எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 23, 2019

சுல்தானியர் அழிவும் தொடரும் முற்றுகையும்!

இருட்டில் காத்திருந்தது வீண் போகவில்லை. அரை நாழிகையில் சுல்தானிய வீரர்கள் தங்கள் திடீர்த் தாக்குதலை முடித்துக் கொண்டு திரும்பினார்கள். சுமார் ஆயிரம் பேர் இருக்கலாம் எனக் கணக்குப் போட்டான் குலசேகரன். அவர்களுக்கு மிக்கவும் மகிழ்ச்சி! எத்தனை எத்தனை ஹொய்சளர்களை அழிக்க நேர்ந்தது என்பது பற்றி உல்லாசமாகவும் கேலியாகவும் பேசிக் கொண்டு கொஞ்சம் அலட்சியமாகவே வந்தனர். அட்டகாசமாய்ச் சிரித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மேல் திடீரென அம்புகள் மழையாகப் பொழிந்தன. அதை எதிர்பார்க்காத சுல்தானிய வீரர்கள் தாக்குவது யார் எனப் பார்த்து எதிர்த்தாக்குதல் நடத்துவதற்காகச் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். யாருமே கண்களுக்குத் தென்படவில்லை. எங்கிருந்து தாக்குதல் வருகிறது என்பதையும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. தங்களுடைய திடீர்த் தாக்குதலுக்கு இது பழிவாங்கல் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவர்கள் ஓர் முடிவுக்கு வரும் முன்னர் வீரர்கள் பலர், "ஐயோ! ஐயோ!" எனக் கதறிக் கொண்டு கீழே விழுந்தனர்.  மற்றவர்கள் திக்பிரமித்துப் போய் நின்றனர். உணர்வுள்ள சிலர் மட்டும் தொங்கு பாலத்தை உடனே இறக்கும்படி கத்தினார்கள்.

ஆனால் பாலம் விழுவதற்கெல்லாம் குலசேகரன் இடம் கொடுக்கவே இல்லை. திடீரெனக் குதிரைகளைப் பாய்ந்து வீரர்கள் மேல் செலுத்தும்படி கட்டளை இட்டுக் கொண்டே சுல்தானிய வீரர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். சுல்தானிய வீரர்கள் அப்போது தான் ஓர் சிறிய போரை முடித்துவிட்டுச் சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தனர். மீண்டும் இப்படி ஒரு தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பலரும் ஹொய்சளர்களின் அம்புகளுக்கு இரையாகிக் கீழே விழுந்து இறந்தனர். சிறிது நேரத்திலேயே மொத்தப் படையும் அழிக்கப்பட்டு எஞ்சிய ஒன்றிரண்டு வீரர்களும் அகழியிலே விழுந்து இறந்தனர்.  நடு ஜாமத்தில் அங்குமிங்குமாகச் சிதறிப் போன ஹொய்சளப்படை மீண்டும் ஒன்று கூடியது. அவர்களைக் கணக்கெடுத்ததில் நூற்றுக்கும் அதிகமான வீரர்கள் சுல்தானியர்களின் தாக்குதலில் இறந்திருந்தார்கள்.

அப்போது எங்கோ மறைந்திருந்த மன்னரும் அங்கே வந்து விட்டார். குலசேகரனைப் பார்த்து நிலைமையைப் புரிந்து கொண்டவர், "குலசேகரா! நமக்கு இது ஒரு பாடம். இனி இவ்வாறு கவனக்குறைவாக இருக்கக் கூடாது. நல்லவேளையாக நம் அந்தப்புரத்து மகளிரும், இளவரசனும் தொலைவில் உள்ள மணல்வெளிக்குச் சென்றிருந்தார்கள். இல்லை எனில் சுல்தானியர் வைத்த தீயில் அகப்பட்டு மாண்டு போயிருப்பார்கள். ஹொய்சள வம்சமே புல், பூண்டு இல்லாமல் அடியோடு அழிந்து போயிருக்கும்." என்று கவலையுடன் சொன்னார். பின்னர் அடுத்து நடக்க வேண்டியதைக் குறித்துச் சிந்திக்கலானார்கள். ஆலோசனைகள் செய்துவிட்டுப் பின்னர் படுக்கச் சென்றனர். எங்கும் நிசப்தம்.

குலசேகரன் மனதிலோ தொலைவில் தெரிந்த கோட்டையில் கரிய உருவம் தெரிவது போலவும், "சுவாமி!" எனத் தன்னை அழைப்பது போலவும் இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டான். வாசந்திகாவை முதல் முதல் பார்த்ததில் இருந்து அவள் தனக்குச் செய்த சேவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்தான். அரங்கனைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்ததாலும் அவளும் அரங்கன் கூட்டத்தாரோடு சேர்ந்து வந்ததாலும் தன்னைக் கவனித்தாள் என்றே அவன் நினைத்திருக்க அவளோ அவனையே தன் மனதால் நினைத்து நினைத்து வருந்தி இருக்கிறாள். அவள் கால்களில் கட்டிய சலங்கைகளின் ஒலி கேட்பது போலவும், மீண்டும் மீண்டும் அவள் தன்னை அழைப்பது போலவும் இருந்தது குலசேகரனுக்கு.

என்னுடனேயே அவள் வந்ததெல்லாம் என் மேல் கொண்ட மாளாத அன்பினாலா என எண்ணி வருந்தினான். என்னை முக்கியமாகக் கருதியதெல்லாம் என்னை அவள் ஒரு காலத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தினால் தான் என்பதை நினைக்கவும் குலசேகரனுக்கு மாளாத் துயரம் ஏற்பட்டது. தான் இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என எண்ணி வருந்தினான். இப்போது இந்தக் கோட்டையிலோ அல்லது மதுரைக் கோட்டையிலோ அவள் அந்தப்புரச் சிறையில் அடிமையாக இருந்து வருகிறாள். தன்னை வந்து மீட்கச் சொல்லிக் கேட்டிருக்கிறாள். அவளை நான் மீட்பேனா? என்னால் இயலுமா? குலசேகரன் யோசனையில் ஆழ்ந்தான். அப்போதைய அரசியல் நிலவரத்தை மீண்டும் எண்ணிப் பார்த்தான்.

திருவண்ணாமலையில் அவனால் கொல்லப்பட்ட சுல்தான் உத்தௌஜிக்குப் பின்னர் குதுபுதீன் மதுரை மன்னனாகப் பட்டம் சூட்டிக் கொள்ள அது பிடிக்காத மற்றப் பிரபுக்கள் நாற்பது நாட்களிலேயே அவரைக் கொன்றுவிட, பின்னர் கியாசுதீன் என்பவன் பட்டத்திற்கு வந்திருந்தான். இவன் எத்தனை நாட்களோ? தாக்குப்பிடிப்பானா தெரியவில்லை. மதுரைச் சிம்மாதனத்திற்கு சுல்தானியர்கள் இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதே சமயம் ராஜ வம்சத்தினர் பலரும் இன்பக் கேளிக்கைகளில் ஈடுபட்டு அரசியல் விவகாரங்களைச் சரிவரக் கவனிக்காமலும் இருக்கின்றனர். ஆகவே கண்ணனூர் முற்றுகைச் செய்தி மதுரையை எட்டினாலும் உடனடியாக யாரும் வந்து அவர்களுக்கு உதவவில்லை. கியாசுதீன் கோபத்தில் கத்தியதோடு சரி! இதெல்லாம் குலசேகரன் காதுகளுக்கு எட்டியது. கண்னனூர் முற்றுகையும் நீடித்து இப்போது 3 மாதங்கள் ஆகிவிட்டன.

1 comment:

Mrinalini said...

Please update mam
Such an interesting point