எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 12, 2021

வல்லபன் மறைந்திருந்த இடம்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

உள்ளே நெடுகிலும் பார்த்துவிட்டு மீண்டும் கூடத்துக்கூ வந்த அவர்களுக்கு முகங்களில் வெறுப்பும், தேடியதனால் ஏற்பட்ட களைப்புமாகத் தெரிந்தது. மஞ்சரியையும் அவர்கள் வெறுப்புடன் பார்த்தார்கள். பின்னர் எதுவுமே சொல்லாமல் வெளியே சென்றனர். மஞ்சரி அவர்கள் கொஞ்ச தூரம் போய்விட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு உள்ளே குச்சிலுக்கு ஓடினாள். குச்சிலில் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தாள். அங்கே யாரையுமே காணோம்! எங்கே போயிருப்பார் அவர்? மஞ்சரி கலக்கம் அடைந்தாள்.  அங்கிருந்த குதிர்களைத் திறந்து பார்த்தாள். பானைகளின் உள்ளே ஒளிந்திருப்பாரோ எனத் தேடினாள். மேலுள்ள பரண்களில் படுத்திருப்பானோ என எம்பி எம்பிப் பார்த்தாள். எங்கேயுமே காணவில்லை. புழக்கடைக் கதவைத் திறந்து அங்கே வெளியே எங்காவது மறைந்திருப்பானோ என்றும் பார்த்தவளுக்கு எங்கேயுமே காணோம் என்றதும் துக்கம் மேலோங்கியது. அயர்ந்து போய் அங்கேயே அமர்ந்தாள்.

சித்திரசாலையில் இருந்து இனிமையான மணங்கள் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருந்தன. மேல் மாடம் முழுவதும் பரவி நிறைந்து எங்கும் இனிய மணம் வீசிற்று. கூடவே இனிய கீதம் மெல்ல மெல்ல சிற்றலையைப் போல் கிளம்பிற்று. ஐந்து தினங்களாய்த் தொடர்ந்த இந்த இனிய மணமும், இனிய கீதமும் அவனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. எங்கோ ஓர் உலகில் சஞ்சரிப்பதைப் போல் உணர்ந்தான். எனினும் வல்லபனுக்கு தத்தன் கதை என்னவாகி இருக்குமோ என்னும் கவலை வாட்டி எடுத்தது.கடுமையான ஜூரத்துடன் நோயாளியாகக் கட்டிலில் படுத்திருந்தானே! அவனை அந்தச் சேவகர்கள் கண்டு பிடித்திருப்பார்களோ? பிடித்துக் கொண்டு போயிருப்பார்களோ! அப்படி அவர்கள் பிடித்துச் செல்லவில்லை என்றாலும் நோயின் கடுமையிலிருந்து அவன் தப்பி உயிர் பிழைத்திருப்பானா?  மேற்கொண்டு பிரயாணம் செய்யவும் யோசனை தான். ஏனெனில் சோதனைகள் தொடர்ந்து வந்து சூழ்கின்றன. இந்தச் சேவகர்கள் எங்காவது தொலைந்தால் தான்! மேலே என்ன செய்யலாம் என யோசிக்கவே முடியும். 

ஆனாலும் இவர்கள் வந்ததால் தானே அந்த மங்கையையும் பார்க்க முடிந்தது. இல்லை எனில் அவளுடன் சந்திப்பே நடந்திருக்காதே! அந்த அழகிய முகமும் அந்த நீண்ட பெரிய கண்களால் அவள் பார்ப்பதும் தனி சுகம். இவ்விதம் யோசித்தவனுக்கு அந்த மாடத்துக்குப் படிகளில் ஏறி யாரோ வரும் அரவம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தான் வல்லபன். உள்ளே வந்தவள் சுகிர்த ரத்னா என்னும் பெண்மணி. எம்பெருமாண்டியார் கூட்டத்தைச் சேர்ந்தவள். தேவதாசிகளை அந்நாட்களில் எம்பெருமாண்டியார் என அழைத்து வந்தனர். அவள் கண்ணன் மேல் அபார பிரேமை கொண்டவள். சங்கீதம், நிருத்தியம், சித்திரம், ஆரூடம் என அனைத்திலும் தேர்ந்தவள். நன்கு கற்றுத் தேர்ந்த அவளுக்கு எல்லோரையுமே கண்ணனாகப் பார்க்கும் இயல்பு கை வந்திருந்தது. பார்க்குமிடமெல்லாம் அவள் கண்ணனையே பார்த்தாள். அவள் மனம் கண்ணனின் பிரேமையில் ஆழ்ந்திருந்தது. 

மேலே வந்தவள் வல்லபனைப் பார்த்து, "கண்ணா! காலையிலிருந்து எந்த உணவும் சாப்பிடாமல் பட்டினியாகவே இருக்கிறாயே!எனக்குக் கவலை தாங்கவில்லை என்பதால் உணவை எடுத்துக் கொண்டு நானே வந்தேன்!" என்றபடி கையிலிருந்த வெள்ளித்தட்டுக்களை அவன் முன்னர் வைத்தாள். அவனைக் "கண்ணா!" எனப் பல முறை அழைத்து அவன் வேண்டிய மட்டும் உணவு படைத்துவிட்டுக் கீழே சென்றால் சுகிர்த ரத்னா! வல்லபன் இங்கே வந்ததில் இருந்து அவனைக் கவனித்துக் கொள்பவள் அவள் தான். அவன் தாயைப் போலவே இவளும் அவனிடம் பரிவு காட்டினாள்.  அன்பு ஒன்றைத் தவிர அவளிடம் கொடுப்பதற்கு வேறு எதுவும் இல்லை என்பதை நிதரிசனமாக உணர வைத்தாள்.  சத்திரத்து வாசலில் போக இடம் இல்லாமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த வல்லபன் தற்செயலாக இவளைப் பார்த்தான். அவளிடம் விஷயத்தைச் சொன்னதும் மிகவும் மகிழ்வுடன் அவனை அவள் தன் விருந்தாளியாக ஏற்றுக் கொண்டாள்.

வல்லபன் உணவை உண்டு முடிக்கையில் கீழே சென்றிருந்த சுகிர்தரத்னாவிடம் யாரோ ஏதோ விசாரிக்கும் குரல் கேட்டது. ஆஹா! இந்தத் தோரணையான குரல்! அந்தச் சேவகர்களில் ஒருவன் அல்லவோ? வல்லபன் எச்சரிக்கை அடைந்தான்.  அந்தக் குரல் வீட்டில் யார் இருக்கிறார்கள் என சுகிர்த ரத்னாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் வீட்டுச் சொந்தக்காரர்கள் தாம் என சுகிர்தா மறுமொழி கொடுப்பதும் அதற்கு அவர்கள் வீட்டைச் சோதனை இட வேண்டும் எனவும் சொல்லுவதைக் கேட்டான் வல்லபன். சுகிர்தாவின் மறுப்பும், அவர்களின் வற்புறுத்தலும் சோதனைக்கு வழிவிடும்படியான ஆணையும் வல்லபன் காதில் கேட்டது. சுகிர்தாவை மீறிக்கொண்டு அவர்கள் உள்ளே நுழையப் பிரயத்தனப் படுவதும் அவனுக்குப் புரிந்தது. ஆனால் சுகிர்தாவோ உரத்த குரலில் "நில்லுங்கள்!" எனக் கத்திக் கொண்டே அவர்களைத் தடுத்தாள்.

தங்களைத் தடுக்கக் கூடாது எனச் சேவகர்கள் கூறுவதும் அவர்களிடம் "நீங்கள் சம்புவராயர் நாட்டைச் சேர்ந்தவர்களா?" என சுகிர்தா விசாரிப்பதும் வல்லபன் காதில் விழுந்தது. அவர்கள் அதை ஆமோதிக்கவும் சுகிர்த ரத்னா உடனே தாங்கள் இருப்பது சுரத்தான் நாடு. இங்கே சம்புவராயர் நாட்டுச் சட்டங்கள் செல்லாது எனவும் அதற்கு அந்தச் சேவகர்கள் இன்னும் ஒரு காத தூரத்துக்கு மேலே எல்லைக்குப் போயாக வேண்டும் என்றும் சொன்னாள். சுரத்தானுக்குத் தேவைப்படும்போது ஆயிரம் பேருக்கு மேல் படையைத் தான் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் மீறி உள்ளே நுழைந்தால் சுரத்தானிடம் போய்ப் புகார் செய்யப் போவதாயும் திட்டவட்டமாய்க் கூறினாள். சேவகர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தார்கள். அவர்களை விரட்டினாள் சுகிர்தா. சுரத்தானுக்கு ஆள் அனுப்பப் போவதாகவும் பயமுறுத்தினாள். சற்று நேரம் எதுவும் பேச்சு இல்லாமல் இருந்தார்கள் அனைவரும். பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அங்கிருந்து வெளியேறுவது வல்லபனுக்குக் காலடி ஓசைகளில் இருந்து புரிந்தது.

வல்லபன் உடனே திட்டி வாசலுக்கு வந்தான். அங்கிருந்து தட்டோட்டிக்குச் சென்று கைப்பிடிச் சுவர் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான். அவன் பார்த்த உயரத்திலிருந்து கீழே இருந்த ஆட்களின் தலைகள் மட்டுமே தெரிந்தன. ஆவலோடு பார்த்தான் வல்லபன். மூன்று சேவகர்கள் வெளியேறுவது அவனுக்குத் தெரிந்தது. அளவற்ற சந்தோஷத்துடன் திரும்புகையில் தற்செயலாக அவன் பார்வை எதிர் மாடியின் சாளரத்திற்குச் சென்றது. அப்படியே உறைந்து போய் நின்றான் வல்லபன். அங்கே அந்தப் பெண் நின்று கொண்டு இங்கே கீழேயே பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்தப் பெண் தலை நிமிர்ந்து தன்னைப் பார்ப்பாளோ என வல்லபனுக்குள் ஆவல் மீதூறியது. அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவளோ அங்கும் இங்குமாய்ப் பார்த்துவிட்டு ஒரு கணம் வல்லபனைப் பார்ப்பது போல் இருந்த நேரத்தில் சட்டெனப் பார்வையைத் திருப்பி விட்டாள். வல்லபன் கண்களில் இருந்து ஆறாகக் கண்ணீர் பெருகியது.

No comments: