எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, April 03, 2019

மீண்டும் ஹேமலேகா!

ராஜகம்பீரத்துக்குள் நுழைந்த படை முதலில் மெதுவாக முன்னேறினாலும் பின்னர் வேகமாக நகர ஆரம்பித்தது.  எல்லோருமே ஓர் பதைபதைப்புடன் என்ன ஆகுமோ என எண்ணிக் கொண்டு இருக்கப் படையோ எவ்விதமான எதிர்த்தாக்குதலும் இல்லாமல் முன்னே, முன்னே சென்று கொண்டே  இருந்தது.  அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் கழிந்த ஓர் பகலுக்குப் பின்னர் இரவு ஓர் இடம் பார்த்துத் தண்டு இறங்கி இரவைக் கழித்தனர். ஒவ்வொரு கணமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி இருந்தது. இவ்வாறு கவனத்துடன் இரவைக் கழித்த பின்னர் காலையில் மீண்டும் கிளம்பி சம்புவராயரின் ராஜ்யத்தின் ஓரப்பகுதியைக் கடந்து அதன் எல்லையை முழுவதும் தாண்டியதும் பெருமூச்சு விட்டார்கள்.ஆனால் இப்போது நுழைந்திருப்பதோ சோழ ராஜ்ஜியம். சுல்தானின் ஆளுகைக்கு உட்பட்டுவிட்ட பகுதி!ஆனாலும் உற்சாகம் குறையாமலேயே படைகள் சென்றன. ஆங்காங்கே மக்கள் கூட்டம் நின்று எந்தப் படை, எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது என்பதை எல்லாம் விசாரித்து அறிந்து கொண்டு ஆரவாரத்துடன் வீரர்களை வரவேற்று உபசரித்து வாழ்த்து மழை பொழிந்து வழி அனுப்பி வைத்தார்கள்.

இதைக் கவனித்த படை வீரர்களும் உற்சாகமாகவே முன்னேறினார்கள். பிரதானமான படை எண்ணிக்கை அதிகம் இருப்பதால் சற்றே பின் தங்கி வந்து கொண்டிருந்தது. குலசேகரன் தலைமையில் உள்ள படை சற்றே மற்றவர்களிடமிருந்து பிரிந்து வேகமாக முன்னேற ஆரம்பித்தது. கண்ணனூரை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான் குலசேகரன். கண்ணனுருக்கு ஐந்து காத தொலைவில் காணப்பட்ட ஓர் சுல்தானியக் காவல்படையை முறியடித்துக் கொண்டு கண்ணனூர்க் கோட்டையைச் சுற்றி வளைத்தனர் குலசேகரன் தலைமையிலான படை வீரர்கள். இதற்குள்ளாகச் செய்தி கண்ணனூரைப் போய் அடைந்திருந்தது.  ஆகவே சுல்தானியத் தளபதிகள் முன் ஜாக்கிரதையாக தொங்கு பாலங்களைத் தூக்கிவிட்டுக் கோட்டைக்குள் போய் பத்திரமாகப் புகுந்து விட்டனர். இங்கே கோட்டையை அணுகிய குலசேகரன் பிரதானப்படைக்காகக் காத்திருக்க வேண்டி வந்தது.

மாலை மயங்கி இருட்டும் வேளை. ஒற்றர்கள் மூலம் பிரதானப்படை வந்து சேரக் காலை ஆகிவிடும் என்பதைத் தெரிந்து கொண்டான் குலசேகரன்.  அதன் பேரில் தனக்கென அமைக்கப்பட்ட கூடாரத்தை அடைந்து சற்று ஆசுவாசம் செய்து கொள்ள ஆரம்பித்தான். அலுப்புடன் மஞ்சத்தில் அப்படியும் இப்படியும் புரண்டவன் காதுகளில், "ஆர்ய!" என்னும் குரலும் அதைத் தொடர்ந்து ஹேமலேகாவின் அழகிய தோற்றமும் ஓர் மாயை போல் தோன்றவே குலசேகரன் உள்ளம் முழுவதும் உணர்ச்சிக்குவியலாகியது. தன்னை மெய்ம்மறந்து அந்த மாயத்தோற்றத்தில் மூழ்கி இருந்த குலசேகரன் தன்னிலை பெற்றவனாய்க் கூடாரத்துக்குள் படுக்கவோ அமரவோ முடியாமல் தத்தளித்தான். மெல்லக் கூடாரத்தின் வெளியே வந்தான். ஹேமலேகாவின் நினைவுகள் அவனைப் படுத்தி எடுத்தன. அங்கும் இங்குமாகச் சுற்றி வந்தவன் ஏதோ நினைத்தவனாக அங்கே கட்டப்பட்டிருந்த தன் குதிரை மீது ஏறிக் கிழக்கு நோக்கி விரைவாகப் பறந்தான்.

குதிரையை எவ்வளவு வேகமாய்ச் செலுத்த முடியுமோ அத்தனை வேகமாய்ச் செலுத்திய குலசேகரனுக்குக் கிட்டத்தட்ட ஹேமலேகாவைக் காண வேண்டும் உடனே என்னும் வெறியே வந்துவிட்டது. சாலையெங்கும் முன்னிலாக் காலம் என்பதால் மெலிதாகப் பரவி இருந்த நிலவொளியில் குதிரையை வேகமாய்ச் செல்லும்படி ஊக்குவித்துக் கொண்டு குலசேகரன் இரு நாழிகையிலேயே கிளியார் சோலை என்னும் அந்தக் கிராமத்தை அடைந்து விட்டான். அங்கே இருந்த சத்திரத்துக்கு வெளியே குதிரையைக் கட்டிவிட்டு ஹேமலேகாவைத் தேடிக் கொண்டு உள்ளே சென்றான். ஆனால் அங்கே யாருமே இல்லை. சத்திரத்தின் பின் பகுதி வரை சென்று பார்த்தவனுக்கு யாரும் இல்லாமல் போகவே நிர்வாகியிடம் சென்று ஹேமலேகாவைக் குறித்து விசாரிக்க அவன் அவர்கள் எல்லாம் வேறொரு மாளிகைக்குச் சென்றுவிட்டதாய்க் கூறி அந்த மாளிகையையும் அடையாளம் சொன்னார்.

அதன் பேரில் குலசேகரன் அந்த மாளிகைக்கு விரைந்தான். வாசல் கதவு சார்த்தி இருந்தது. உள்ளே இருந்து மெல்லிய குரல்களில் பேச்சுக்களும் பாடல் ஒன்றும் இழைந்து வந்து கொண்டிருந்தது. குலசேகரன் அந்த மாளிகையின் வாயில் கதவை மெல்லத் தட்டினான். உடனே வந்தவர்களிடம் ஹேமலேகா  குறித்து விசாரிக்க சில கணங்களில் ஹேமலேகா கையில் விளக்குடன் அங்கே வந்தாள். அவனைக் கண்டதும் கதவைத் திறந்தவள் ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் தலை குனிந்து விளக்கைத் திண்ணையில் வைத்துவிட்டு ஒதுங்கி நின்றாள். அவளிடம் தென்பட்ட ஏதோ ஓர் மாற்றம் குலசேகரன் கண்ணைக் கவர்ந்தது என்றாலும் அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. மீண்டும் மீண்டும் அவளைப் பல முறை உற்று உற்றுப் பார்த்த குலசேகரன் கடைசியில் விக்கித்து நின்றான்.

ஹேமலேகா எவ்விதமான ஆபரணங்களும் அணியாமல் வெறுமையாக நின்று கொண்டிருந்தாள் என்பது அவனுக்குப் புலனாகியது. விடியற்காலை நிலவைப் போல் ஒளி குன்றிக் காட்சி அளித்த ஹேமலேகாவைப் பார்த்த குலசேகரன் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டான். அவன் அடிவயிறு கலங்கி இனம் தெரியாததோர் கலக்கம் அவன் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஊடுருவியது. கண்கள் மங்கிக் கொண்டு பார்வையே தெரியாதோ என்னும்படி ஆயிற்று. நிற்கக் கூட முடியாமல் தடுமாறியவன் அவளைக் கண்டு என்ன பேசுவது என்றே புரியாமல் நின்றான். அவன் கண்கள் தற்செயலாக அவள் கழுத்தைக் கவனித்தன. அதுவும் வெறுமையாக இருக்கவே அவன் ஹேமலேகாவைப் பார்த்து, "ஹேமூ!, நீ, நீ...." எனத் தடுமாறினான். ஹேமலேகா உடனே "நான் இப்போது கைம்பெண்!" என்று சொன்னாள். குலசேகரன் வாயடைத்து நின்றான்.

***************

இதன் தொடர்ச்சி இனிமேல் அடுத்த புதனன்று தான் வரும். வேலை! மீண்டும் உறவினர் வருகை! மீண்டும் பயணம்! பொறுத்து அருள்க!

1 comment:

நெல்லைத்தமிழன் said...

என்னடா 48மணி நேரங்களாயிற்று... இன்னும் லீவ் லெட்டர் கொடுக்கலையே.. ஏதேனும் பிரச்சனையான்னு நினைத்தேன்....

கவலைப்படாதீங்க. லீவ் அப்ரூவ்ட். திரும்பி வந்துட்டு இரண்டு நாட்கள் கழித்து, அடுத்து ஐந்துநாள் விடுமுறை கேட்பீங்கன்னும் தெரியும்.ஹாஹா