எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, April 14, 2019

ஹேமலேகா அளித்த அதிர்ச்சி!

ஹேமலேகாவின் நிலையைக் கண்ட குலசேகரன் வாயடைத்துப் போய் நின்றான். இளமை பரிபூரணமாய்த் ததும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பெண் இனி கைம்பெண்ணா? இது என்ன அநியாயம்? 70 வயதுக்கிழவரை இவள் மணக்க நேரிட்டதன் காரணம் தான் என்ன? நினைக்க நினைக்கக் குலசேகரனுக்கு மனதுக்குள் வெறி மூண்டது.  ஹேமலேகாவைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதான். "ஹேமூ, ஹேமூ!" எனப் பிதற்றினான். அவன் மூளையில் ஏதேதோ சிதறுண்டு போனாற்போன்று அவனுக்குள் ஓர் வெம்மை சீறிக்கொண்டு எழுந்தது. அவன் அதன் வேகத்தில் திக்குமுக்காடிப் போனான்.  அவன் கண்கள் கண்ணீரைப் பொழிவதை நிறுத்தவில்லை.ஹேமலேகா அவனிடம், "ஆர்ய! அழ வேண்டியவள் நான்! நானே அழவில்லையே! தாங்கள் ஏன் அழவேண்டும்?" என்றாள்.

அதற்குக் குலசேகரன், "இல்லை, ஹேமூ! எனக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்றே புரியவில்லை. எவ்வளவு காந்தியுடன் நீ பிரகாசித்துக் கொண்டிருந்தாய். உன் அழகு என்றென்றும் மங்காது மூப்பைத் தவிர்த்து என நான் நினைத்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு கோலத்தில் உன்னைப் பார்க்க நேர்ந்ததே!" எனக் குமுறினான். சற்று நேரம் இருவரும் பேசவில்லை. பின்னர் ஹேமலேகா அவனிடம், "ஸ்வாமி! இவை எல்லாம் என் உடலுக்கு நான் செய்து வந்த அலங்காரங்கள் தானே! அவை தானே மாறி விட்டன! என் புற உடலில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் தான் ஸ்வாமி! இதை விடுங்கள். சற்று உள்ளே வாருங்கள். உங்களுக்கு ஒரு விஷயத்தைக் காட்ட வேண்டும். மிக முக்கியமான விஷயம்!" என்றாள்.

குலசேகரன் அவளுடன் உள்ளே சென்றான். அங்கே பெரிய கூடத்தில் பிரகாசமாகப் பல விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அதன் வெளிச்சத்தில் அங்கே நிறையப் பெண்கள் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர்களில் பெரும்பாலோர் இளம்பெண்கள், சிறுமிகள்/ ஆனால் அவர்கள் நிலை! குலசேகரன் திடுக்கிட்டான். அந்தப் பெண்கள் அனைவருமே கைம்பெண்கள் என்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். இது எப்படி சாத்தியம் என நினைத்து மனம் வருந்தினான். அப்போது ஹேமலேகா அவனிடம், "ஸ்வாமி, இவர்கள் நிலையைப் பார்த்தீர்களா? இவர்கள் அனைவருமே இப்போதுள்ள சுல்தானியர்களின் ஆட்சியில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு மனம் கொதித்து அதைத் தவிர்ப்பதற்காகத் திருமணம் என்னும் பந்தத்துக்குள் வயது வித்தியாசம் பார்க்காமல் நுழைந்து அதனால் இந்த நிலையை அடைந்திருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே இப்போது கைம்பெண்கள்!" என்றாள்.

குலசேகரன் உள்ளம் கொதித்தது. எங்கேயோ இருந்து வந்த ஓர் அந்நியனின் ஆட்சியால் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்தப் பெண்கள் கடைப்பிடித்து வந்த நெறியான வாழ்க்கை இப்போது தடம் புரண்டு விட்டது. இவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகமே சின்னாபின்னமாகி விட்டது. எல்லோருடைய வாழ்க்கையிலும் மாறுதல்கள் விரும்பத்தகாத வகையில் ஏற்பட்டு விட்டது. ஓர் வெறுமை அனைவரையும் சூழ்ந்திருக்கிறது. இதிலிருந்து மீண்டு செல்லும் சமயம் எப்போது வரும்? "ரங்கா! ரங்கா!" எனப் புலம்பினான் குலசேகரன்.  ஹேமலேகா அவனைச் சமாதானம் செய்து அடுத்த அறையில் சென்று அமர வைத்தாள். அவனிடம், "ஸ்வாமி! நம் நியதிகள், கோட்பாடுகள் அனைத்துமே அமைதியான காலத்துக்காக நிலைத்து நிற்கும்படி எழுதப்பட்டவை! இத்தகைய மாற்றங்களையோ, எதிர்ப்புக்களையோ நம் முன்னோர்கள் எதிர்பார்த்திருக்க வில்லை. இப்போதைய சூழ்நிலை நம் வாழ்க்கை முறையின் ஆணி வேரையே அசைத்துள்ளது. இத்தகையதொரு நிலை வரும் என அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அப்படி நினைத்துப் பார்த்திருந்தால் எத்தகைய பாவத்துக்கும் பரிகாரம் இருப்பதாய்க் கூறி இருப்பவர்கள் இத்தகைய எதுவுமே தெரியாத அப்பாவிப் பெண்களின் நிலைமைக்கும் மாற்றுக் கூறி இருப்பார்கள். பரிகாரம் சொல்லி இருப்பார்கள்!" என்று துக்கத்துடன் கூறினாள்.

குலசேகரன் ஒரு பெருமூச்சுடன், "ஹேமூ! என் கண் முன்னால் இந்த சமூகம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. அதை நான் என் கண்ணால் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகக் கண்டு வருகிறேன். பதினெட்டு ஆண்டுகளில் எல்லாமே நலிந்து விட்டன. என் வாழ்க்கையும் வெறுமையானதாகப் போய் விட்டது ஹேமூ! முறையான வாழ்க்கை என்பதே எனக்கு இல்லாமல் போய் விட்டது. அத்தகைய வாழ்க்கையை நான் வாழவும் இல்லை. இந்த ஆட்சியின் விளைவு தான் உன்னை நான் இழக்க நேரிட்டதும். இல்லை எனில் இத்தகையதொரு நிர்க்கதி உனக்கு வந்திருக்குமா? எனக்கு எதுவும் புரியவில்லை ஹேமூ! கல்வி, கேள்விகளில் அதிகம் தேர்ச்சி பெறாததால் இந்த மாதிரியான சூழ்ச்சியான சூழ்நிலையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. என் எதிர்காலமே சூன்யமாகி விட்டது. இனி எனக்கு என்ன நேரப் போகிறது? நான் எப்படி வாழப்போகிறேன். என்பதெல்லாம் ஓர் கேள்விக்குறியாக என் கண் முன்னே தெரிகிறது. குழப்பத்துடனும், தவிப்புடனும் இருக்கிறேன் நான்!" எனக் கண்கள் கலங்கக் கூறினான்.

ஹேமலேகா அவனைத் தேற்றிவிட்டு அவனுக்கு உணவு பரிமாறினாள். அவள் கரங்களால் பரிமாறப்பட்ட உணவு குலசேகரனுக்கு தேவாமிர்தமாக இருந்தது.  அந்தச் சின்னஞ்சிறிய அறையில் வைக்கப்பட்ட விளக்கு ஒளியில் தேவதை போல் காணப்பட்ட ஹேமலேகாவும் அவனுக்கு உணவு பரிமாறுவதில் அவள் கண்ட மகிழ்ச்சியையும் பார்த்த குலசேகரனுக்கு மனம் நெகிழ்ந்தது. அவனும் தன்னையும் அறியாமல் தன் துக்கத்தை எல்லாம் மறந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். இந்தப் பிரபஞ்சத்தில் தானும் அவளும் மட்டுமே தனித்து இருப்பதாகவும் உணர்ந்தான்.  பதிலுக்குப் புன்னகைத்த ஹேமலேகா தன் இடுப்பில் இருந்து ஓர் ஓலையை எடுத்துக் குலசேகரனிடம் கொடுத்து, "ஸ்வாமி! இது உங்களுக்கு!" என்றும் கூறினாள்.

2 comments:

Mrinalini said...

Hi
Wonderful postings. Please update soon.

Mrinalini said...

You are doing a great job. Please update soon.