண்டது வியாகரத்தை. வழியில் நடந்த வைபோகத்தைச் சொல்லிப் பசியாற்றிக் கொள்ளுமையா, வியாகர ராஜாவே!(தொடரும்)


குலை செய்ய நினைத்த=  கொலை செய்ய நினைத்த

தும்சங்கள் = துவம்சங்கள்

கொலை நடுங்க=  குலை நடுங்க

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பரமனைத் தான் நினைத்தால் பரமபதம் சேர்ந்திடலாம். சிவாயம் என்றவருக்கு ஒருநாளும் அபாயம் இல்லை.//

அருமையாக உள்ளது.

இராஜராஜேஸ்வரி said...

சத்தியத்தை எண்ணாமல் தானிருக்க நியாயமுண்டோ..

காமதேனுவின் சரித்திரம் அருமை..!

ஸ்ரீராம். said...

வாக்கு தவறாத பசு. கன்றுக்குச் சொல்லும் அறிவுரை!

RajalakshmiParamasivam said...

அம்மா பிள்ளைக்கு சொல்லும் அறிவிரை மிக அருமை. பசுவிற்கும், கன்றிற்கும் இடையே நடக்கு உரையாடல் மனதை தொட்டது.

Geetha Sambasivam said...

வைகோ சார்,

ராஜராஜேஸ்வரி,

ஶ்ரீராம்,

ராஜலக்ஷ்மி

அனைவருக்கும் நன்றி.