எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, November 30, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வாசந்திகாவின் முயற்சி!

குலசேகரனும் அவன் சகாக்களும் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து குலசேகரன் ஹேமலேகாவை நினைத்துப் போட்ட சப்தம் அந்தத் தங்குமிடத்தின் விசாலமான முன்னறையில் தங்கி இருந்த சுல்தானிய ராணிக்கும் அவளுடன் வந்த தோழியருக்கும் நன்கு கேட்டது. அவர்களில் ஒருத்தி சுல்தானிய ராணிக்கு மயில்தோகையால் விசிறி வீசிக் கொண்டிருந்தாள். நல்ல அழகான பெண்ணாக இருந்த அவள் கண்கள் எப்போதும் சோகக் கடலில் மூழ்கி இருந்தன. அவள் காதுகளில் குலசேகரன் குரல் விழுந்ததும் திடுக்கிட்டாள் அவள்.  உற்றுக் கவனித்தவளுக்கு அந்தக் குரல் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவள் நன்கு பழகிக் கேட்டவரின் குரல். அவள் உயிராக நினைத்தவரின் குரல்! இங்கே எப்படி? அந்தப் பெண் உடனே அருகில் இருந்த மற்றொரு சேடியிடம் விசிறியைக் கொடுத்துவிட்டுத் தான்கொல்லைப்புறம் ஒதுங்குவது போல் பின்னால் சென்றாள். மெல்ல மெல்லப்பின்கட்டையும் தாண்டி அந்த வீரர்கள் அடைபட்டிருந்த அறைக்கு அருகே வந்தவளுக்கு அந்தக் குரல் நன்கு கேட்டது.

ஆஹா! இது அவர் குரலே தான்! எந்த மனிதனைப் பார்த்தும் அவன் குரலைக் கேட்டும் பரவசம் அடைந்து வந்தாளோ அந்த மனிதனின் குரல் தான்! ஆனால் இங்கே எப்படி? மேலும் இந்தக் குரல் உருத்தெரியாத புலம்பலாக அன்றோ இருக்கிறது. மெல்ல அறைக்கு அருகே வந்தவள் அங்கே சுவரில் மாட்டி இருந்த தீவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு அறைக்குள்ளாக அந்தத் தீவர்த்தி வெளிச்சத்தில் நன்கு உற்றுக் கவனித்தாள். அரங்கா! அரங்கா! இது என்ன?என் உள்ளக் கோயிலில் குடி இருக்கும் தெய்வம் அன்றோ இங்கு குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக் கொண்டு கிடக்கிறது! இது எப்படி சாத்தியம்? இதன் பின்னணி என்ன? சில கணங்கள் குலசேகரனையே உற்றுக் கவனித்த வண்ணம் நின்றவள் பின்னர் தீவர்த்தியைச் சுவரில் மறுபடி சொருகி விட்டுத் தன் இருப்பிடம் சென்றாள். அவள் மனதில் கலக்கம். வேறு வேலை ஏதும் ஓடவில்லை அவளுக்கு. சிந்தனையே செய்ய முடியாதது போன்ற குழப்பம் வேறு அவளை ஆட்கொண்டிருந்தது.

அன்றிரவு சுல்தானிய ராணி  இரவு உணவை முடித்துக் கொண்டு தூங்கச் செல்வதற்காகக் காத்திருந்தாள் அந்தப் பெண். அவள் வேறு யாருமல்ல. இந்த வரலாற்றின் ஆரம்பத்தில் நாம் பார்த்த வாசந்திகாவே தான். துருக்கப்படை வீரர்களால் மதுரைக்குச் சிறை எடுக்கப் பட்டுச் சென்றவளே தான். அங்கே தன்னைக்காப்பாற்றிக் கொள்ள இயலாமல் வேறு வழியின்றி நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருப்பவளே தான். இப்போது இங்கே குலசேகரனைக் கண்ட அவள் மனம் துடித்தது. அவனை எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எப்படிக் காப்பாற்றுவது? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. எல்லோரும் உறங்கக் காத்திருந்தாள். பின்னர் மெல்ல வெளியே வந்தாள். சுற்றும் முற்றும் கவனித்த வண்ணம் மெல்ல மெல்லக்காலடி எடுத்து வைத்துக் குலசேகரன் இருக்கும் அறைக்கு அருகே வந்து அவன் அருகே போய் அமர்ந்தாள். அவனை எழுப்பி நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தாள்.

"ஸ்வாமி! ஸ்வாமி! என்னைப் பாருங்கள்! இதோ நான் வாசந்திகா வந்திருக்கிறேன்!" என்றாள். குலசேகரனிடம் அசைவே இல்லை. பலமுறை அவன் தோளைப் பற்றிக் குலுக்கிக் கொண்டு திரும்பத் திரும்ப இதையே சொன்னாள் அவள். நினைவின்றிக் கிடக்கும் அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் நினைவு திரும்பாது போல் தெரிகிறதே என யோசித்தவளாய் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். இந்தக் குழுவினர் கண்ணனூரை நோக்கிச் செல்கின்றனர். அங்கே இந்த வீரர்களோடு குலசேகரனும் சென்றால் கட்டாயம் அந்த உபதளபதி குலசேகரனைக் கொன்றுவிடுவான். தப்ப முடியாது. ஆனால் என் அரசரை என் தெய்வத்தை நான் காப்பாற்றியே ஆகவேண்டும். அது எப்படி நிறைவேறும்?" யோசித்து யோசித்து வாசந்திகாவின் மனம் குழப்பம் அடைந்தது.


நினைவே இல்லாத ஒருவனைக் காப்பாற்றுவது சிரமம்.நினைவு இருந்தால் அவனைத் தப்பி ஓடும்படி செய்துவிட்டுத் துணையாக இருந்திருக்கலாம். வலுவான கரங்களால் முரட்டுத்தனமாக அடிபட்டுக் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கும் இவனைக் காப்பது எப்படி?  நம்மாலும் அவனைத் தூக்கிச் சென்று காப்பாற்றி அழைத்துச் செல்ல இயலாது. யாரேனும் ஒருவர் துணை வேண்டும். தீவிரமாக யோசித்தவளுக்கு அங்கிருந்த ஓடையின் சலசலப்புக் கேட்டது. உடனே அவள் இந்த ஓடை காவிரியில் கலப்பதால் இந்த ஓடையின் உதவியுடன் குலசேகரனை எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டும் என முடிவு செய்தாள். உடனே அங்குமிங்கும் சுற்றி அலைந்து மண்டபத்துச் சமையலறையில் இருந்து ஓர் பெரிய தாழியை எடுத்து வந்தாள். பரிசல் போல் வட்டமாகக் காணப்பட்ட அதை உருட்டிக் கொண்டே போய் ஓடைக்கரையில் ஓர் இடத்தில் நிறுத்தினாள்.

பின்னர் அறைக்குள்ளே சென்று குலசேகரனைத் தூக்கி நிறுத்தி அவன் தோள்மேல் கையைப் போட்டு நிற்க வைத்துத் தன்னுடன் அவனை நடக்க வைத்துக் கொண்டு சென்றாள்.  ஓடைக்கரையை அடைந்தவள் அந்தத் தாழிக்குள்ளாக அவனைப் படுக்க வைத்தாள். முதலில் தானும் இறங்க நினைத்தவள் பின்னர் என்ன காரணத்தாலோ மனதை மாற்றிக் கொண்டு குலசேகரனைத் தொட்டு வணங்கி அவன் பாதங்களில் தன் தலையை வைத்து வணங்கித் தாழியை மெல்ல ஓடை நீரில் செல்ல விட்டாள். தாழி முதலில் மெதுவாக நகர்ந்தது. பின்னர் நீரின் வேகம் அதிகரிக்கும் இடம் வந்ததும் நீரோட்டத்துடன் செல்ல ஆரம்பித்தது. சுற்றிச்சுற்றிக் கொண்டு அது வேகமாகச் சென்றது. வாசந்திகா அது காவிரியோடு கலக்கும் இடத்துக்குத் தான் செல்லும் என்பதை யூகித்துக் கொண்டு தன் மனதிற்குள் காவிரித் தாயைப் பிரார்த்தித்தாள். பத்திரமான கரையில் அவனை ஒதுக்கும்படி காவிரித்தாயை வேண்டினாள். நல்லவேளையாகக் காவலுக்கென வெளியே நின்று கொண்டிருந்த வீரர்கள் கண்களுக்கு அந்தத் தாழி படவில்லை. தாழி வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. 

Wednesday, November 28, 2018

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் சிறைப்பட்டான்!

குலசேகரன் எதிரே வந்து கொண்டிருந்த குழுவை உற்றுக் கவனித்தான்.  இரு பல்லக்குகள் வந்தன. அவற்றோடு நூறு வீரர்கள் பல்லக்குகளுக்குத் துணையாக வந்து கொண்டிருந்தனர். வீரர்கள் அனைவரும் துருக்கர்கள் அல்ல. பாதிப்பேர் துருக்கர்களாக இருக்கலாம். மற்றவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட தமிழர், கன்னடியர் ஆகியோர். அனைவருமாகப் பல்லக்குகளுக்குப் பாதுகாவலாக வருகிறார்கள் போலும். ஆனால் வருவது யார் எனத் தெரியவில்லை. சுல்தானின் ஆட்களில் யாரோ, எவரோ வடக்கே பயணப்படுகிறார்கள் எனத் தோன்றியது குலசேகரனுக்கு. இன்னும் சிறிது நேரத்தில் இந்தத் தங்கும் மண்டபத்துக்கு வந்து அவர்களும் தங்க வேண்டும். ஏனெனில் ஏற்கெனவே இருட்டி விட்டது. இனி பயணம் செய்ய மாட்டார்கள். இங்கே தங்கி விட்டு அதிகாலையில் பயணத்தைத் தொடரலாம்.

இங்கே வந்து அவர்கள் இங்குள்ள சூழ்நிலையைத் தெரிந்து கொண்டு விட்டால் என்ன செய்வது? இங்குள்ள செய்திப் பரிமாற்றம் செய்யும் வீரர்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதையும் பார்த்தார்களானால் உடனடியாக மதுரைக்குத் தகவல் போய்விடும். பின்னர் நாம் போட்டிருக்கும் திட்டமெல்லாம் ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். அதற்குள் நிலைமையைப்புரிந்து கொண்ட மற்ற வீரர்களும் குலசேகரன் அருகே வந்தனர். அவர்களில் ஒருவன், "ஸ்வாமி! நாம் மறைந்து கொள்வதே நல்லது. தாக்கினாலும் நேரிடையாகத் தாக்குவதை விட மறைந்திருந்து தாக்குவோம்!" என்றான். மற்றவர்களும் அதை ஆமோதிக்கக் குலசேகரன் கடைசியில் தாங்கள் அதிகம் பேர் இல்லை என்பதால் நேருக்கு நேர் மோதினால் தங்கள் பக்கமே அதிகம் பாதிப்பு ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டான். ஆகவே மற்ற வீரர்களிடம் மறைந்து தாக்குவதற்கு ஒத்துக் கொண்டான். மேலும் குதிரைகளை இங்கேயே விட்டு வைத்தால் அவர்களுக்குத் தெரிந்து விடும் என்பதால் அவற்றைப் பின்னால் கட்டிவிட்டு மறைந்து கொள்ளுமாறு கூறினான். குலசேகரன் மட்டும் அங்கேயே தங்கி நடப்பனவற்றைப் பார்த்து சமயத்துக்கு ஏற்றாற்போல் எச்சரிக்கைக் குரல் கொடுத்ததும் தாக்க ஆரம்பிக்கலாம் என்றும் கூறினான்.

அதன்படி அனைவருமாகச் சேர்ந்து இறந்த வீரர்களின் உடல்களைக் கிணற்றில் தள்ளினார்கள். சுற்றிலும் காணப்பட்ட உயரமான மரங்கள் மீது சிலரும், தங்கும் மண்டபத்தின் பரண், கூரை போன்றவற்றில் சிலரும் ஏறி மறைந்து கொண்டனர். குதிரைக்கொட்டடியில் சிலர் ஆயத்தமான நிலையில் மறைந்து கொண்டனர். குலசேகரன் மட்டும் ஓர் வழிப்போக்கன் போல் அங்கேயே நின்றிருந்தான். மெல்ல மெல்லக் கூட்டம் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது. பல்லக்குகள் மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டதும் அதிலிருந்த பெண்கள் இறங்கி நேரே மண்டபத்தினுள் நுழைந்து கொண்டார்கள். மற்றவர்கள் அங்கிருந்த மண்பானைகளின் நீரை எடுத்து தாகசாந்தி செய்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அந்த கோஷ்டி வீரர்களின் தலைவனாகக் காணப்பட்டவன் அங்கே சுல்தானிய வீரர்களின் உடையில் இருந்த குலசேகரனிடம் போய்ச் சில வார்த்தைகள் பேசினான். பின்னர் மண்டபத்திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டு இளைப்பாற ஆரம்பித்தான்.

அனைவருமே ஆயுதங்களை எடுத்துவிட்டு இளைப்பாறுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட குலசேகரன் இதுதான் சரியான தருணம் என நினைத்து, "ஹோ! ஹோ!" என்று கூக்குரலிட்டான். ஒளிந்திருந்த வீரர்கள் அனைவரும் ஓடோடி வந்து வீராவேசமாய் கோஷங்களை முழக்கிக் கொண்டு எதிரிகள் மேல் பாய்ந்தார்கள். சட் சட்டென்று சுல்தானிய வீரர்கள் சிலர் கீழே விழுந்து மடிந்தனர். முதலில் திகைத்த சுல்தானிய வீரர்கள் சடுதியில் நிலைமையைப் புரிந்து கொண்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தாங்களும் தாக்க ஆரம்பித்தனர்.  வாள்களும், கத்திகளும் ஒன்றோடொன்று உராயும் சப்தம் பலமாகக் கேட்டது. பயங்கரமான யுத்தம் நடந்தது.  சுல்தானிய வீரர்கள் வெறியுடன் தாக்கினார்கள். ஆகவே ஆரம்பத்தில் சுல்தானிய வீரர்கள் பலர் இறந்தாலும் யுத்தம் முடிவடையும்போது முற்றிலும் நிலைமை மாறி விட்டது. ஹொய்சள வீரர்கள் பனிரண்டு பேர் இறந்துவிட மீதி எட்டுப்பேரையும் குலசேகரனோடு சேர்த்து சுல்தானிய வீரர்கள் சிறைப்பிடித்தார்கள். அவர்கள் கையையும் காலையும் கட்டிப்போட்டு ஓர் அறையில் அடைத்தனர். அவர்களைக் காலையில் கண்ணனூர் அரண்மனையில் தளபதிக்கு முன்னால் நிறுத்தித் தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் நடந்தது வேறே!

அந்தத் தங்குமிடத்தில் இருந்து கண்ணனூர் நோக்கிப் பயணப்பட்ட அந்தக் குழுவில் சுல்தானிய ராணி ஒருத்தியும் அவளுக்குச் சேடிகளான மூவரும் பயணித்து வந்தார்கள். அவர்களுக்கு யாரோ எதிரிகள் தாக்கியதும் சுல்தானின் வீரர்கள் அவர்களை முறியடித்துச் சிறைப்படுத்தியது வரை தான் தெரியும். மறுநாள் பயணம் மேலே தொடர்ந்தது. அன்று மாலைக்குள்ளாக அவர்கள் கடந்த இரண்டு தங்குமிடங்களிலும் செய்திப் பரிமாற்றம் செய்யும் வீரர்கள் இறந்து கிடப்பதைக்கண்டனர் சுல்தானிய வீரர்கள். இத்தகைய கொடிய செயலைச் செய்தது குலசேகரனும் அவன் தலைமையில் வந்த வீரர்களும் தான் என்பதைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு வெகு நேரம் ஆகவில்லை. ஆகவே சுல்தானிய வீரர்களின் தலைவனுக்குக் கோபம் பொங்கி வந்தது. ஆத்திரப்பட்ட அவன் சிறைப்பிடித்த வீரர்களைக் கீழே தள்ளி மண்ணில் புரட்டித் தள்ளி அவர்களைச் சவுக்குகள் அல்லது விளாறுகளால் அடித்துத் துன்புறுத்தும்படி ஆணையிட்டான்.

அவ்வாறே அந்த வீரர்கள் குலசேகரனையும் எஞ்சி இருந்த ஹொய்சள வீரர்களையும் கீழே தள்ளிப் புரட்டிப் போட்டு விட்டு விளாறுகளால் கண்மண் தெரியாதபடி அடித்து விளாசினார்கள். வெகு விரைவில் அவர்கள் அனைவரும் குற்றுயிரும் குலை உயிருமாக ஆனார்கள். அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீரோ, உண்ண உணவோ கொடுக்கப்படவில்லை. அப்படியே விழுந்து கிடந்தார்கள். மறுநாள் காலையில் அவர்களை மீண்டும் குதிரைகளில் தூக்கிப் போட்டுக் கட்டி விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அன்று இருட்டும் நேரம் ஆனபோது அவர்கள் காவிரிக்கரையை அடந்திருந்தனர். அன்றிரவை அங்கே கழிக்க எண்ணம் கொண்டனர். அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த தங்குமிடமும் நல்ல விஸ்தாரமாகக் காணப்பட்டது. அங்கே ஓர் அறைக்குள் குலசேகரனையும் மற்ற வீரர்களையும் அடைத்தார்கள். அந்த வீரர்கள் அனைவருக்குமே நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. புலம்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே குலசேகரன் குரல் மட்டும், "ஹேமலேகா! ஹேமலேகா!" என்று புலம்பிக் கொண்டிருந்தது வெளியே இருந்தவர்களுக்குக் கேட்டது. 

Monday, November 26, 2018

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! பயணத்தில் குலசேகரன்

தெற்கே பயணப்பட்ட குலசேகரன் தான் முதலில் செய்ய வேண்டியது செய்திப்பரிமாற்றங்கள் செய்ய வசதியாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும் வீரர்களை அழிப்பது தான் என்பதை உணர்ந்திருந்தான். இவர்கள் இருபக்கங்களிலும் சில காத தூரங்களுக்கு இருவர் என்னும் வரிசையில் நியமிக்கப்பட்டிருந்தனர். கண்ணனூர் அரண்மனைச் செய்தி எனில் அரண்மனைத் தூதுவர்கள் அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் செய்திப் பரிமாற்றச் சேவகர்களிடம் அரண்மனைச் செய்தியைச் சமர்ப்பிப்பார்கள். அவர்கள் செய்தியை எங்கே கொண்டு செல்லவேண்டும் எனக் கண்டு கொண்டு அந்த ஊருக்கு அருகே இருக்கும் வீரர்களிடம் அந்தச் செய்தியைச் சமர்ப்பிப்பார்கள். இப்படியே செய்திப் பரிமாற்றம் நடந்து கடைசியில் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரும். இதை எப்படியேனும் தடுத்து கண்ணனூரில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து கண்ணனூர், மற்ற இடங்களுக்கும் செய்திகள் போய்ச் சேராவண்ணம் பார்த்துக் கொள்வதே தன் முக்கிய வேலை என்பதை உணர்ந்து குலசேகரன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

இந்தச் செய்தி சுமப்போர் வசதியாகத் தங்குவதற்காக ஆங்காங்கே மண்டபங்கள் கட்டி விடப்பட்டு குடிநீருக்காகக் கிணறுகளும் வெட்டப்பட்டிருந்தன. இதை எல்லாம் யோசித்தவண்ணம் சில காத தூரம் பயணித்து வந்த குலசேகரன் தான் கிளம்பிய பின்னர் வந்த முதல் செய்தி சுமப்போர் தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்தான். அங்குள்ள இரு வீரர்கள் அவர்களை எதிர்பார்க்கவில்லை என்பதால் அவர்களை அழிப்பது இவர்களுக்கு எளிதாக இருந்தது. இதன் பின்னர் அடுத்த தங்குமிடம், மூன்றாம் தங்குமிடம் எனத் தொடர்ந்து சென்று அழித்தனர். யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமையால் அழிப்பது எளிதாகவே இருந்தது. ஆனாலும் குலசேகரனுக்குள்ளே இந்தத் தாக்குதல் மூலம் தான் வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது என ஒரு குரல் கூறிக்கொண்டே இருந்தது. இருந்தாலும் இது அவசியமான ஒன்றே என்பதால் வேறு வழியின்றித் தொடர்ந்தான். அன்று இரவுக்குள் இம்மாதிரித் தங்குமிடங்களில் எட்டு தங்குமிடங்களையும் அவற்றில் தங்கி இருந்த செய்தி சுமப்போரையும் கொன்று தீர்த்தார்கள் குலசேகரனும் அவனுடன் வந்தவர்களும்.

ஒவ்வொரு வீரர்களும் வைத்திருந்த குதிரைகளும் அவர்களோடு சேர்க்கப்பட்டுக் குதிரைகள் நிறைய ஆகி விட்டன. இருட்டும் முன்னர் கடைசியாக வந்த இடத்தில் இருந்த இருவரைக் கொன்று அங்கிருந்த கிணற்றில் இருந்து நீர் இறைத்து தாகசாந்தி செய்து கொண்டனர் அனைவரும். சற்று நேரம் உட்கார்ந்து இளைப்பாறலாம் என நினைக்கையில் திடீரென தடதடவெனப் பலர் வரும் சப்தம். இருக்க இருக்கப் பெரிதாகக் கேட்டது. உற்றுக் கேட்டவர்களுக்குக் குதிரை வீரர்கள் வரும் சப்தம், கால்நடையாகவே மனிதர்கள் வரும் சப்தம் எனக் கலந்து கேட்டது. அப்போது உடன் வந்த வீரர்களில் சிலர் வருவது யாராக  இருக்கும் எனக் கவனித்துவிட்டு, குலசேகரனிடம் ஓடி வந்து, "ஐயா, எதிரிகள் போல் தெரிகிறது!" என்றனர். உடனே அனைவரும் எச்சரிக்கையோடு தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு குதிரைகள் மீதும் ஏறிக் கொண்டனர்.

வருபவர்கள் எத்தனை பேர் எனத் தெரியாததால் எதிர்ப்பதா வேண்டாமா எனக் குழப்பத்தில் ஆழ்ந்தவர்களுக்கு இங்கிருந்து இப்போதைக்குத் தப்புவதே சரி எனத் தோன்றியது. அப்போது ஒருவன் குதிரைகள் மீது தப்பி ஓடினால் சப்தம் மூலம் தங்களைக் கண்டு பிடித்துப் பின் தொடர்ந்து தாக்குவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் குதிரைகளை அப்படியே விட்டு விட்டுப் போகலாம் என்று சொன்னான். குலசேகரன் எதற்கும் இணங்காமல் எதிரிகள் வரும் திசையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.சற்று நேரத்தில் அவர்கள் குழு கண்களுக்குப் புலன் ஆனது.

Sunday, November 25, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகாவுக்கு நேர்ந்தது!

ஹேமலேகா தொடர்ந்தாள். அவன் சென்றதும் நடந்தவற்றை விவரித்தாள். அவள் கூறியதாவது:-

"ஸ்வாமி! திருவண்ணாமலையில் கிருஷ்ணாயியின் அந்தப்புரத்தில் ராணி வாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்த எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகவே கழிந்து கொண்டிருந்தது. இங்கிருந்து எப்படியேனும் வெளியேறினால் போதும் என்று இருந்தேன். இந்த நாட்டை விட்டுத் தெற்கே எங்கே சென்றாலும் துருக்கர்கள் தொந்திரவு இல்லாமல் இல்லை. ஆகையால் என் பிறந்த ஊரான ஜம்புகேஸ்வரத்துக்குச் செல்ல நினைத்தேன். ஆனால் அங்கே போனால் ஊரே பாழாகி விட்டிருந்தது. அதன் பின்னரே இந்த அழகிய மணவாளம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். அநாதையும் இளம்பெண்ணுமான நான் எவ்வாறு தனித்துக் குடி இருப்பேன்? அதுவும் கண்ணனூரில் தங்கி இருந்த தில்லித் தளபதி திருமணம் ஆகாத கன்னிப் பெண்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்துத் தன் ஆசைக்கு உட்படுத்திக் கொள்கிறான் என்பதையும் நன்கு அறிந்திருந்தேன். அப்போது சிங்கப்பிரானுக்கும் மற்றப் பெரியோர்களுக்கும் நான் வந்திருப்பது தெரிந்தது. உடனே என்னிடம் வந்து யாரையானும் மணந்து கொண்டால் நீ தப்பிக்கலாம். இல்லை எனில் சுல்தானின் தளபதி உன்னைக் கவர்ந்து வரச் சொல்லிவிடுவான் என எச்சரித்தனர்."

"என் மனதிலோ ஆயிரம் ஆயிரம் கனவுகள்! யாரேனும் என் வயதுக்கேற்ற இளைஞனை மணந்தால் அத்தகைய கனவுகளுக்குப் பாதகம் உண்டாகிவிடுமோ எனக் கவலைப் பட்டேன். அதே சமயம் என் கனவுகளை எல்லாம் கலைத்துக் கொண்டு ஓர் இளைஞனுக்கு வாழ்க்கைப்பட்டு என்னை நானே ஒப்புக் கொடுக்கவும் மனம் வரவில்லை. ஆகவே வயதான ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என நினைத்த போது இவரைப் பற்றி அறிய வந்தது. அதுவும் இரு கண்களும் குருடு என்பதும் எனக்கு வசதியாக இருந்தது. இல்லை எனில் என் அழகைப் பார்த்துவிட்டு இவரும் தடுமாறினார் எனில்! என்ன செய்வது ஸ்வாமி! கடவுள் எனக்கு அளித்திருக்கும் மனமாகிய வரப் பிரசாதத்தில் தோன்றிய, தோன்றிக்கொண்டிருக்கும் என் கனவுகளை நான் எப்படி அழிப்பது? அவற்றின் மூலம் நான் மாளிகை கூடக் கட்டுகிறேன். கோயில்கள், பிருந்தாவனங்கள் கட்டுகிறேன். அவற்றில் ஆனந்தமாக ஆடிப்பாடி உலாத்துகிறேன். யார் தடை சொல்ல இயலும்! ஆனால் இவை எதையும் இன்று வரை நான் வெளியே சொன்னதில்லை ஸ்வாமி! வெளிப்பார்வைக்கு நான் ஓர் எழுபது வயதுக் கிழவரின் மனைவி! ஆனால் என் மனதுக்குள்ளே நான் அதற்குரிய கனவுகளோடும் ஆசைகளோடும் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணங்களோடு வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இத்தகைய இரட்டை வாழ்க்கையை எவரும் இன்று வரை அறிந்ததில்லை ஸ்வாமி! இன்று தான் முதல் முறையாக உங்களிடம் கூறுகிறேன்."

குலசேகரன் மனம் உருகியது. அவளுக்காக அவன் மனம் நெகிழ்ந்து கொடுத்தது. ஆனால் சுதந்திரமாக இருந்து இவள் எதையும் சாதிக்கவில்லையே! நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு எவரையோ திருமணம் அல்லவா செய்து கொள்ள நேர்ந்திருக்கிறது! அதை விட இவள் ராணி வாசத்திலேயே இருந்திருக்கலாமோ!  இந்த எண்ணங்கள் குலசேகரன் மனதில் விரைவாக ஓடி மறைந்தன. ஆனால் அவன் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஹேமலேகாவை சமாதானம் செய்தான். அவளும் அவனை சமாதானம் செய்தாள். பின்னர் ஹேமலேகா அவனிடம் விடை பெற்றுக் கொண்டு அழகிய மணவாளம் கிராமத்துக்கு அடிக்கடி வந்து தன்னைப் பார்க்குமாறு குலசேகரனிடம் கேட்டுவிட்டு எழுந்து குடத்தில் நீர் எடுத்துக் கொண்டு கரையின் மேல் ஏறிச் சென்றாள்.

அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த குலசேகரன் சிறிது நேரத்தில் தன்னைச் சமாளித்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து சிங்கப்பிரானின் வீட்டை நோக்கி நடந்தான்.  சிங்கப்பிரான் அவனைப் பார்த்து மகிழ்ந்தார். தான் அறிந்தவரை சுல்தானிய ராஜ்யத்தின் நிலை பற்றியும் கண்ணனூர்க் கோட்டையில் இருக்கும் தளபதி பற்றியும் விபரங்களைச் சொன்னார்.  ஹொய்சள மன்னர் சொன்னபடி மதுரையிலிருந்து  கண்ணனூருக்கோ கண்ணனூரில் இருந்து மதுரைக்கோ செய்திகள் போகாமல் தடுத்து விட்டால் பின்னர் வெற்றி நிச்சயம் என்று உறுதிபடக் கூறினார். அவருடைய ஆசிகளுடன் அங்கிருந்து கிளம்பிய குலசேகரன் தன்னுடன் வந்த 20 ஹொய்சள வீரர்களையும் அழைத்துக் கொண்டு தெற்கு நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

Thursday, November 22, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகாவின் துன்பம்!

குலசேகரனைப்பார்த்து, "ஸ்வாமி! என அழைத்த ஹேமலேகா கொஞ்ச நேரம் ஏதும் பேச முடியாமல் தவித்தாள். பின்னர் ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு, "ஸ்வாமி, உலகிலுள்ள அறிவை எல்லாம் ஒன்றாக்கித் திரட்டியதற்கு "மகத்" என்னும் பெயர் இருப்பதைப் போல் இவ்வுலகிலுள்ள துக்கங்களையெல்லாம் கூட்டினால் அதன் பெயர் என்ன? இப்போது நாம் இருவரும் அனுபவிப்பத்து அத்தகையதொரு துன்பமே!" என்று கண்ணீர் விட்டாள். குலசேகரன் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. மேலும் ஹேமலேகா மனம் விட்டுப் பேசலானாள். "ஸ்வாமி, நம்மிருவர் துன்பமும் ஒரே வகையானதே! ஒருவருக்கொருவர் நாம் தான் ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டும். எனக்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் ஸ்வாமி!" என்று சொல்லிவிட்டு உடல் குலுங்க அழுதாள்.

அவள் வெளிப்படையாகச் சொல்வதைக் கேட்டுக் கொஞ்சம் அதிர்ந்தான் குலசேகரன். "ஹேமூ! ஹேமூ!" என்று தடுமாறியவன், "உங்கள் வார்த்தைகள் என் நெஞ்சைத் தொட்டதோடு அல்லாமல் கலக்கியும் விட்டது ஹேமு. நான் என்ன செய்வேன்! உங்களுடன் சிறிது காலமே பழகி இருந்தாலும் எத்தனையோ ஜென்மங்களாக இருந்து வந்த உறவின் மிச்சமே என்றே எனக்குத் தோன்றியது; இப்போதும் தோன்றுகிறது! என் மனம் முழுவதும் அறிந்தவாறே நீங்கள் பேசுவது எனக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்னொரு பக்கம்  இதில் என்ன ஆச்சரியம் என்னும் எண்ணமும் தோன்றுகிறது." என்றான்.

"ஸ்வாமி! வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பாராமல் ஆனால் இன்னொருவரைப் பற்றிக் கேள்வி ஞானம் மூலம் தெரிந்து வைத்துக் கொண்டு இருவரும் ஒரே நினைவாக இருப்பதாலேயே ஒருவருக்கொருவர் நீண்ட நாட்கள் பழகினாற்போல் ஆகிவிடுகிறார்கள். நாமும் அப்படித் தானே ஸ்வாமி! இந்தப் பத்துவருடப் பிரிவினால் நம் அந்நியோன்னியத்தைப் பிரிக்க முடியாது ஸ்வாமி!தங்கள் மனம் நான் அறிவேன்! என்னைப் பற்றிய சிந்தனைகளை உங்களால் தவிர்க்க இயலாது! அதே போல் தான் ஸ்வாமி எனக்கும்!  இந்த நினைவு தான் ஆதார சுருதியாக, ஜீவ கீதமாக வெகு இனிமையாய் சுகமாய் மனதுக்கு இதமாய் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதில் இந்தப் பத்துவருடக் கால இடைவெளி என்பது ஒன்றுமே இல்லை. நாம் எங்கே பிரிந்தோம்! இல்லை, ஸ்வாமி, இல்லை! ஒரு காரியமாக வெளியே சென்றிருப்பவர் மறுநாளே வீட்டுக்கு வருவதைப்போல் தான் இருந்தது எனக்கு!" என்றாள்.

குலசேகரனுக்கு அவள் பேசும் விதம்மிகவும் பிடித்திருந்தது.  அவள் பேச்சைக் கண்களை மூடியவண்ணம் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான். ஆனாலும் அவன் உள்ளத்தில் இவள் தன்னை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறாளா என்னும் சந்தேகம். அவளைப் பார்த்து, "ஹேமு! உங்களுக்கு எப்படித் தெரியும் என் மனதிலும் உன் மனதிலும் ஓடியது ஒரே நினைவு தான் என! அதை எப்படி ஊகித்து அறிந்தீர்களா?" என்று கேட்டான். "ஸ்வாமி! ஊகம் செய்ய வேண்டுமா என்ன?  சூரியனைக் கண்டு தாமரை மலர்வதைப் போல் சந்திரனைக் கண்டு சக்ரவாகப் பக்ஷி தத்தளிப்பது போல், மழை மேகங்களைக் கண்டு மயில்கள் ஆடுவது போல் இதெல்லாம் இயற்கை ஸ்வாமி! அதோடு இல்லாமல் என்னைப் பார்க்கும் தோறும் விகசிக்கும் உங்கள் முகம்! கனிவு ததும்பும் கண்கள்!இங்குமங்கும் அலை பாயும் பார்வுகள். மௌனமான உங்கள் தவிப்பு! இவை போதாதா உங்களை அறிய!" என்றாள்.

"ஹேமூ! ஹேமூ! என் உள்ளத்தின் தாபங்களை எல்லாம் நீ அறிந்து கொண்டு விட்டாயா?" குலசேகரன் அறியாமல் அவளை ஒருமையில் அழைக்கத் தொடங்கி விட்டான். "ஸ்வாமி! என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனில் வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்!" என்ற வண்ணம் அவனைப் பார்த்த ஹேமலேகாவின் கண்களில் காதல் ததும்பி வழிந்தது. "ஆம், ஹேமூ! ஆம், என் மனதில் நீண்ட நெடுங்காலமாக நிலைத்து நிற்கும் கனவு இது! அதை நீ புரிந்து கொண்டாய் அல்லவா?  இது போதும் எனக்கு!" என்றான்.  ஹேமலதா அதற்கு சம்ஸ்கிருதக் காவியங்களிலும் அவற்றின் உள்ளார்ந்த பொருட்சுவையிலும் ஊறிய தனக்குப் புரியாமல் போகுமா எனக் கேட்டாள். ஆனால் குலசேகரன் அப்போது உடல் எங்கும் நடுக்கம் கண்டது. உணர்ச்சிப் பெருக்கில் தன்னை மறந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டே, "ஹேமலேகா, அப்படி எனில், அப்படி எனில், ஏன் இந்த விஷப் பரிக்ஷை? இது எவ்வளவு தூரம் உண்மை?" என்று கேட்டான்."எது ஸ்வாமி?"  என ஹேமலேகா கேட்க, "உன் இல்லற வாழ்வு!" என்றான் குலசேகரன் பெரும் துக்கத்துடன். அப்போது ஹேமலேகா அடுத்த இடியை அவன் மேல் இறக்கினாள். "ஸ்வாமி! இந்த நாட்டுக்கு ஏற்பட்ட விபத்து என் வாழ்விலும் ஏற்பட்டு விட்டது!" என்றாள்.

Wednesday, November 21, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரனின் கண்ணீர்!

ஹேமலேகா தன் கணவர் என அந்த வயதானவரைப் பார்த்துச் சொன்னதற்கே திடுக்கிட்ட குலசேகரன் அடுத்து அறிந்தது அவருக்கு இரு கண்களும் தெரியாது என்பது தான். எனினும் அவர் அவனை முகமலர்ந்து வரவேற்றதோடு எங்கிருந்து வருகிறீர்கள் எனவும் விசாரித்தார். மேலும் ஹேமலேகாவிடம் அதிதிக்கு உணவு அளிக்கும்படியும் கூறினார். குலசேகரன் மனதில் துக்கம் கனன்று கொண்டிருந்தது. கிருஷ்ணாயி மேல் அவன் கொண்டிருந்த வெறுப்பு அதிகரித்தது. எப்படிப் பட்ட பெண்! இப்படி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் எனில் என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லையே! மனம் உருகினான் குலசேகரன். அதற்குள்ளாக அவர் அவனைக் கை, கால் கழுவிக்கொண்டு சாப்பிட வரும்படி அழைக்கக் குலசேகரனும் தான் ஹொய்சள நாட்டில் இருந்து வருவதாய்க் கூறிவிட்டுத் தெற்கே ஓர் அவசர வேலையாகச் செல்வதாயும் கூறிவிட்டுக் கை, கால் கழுவிக்கொள்ளச் சென்றான்.

திரும்பி வரும்போது ஹேமலேகா ஒரு வாழை இலையில் வெள்ளை வெளேர் என்ற அன்னத்தை இட்டுக் கையில் ஓர் பாத்திரத்தில் தயிரும் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். குலசேகரன் இலைக்கு முன் அமர்ந்து கொண்டு ஹேமலேகா செய்த உபசாரத்தை ஏற்றுக் கொண்டான். அவனையும் அறியாமல் அவன் கண்கள் நீரைப் பொழிந்தன. அவனின் மௌன சோகத்தைக் கண்ட ஹேமலேகா குறிப்பால் அவனைச் சமாதானம் செய்தாள். குலசேகரன் சமாளித்துக் கொண்டு பெயருக்கு உணவு உண்டு முடித்தான். பின்னர் பெரியவரிடம் விடைபெற்றுக் கொண்டு தன் சினேகிதர்களோடு தெற்கே செல்ல வேண்டும் என்பதாகச் சொல்லிவிட்டு வாசலுக்குப் போனான். அவனை வழி அனுப்பி வைக்க வந்த ஹேமலேகா அங்கேயே நின்ற வண்ணம் அவன் செல்வதையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச தூரம் வந்த குலசேகரன் துக்கம் தாங்க முடியாமல் அங்கிருந்த ஓர் மரத்தடியில் அமர்ந்து கொண்டான். வாழ்க்கையில் பற்றே வைக்காமல் வாழ நினைத்தும் முடியாமல் ஹேமலேகா மேல் மட்டும் இத்தனை பற்று வைத்துவிட்டுத் தவிக்கிறானே! தன்னை நினைந்து நினைந்து மனம் நொந்தான் குலசேகரன். ஹேமலேகா மேல் தான் கொண்டிருந்த பற்றுதலைக் குலசேகரன் மேல் அவளும் வைத்திருந்தால்! இப்படி ஓர் திருமணமே செய்து கொள்ளாமல் தனக்காகக் காத்திருக்கலாமே! அவளுக்கு என் மேல் எவ்விதமான ஆசையும் இருந்ததில்லை. நான் தான் அவள் மேல் ஆசைப்பட்டிருக்கிறேன். ஒரு கிழவனைப் போய்த் திருமணம் செய்து கொண்டு விட்டாளே! இது என்ன நியாயம்?

ஆனால் அவள் எந்தச் சூழ்நிலையில் இந்தத் திருமணத்தைச் செய்து கொண்டாளோ! தவிரத் தான் திருவண்ணாமலையை விட்டுக் கிருஷ்ணாயியின் கொடுமையிலிருந்து விலகிச் சென்று பத்து வருடங்கள் ஆகிவிட்டன. பத்து வருடங்கள் ஒருத்தி தனக்காகக் காத்திருக்க முடியுமா? அதுவும் அழகும், அறிவும் வாய்ந்த பெண். அவளைக் குறை ஏதும் சொல்வதற்கில்லை! அவள் செய்தது சரியே! இவ்விதமெல்லாம் யோசித்துத் தன்னைச் சமாதானப் படுத்க்டிக் கொண்ட குலசேகரன் அப்படியே படுத்த வண்ணம் கண்ணீர் உகுத்தான். அவன் மனம் கட்டுக்கு அடங்காமல் தவித்தது.

காலையில் எழுந்தவனுக்கு எந்த வேலையும் செய்யத் தோன்றவில்லை. ஹேமலேகாவையே நினைத்துக் கொண்டு படுத்திருந்ததால் தூக்கம் இல்லாமல் கண்கள் எரிச்சல் அடைந்திருந்தன. அவன் சிங்கப்பிரானைத் தான் பார்க்க வந்திருந்தான். எதிர்பாராதவிதமாக ஹேமலேகாவைக் கண்டதில் அவன் மனம் எதிலும் பதியவில்லை. சிங்கப்பிரானைப் பார்க்கவும் மனம் இல்லாமல் கொள்ளிடக்கரையை நோக்கி நடந்தான். கீழ்வானம் அப்போது தான் சிவப்பு வண்ணச் சிதறல்களைக் காட்டிக் கொண்டிருக்கக் காவிரியின் நீரிலும் அவை பிரதிபலித்து ஓர் அழகான காலைப் பொழுது உதயம் ஆகிவிட்டதைக் காட்டியது. இது எதிலும் மனம் செல்லாமல் அங்கிருந்த ஓர் பாறை மேல் ஏறி அமர்ந்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தான் குலசேகரன். அப்போது அவனை ஹேமலேகா அழைப்பது போல் தோன்றத் திடுக்கிட்டுத் திரும்பியவனுக்கு உண்மையகாவே ஹேமலேகா அவனை அழைத்தவண்ணம் குடத்தை ஏந்திக் கொண்டு வருவதைப் பார்த்தான்.

தலையைக் குனிந்து கொண்ட அவள் தலையை உயர்த்தி அவனைப் பார்த்து விட்டு, "ஸ்வாமி, ஏன் சோகம்? என்ன ஆயிற்று?" என்று வினவினாள். முதலில் பதில் ஏதும் சொல்லாத குலசேகரன் பின்னர் அவளிடம், "ஒன்றா, இரண்டா, எதைச் சொல்ல, எதை விட!" என்று பதில் கொடுத்தான். அவள்,"என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்." என்று கேட்க அவளை நிமிர்ந்து பார்த்த குலசேகரனுக்கு அவள் கண்களில் தென்பட்ட ஓர் இருளும் அதன் மூலம் ஏதோ ஓர் மர்மத்தை அவள் ஒளித்து வைத்திருப்பதாகவும் தோன்ற அவளைப் பார்த்து, "ஹேமு!" என அழைக்க அவளும் கம்மிய குரலில், "ஸ்வாமி!" என்று அழைத்தாள்.

Monday, November 19, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஹொய்சள இளவரசன் என்னும் பெயரில் இருந்த ராஜவர்த்தன குலசேகரன் கைகளால் வாளைப் பெற்றுக் கொண்ட குலசேகரன் ஆழ்ந்த சிந்தனையுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான் அவனுடன் சுமார் இருபது ஹொய்சள வீரர்கள் மாறு வேடத்தில் தொடர்ந்தார்கள். ராணி கிருஷ்ணாயியுடனான தன்னுடைய உறவின் காரணத்தால் தான் திருமணம் ஆகாமலே பெற்றுக் கொண்ட பிள்ளையை நினைந்து ஒரு கணம் குலசேகரன் மனம் சிலிர்த்தாலும் பாசத்தையும் மீறிய வெறுப்பே மேலோங்கியது! ஆனால் அதற்கு அந்தக் குமாரன் என்ன செய்வான்? தான் மட்டும் இணங்கவில்லை எனில் ஹேமலேகா ராணி வாசத்திலேயே வாழ்வதோடு அல்லாமல் விரைவில் மடிந்தும் போயிருப்பாள். ஓர் அழகிய மலர் வெளி உலகைக் காணாமலேயே கருகிப் போய் இருந்திருக்கும். தன்னுடைய இந்தச் செயலால் ஹேமலேகா காப்பாற்றப்பட்டாள் என்பதை நினைத்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தான் குலசேகரன். தொடர்ந்து அவர்கள் ஐந்து தினங்கள் ஹொய்சள நாட்டுக்குள்ளேயே பயணம் செய்ததால் வழியில் எவ்விதமான பிரச்னையும் இல்லை. அதன் பின்னர் சுல்தானின் எல்லைக்குள் அவர்கள் நுழைந்தனர்.

மதுரைக்குத் தெற்கே ஆரம்பித்திருந்த சுல்தானிய அரசு வடக்கே கண்ணனூரைத் தாண்டிப் பல காத தூரம் வியாபித்திருந்தது. இந்தக் கண்ணனூர் தான் இப்போது சமயபுரம் என அழைக்கப்படுகிறது. சுல்தானின் எல்லைக்குள் நுழைந்ததும் நேர் வழியில் செல்லாமல் சுற்று வழியில் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். நுழைந்த மூன்றாம் நாள் வட காவிரி என அழைக்கப்பட்டக் கொள்ளிடக் கரையை அடைந்தார்கள். பகலெல்லாம் மறைந்திருந்து ஓர் அடர்ந்த சோலைக்குள் தங்கியவர்கள் இரவானதும் "அழகிய மணவாளம்" என்னும் கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தின் தோட்டங்களை அடைந்ததும் மற்ற வீரர்கள் ஏற்கெனவே பேசி இருந்தபடி தங்கள் குதிரைகளை இளைப்பாறக் கட்டிவிட்டு அவர்களும் அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தனர். குலசேகரன் மட்டும் தன் குதிரையைக் கட்டி விட்டு நடந்தே கிராமத்துக்குள் செல்லலானான். நிலவொளி பாலாய்க் கொட்டி வழி தேடச் சிரமம் இல்லாமல் இருந்தது. அதன் குளுமையில் நனைந்த வண்ணம் சென்ற குலசேகரன் செவிகளில் இனிமையான நாதம் கேட்டது. அது எங்கே என்று கண்டறிந்து கொண்டு அந்தத் திசை நோக்கிச் சென்றவன் ஓர் வீட்டின் வாசலை அடைந்தான். உள்ளிருந்து யாழின் இன்னிசை பிரவாகமாய்க் கிளம்பி எங்கும் வியாபித்தது. அந்த யாழிசையைத் தான் முன்னர் எப்போதே கேட்டமாதிரி இருப்பதாகக் குலசேகரன் ஊகித்தான். உடனே பரபரப்புடன் அந்த வீட்டின் முகப்பின் அருகே இருந்த சாளரத்தின் அருகே சென்று உள்ளே உற்று நோக்கினான்.

அவன் கண்களுக்கு உள்ளே மங்கலாகத் தெரிந்த வெளிச்சம் தவிர ஆள் நடமாட்டம் தெரியவில்லை. ஆகவே கதவருகே சென்று கதவைத் தட்டினான். உள்ளிருந்து ,"யார்?" என்று ஒரு குரல் கேட்டது. அடுத்த கணம் வாயில் கதவு திறக்கப்பட்டுக் கையில் ஓர் அகல் விளக்குடன் மெல்லிய உடலுடைய ஓர் பெண் நின்றாள். விளக்கின் ஒளியில் அவள் மேனி எல்லாம் தங்கமாய்த் தகதகத்தது. அவள் கண்கள் அந்த அகல்விளக்குகள் போலவே சுடர் விட்டுப் பிரகாசித்தது. குலசேகரனுக்கும் அவள் யார் எனப் புரிந்து விட்டது. "நீங்களா" எனக் கேட்டவண்ணம் அவனைப் பார்த்த ஹேமலேகாவின் கைகள் அகல்களைப் பிடிக்க முடியாமல் நடுங்கின. அவளை ஆவலுடன் பார்த்த குலசேகரன், "ஹேமலேகா" என ஆவலுடன் அழைத்தான். அவள் தலை நிமிராமல், "சௌக்கியமா?" எனக் கேட்டாள். அப்போது உள்ளிருந்து ஓர் குரல், "வெளியே யார் வந்திருக்கிறார்கள்? ஹேமு, உள்ளே அழைத்து வா!" என்றது. அந்தக் குரல் கேட்டுத் திடுக்கிட்டான் குலசேகரன். ஹேமலேகா அவனை உள்ளே வரும்படி அழைத்தாள். உள்ளே சென்ற குலசேகரன் அந்த வீட்டின் எளிமையைப் பார்த்து வியந்தான். அங்கே படுத்திருந்த ஓர் வயோதிகர் மெல்ல எழுந்திருந்தார். ஹேமலேகா அவனிடம் "இவர் என் கணவர்" என அறிமுகம் செய்து வைத்தாள். அவருக்கு எழுபது வயது இருக்கலாம். குலசேகரன் திடுக்கிட்டு நின்று விட்டான். 

Saturday, November 17, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் துயரம்!

ஒரு பெருமூச்சுடன் தன்னை அடக்கிக் கொண்டான் குலசேகரன். அவனுக்கு உண்மை புரிந்து ஒரு பக்கம் தன் மகன் என்னும் பாசம் வந்தாலும் ஆழ் மனதின் வெறுப்பே மேலே தலை தூக்கியது. தன்னை எப்படிப் பயன்படுத்திக் கொண்டாள் கிருஷ்ணாயி என்பதை அவனால் மறக்கவே முடியவில்லை. எதுவும் பேசாமல் சத்திரத்துக்குத் திரும்பிப் படுத்தவனுக்குத் தூக்கம் வரவில்லை. திரும்பத் திரும்பக் கிருஷ்ணாயியின் மகன் முகமே அவன் நினைவில் வந்தது. அவனைப் பார்க்கும் எவருக்கும் அந்தச் சிறுவனைப் பிடித்து விடும். அவ்வளவு சுறுசுறுப்பும் துடிதுடிப்பும். ஆனால் இது என்ன முறைப்படியாகப் பிறந்த குழந்தையா? அவனைக் கிருஷ்ணாயி பயமுறுத்தி மிரட்டி ஹேமலேகாவின் உயிரைப் பலி வாங்குவதாகச் சொல்லி அல்லவோ அவனைச் சம்மதிக்க வைத்தாள். அவள் பிறந்த துளுவ நாட்டில் இது பழக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில்! அதுவும் என்னை எப்படியேனும் அடையவேண்டி அவள் செய்த சாகசங்கள்!

ஹேமலேகாவை எப்படி எல்லாம் வஞ்சித்திருக்கிறாள். அவள் அழகு, இளமை அனைத்தும் பலி கொடுக்கப்பட்டு அன்றோ இந்தக் குமாரனை அவள் பெற்றெடுத்திருக்கிறாள். அவளுக்கு மனசாட்சி என்பதே இல்லையா? இன்னொருவன் மனைவியைத் தான் தொட்டுக் கொஞ்சி, அந்த இறைவனுக்கும் கண்ணில்லாமல் போயிற்றே! நான் எவ்வளவு பெரிய பாவியாகி விட்டேன். இப்படி எல்லாம் யோசித்துத் தன்னை மறந்த நிலையில் இருந்த குலசேகரன் காதுகளில் ஹேமலேகா அழைப்பது போன்ற மயக்கம் ஏற்பட்டது. அவள் இங்கே இல்லை. அவள் அழைக்கவில்லை. ஆனாலும் அவன் மனம் அவளையே நினைத்தது. எவ்வளவு ஆதுரத்துடன் தன்னைக் கனிவு பொங்கப் பார்ப்பாள். அவள் அழகிய புன்னகை சிந்தும் முகம் அவன் கண்ணெதிரே தோன்றியது. இவ்வுலகில் ஹேமலேகாவின் முகமும் குரலும் மட்டுமே அவனுக்குள் இன்பத்தைத் தந்து கொண்டிருந்தது. ஆனால் இன்றோ!

ஹேமலேகா!ஹேமலேகா! அவளைப் பார்த்து நீண்ட நேரம் பேசித் தன் துயரங்களை எல்லாம் சொல்லிக் கிருஷ்ணாயி தன்னைப் படுத்திய பாட்டை எல்லாம் சொல்லி ஆறுதல் பெற வேண்டும் போல இருந்தது குலசேகரனுக்கு. ஆனால் அவன் விதியோ அல்லது அவன் கொண்ட லக்ஷியமோ அல்லது அவன் மேற்கொண்டிருக்கும் வேலை காரணமாகவோ எப்போது அவளைப் பார்த்தாலும் நின்று பேச முடியாமல் அவசரமாகக் கிளம்பும்படியே ஆயிற்று.
அவளுக்கும் என்னிடம் நேசம் இருந்திருக்க வேண்டும். ஆம், ஆம் அது தெரிந்ததால் தான் கிருஷ்ணாயி அவளை ராணி வாசம் செய்யச் சொல்லி இருக்கிறாள். பேசும்போது குழைவான குரலில் இனிமை பொங்கப் பேசுவாளே! பார்க்கையில் கனிவு சொட்டுமே!என் மீது எவ்வளவு அக்கறை கொண்டிருந்தாள். எனக்காக எவ்வளவெல்லாம் உதவிகள் செய்தாள். ஆலோசனைகள் கொடுத்தாள். இத்தனைக்கும் அவள் என்னைவிடப் படித்தவள். அழகானவள். தன் பாண்டித்தியத்தின் திறமையால் அரச சபைகளில் முக்கிய இடம் பெற்றவள். படிப்பில்லாத என்னிடம் அவள் கொண்டிருந்த ஈடுபாடு எவ்வளவு வலிமையானது! எப்படி அவளுக்குத் தன் மேல் இவ்வளவு ஈடுபாடு, நேசம் ஏற்பட்டது? தூக்கம் வராமல் தவித்தான் குலசேகரன்.

மறுநாள் குலசேகரன் மாறுவேடம் தரித்த ஹொய்சளக் குதிரைவீரர்களுடன் தெற்கு நோக்கிக் கிளம்பினான். அரச சபை கூடி அவனுக்கு வழியனுப்பியது. அரசர் மாபெரும் திரவியங்கள் அடங்கிய பொதியைக் குலசேகரனிடம் கொடுத்தார். அரசர் வைணவராக  இருந்ததால் அந்தக் கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் குலசேகரனுக்கும் அளிக்கப்பட்டன. பிரசாதத்தைத் தலை குனிந்து ஏற்ற குலசேகரன் நிமிரும்போது எதிரே கிருஷ்ணாயியும் அவள் மகனும் வந்து கொண்டிருந்ததை அதுவும் தன்னை நோக்கி வந்ததைக் குலசேக்ரன் பார்த்துத் திடுக்கிட்டான். மன்னரைப் பார்த்தால் அவர் புன்னகையுடன் இதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அரசகுமாரனான ராஜவர்த்தனன் தன் கையில் வைத்திருந்த பளபளக்கும் வாள் ஒன்றைப் பட்டுத் துணி ஒன்றின் மேல் வைத்து மிக மரியாதையுடன் குலசேகரனிடம் நீட்டினான். குலசேகரனுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அவன் அரசகுமாரன் என்னும் பெயரில் இருப்பதால் தலை தாழ்த்தி வணக்கம் சொல்லிவிட்டு அந்த வாளைத் தன் இரு கரங்களாலும் பெற்றுக் கொண்டான். ஒரு கணம் அவன் நெஞ்சம் விம்மியது. கண்களில் நீர்க் கோர்த்தது. அதைப் பார்த்துக் கிருஷ்ணாயியின் முகம் மலர்ந்தது. குலசேகரன் மனம் நிறைய விரக்தியோடு கிருஷ்ணாயியைப் பார்த்தான். ஆனால் அவள் கண்களில் கனிவு தெரியவே எதுவும் பேசாமல் தலையைத் தாழ்த்தி அவளையும் வணங்கிவிட்டுக் குலசேகரன் அங்கிருந்து கிளம்பினான்.