எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, September 19, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் எங்கே?

பாண்டியர்களின் தோல்விக்குப் பின்னர் நாஞ்சில் நாட்டில் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை எனப் புரிந்து கொண்ட அரங்கனின் அடியார்கள் அரங்கனை வேறே எங்காவது தொலைவில் எடுத்துச் செல்ல முடிவெடுத்துக் கர்நாடகத்தில் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டைக்கு எடுத்துச் செல்ல முடிவும் செய்தார்கள். அதன்படி கிளம்பியும் விட்டார்கள். அங்கே அவர்களுடன் அத்தனை நாட்கள் நெருங்கிப் பழகி வந்த நம்மாழ்வாரின் ஊர்வலத்தார் அரங்கன் ஊர்வலத்தாரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர்களுடனேயே சென்றனர். பல நாழிகை தூரம் ஒன்றாகவே சென்றார்கள். வழியில் பெரிய உப்பங்கழி எதிர்ப்பட்டது. அதன் மறுகரை கண்ணுக்குத் தெரியவே இல்லை. இவ்வளவு பெரிய உப்பங்கழியா என அதிசயப்பட்ட ஊர்வலத்தினர் இதை ஓடங்களில் தான் கடக்க வேண்டும் என முடிவு செய்து நம்மாழ்வார் விக்ரஹத்தை ஓர் ஓடத்திலும், அரங்கன் விக்ரஹத்தை மற்றொரு ஓடத்திலும் ஏற்றிவிட்டு அதில் ஏற முடிந்த அளவுக்கு ஏறிக் கொண்டார்கள். மற்றவர்கள் வேறு ஓடங்களை அமர்த்திக் கொண்டு சாமான்களுடன் பயணித்தார்கள்.

அரங்கன் இருந்த ஓடம், நம்மாழ்வார் இருந்த ஓடம் இரண்டும் ஒரே வேகத்தில் இணையாகச் சென்றன.  துடுப்புப் போடுபவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு அம்மாதிரியே செலுத்தினார்கள். அந்தக் காயலின் நடுவே அவர்கள் வந்தார்கள். திடீரென வானம் கறுத்து இடியும், மின்னலும் கொட்டி முழக்கின! அதைக்கண்டு திகைத்த ஊர்வலத்தார் அந்தக் காயலின் மேற்கேயும் வடக்கேயும் காணப்பட்ட கரை மீது தூரத்தில் இருந்த தென்னஞ்சோலைகளின் கிளைகள் யாவும் ஒரே மாதிரி வேகத்தில் இயங்கின. உடனே சூறாவளி வருகின்றது என்பதை ஓடத்தை ஓட்டியவர்கள் புரிந்து கொண்டு சூறாவளி, சூறாவளி எனக் கத்தினார்கள். படகில் இருந்தவர்கள் இம்மாதிரியான அனுபவங்களுக்குப் பழக்கப்படவில்லை. ஆகவே திகைத்துப் போனார்கள். சூறாவளி வரும் திசைக்கு எதிர்த்திசையில் ஓடங்களை ஓட்ட வேண்டி அதன் சுக்கானைத் திருப்பிக் கிழக்கே நோக்கி ஓடங்களை ஓட்ட ஆரம்பித்தனர். ஆனால் எத்தனை நேரம் தாக்குப் பிடிப்பது. விரைவில் வடக்கே இருந்து வந்த சூறாவளிக்காற்று பேரிரைச்சலோடு அவர்கள் சமீபத்தில் வருகிறதைப் புரிந்து கொண்டனர் அனைவரும்.அதற்குள்ளாகக் கரைகளில் காணப்பட்ட தென்னை மரங்கள் பேயாட்டம் ஆடின.

கரையோரத்தில் உள்ள நீர்ப் பிரதேசமும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டது.  வடக்கேயும் மேற்கேயும் தென்னஞ்சோலைகளில் ஆரம்பிக்கப்பட்ட சூறைக்காற்றானது நீர்ப்பிரதேசத்தை விரைவில் அணுகி ஓடங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. விண்ணிலோ எனில் மேகங்கள் மூடிக்கொண்டு எங்கும் இருட்டாகி விட்டது.  "அரங்கா! அரங்கா!" என ஊர்வலத்தார் கதற ஆரம்பித்தனர். ஓடங்களோ ஒரு நிலையில் இல்லாமல் திருகித் திருகிச் சுழல ஆரம்பித்தன. ஓடங்கள் சுழன்ற வேகத்தில் ஓடத்தில் உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தத்தளித்தப் பரிவாரத்தினர் ஓடத்தின் மத்தியிலும் காயலிலும் விழுந்து அவதிப்பட்டனர். யார் காயலில் விழுந்தார்கள், யார் ஓடத்திலேயே விழுந்தார்கள் என்பதை எல்லாம் அவர்களால் அந்தக் கும்மிருட்டிலும், காற்றின் ஓசையிலும் காற்றடித்த வேகத்திலும் கண்டறிய முடியவில்லை. நேரம் ஆக ஆகப் புயல் வேகம் அதிகரித்தது. ஓடத்தை இணைத்திருந்த பலகைகள் கூட ஆடத் தொடங்கி விட்டன.

அரங்கனை அழைக்கும் தீனக்குரல்கள் எங்கும் கேட்டன. கட்டைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். அதற்குள்ளாக ஆரம்பித்த மழையானது சாட்டையால் அடிப்பது போல் அவர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அரங்கனைத் தங்கள் உடலாலும் துணிகளாலும் மூடியவண்ணம் சிலர் ஓடத்திற்குள் தாழ்வான பகுதியில் மறைத்து வைத்து அதன் மேல் படுத்த வண்ணம் மழை அரங்கன் மேல் விழாமல் பாதுகாத்தனர். ஊழிக்காலம் தான் ஏற்பட்டு விட்டதோ என்னும்படி புயலும், மழையும், காற்றும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டன. ஓடங்கள் அலைகளின் வேகத்தில் மேலும், கீழும் ஆடின. தட்டாமாலை சுற்றின. பயணிகள் பயத்தில் "ஓ"வென்று அலறினார்கள். தண்ணீர் வேகத்துக்கு ஏற்ப ஓடங்கள் கீழே தாழ்ந்தன, மேலே நிமிர்ந்தன, சில நேரம் வேகமாக நீரோட்டத்துடன் சென்றன. சில சமயம் நின்ற இடத்திலேயே சக்கரவட்டமாகச் சுழன்றன.

ஒரு ஓடம் இரண்டாகப் பிளந்தே விட்டது. நீருள்  மெல்ல மெல்ல மூழ்கவும் தொடங்கியது. அதில் இருந்த பரிவாரங்கள் கண்ணுக்குத் தெரிந்த பக்கத்து ஓடங்களைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி உயிர் தப்பிக்க முயன்றனர். சிலர் உதவினர். பலரால் எதுவும் செய்ய முடியவில்லை. தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூட சக்தி இல்லாதவர்களாகப் பலரும் இருக்கையில் மற்றவருக்கு உதவுவது எங்கனம்!  அப்போது பார்த்து நம்மாழ்வார் விக்ரஹம் இருந்த ஓடம் ஓர் பெரிய அலையில் மாட்டிக் கொண்டு வெகு தூரத்துக்கு மேலே ஏறியது. பின்னர் அந்த அலை தாழ்ந்த வேகத்தில் ஓடம் வெகு விரைவில் நீருக்குள் அமிழ்ந்தும் போனது. சற்று நேரத்தில் மேலே வரும் என நினைத்த அடியார் கூட்டத்துக்கு அது மேலே வராதது மனத்தில் திகிலை ஊட்டியது. ஓடம் கவிழ்ந்ததோடு அல்லாமல் நம்மாழ்வார் விக்ரஹமும் அதனோடு கவிழ்ந்து விட்டதை அனைவரும் அறிந்து கொண்டு செய்வதறியாது திகைத்தனர். 

2 comments:

நெல்லைத்தமிழன் said...

ஓ... இந்த வரலாறு நான் படித்ததே இல்லையே.... தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

நன்றி நெல்லைத் தமிழரே!