எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, January 30, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

கிளம்பி விட்டது ஹொய்சள ராணியின் ராமேஸ்வர யாத்திரை! எட்டு மூடு பல்லக்குகள். ஆண், பெண் பயணிகள், சேடிகள், பணிப்பெண்கள், சமையல் செய்பவர்கள், மற்ற வேலைகள் செய்வோர் என ஒரு பெரிய பரிவாரமே ராணியுடன் கிளம்பியது! குதிரை ஓட்டத் தெரிந்தோர் குதிரைகளிலும், மற்றவர் மாட்டு வண்டிகளிலும், சிலர் நடந்தும் தங்கள் பயணத்தைத் துவக்கினர். பொதி வண்டிகள் பிரயாணத்துக்குத் தேவையான பொருட்களைச் சுமந்து கொண்டு வந்தன. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டும் கவனித்துக்கொண்டும் குலசேகரனும் குறளனும் பரிவாரங்களுடன் சென்றார்கள். முதல் நாள் மாலையில் ஒரு மணற்பாங்கான சமவெளியில் பரிவாரங்களுடன் தண்டு இறங்கினார்கள். எல்லோரும் உற்சாகமான மனோநிலையில் இருந்ததால் ஆடல், பாடல், விளையாட்டுக்களில் ஈடுபட்டனர். குலசேகரனையும் குறளனையும் கூட அழைத்தனர். எல்லோருமாகச் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினார்கள். குலசேகரன் கண்களையும் கட்டினார்கள். அவன் இரு கைகளையும் விரித்துக் கொண்டு தேடிச் சென்றவன் அவ்வழியாக வந்த ராணியின் கைகளை இறுக்கமாகப் பிடித்து விட்டான்.

குலசேகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது! இதென்ன பெண் பிள்ளை போல் இருக்கிறதே என நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்த கட்டுக்களை அவிழ்த்தான். எதிரே ஹொய்சள ராணி! அவள் துளுவ நாட்டு இளவரசியாம். ஹொய்சள மன்னர் துளுவ நாட்டையும் தன் நாட்டோடு இணைக்க வேண்டி அவளைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். அவள் பெயர் கிருஷ்ணாயி தாயி என்பதாகும். திருமணம் நடந்து 2 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால் அவள் இப்போது ராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டிருந்தாள்.  இதெல்லாம் குலசேகரன் நினைவில் வந்தன. ஆனால் அந்த ராணியோ அவன் எதிரே கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள்.  குலசேகரனைப் பார்த்து எதிரே யார் வருவார்களோ என்னும் எண்ணத்தோடு விளையாட வேண்டாமா எனக் கடுமையாகக் கேட்டாள். பின்னர் அவன் பதிலை எதிர்பார்க்காமல் வெடுக்கென்று திரும்பிச் சென்று விட்டாள். குலசேகரன் மனம் வேதனையில் ஆழ்ந்தது. துயரத்தில் ஆழ்ந்த அவனைக் குறளன் சமாதானம் செய்தான்.

ஆனால் குலசேகரன் மனதுக்குள்ளாக ஒரு சந்தேகம். திருவண்ணாமலையில் சாலையில் பார்த்த பெண்ணின் விழிகளும், தான் கோட்டைக் கிடங்கில் பார்த்த பெண்ணின் விழிகளும் ஒன்றாக இருந்தன. அந்தப் பெண்ணோ குலசேகரனுக்கு நல் உபதேசம் தானே செய்தாள்! அப்போது அந்தப் பெண் இவள் இல்லையா? அவள் வேறு இவள் வேறா? குழப்பம் அடைந்தான் குலசேகரன். இரவு உணவருந்திவிட்டு உட்கார்ந்திருக்கையில் எங்கிருந்தோ யாழின் இன்னிசையுடன் கூடிய கதா காலட்சேபம் கேட்டது. ஒலி வந்த திக்கில் நடந்தவனுக்கு அங்கே ஹேமலேகாவைக் கண்டதும் தூக்கி வாரிப் போட்டது. அவள் அங்கே கூடி இருந்த மக்களுக்கு பாரதக் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளும் இந்தப் பரிவாரங்களுடன் வந்திருப்பதைக் குலசேகரன் அறிய மாட்டான். என்றாலும் தனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண் இங்கே இருப்பதை அறிந்து உவகை கொண்ட குலசேகரன் அங்கேயே அமர்ந்து அவள் கதை சொல்லுவதைக் கேட்டுக் கொண்டான்.

சற்று நேரத்தில் கதை முடிந்தது. அனைவரும் கலைந்து சென்றார்கள்.  ஹேமலேகாவும் கிளம்பும் முன்னர் குலசேகரன் அவசரம் அவசரமாகச் சென்று அவள் முன்னால் நின்றான். அவனை அடையாளம் தெரிந்து கொண்ட ஹேமலேகா, "உங்களைக் காவிரிக்கரையில் அல்லவோ பார்த்தேன்!" என்று கேட்டாள். அவனைக் கண்ட மகிழ்ச்சியில் அவள் முகமும் மலர்ந்தது. குலசேகரனும் அவள் சொன்னதை ஆமோதித்துத் தன் தாயாருக்கு அவள் ஈமச்சடங்குகள் செய்வித்து வைத்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தான்.  அவள் சிரிக்கையில் கண்களின் பிரகாசத்தையும் ஒளியையும் கண்ட குலசேகரன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். அவள் அழகில் அவன் உள்ளம் தோய்ந்தது.  பின்னர் குலசேகரன் தான் அவளைப் பல்லக்கில் தன்னந்தனியாக அனுப்ப நேர்ந்தது குறித்து இன்றும் வருந்துவதாகச் சொன்னான். அவளுக்கு என்னவாகி இருக்குமோ என்றெல்லாம் யோசித்துக் கலங்கினதாகவும் கூறினான்.

அப்போது ஹேமலேகா தான் அடைந்த அனுபவங்களை விவரித்தாள். "ஜம்புகேஸ்வரத்துக்குத் தான் திரும்புகையில் ஊரே சூனியமாகக் காட்சி அளித்ததாகவும் ஒரு கிழவர் சொன்னதன் பேரில் அரங்கன் ஊர்வலத்தைத் தேடிச் சென்ற வழியில் தான் குலசேகரன் அறிமுகம் கிடைத்ததாயும் சொன்னாள்.  பின்னர் தான் திருச்சிக்குச் சென்றதாகவும் அங்கே தான் கலவரங்கள் பற்றிய முழு விபரங்களைத் தெரிந்து கொண்டதாகவும் கூறினாள். பின்னர் தெற்கு நோக்கிப் பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை அறிந்து கொண்டதால் வடக்கு நோக்கிச் சென்றதாகவும் கூறினாள். அப்போது இந்தத் திருவண்ணாமலைக்கு வந்ததாகவும் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததால் வந்ததாகவும் சொன்னாள்.

அவளும் யாத்திரையில் வருவது குறித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டான் குலசேகரன். ஹேமலேகா அதற்குத் தான் மன்னரின் கட்டளையின் பேரிலேயே வந்ததாகவும், மஹாராணிக்குப் புராணக் கதைகள் நிறையக் கூற வேண்டும் என்று கட்டளை இருப்பதாகவும் இப்போது மஹாராணி காத்திருப்பார்கள் என்பதால் தான் செல்வதாகவும் கூறினாள். குலசேகரனுக்கு ஹேமலேகாவைச் சந்தித்ததும், அவளுடன் பேசியதுமே கனவு போல் தோன்றியது!

Monday, January 29, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அந்த உருவம் முழுவதுமாகத் தன்னை மறைத்துக் கொண்டிருந்தது விழிகளைத் தவிர்த்து! விழிகள் போதுமே குலசேகரன் கண்டு பிடிக்க! விழிகள் மூலம் அவை சாலையில் அந்த மூடு பல்லக்கில் வந்த பெண்ணின் விழிகள் தான் என்பதை எளிதாகப் புரிந்து கொண்டான் குலசேகரன். குலசேகரன் தன்னைப் பார்ப்பது அறிந்ததும், "ராஜவீதியில் ஏன் கலகம் செய்தாய்?" என அந்தக் குரல் கம்பீரமாய்க் கேட்டது. அதற்குக் குலசேகரன் தான் கலகம் எதுவும் செய்யவில்லை என்றும் தங்கள் மன்னரை நான் ஏளனம் செய்ததாக தளவாய் சொல்லிக் கொண்டு தன்னிடம் வம்பிழுத்ததாகவும் கூறினான். அதற்கு அந்தப் பெண் இத்தனை ஆற்றல் மிகுந்த குலசேகரன் ஆத்திரக்காரனாக இருப்பது சரியல்ல என்றாள்.

மேலும் அவள், "நாளை விசாரணை நடக்கும்போது பொறுமையாக நடந்து கொள்! விடுதலை கிடைக்கும்!" என்று சொன்னவள் மேலும் மன்னனிடம் மிகப் பொறுமையாக நடந்து கொள்ளவும் சொன்னாள். மீண்டும் குலசேகரனை ஆழமாகவும், அர்த்தம் பொதிந்தவாறும் பார்த்த அந்த உருவம் மேலே சென்று விட்டது!  மறுநாள் அரசவைக்குக் குறளனையும், குலசேகரனையும் அரச ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். வீர வல்லாளனின் சபையில் அவருக்கு முன்னே இருவரும் நிறுத்தப்பட்டார்கள். வீர வல்லாளருக்கு அப்போதே 62 வயது ஆகி இருந்தது! எனினும் பார்க்க 40 வயது போலக் காட்சி அளித்தார் அவர்! அவர்கள் இருவரையும் கடுமையுடன் உற்று நோக்கிய வீர வல்லாளர், "ஓஹோ! இந்தப் பயல்களா? இவர்கள் தான் கலகம் விளைவித்தவர்களா?" என்றும் வினவினார். யாரும் எதுவும் பேசவில்லை.

கோபம் அதிகம் ஆன வீர வல்லாளர் குறளனையும் குலசேகரனையும் பார்த்து, "ஏன் வாய் திறக்காமல் மௌனியாக இருக்கிறீர்கள்? எங்கிருந்து வந்தீர்கள்? எந்த நாடு உங்களுக்கு? இங்கே ஏன் குழப்பம் விளைவித்தீர்கள்? யார் அனுப்பி இங்கே வந்தீர்கள்? ஒற்றர்களா? வேவு பார்க்க வந்தீர்களா?" என்றெல்லாம் கேட்டார். குலசேகரன் தாங்கள் திருவரங்கத்திலிருந்து வருவதாய்க் கூறி விட்டு அங்கே நடந்தனவற்றை எல்லாம் ஒன்று விடாமல் விபரமாய்க் கூறினான். அவன் கூறியதைக் கேட்ட வல்லாளர் முகத்தில் புன்னகை மெல்ல அரும்பிப் பின்னர் அது பெரு நகையாக வெடித்தது.

"ஆம், ஆம்! நாங்கள் தில்லி சுல்தானுக்கு அடி பணியத் தான் செய்தோம். இல்லை எனில் என்ன செய்திருக்க முடியும்? உங்கள் பாண்டியரைப் போல் நாட்டை விட்டு ஓடவா முடியும்? அப்புறம் நாடு என்னாவது? மக்கள் என்னாவார்கள்? தில்லிப்படையை எதிர்க்க முடியாது  எனத் தெரிந்தும் எதிர்த்திருக்க வேண்டுமா? அடி பணிந்ததால் மக்களுக்குத் தானே நன்மை கிட்டியது! மக்கள் யுத்த பயம் இன்றி சௌகரியமாக இருக்கின்றனர் அல்லவா?ஆனால் திருவரங்கத்தில்! திருவரங்கமே நாசம் அடைந்து விட்டது! ஊரைக் கொள்ளை அடித்து மக்களையும் ஓட ஓட விரட்டி விட்டார்கள். மக்கள் எங்கே செல்வது எனத் தெரியாமல் ஊர் ஊராகச் செல்கின்றனர்! உங்கள் ரங்கநாதர் கதி என்ன? கருவறையை மூடி விட்டார்கள்! அழகிய மணவாளரோ இருக்குமிடம் தெரியாமல் மறைந்து வாழ்கிறார். எது நல்லது என்பதை நீயே யோசித்துக் கொள்!" என்றார்.

பின்னர் அவர் அவர்கள் இங்கே வந்ததன் காரணம் என்ன என்று கேட்டார். அரங்கமா நகரிலிருந்து தில்லிப் படைகளை விரட்ட வீர வல்லாளரின் துணையும் உதவியும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான் குலசேகரன். அதற்கும் வாய் விட்டுச் சிரித்தார் வீர வல்லாளர். பின்னர் கூறினார். "தில்லிப்படைகள் மதுரையை விட்டு நகரப்போவதில்லை. அதற்கு உதவி செய்யத் திருவரங்கத்தில் ஓர் படை கட்டாயமாய் இருக்கத் தான் செய்யும். அந்தப் படையை அகற்ற மாட்டார்கள். கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான மணங்குப் பொன்னும் நகைகளும் அரங்கன் மறைந்தாற்போல் அவனுடன் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தில்லிப் படைகள் மட்டுமல்ல தில்லி சுல்தானும் நம்புகிறான். ஆகவே அவர்களுக்கு அவை கிடைக்கும் வரை திருவரங்கத்திலிருந்து நகரப் போவதில்லை!" என்றார்.

அதற்குக் குலசேகரன் அரங்கனின் சொத்தெல்லாம் கள்வரிடம் போய்விட்டதைக் கூறினான். "ம்ம்ம்ம் மன்னனில்லா நாடு! பாண்டிய மன்னன் மக்களைப் பரிதவிக்க விட்டு விட்டு ஓடி ஒளிந்து கொண்டான். இந்த தில்லிக் கொள்ளையர் போதாது என்று இப்போது களவர் வேறு கொள்ளையை ஆரம்பித்துவிட்டார்கள்!" என்று மனக் கசப்புடன் கூறிய வல்லாளர் சற்று நேரம் மௌனத்தில் ஆழ்ந்தார். பின்னர் கண்ணீர் ததும்பக் கூறியதாவது! "நானும் வைணவன் தான்! அரங்கமாநகருக்கும், அரங்கனுக்கும் நேர்ந்ததை நினைத்துக் கண்ணீர் விடுகிறேன். என்னால் வேறேன்ன முடியும்! இந்தத் தென்னாடு பல சிறு சிறு நாடுகளாகப் பிரிந்ததால் வந்த வினைதான் இவை எல்லாம். எல்லா மன்னர்களும் ஒன்று சேர்ந்து தில்லி சுல்தானை எதிர்த்திருக்கலாம் அல்லவா?"

"எங்கே! அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக் கொள்ளவே அவர்களுக்கு நேரம் போதவில்லையே!நானும் எவ்வளவோ முயன்றேன். எல்லோரையும் ஒருங்கிணைக்க! முடியவில்லை. ஆனாலும் அரங்கமாநகரையோ அரங்கனையோ விட்டு விட என் மனம் ஒப்பவில்லை. ஏதேனும் செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். பார்க்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன். யோசிக்க அவகாசம் தேவை! அதற்கு முன்னால் ஒரு விஷயம் சொல்ல வேண்டுமே! குலசேகரா! உன்னைப் பார்த்தால் பெரு வீரனாகத் தெரிகிறது! என் அரசி ராமேஸ்வரம் செல்லவேண்டி ஏற்பாடுகள் செய்து வருகிறாள். நீ அவளுடன் துணையாகப் போய் வா!" என்றார்.

குலசேகரன் அரை மனதுடன், "தங்கள் சித்தம் பிரபோ! ஆனால் ராமேஸ்வரம் பக்கம் சென்றால் தில்லி வீரர்கள் விட்டு வைப்பார்களா?" என்று கேட்டான். அதற்கு வீர வல்லாளர் தான் அவர்களுடன் செய்துகொண்டிருக்கும் உடன்படிக்கை இருக்கும் வரை அவர்கள் தங்களுக்கு நண்பர்களே என்றார். மேலும் அவர்கள் உங்களைப் பிடிக்காமலும், உங்களை எதிர்க்காமலும் இருப்பதற்காக ஹொய்சள அரச இலச்சினையைத் தருவதாகவும் சொன்னார். 

Tuesday, January 09, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

வீர வல்லாளனிடம் பரிசில்கள் பெற்றுச் சென்ற ஹேமலேகா குலசேகரன் எதிர்பார்த்தபடி அவன் பக்கம் திரும்பக் கூட இல்லை. குலசேகரனுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்!  அவள் சென்ற பின்னரும் பல புலவர்களும் தங்கள் திறமைகளைக் காட்டிப் பரிசில்கள் பெற்றுக் கொண்டிருக்க நடுவில் கிடைத்த இடைவெளியில் குலசேகரனையும், குறளனையும் ஓர் அதிகாரி அறிமுகம் செய்து வைத்தார். மன்னன் அவர்களைப் பார்த்து விட்டு, "ஶ்ரீரங்கமா? நாளை விரிவாகப் பேசலாம்!" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். கொஞ்சம் ஏமாற்றம் அடைந்த குலசேகரன் குறளுடன் தாங்கள் தங்கி இருந்த சத்திரத்துக்குச் சென்றான். அங்கே உணவு உண்டுவிட்டுப் படுத்தவனுக்கு ஹேமலேகாவின் நினைவுகள் மேலோங்கின.

அவளுடைய புலமையை எண்ணி எண்ணி வியந்தான். அவள் பெயருக்கேற்றாற்போல் தங்கம் போல் ஜொலித்த அவள் அழகையும் அவன் நினைக்காமல் இல்லை. தானும் அவளைப் போல் படிக்காமல் போனோமே என்று கழிவிரக்கம் கொண்டான். தற்சமயம் தான் ஒவ்வொரு நாடாக, ஒவ்வொரு நகரமாக அலைவது இல்லாமல் எங்கேயானும் ஓர் இடத்தில் நிரந்தரமாக இருந்திருக்கலாமோ என்னும் எண்ணமும் கொண்டான். இம்மாதிரிச் சிந்தனைகளிலேயே இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. ஹொய்சள மன்னரோ, "நாளை" என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவர் பேசுவது வேற்று மொழி என்பதால் நம் இறைவனிடம் அவருக்கு கவனம் இல்லையோ எனக் குறளன் சந்தேகப்பட்டான். ஆனால் குலசேகரனோ அவர் மொழி வேறாக இருந்தாலும் நம்முடைய சமயத்தைத் தானே அவரும் பின்பற்றுகிறார். ஆகவே மொழி ஒரு தடையல்ல.  என்று சொன்னான். ஒருவேளை அவருக்கு நமக்கு உதவி செய்ய விருப்பம் இல்லையோ எனக் குறளன் கேட்க, அதை நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்று குலசேகரன் பதில் சொன்னான்.

மூன்று நாட்களாக அந்நகரை அவர்கள் சுற்றி வந்ததில் இந்த தில்லிக்காரர்களின் படை எடுப்பினால் இந்த நகரத்துக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள். அந்த நகரத்தின் தற்போதைய நிலையையும் ஶ்ரீரங்கத்தின் தற்போதைய நிலையையும் எண்ணிப் பார்த்து வருந்தினார்கள்.  அன்றும் அம்மாதிரி பேசிக் கொண்டு நகரைச் சுற்றி வருகையில் எதிரே ஒரு மூடு பல்லக்கு வந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றிக் காவல் வீரர்களும் ஒரு தளவாய் எனப்படும் தலைவனும் வந்து கொண்டிருந்தனர். அந்தத் தளபதி நகருக்குப் புதியவர்களான இவர்கள் இருவரையும் கண்டு அருகில் அழைத்து என்ன காரியமாய் வந்திருக்கிறார்கள் என விசாரித்தான். அவர்கள் திருவரங்கம் என அறிந்ததும் தில்லிப்படைகளின் கொள்ளை பற்றியும் நகரைக்காக்காமல் பாண்டியன் ஓடி ஒளிந்ததையும் குறித்துக் கேட்டறிந்தார்கள்.

குலசேகரனுக்கு உள்ளுக்குள் அவமானம் பிடுங்கித் தின்றது. சாதாரணமாக அவனும் அந்தத் தளபதியுடன் சேர்ந்து பாண்டியர்களைத் திட்டி இருப்பான். ஆனால் தளபதியின் ஏளனம் அவனுக்குள் சினத்தை மூட்டி விட்டது. இவர்கள் நம் தமிழ்நாட்டின் வடக்கே நமக்கு முன்னால் இருக்கின்றனர். இவர்கள் தடுத்து நிறுத்தி இருந்தால் தில்லிக்காரர்கள் ஶ்ரீரங்கம், மதுரை வரை வந்திருப்பார்களா என எண்ணினான். கோபத்துடன், தளபதியிடம், "தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் வாளா இருந்ததால் தானே எங்களுக்குப் பிரச்னை! அவர்கள் தில்லிக்காரர்களை ஓட ஓட விரட்டி இருந்தால் பாண்டியர்கள் ஏன் அஞ்சி ஓடி இருக்கப் போகிறார்கள்?" என்று கேட்டான். உடனே தளபதிக்கும் கோபம் வந்தது! "என்ன? நாங்களா தடுத்திருக்க வேண்டும்?" என்று கேட்க "ஆம், நீங்கள் தானே முன்னால் இருக்கிறீர்கள்? அவர்களைத் தடுத்து நிறுத்தாமல் நீங்கள் அடி பணிந்து வணங்கியதால் அவர்கள் உங்களைக் கடந்து எங்கள் நாட்டுக்கு வந்து சூறையாடி விட்டார்கள்!" என்றான் குலசேகரன் அதே கோபத்தோடு. மேலும், "உங்களுக்கும் பராக்கிரமம் எல்லாம் எதுவும் இல்லை! நீங்கள் அடி பணிந்தீர்கள்! எங்கள் மன்னர் எதிர்க்காமல் ஓடி ஒளிந்தார். இருவர் பராக்கிரமும் ஒன்றே தான்!" என்றான் ஏளனத்துடன்.

தளபதிக்குக் கோபம் பொங்க, "என்ன! எங்கள் அரசரையா வீரமில்லாதவர் என்கிறாய்?" என்று தன் வாளை உருவ, பதிலுக்குக் குலசேகரனும் ஏதோ மறுமொழி கூறிக் கொண்டே தன் வாளை உருவ இருவருக்கும் இடையே அங்கே உக்கிரமான வாட்போர் தொடங்கியது. அப்போது பின்னால் வந்த மூடு பல்லக்கு அந்த வாட்போரைக் கவனித்துவிட்டு நிறுத்தப்பட்டது. அதிலிருந்து மிகவும் இளமையும், அழகும் வாய்ந்ததொரு முகம் குலசேகரனைக் கூர்ந்து கவனித்தது. குலசேகரன் அதை எல்லாம் கவனிக்காமல் தளபதியின் வாளைத் தடுத்து நிறுத்தி அவனையும் காயப்படுத்திக் கீழே தள்ளிவிட்டான். தளபதிக்கு உதவியாகப் போரிட்ட வீரர்கள் ஓட்டமாய் ஓடி விட, பல்லக்கும் மெல்ல நகர்ந்தது. சிறிது நேரத்தில் சுமார் நூறு பேர் கொண்ட ஹொய்சளப்படைவீரர்கள் அங்கே வந்து குலசேகரனையும் குறளனையும் கைது செய்து கொண்டு போய்க் கோட்டைச் சிறையில் அடைத்தார்கள். உதவி கேட்டு வந்த இடத்தில் இப்படி மாட்டிக் கொண்டு விட்டோமே எனக் குலசேகரனுக்குள் வருத்தம் மேலோங்கியது.

அவர்கள் அந்தச் சிறைக்கு வந்த மூன்றாம் நாள்! கிடங்கின் படிகளில் யாரோ ஏறி வரும் சப்தமும், தீவர்த்தியின் வெளிச்சமும் தெரிந்தது. சிறிது நேரத்தில் தீவர்த்திகளைத் தாங்கிக் கொண்டு சிலர் வர அவர்களுடன் ஓர் உருவம் தலை முதல் கால் வரை போர்த்திய வண்ணம் வந்து கொண்டிருந்தது. குலசேகரன் இருந்த இடத்துக்கு வந்ததும் அவனைப் பார்த்துக் கைகாட்டி அழைத்தது.

Tuesday, January 02, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

பின்னர் பிள்ளை உலகாரியர் திருநாட்டிற்கு எழுந்தருளிய செய்தியையும், அரங்கனின் சொத்துக்கள் அனைத்தும் பறி போனதையும் கேள்விப் பட்டு சிங்கப்பிரான் மிகவும் வருந்தினார். அதோடு இல்லாமல் அரங்கனுடன் கூட வந்த இரு நாச்சியார்களும் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்பதை அறிந்தும் மனம் நொந்து போனார். அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் யோசனையில் ஆழ்ந்தார் சிங்கப் பிரான். பின்னர் ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு தம் விருத்தாந்தத்தைச் சொல்ல ஆரம்பித்தார். திருவரங்கத்தில் தண்டு இறங்கி இருக்கும் உப தளபதியை சுரமா என்னும் எம்பெருமானின் அடியாள் ஒருத்தி மூலமாக மயக்கிப் பல காரியங்களையும் சாதித்து வருவதாய்க் கூறினார். 

உபதளபதியை நன்கு மயக்கித் தன் சொல்லுக் கட்டுப்படும்படி சுரமா செய்து விட்டதாகவும் தான் பற்பல விதமான மருந்துகளை அவள் மூலம் கொடுத்து உபதளபதிக்கு உணவுடன் சேர்த்துக் கொடுக்கச் செய்ததாகவும் அதன் காரணமாக அவன் இப்போது நித்திய நோயாளியாக இருப்பதையும் கூறினார். ஆனால் குலசேகரனுக்கும், குறளனுக்கும் இதனால் என்ன பலன் என்பது புரியவில்லை. தளபதி பலவீனம் எனில் படைகளும் பலவீனம் அடையும் என்று சிங்கப்பிரான் கூறினார். படைகள் பலவீனம் ஆனால் அதன் மூலம் நமக்கு ஏதேனும் நன்மை பயக்கலாம் என்றும் சொன்னார். ஆனால் அதைத் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளும் தலைமை அல்லது மன்னன் மற்றும் அவன் பலம் நம்மிடம் இல்லையே என்று குலசேகரன் கூறினான். 

அப்போது சிங்கப்பிரான் ஹொய்சள மன்னர் வீர வல்லாளரைப் பற்றிக் கூறி அவர் உதவி கிடைக்கும் என்றும் கூறினார். உடனே குலசேகரனும், குறளனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து சிங்கப்பிரானைத் தழுவிக் கொண்டு தாங்களும் அவரையே நாடுவதற்கு நினைத்ததாகச் சொன்னார்கள். பாண்டியரோ, சோழரோ இனி நாட்டைக் காக்கப் போவதில்லை! அந்த சக்தி வீர வல்லாளரிடமே இருக்கிறது. என்று இருவரும் ஒரு சேரக் கூறினார்கள். ஆனால் உடனடியாக அவர் உதவி கிட்டுமா என சந்தேகப்பட்டார் சிங்கப்பிரான். ஏனெனில் தற்சமயம் வரை ஹொய்சள அரசு தில்லிக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டும் ஓர் அரசாகவே இருந்து வருவதைச் சுட்டிக் காட்டினார். அதற்குக் குலசேகரன் அவர் மூலம் தில்லிப்படைகளை திருவரங்கத்தை விட்டு விலகும்படி கேட்டுக் கொண்டால் அரங்கனை மீண்டும் இங்கேயே கொண்டு வரலாம் என்று யோசனை சொன்னான்.

அவர்களையே போய் ஹொய்சள மன்னரைப் பார்த்து வரும்படி அனுப்பி வைத்தார் சிங்கப்பிரான். அப்போது ஹொய்சளம் கர்நாடகத்தில் கொஞ்சமும் தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியிலுமாகப் பரவிக் கிடந்தது. தென் தமிழகத்தைக் கைப்பற்ற வந்த தில்லிப் படைகளுக்குப் பணிந்து வளைந்து கொடுத்து ஹொய்சளம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. ஹொய்சளத்தின் தலைநகரம் துவார சமுத்திரம் என்னும் ஊர். ஆனால் அப்போது ஹொய்சள மன்னர் வீர வல்லாளர் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் மாளிகை கட்டிக் கொண்டு அங்கே இருந்து வந்தார். ஆகவே இப்போது அவரைத் தேடிச் சென்ற குலசேகரனும், குறளனும் திருவண்ணாமலைக்கே சென்றனர். 
பற்பல காணிக்கைகளையும் எடுத்துக் கொண்டு ராஜாங்க அதிகாரிகளைச் சந்தித்து மன்னனைச் சந்திக்க அனுமதி பெற்றுப் பிரதான ராஜசபா மண்டபத்திற்குள் நுழைந்தனர் இருவரும்.

மந்திரி, பிரதானிகள், வித்துவான்கள் புடைசூழ சிங்காதனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் வீர வல்லாளர். அப்போது அங்கே ஓர் பெண்ணின் குரல் கம்பீரமாகக் கேட்டது. அந்தக் குரல் முதலில் வடமொழியில் ஏதோ ஸ்லோகம் போன்ற ஒன்றைச் சொல்லிவிட்டுப் பின்னர் தமிழில் அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது.  அதிர்ச்சி அடைந்த குலசேகரன் அந்தப்பக்கம் பார்த்தால் அவன் நன்கு அறிந்த ஹேமலேகா! அங்கே ரகுவம்சத்தின் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறிவிட்டு அதன் பொருளைத் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தாள்.