எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, July 28, 2014

துலுக்க நாச்சியார் யார்?

நம்ம ஊர் சுத்தி நம்பெருமாள் ஊர் சுத்தப் போறதுக்கு முன்னாடி ஒருதரம் அவரை முகமதியப் படைகள் தூக்கிக் கொண்டு டெல்லிக்கே போயிட்டாங்க.  இன்னும் சிலர் மாலிக்காஃபூர் படை எடுப்பின் முதல் முறை நடந்ததாகவும் சொல்கின்றனர்.  கி.பி 1311 ஆம் ஆண்டு இது நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போ நம்பெருமாளின் பெயர் அழகிய மணவாளர் என்று தான் இருந்திருக்கிறது.  உண்மையிலேயே அவ்வளவு அழகு தான் இவர். ஒவ்வொருத்தரையும் தனித்தனியாகப் பார்த்துக் கண்ணன் சிரித்தான்; கண்ணன் ஒவ்வொருத்தரையும் விசாரித்தான் என்று கண்ணன் கதையில் எழுதும்போதெல்லாம் இவர் தான் நினைவில் வருவார்.  அப்படித் தான் இவரும்.  வீதி வலம் வந்தால் கூட நம்மைத் தனியாப் பார்த்துப் பேசறாப்போல் இருக்கும். கண்ணில் தண்ணீர் வந்துடும்.  அதிலும் அந்தச் சிரிப்பு அதில் மயங்காதவர் யார் இருக்காங்க?

அப்படித் தான் மயங்கிட்டா சுல்தானின் பெண்ணும்.  சுரதாணி/சுரதானி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண் அரங்கனைத் தினமும் குளிப்பாட்டி, ஆடை, அலங்காரங்கள் செய்து தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். விக்ரஹத்தின் உண்மையான மதிப்பு அவளுக்குத் தெரியாவிட்டாலும் அதன் மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்தாள்.  ஒரு கணமும் தன்னை விட்டுப்பிரியாத வண்ணம் எப்போதும் அதனோடு இருந்து வந்தாள். இங்கே அரங்கன் இல்லாமல் தவித்த மக்கள் செய்வது என்னவெனத் தெரியாமல் திகைத்து இருந்தனர்.  அரங்கன் இல்லாததால் விழாக்கள் நடைபெறவில்லை.  ஊரே வெறிச்சோடி இருந்தது.

அருகிலுள்ள பிக்ஷாண்டார் கோயிலில் நம்பெருமாளிடம் பக்தி பூண்ட அடியாள் ஒருத்தி இருந்தாள்.  அவள் தினம் தினம் அரங்கன் முன்னிலையில் ஆடிப் பாடி மகிழ்வித்து வந்தாள்.  இப்போது அரங்கனைக் காணாமல் அவளுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.  மாலிக்காஃபூரின் படைகள் சென்ற வழியை விசாரித்துக் கொண்டு சென்றவள் டெல்லியை அடைந்தாள். அங்கே சுல்தானின் மகள் சுரதானியிடம் விக்ரஹம் இருப்பதையும், அவள் அதை ஒருகணமும் பிரியாமல் இருப்பதையும் தெரிந்து கொண்டாள்.  சுல்தானிடம் நேரடியாகப் போய்க் கேட்காமல் அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்து சுல்தானுக்கு ஆடல், பாடல் கேளிக்கைகளில் விருப்பம் அதிகம் எனப் புரிந்து கொண்டாள்.

திரும்பவும் ஶ்ரீரங்கம் வந்து கோயில் மேலாளர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு நாட்டியக் குழுவைத் தயார் செய்தாள்.  கிட்டத்தட்ட 60 பேர்கள் இருந்த அந்தக் குழுவும் டெல்லியை அடைந்தது.  அங்கே சுல்தானைக் கண்டு ஆடல், பாடல்களால் மகிழ்வித்தது.  இந்த ஆட்டத்தை "ஜக்கிந்தி" என்று சொல்கின்றனர். பாதுஷா அவர்களுக்குப் பரிசில்கள் பலவும் அளிக்க, நாட்டியக் குழுவினரோ எங்கள் அரங்கன் தான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்ல.  விசாரித்த சுல்தான் தன் மகளிடம் இருப்பதை அறிந்து கொண்டான்.  மகள் அதை விட்டுப் பிரிய மாட்டாள் என்றும், அவளுக்குத் தெரியாமல் அதை எடுத்துச் செல்லும்படியாகவும் கூறினான். அவள் தூங்குகையில் அதை எடுத்து வந்தார்கள் என்றும், அவளை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு எடுத்தார்கள் என்றும் இருவிதமான கூற்றுகள் நிலவுகின்றன.  எப்படியோ அரங்கன் ஶ்ரீரங்கத்துக்குக் கிளம்பி விட்டார்.

ஆனால் சுரதானி மயக்கம் தெளிந்து எழுந்தவள் அரங்கனைக் காணாமல் பித்துப் பிடித்தவள் போல் புலம்ப ஆரம்பித்தாள்.  நாளுக்கு நாள் மோசம் ஆகும் மகளின் நிலை கண்டு வருந்திய சுல்தான் அரங்கனைத் திரும்பக் கொண்டு வரும்படி ஒரு படையை அனுப்பினான்.  படை வீரர்கள் செல்வதைத் தெரிந்து கொண்ட சுரதாணி தானும் அவர்களுடன் சென்றாள்.  படை வீரர்கள் தொடர்வதைத் தெரிந்து கொண்ட நாட்டியக் குழுவினர் மூன்றாகப் பிரிந்து ஒரு குழுவினர் அரங்கனைத் திருமலைக் காட்டில் ஒளித்து வைத்ததாகவும் சொல்கின்றனர்.  ஶ்ரீரங்கம் வந்த சுரதானி அங்கே அரங்கன் இல்லாமையால் மனம் வருந்தி மயங்கி விழுந்தவள் அங்கேயே உயிரை விட்டு விட்டாள்.  அவள் உடலில் இருந்து கிளம்பிய ஜோதியை அரங்கன் விஸ்வரூபமாக காட்சி கொடுத்து அவளைத் தன்னுடன் ஐக்கியம் ஆக்கிக் கொண்டான்.


பின்னர் ஒரு சோழமன்னன் கனவில் தோன்றிய அரங்கன் சுரதானிக்கு ஒரு சந்நிதி அமைக்கும்படி சொன்னான்.  அதன்படியே கருவறைக்கு வடகிழக்கு மூலையில் அர்ஜுன மண்டபத்தில் ஒரு சித்திரம் எழுதி வைத்து சந்நிதியை ஏற்படுத்தினான்.  தினமும் முகலாயர் வழக்கப்படி அரங்கனுக்குக் கைலி உடுத்தப்பட்டு, ரொட்டி, வெண்ணை, காய்ச்சாத பால் போன்றவற்றை நிவேதனம் செய்கின்றனர்.  அகில், சந்தனம் தூவி புகை போடப்படும். வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தில் அர்ஜுன மண்டபத்தில் அரங்கன் எழுந்தருளுகையில் சுரதானிக்கு நன்கு தெரியும்படி, "படியேற்ற சேவை"  என்னும் சேவை தோளுக்கு இனியானை நன்கு தூக்கிப் பிடித்து சுரதானிக்குக் காட்டிப் பின்னரே அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். 

4 comments:

ஸ்ரீராம். said...

இந்தப் பதிவிலேயே இந்தத் தகவல் முன்னரே சொல்லியிருக்கிறீர்களோ?

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, முதல்லே நினைவில் வரலை. எழுதி வைச்சதை காப்பி, பேஸ்ட் பண்ணிட்டு பப்ளிஷ் கொடுத்ததும் தான் நினைவில் வந்தது. இருக்கட்டும்னு விட்டுட்டேன். :)

வல்லிசிம்ஹன் said...

எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத நிகழ்வு. இதுபோலவே ராமானுஜரும் டெல்லி சுல்தானுடன் சந்தித்து செல்லப் பிள்ளையான சம்பத்குமாரனை மீட்டதும் நடந்திருக்கிறது இல்லையா கீதா. அரங்கனும் கண்ணனும் தொடர்ந்து ஆட்சி புரியட்டும்.

RajalakshmiParamasivam said...

உங்களின் தளத்தை இன்று வலைச்சரத்தில் பாராட்டியுள்ளேன்.
இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_5.html