எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, May 15, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் தெப்போத்சவம்! சில தகவல்கள்!

அரங்கனின் தெப்போற்சவம் குறித்துக் கிடைத்த சில தகவல்களை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.  பாண்டியர்களின் காலத்தில் இது ஆரம்பித்திருக்கிறது. திருப்பள்ளியோடத் திருநாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்தது. "பொன் வேய்ந்த பெருமாள்" என்னும் பட்டப்பெயர் கொண்ட சுந்தரபாண்டியன் காலத்தில் சித்திரை மாதம் தான் நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது காவிரியில் இப்போது போல் இல்லாமல் நீர் நிறைய ஓடிக் கொண்டிருந்த காலம். ஆகவே திருக்காவிரியில் பெரியதாக ஊருணி ஒன்று எடுப்பித்து அதிலே காவிரி நீரைப் பாய்ச்சி முத்துக்கள், பவளங்கள் பதித்த திருக்காவணம் (இங்கே காவணம் என்னும் சொல் பந்தலைக் குறிக்கும். முன்னாட்களில் பந்தல் என்னும் சொல் யாரேனும் இறந்தால் அந்த வீடுகளில் போடுவதை மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது.  திருமணம், விழாக்கள் போன்ற சுபகாரியங்களுக்குப் போடுவதைக் காவணம் என்றோ கொட்டகை என்றோ அழைத்து வந்திருக்கிறார்கள். இங்கே இறைவனுக்காகப் போடப் பட்டதால் திருக்காவணம் என்றாகி விட்டது.) கட்டி இருக்கின்றனர். பின்னர் திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணுவித்து அதிலே உபய நாச்சிமார்களுடன் அரங்கன் (அப்போதைய பெயர் அழகிய மணவாளர்) எழுந்தருளி தெப்போத்சவம் கண்டிருக்கிறான்.

பின்னர் மெல்ல மெல்ல ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று நடைபெற்று வந்திருக்கிறது. அப்படி ஒரு சமயம் திருப்பள்ளி ஓடத்திலே தெப்பத்திருநாள் கண்டருளும் சமயம் ஒரு சில மாந்திரீகர்களுடைய துர்மந்திரப் பிரயோகங்களால் தெப்பம் காவிரியின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த கூரநாராயண ஜீயர் சுவாமிகள் தம்முடைய வலக்கரத்தில் அணிந்திருந்த திருப்பவித்திரத்தை வலமாகத் திருப்பத் திருப்பள்ளி ஓடம் வெள்ளத்தை எதிர்த்து நிலை கொண்டது. சுதர்சன சதகம் இயற்றி ஶ்ரீசுதர்சனரையும் வேண்டினார். (இங்கே திருக்காவிரி என்று சொல்வது வட திருக்காவிரி அதாவது கொள்ளிடம் ஆகும்). அதன் பின்னர் அழகிய மணவாளப் பெருமாள் பிரச்னைகள் ஏதுமின்றி ஆஸ்தானம் கண்டருளினார்கள். இதன் பின்னர் அழகிய மணவாளரை அவ்வளவு தொலைவு அழைத்துச் சென்று தெப்போத்சவம் காண்பதில் உள்ள சிரமங்களை நினைத்துக் கூர நாராயண ஜீயர் அவர்கள் கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஓர் குளத்தை வெட்டச் செய்தார். அதிலே திருப்பள்ளி ஓடத்திருநாளை நடத்த ஆரம்பித்தனர். அதிலிருந்து தெப்பத்திருநாள் நடைபெறும்போதெல்லாம் விட்டவன் விழுக்காடு என்னும் பெயரில் பிரசாதம் ஶ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கூரநாராயண ஜீயருக்குப் பின்னர் கி.பி.1489 ஆம் ஆண்டில் கந்தாடை ராமாநுஜ முனி காலத்தில் அடையவளைந்தான் தெருவுக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டபமும் கட்டுவிக்கப் பட்டது. இந்தக் கந்தாடை ராமாநுஜ முனி என்பவர் விஜயநகர சாளுவர்கள் வீர நரசிம்மன் என்பவனுடைய தமையன் ஆவார். இவர் திருக்கோயிலின் கந்தாடை அண்ணனைத் தம் குருவாக ஏற்றதால் கந்தாடை ராமாநுஜ முனி என அழைக்கப்பட்டார். இவரும் இவருடைய சீடர்களும் திருவரங்கக் கோயில் வரலாற்றில் தனி இடம் பெற்றவர்கள். தற்காலத்தில் கந்தாடை மடத்தின் பட்டத்தை யாரும் அலங்கரிப்பதில்லை. முன்னர் கந்தாடை ராமாநுஜருக்கு மரியாதை செய்யும் பொருட்டு அவருக்கு அழகிய மணவாளர் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். தற்சமயம் இந்த மரியாதை நடைபெறுவதில்லை.

முதலில் சித்திரை மாதத்திலும் பின்னர் ஆடி மாதத்திலும் நடைபெற்று வந்த தெப்போற்சவம் விஜயநகரச் சக்கரவர்த்தியான கிருஷ்ணதேவராயர் காலத்தில் மாசி மாதம் நடைபெற்ற பிரம்மோத்ஸவத்தின் ஒரு வகை என்று சொல்கின்றனர். இத்திருநாள் இப்போது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.  பின்னர் கி.பி. 1535 ஆம் ஆண்டிலும், 1536 ஆம் ஆண்டிலும், 1539 ஆம் ஆண்டிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்வெட்டுக்களைப் பொறித்தது துளுவ வம்சத்து அரசன் ஆன அச்சுததேவ ராயர் காலத்தில் ஆகும். இதில் திருநாளின் இரண்டாம் நாளன்று விடாய் ஆற்றிக்கு அழகிய மணவாளப்  பெருமாள் அக்கச்சி அம்மன் தோப்புக்கு எழுந்தருளி இருந்திருக்கிறார். ஆறாம் திருநாளன்று தெப்போத்சவம் கண்டருளி இருக்கிறார். இந்தக் கல்வெட்டுக்கள் இப்போதும் ஶ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பக்கச் சுவரில் உள்ள நாயக்கர் சிலைகளுக்கு முன்பு உள்ளதாகத் தெரிய வருகிறது.

பிரம்மோத்சவம் போலவே இந்தத் தெப்போத்சவத் திருநாளும் நடைபெறுவதால் ஒன்பது நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள் திரு வீதி உலா வருகிறார். இப்போது எட்டாம் நாளன்று தெப்போத்சவமும் ஒன்பதாம் நாளன்று ஶ்ரீசடாரிக்குத் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்று அன்றிரவு பந்தக்காட்சியும் நடக்கும். தெப்போத்சவம் திதிகளின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இதற்குக் கொடியேற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் காலை வீதி உலாவில் பல்லக்கில் மட்டுமே எழுந்தருளுவார். வாகனங்கள் கிடையாது.  இதுவும் கிட்டத்தட்ட ஒரு வசந்தோத்சவம் போலவே கொண்டாடப் படுகிறது.  திருவிழாவின் நான்காம் நாள் மாலை வெள்ளி கருடனின் நம்பெருமாள் சேவை சாதிக்கிறார். மாசி மாத கருட சேவையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.

தகவல்கள் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம்

Monday, May 04, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

திருவரங்கத்திலிருந்து கிளம்பிய அரங்கன் ஊர்வலம் பின்னால் வருபவர்களுக்காகத் துளசிச் செடியின் இலைகளையும், சின்னச் சின்னக் கிளைகளையும் ஒடித்துப் போட்டுக் கொண்டே சென்றாலும் பலருக்கும் திசை மாறித்தான் போயிற்று. ஆகவே மேற்கே ஒரு குழுவும், கிழக்கே ஒரு குழுவுமாகச் சென்றனர். அரங்கனோடு சேர்ந்து போனவர்களோ திருச்சிராப்பள்ளி நகரைக் கடந்து தொண்டைமானின் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த இடத்தைத் தொண்டைமான் காடு என அந்நாட்களில் அழைத்தனர்.  வேதாந்ததேசிகர் இன்னமும் வந்து சேர்ந்து கொள்ளாதது குறித்து அனைவரும் கவலையிலும் ஆழ்ந்திருந்தனர்.

ஆனால் அந்தப் பகுதியில் வெகுநேரம் தங்க முடியாது. ஏனெனில் கள்வர் பயம் அதிகம். ஆனாலும் பிரதான சாலைகளின் வழி சென்றால் தாங்கள் கண்டுபிடிக்கப்படுவோம் என்னும் அச்சம் காரணமாகச் சுற்று வழியாகவே சென்றனர். வசதி படைத்தவர்கள் பல்லக்குகள், குதிரைகள் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள அதிகமான பயணிகள் கால்நடையாகவே சென்றனர். அவர்களில் சிலர் குழுக்குழுவாகப் பிரிந்து சென்றவர்கள் ஆங்காங்கே இடையில் தென்பட்ட தலங்களில் தங்கினார்கள். ஆனால் அரங்கனும், அவனுடன் சென்றவர்களும் மட்டும் எங்கும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர். இரு தினங்கள் சென்றும் ஶ்ரீரங்கத்திலிருந்து தகவல் ஏதும் இல்லை. ஆகவே சற்றுத் தங்கிச் செல்லலாம் என ஒரு இடத்தில் தங்கி விட்டார்கள்.

தங்கிய இடத்தில் இரவைக் கழித்த மறுநாள் ஶ்ரீரங்கத்திலிருந்து இரு ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டனர். ஶ்ரீரங்கத்தில் நடந்த கோர யுத்தம் பற்றியும் நகரமே பற்றி எரிந்ததையும், எல்லோரையும் கொன்று அழித்துவிட்டார்கள் என்பதையும் அவர்கள் விபரமாகச் சொல்லவே அனைவர் மனமும் துக்கத்தில் ஆழ்ந்து போயிற்று. திகைத்துப் போன உலகாரியரை அவர் சீடரான கூர குலோத்தமதாசர் தேற்றிச் சமாதானம் செய்து அனைவரும் விரைவில் அவ்விடத்திலிருந்து அகல வேண்டும் எனவும், இல்லை எனில் டில்லிப் படைகள் விரைவில் வந்து பிடித்துக் கொள்வதோடு அரங்கனையும் கைப்பற்றி விடுவார்கள் எனவும் சொல்ல உடனே அந்த இடத்திலிருந்து அந்த ஊர்வலம் அகன்றது.

மாலை மங்கும் நேரத்தில் தங்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கையில் ஈட்டிகளைத் தாங்கிய வண்ணம் வலுவான தேகத்துடனும் கொடிய மீசைகளுடனும் முப்பது கள்வர்கள் சூழ்ந்து கொண்டுவிட்டனர். தொண்டைமான் காட்டுப்பகுதியே கள்வர்களுக்குப் பிரசித்தம். வழிப்பறி செய்வதில் நிபுணர்கள் அவர்கள். ஊர்வலத்தில் வந்தவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர்.  கள்வர்கள் அனைவரும் அவர்களை நோட்டம் விட்டுப் பெட்டகங்கள் வைத்திருப்பதையும் கண்டுகொண்டனர். அந்தப் பெட்டகங்களில் என்ன இருக்கிறது என்று விசாரணையும் செய்ய ஆரம்பித்தனர்.

அரங்கனின் பொருட்கள், அவன் நகை நட்டுக்கள் என்று சொல்ல, என்ன அரங்கனா? அவன் எந்த ஊர்க்காரன்? எந்த நாட்டுக்கு ராஜா? என்றெல்லாம் கேலி பேசினார்கள். அரங்கம் என்ன, இந்த உலகுக்கே அவன் தான் ராஜா! திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான், ரங்கராஜன் எனப் பரிசனங்கள் சொல்ல, உலகையே காப்பவன் இங்கே இந்தக் காட்டுக்குள் நாங்கள் வசிக்கும் இடம் ஏன் வந்தான்? பெட்டகங்களைத் திறவுங்கள் எனக் கள்வர் தலைவன் கட்டளை இட்டான். பயந்து கொண்டே பெட்டகங்களைப் பரிசனங்கள் திறந்து காட்டினார்கள்.  பொன்னும், மணியும், முத்தும், பவளமும், வைர வைடூரியங்களும், தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட ஆபரணங்களும் கண்களைக் கவர்ந்தன அவற்றை ஆசையுடன் தன் கைகளால் எடுத்துப் பார்த்தான் கள்வர் தலைவன்.

Saturday, May 02, 2015

ஶ்ரீரங்கரஙகநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கமாநகருள்!

அங்கிருந்த அனைவரும் அதிசயித்து நிற்க அந்தப் பெண் மேலே பேசினாள். ஶ்ரீரங்கத்து மனிதர்களிடம் கருணை வைக்குமாறு உல்லூக்கானை வேண்டினாள். ஆனால் உல்லூக்கானோ இங்கிருப்பவர்களைத் தான் கொல்லாமல் விட வேண்டுமானால் ஶ்ரீரங்கத்துச் செல்வம் அனைத்தும் தன் காலடியில் வந்து விழ வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண் அனைத்தையும் பாண்டிய நாட்டு வீரர்கள் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாய்க் கூறினாள். மிச்சம், மீதி இல்லை என்னும் அவளைப் பார்த்து இத்தனையையும் பார்த்துக் கொண்டு உன் தெய்வங்கள் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தனவா? அவை எல்லாம் கல்லாலும், உலோகங்களாலும் ஆன சிலைகள் தானே எனக் கேலி செய்தான் உல்லூக்கான். அதற்கு அந்தப் பெண் அந்த அணிமணிகளை விக்ரஹங்களுக்கு அளித்து அழகு பார்த்ததே இந்த மானுடர்கள் தானே! தெய்வங்கள் அவற்றைக் கேட்கவில்லையே! ஆகவே அவர்களுக்கு இந்த அணிமணிகள் இருந்தாலும் ஒன்று தான்; இல்லை என்றாலும் ஒன்று தான் என்று சொன்னாள்.

ஆனாலும் அரங்கத்து ஆட்கள் இன்னமும் ஏன் தன்னோடு போரிடத் தயாராக இருக்க வேண்டும்? மிச்சம், மீதி இருப்பதைப் பாதுகாக்கவே அவர்கள் போரிடுகின்றனர் என்றூ உல்லூக்கான் சந்தேகத்துடன் அவளிடம் சொன்னான். உள்ளே வேறேதும் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தங்களைக் காத்துக் கொள்ளவே தயாராக இருக்கிறார்கள் எனவும், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் அந்தப் பெண் வேண்ட, உல்லூக்கான் தான் உள்ளே போய்ப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறான். அந்தப் பெண்ணும் அந்த ஆட்களை ஏதும் செய்யக் கூடாது; இனி யாரையும் கொல்லக் கூடாது என்றெல்லாம் உல்லூக்கானிடம் வாக்குக் கேட்கிறாள்.  அப்படியே அங்கே காவலுக்கு இருந்த வீரர்களை எல்லாம் அப்பால் போகச் சொல்லி உல்லூக்கான் கட்டளையிட இத்தனை நேரம் வீரர்களுக்காகப் பேசிய அந்தப் பெண் மயங்கி விழ அவளை மருத்துவரிடம் தூக்கிச் சென்றனர். பிழைப்பாளோ அல்லது அரங்கனுக்காக அவள் உயிரையும் கொடுக்க நேருமோ தெரியாது!

காவலிருந்து வீரர்கள் அமைதியாக வெளியேற டில்லி படைகள் உள்ளே சென்று ஒவ்வொரு தூணையும், சிற்பத்தையும் கல்சுவரையும், மண்டபத்தையும் உடைத்துத் தோண்டிப் பார்க்கின்றனர். எதுவும் கிடைக்கவில்லை. உல்லூக்கானுக்குத் தக்வல் போகிறது. அவனுக்கு அப்படியும் சந்தேகம். இங்கிருக்கும் பொருட்கள் அவ்வளவு எளிதில் வெளியே சென்றிருக்க முடியாது. எப்படிக் கண்டு பிடிக்கலாம் என யோசிக்கிறான்  பின்னர் அரங்க நகரிலே சிறு படை ஒன்றை நிறுத்திவிட்டு மற்ற வீரர்களை அழைத்துக் கொண்டு காவிரியைக் கடந்து மதுரை போகக் கிளம்புகிறான். அலங்கோலமாய்க் கிடந்தது அரங்கமாநகரம். ஆங்காங்கே உயிரற்ற உடல்கள் கிடக்க, வீடுகள் சிதிலமடைந்து விழுந்து கிடக்க, கோயிலின் மண்டபங்கள், தூண்கள், சிற்பங்கள்  உடைந்து கிடக்கப் பெரும் சூறாவளி அடித்து ஓய்ந்த்து போல் காணப்பட்டது அரங்கமாநகரம்.