எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, April 17, 2019

குலசேகரன் வருத்தமும், சிங்கப்பிரான் நிலையும்!

வாசந்திகாவின் லிகிதத்தைப் படித்த குலசேகரன் மீண்டும் கண்ணீர் பெருக்கினான். அவள் மனம் அவனுக்கு ஓரளவுக்குப் புரிந்திருந்த போதும் அப்போதிருந்த மனநிலையில் அவன் மனம் அவள் பால் ஒன்றவில்லை.அரங்கன் நிலை ஒன்றே அவன் கவனம் முழுவதும் ஈர்த்திருந்தது. அரங்கனைக் காப்பாற்றி எங்கே எடுத்துச் சென்று மறைவாக வைப்பது, எப்படிப் பாதுகாப்பது என்பதிலேயே அவன் முழு மனதோடு ஈடுபட்டிருந்தான். இத்தகைய உல்லாச எண்ணங்களில் அவன் மனம் அப்போதெல்லாம் ஈடுபடவே இல்லை. ஆனால் அவனை நினைத்து ஒரு பெண் உயிர் வாழ்ந்து வருகிறாள். துரோகிகளிடம் அகப்பட்டுக் கொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்த பின்னரும் அவன் வந்து காப்பாற்றி அழைத்துச் செல்வான் என்னும் நம்பிக்கையில் உயிர் வாழ்கிறாள். கடவுளே! கடவுளே!ரங்கா! ரங்கா! இத்தகைய பாசத்துக்கும் அன்புக்கும் நான் என்ன கைம்மாறு செய்வேன்? இத்தகைய நிலைமை எனக்கு ஏன் ஏற்பட்டு வருகிறது? திரும்பத் திரும்ப என் வாழ்வில் இத்தகைய அபலைப் பெண்கள் ஏன் குறுக்கிடுகின்றனர்?

குலசேகரன் தலை நிமிர்ந்து ஹேமலேகாவிடம், "இந்த ஓலை உன்னிடம் யார் கொண்டு வந்து கொடுத்தார்கள்? வாசந்திகாவை நீ பார்த்தாயா?" என வினவினான். அதற்கு அவள், "இல்லை, ஸ்வாமி! ஓர் யோகி கண்ணனூரில் இருந்து வந்தார். அவர் தான் இதை எடுத்து வந்தார். அழகிய மணவாளபுரத்தில் வசித்து வரும் ஹேமலேகாவிடம் இதைச் சேர்ப்பியுங்கள் எனச் சொல்லி அனுப்பினாளாம்!" என்றாள் ஹேமலேகா!  குலசேகரனுக்கு யோகி மூலம் ஓலை வந்தது அதிசயமாகவோ ஆச்சரியமாகவோ இல்லை. ஏனெனில் அந்த நாட்களில் யோகிகள் பற்பல அற்புதங்களை நிகழ்த்தி வந்தனர். ஆகவே சுல்தானியர்களும் கூட அவர்களிடம் அதிகம் கடுமை காட்டாமல் பக்தியுடனேயே நடந்து கொண்டார்கள். ஆகவே அவர்கள் நாடு முழுவதும் தாராளமாக நடமாட முடிந்தது. இதை எல்லாம் யோசித்த குலசேகரன் ஹேமலேகாவைப் பார்க்க அவள் அவனிடம் , "வாசந்திகாவை நீங்கள் அறிவீர்களா?அவளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டாள்.  குலசேகரன் அவளிடம், "ஆமாம், ஹேமு! திருவரங்க முற்றுகை முதல் முதல் ஆரம்பித்த போது அவளுடன் பழக்கம். இவளைக் காப்பாற்றி அரங்கன் ஊர்வலத்துடன் செல்லும் ஒருத்தியாகக் கூட்டிச் சென்றேன்.  ஆனால் மதுரை அருகே எங்களை சுல்தானிய வீரர்கள் தாக்கிய சமயம் இவள் அந்தக் கூட்டத்தில் இருந்து காணாமல் போய் விட்டாள். பின்னர் அவள் என்ன ஆனாள் என்பதை நான் அறிந்து கொள்ளவில்லை!" என்றான்.

அதற்கு ஹேமலேகா, "ஸ்வாமி! அவள் மறைந்தெல்லாம் போகவில்லை. சுல்தானிய வீரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு சித்திரவதை அனுபவித்திருக்கிறாள். " என்று வருத்தத்துடன் கூறினாள். "ஹேமூ! முன்னர் ஒரு முறை அந்தக் கோஷ்டியில் இவளைப் பார்த்ததாக நீ ஏற்கெனவே சொல்லி இருக்கிறாய். நான் அப்போதெல்லாம் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவளைக் குறித்து நினைக்கக் கூட இல்லை. கடந்த பதினெட்டு ஆண்டுகளில் எத்தனையோ பெண்கள் ஆயிரக்கணக்கான பெண்கள் துன்பத்துக்கு ஆளாகிப் பெரும் துக்கம் அனுபவித்து வருகின்றனர். இவள் அவர்களில் ஒருத்தி தானே என்னும் அலட்சிய மனோபாவத்தில் இருந்து விட்டேன். இப்போது இவள் லிகிதத்தைப் பார்க்கையில் நான்செய்தது தவறோ எனத் தோன்றுகிறது! ஆனால் இனி என்ன செய்ய முடியும்? பார்க்கலாம்!" என்றவன் சற்று மௌனமாக இருந்தான்.

பின்னர் அவளைப் பார்த்து, "ஹேமூ, சமீப காலங்களாகவே எனக்கு நாலாபக்கமிருந்தும் துன்பச் செய்திகளும் துயரச் செய்திகளுமாகவே வருகின்றன. என்னை இவை மிகவும் வருத்துகின்றன. எனக்கு என்ன நடந்தாலும் பொறுத்துக் கொண்டு விடுவேன். ஆனால் என்னைச் சேர்ந்தவர்களுக்கும், என்னை நம்பியவர்களுக்கும் துன்பம் நேரிட்டால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னைச் சுற்றி உள்ளவர்கள் வாழ்க்கை இன்பமயமாக அமையாதா என அந்த அரங்கனை வேண்டிக் கொண்டிருக்கிறேன்." என்றான்.  பின்னர் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ஹேமலேகா கண்களில் கண்ணீருடன் அவனுக்கு விடை கொடுத்தாள். குலசேகரன் மனதிலும் துன்பமே நிரவி இருந்தது.  நாட்டின் காரணமாகத் தன் திருமண வாழ்க்கையைப் பறி கொடுத்த ஹேமலேகாவையும் அவளுடன் இருந்த சின்னஞ்சிறு பெண்களையும், இளம்பெண்களையும் பார்க்கப் பார்க்க அவன் மனம் பதறியது. அவள் கைம்பெண் என்பது உலகறிய நடந்து விட்டதால் இனி ஹேமலேகாவுடன் அவனால் உலகறிய சேர்ந்து வாழ முடியாது. அவளை அவன் இழந்து விட்டான். இனி திரும்பக் கிடைக்க மாட்டாள்.

இதை எண்ணி எண்ணி மனம் நொந்த குலசேகரன் அவளைப் பார்த்துத் தலையை ஆட்டி, "வருகிறேன்!" என்று ஈனஸ்வரத்தில் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான். "வெற்றி உங்களுக்கே!" என வாழ்த்தி வழி அனுப்பினாள் ஹேமலேகா.  தலை குனிந்த வண்ணம் குதிரையின் மேலேறிக் குதிரையை விரட்டினான் குலசேகரன். டக், டக் என ஒலி எழுப்பிய வண்ணம் குதிரை கிளம்பியது. குதிரை கண்ணுக்கு மறையும் வரை அதைப் பார்த்த வண்ணம் அங்கே நின்றிருந்தாள் ஹேமலேகா.

3 comments:

Mrinalini said...

Will he really feel for Vasantika? Please update soon. Waiting very eagerly.

Mrinalini said...

Will he really feel for Vasantika? Please update soon. Waiting very eagerly.

Mrinalini said...

Please updated mam