எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, April 24, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் பயணம் தொடர்கிறது!

முன் கதை
ஆர்யபடாள் வாசல் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

 யானைகளின் ஆவேசத்திற்கு இலக்கானது வாயிற்கதவுகள். அரங்க வாசிகளில் டெல்லியிலிருந்து வந்திருக்கும் இத்தனை வீரர்களையும் எதிர்க்கும் அளவுக்குக் கட்டுக்கோப்பான படையோ, படை வீரர்களோ, படைத் தலைமையோ இல்லை. கதவு பிளந்து உள்நோக்கிச் சாய, அனைவரும் ரங்கா, ரங்கா, எனக் கூக்குரல் இட்டனர். ஆர்ய படாள் வடக்கு வாயில் கதவுகள் பிளக்கப்பட்டன. டெல்லி சுல்தான் படைகள் வெற்றி முழக்கம் இட்டனர். கோபுர நிலையில் இருந்தவர் வீரரே ஆனாலும் முறையான பயிற்சி இல்லாதவர். அவரும் அவருடன் மேலும் இரு வீரர்களும் தீரத்துடன் போராடினார்கள்.  வைக்கோலில் தீமுட்டிக் கதவின் மேல் போட்டு சுல்தான் படைகளுக்கும் தங்களுக்கும் இடையில் தீயினால் ஆன சுவர் ஒன்றை எழுப்பினார்கள்.

ஆர்யபடாள் வாயில் கதவு விழுந்தாலும் உள்ளே இருந்த கல்சுவர் நின்று கொண்டு இருந்தது. கோபுர வாயிலில் தீ வானுயரக் கொழுந்து விட்டு எரிய அந்தக் கல்சுவர் மேலே இருந்த பரண் ஒன்றின் மீது ஏறி மறாஇந்த வண்ணம் தாக்குதலைத் தொடர்ந்தனர் அரங்கத்து வீரர்கள். தீயின் வெம்மையினால் கோபுரமும், அதில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களும் கருமை அடைந்தன. வெம்மை தாங்க முடியாமல் சுல்தானின் படைகளும் கொஞ்சம் தாமதமாய் அங்கே நெருங்க நேர்ந்தது. தாமதம் கண்டு கோபம் வந்த உல்லூக்கான் தானே நேரில் அங்கே வந்தான்.  பல்லக்கில் வந்த உல்லூக்கான் அகளங்க வீதியில் இறங்கிக் கொண்டான். அவனுடன் வந்திருந்த மெய்க்காவல் படையினர் சூழ்ந்து கொள்ள போர் புரிந்து கொண்டிருந்த உப தளபதிகள் என்னவோ, ஏதோ என பயந்து கொண்டு ஓடோடி வந்தனர்.

அவர்களைப் பார்த்து உல்லூக்கான் கோபத்துடன் பிதாரையும் வாரங்கல்லையும் ப்டித்து வந்த வீராதி வீரர்களான உங்களுக்கு இந்த அற்பக் கோயிலைப் பிடிக்க முடியவில்லையா, வெட்கம், வெட்கம்! என்று கத்தினான். உப தளபதிகள் அதற்குப் போர்முறையில் மட்டும் மாறுதல் இல்லாமல் கோட்டை அமைப்பு முறையும் மாறி இருப்பதாயும் குறுகலான இடத்தில் போர் புரிய வேண்டி இருப்பதால் சிரமம் ஏற்படுவதாகவும் சொல்ல உல்லூக்கான் கோபம் அதிகம் ஆகிறது. உல்லூக்கான் அடைந்த கோபத்தால் அந்தப் பிரதேசமே நடுங்கியது.  பின்னர் உல்லூக்கான் டெல்லியின் சுல்தானிடமிருந்து தனக்குக் கடிதம் வந்திருப்பதாயும் கிளம்பி ஒரு வருஷம் ஆகியும் இன்னமுமா மாபாரைப் பிடிக்க முடியவில்லை உன்னால் என்று கேட்பதாகவும், தனக்கு அவமானமாக இருப்பதாகவும் சொல்கிறான். நடுப்பகலுக்குள் இந்த ஊரைப் பிடித்தாக வேண்டும் என்று திட்டவட்டமாகக் கட்டளை இட்டான்.

கோயில் வாசலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் கூடை கூடையாக மணலைப் போட்டு அணைத்துவிட்டு சுல்தானின் வீரர்கள் அனைவரும் உள்ளே புகுந்து விட்டனர். கல்சுவரை உக்கிரத்துடன் தாக்க அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அசைந்து கொடுக்க ஆரம்பித்து விட்டது.  லேசாகத் தெரிய ஆரம்பித்த இடைவெளியில்  பத்து வீரர்கள் யார் சொல்வதையும் மதிக்காமல் உள்ளே புகுந்தனர். உள்ளே புகுந்தவர்கள் அங்கே பரணில் ஒளிந்து கொண்டிருந்த வீரர்களைத் தாக்கிக் கொன்றனர். கோபுரத்தின் இடிபாடுகளுக்கும் இடிந்து விழ ஆரம்பித்திருந்த சுவரின் இடிபாடுகளுக்கும் இடையில் அவ்வீரர்களின் உயிரற்ற உடல்கள்  கிடந்தன. அதில் ஒருவர் இறக்கும்போதும், ரங்கா, ரங்கா, ரங்கா, உன்னைக் காப்பாற்ற வேண்டும். அரங்கனைக் காப்பாற்றுங்கள்! எனப் புலம்பிக் கொண்டே உயிரை விட்டார்.

6 comments:

ஸ்ரீராம். said...

எத்தனை நாட்களுக்குப் பின் தொடர்கிறீர்கள்? படித்து விட்டேன்.

மோகன்ஜி said...

ஶ்ரீரங்கம் தான் எத்தனை இடர்பாடுகளை சந்தித்திருக்கிறது? பாங்குடன் விவரிக்கிறீர்கள். ஶ்ரீரங்கத்தின் ஆவணமான "கோவிலொழுகு" புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா? அற்புதமான களஞ்சியம் அது.

Geetha Sambasivam said...

வாங்க ஶ்ரீராம். போன வருஷம் இந்த வீடு வாங்கும் பேச்சு ஆரம்பித்ததும் எழுத முடியலை. :) அதுக்கப்புறமா இந்த வருஷத்துக்கு இது ஏழாவது பதிவு. :)

Geetha Sambasivam said...

படித்து விட்டேன்?

ஏற்கெனவே? இருக்காதே. இதை இப்போது தானே விவரிக்க ஆரம்பிச்சிருக்கேன். :)

Geetha Sambasivam said...

வாங்க மோகன் ஜி, வருகைக்கு நன்றி. கோயிலொழு முழுவதும் படிக்க இந்த ஜன்மம் போதுமானு தெரியலை. அவ்வப்போது சந்தேகங்கள் வருகையில் முன்னர் ஆடியோவிலே போட்டிருந்தாங்க. அதிலே போய்க் கேட்பேன். இப்போ அந்த ஆடியோ லிங்க் வேலை செய்யறதில்லை. சித்திரை வீதிகளில் இருக்கும் நண்பர்களிடம் சந்தேகங்களைக் கேட்பது உண்டு. கோயிலிலும் பட்டாசாரியார்களிடம் கேட்டுக் கொள்வேன். ஆனால் கோயில் பட்டாசாரியார்கள் எல்லாரும் சொல்வார்கள் என எதிர்பார்க்க முடியாது.

வல்லிசிம்ஹன் said...

ஶ்ரீரங்கம்ம பற்றித்தெரிந்தவரகள காஞ்சி புரத்தில கூட இரப்பாரகளமா கீதா. அனைவரும சிதறி ஓடி அல்லவா பிழைத்தாரகள. மஹா கொடூரமான சரித்திரம்மா.