எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, May 14, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! முகலிங்கங்கள் வகை!

இது இருமுக லிங்கம் அல்ல. சதுர்முக லிங்கத்தில் இரு முகங்கள் மட்டுமே காண முடிகிற அமைப்பில் உள்ள படம். இரு முகலிங்கங்கள் படம் கிடைக்கலை. :(

இப்போது இரு முக லிங்கம் பத்திப் பார்ப்போம்.

இரு முக லிங்கங்களில் ஒரு முகம் கிழக்கு நோக்கியும் (தத்புருஷம்) மற்றொரு முகம் மேற்கு நோக்கியும் காணப்படும். இவை "ம்ந்திரலிங்கங்கள்" எனச் சொல்லப் படுகின்றன. இவற்றை அதிகம் வழிபடுவது கர்நாடகாவில் உள்ள லிங்காயத்தார் என அழைக்கப் படும் வீர சைவர்கள் ஆவார்கள். சிவத் தொண்டு செய்பவர்களும் இந்த லிங்கங்களை வழிபடலாம் எனச் சொல்லப் படுகிறது. இந்த லிங்கங்களைப் பூஜிக்க தற்காலத்தில் "விருட்சி" என அழைக்கப் படும் இருவாட்சி மலர்கள் நல்லது. இரு முகம் கொண்ட ருத்திராட்சத்தால் அலங்கரிக்கலாம்.

அடுத்து மூன்று முக லிங்கங்கள். இவை கிழக்கு, தெற்கு, வடக்கு மூன்று திசைகளை நோக்கிக் காணப் படும். தத் புருஷம், அகோரம், வாமதேவம் என மூவகைப் பட்ட முகங்கள் கொண்ட இந்த லிங்கங்கள் முத்தொழிலையும் குறிப்பவை எனச் சொல்லப் படுகிறது. கிழக்கு முகம் ஆண்மையின் கம்பீரத்துடன் காணப்படுவதால் படைத்தலையும், தெற்கு முகம் கோபத்துடன் காணப் படுவதால், அழித்தலையும், வடக்கு முகம் பெண்மையின் ஜாடையுடனே சிரிப்புடனேயும் காணப் படுவதால் காத்தலையும் குறிக்கும். திரிமூர்த்தி லிங்கம் என அழைக்கப் படும் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை கோயிலிலும், நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரரும் திரி மூர்த்தி லிங்கங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர, எலிபெண்டா குகையிலும் மும்முக லிங்கம் காணப் படுவதாய்ச் சொல்கிறார்கள். இந்த மும்முக லிங்கங்களுக்கு மும்முக ருத்ராட்ச மாலை அணிவித்து, மூன்று தளங்கள் உள்ள வில்வத்தால் வழிபடலாம்.

இனி சதுர்முக லிங்கங்கள் பத்திப் பார்க்கலாம். சதுர்முக லிங்கம் என்னும் நான்கு முக லிங்கம் "வேத லிங்கம்" என அழைக்கப் படுகிறது. இவற்றின் முகங்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கி இருக்கும். இவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிப்பவை என்று சொல்வார்கள். நேபாளத்தின் பசுபதி நாதர் கோயிலில் நம் கண்ணுக்குத் தெரிவது சதுர்முக லிங்கம் தான் என்றாலும், அவற்றுக்கும் மேல் நோக்கிய ஒரு முகமும், கீழ் நோக்கிய ஒரு முகமும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளதாய்ச் சொல்லப் படுகிறது. ஆனால் நேபாள சதுர்முக லிங்கம் மார்பு வரையிலும், இரு கரங்களுடனும் காட்சி தருகிறது. நான்கு முகம் இருப்பதால் அங்கே நான்கு வாசல்களும் உண்டு. ஒவ்வொரு வாசலிலும் போய்த் தனித் தனியாகத் தரிசனம் செய்யும் வசதியும் உண்டு.

இது தவிர, காஞ்சியில் கச்சபேஸ்வரர் கோயிலிலும், திருவதிகை, திருவண்ணாமலை, திருவானைக்கா ஆகிய தலங்களிலும் காளஹஸ்திக்கு அருகே உள்ள மலை மண்டபத்திலும் சதுர்முக லிங்கங்கள் உள்ளதாய்த் தெரிய வருகிறது. இந்த லிங்கங்களுக்கு நான்கு முக ருத்திராட்சம் அணிவித்து நான்கு வில்வதளங்களால் வழிபடுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வழிபடுவோருக்குப் பிரம்ம ஞானம் கைவரப் பெற்று எட்டுத் திக்கிலும் புகழ் வாய்ந்தவராய்ச் சொல்லப் படுவார்கள்.

ஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். திருச்சியில் திருவானைக்காவல் கோவில் அருகே "பஞ்சமுகேஸ்வரர் கோயில்" என்று தனியாக உள்ளது. சஷ்டி அப்த பூர்த்தியை அந்தக் கோயிலில் வைத்துச் செய்யப் படுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் சில தலங்களிலும் பஞ்சமுக லிங்கங்கள் காணப் படுகின்றன. திருக்கைலையில் இறைவனின் தரிசனம் பஞ்சமுக லிங்க தரிசனம் என்றே சொல்லப் படுகிறது. இந்தப் பஞ்ச முகங்களில் இருந்தே கங்கை ஐந்து உருவங்களில் பொங்கி வருவதாயும் சொல்லப் படுகிறது. திருக்கோயில்களில் கடைப் பிடிக்கப் படும் "ஆகமம்" இந்த ஐந்து முகங்களில் இருந்தே வந்ததாயும் சொல்லப் படுகிறது. அதனால் பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் "சிவாகம லிங்கம்' எனவும் சொல்வார்கள்.

ஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுதல் விசேஷம் எனச் சொல்கின்றனர்.

Sunday, May 09, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! முகலிங்கம்!

முக லிங்கம் என்பது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப் படும். அது அநேகமாய் மறைந்தே இருக்கும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும், எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப் படுகிறது. இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவஸ்வரூபம் ஆன சுப்ரமண்யர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப் படுகிறது. பரம்பொருள் ஆன அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்பது சிவனடியார்களின் வழக்கு என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப் படுகிறது.

இப்போது ஒவ்வொரு முகமும் நோக்கும் திசையையும், தன் முகங்களின் நிறங்களையும் பார்க்கலாம். கிழக்கே பார்த்து இருக்கும் முகம் "தத் புருஷம்" என அழைக்கப் படுகிறது. இது பள பளவென்ற பொன் நிறத்தில் காணப்படும். தென் திசையை நோக்கிக் கொண்டிருக்கும் முகம் ஆனது "அகோரம்" என்று அழைக்கப் படும், இது கரு நிறத்தில் காணப்படுகிறது. மேற்கே பார்த்துக் கொண்டிருக்கும் முகம் "சத்யஜோதம்" என அழைக்கப் படும். இது தூய வெண்மை நிறத்தில் காணப்படும். வடக்கே பார்க்கும் முகம் "வாமதேவம்" எனப் படும், இது சிவந்த நிறத்தில் காணப் படும். ஈசான்ய திசை என்று அழைக்கப் படும் வட கிழக்குத் திசையில் காணப் படுவதோ, "ஈசான்ய முகம்" என்றே அழைக்கப் படும். இது பளிங்கு நிறத்தில் ஒளிர்கிறது.

முதலில் ஒரு முகம் கொண்ட லிங்கத்தைப் பற்றிப் பார்க்கலாம். தத்புருஷ லிங்கம் என அழைக்கப் படும் இந்த லிங்கத்தை வணங்கினால் சகல செல்வங்களுடன் கூடிய ராஜ யோகத்தை அடைவார்கள். சில கோயில்களில் இவ்வகை லிங்கங்கள் தென் மேற்கு மூலையில் காணப் படுகின்றது எனச் சொல்கின்றார்கள். தென்மேற்கு மூலையை "நிருதி" என அழைக்கிறார்கள். இந்த நிருதி தேவனால் இந்த லிங்கங்கள் வழிபடப் பட்டதால் இவை நிருதி லிங்கம் எனவும் அழைக்கப் பட்டு, கோயில்களின் தென் மேற்கு மூலைகளிலும் வைக்கப் படுகின்றன. சிதம்பரம், திருவண்ணாமலை, சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயில், காளஹஸ்தி போன்ற இடங்களில் ஒரு முகத்துடன் கூடிய லிங்கங்கள் காணப்படுவதாயும் சொல்கின்றார்கள். வேதத்தின் சாரமான அக்னி மற்றும் ருத்ரன் இருவரின் இணைப்பே இந்த லிங்க வடிவம் என ஆய்வாளர்கள் சொல்வதாயும் தெரிகின்றது. ஆந்திராவில் உள்ள குடிமல்லம் என்னும் பகுதியிலும் சிவனின் முழுவடிவமும், லிங்கமாய் ஆன வரலாறும் காணப் படுவதாய்ச் சொல்கின்றார்கள். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் தெரிகிறது.

முகலிங்கங்கள் என்று தேடினால் அதிகமாய்க் கிடைக்கவில்லை. ஒரு சில கிடைத்தவற்றைப் போடுகிறேன். தொடருக்கும், படத்துக்கும் சம்மந்தம் இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான். :((

Thursday, May 06, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! லிங்க ஸ்வரூபம்!

பொதுவாக லிங்கங்களுக்கு மூன்று பகுதி உண்டு. அவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் பொதுவாய்க் குறித்தாலும், பஞ்ச பூதங்களில் முக்கியமான பூமி-பிரம்மா, நீர்-விஷ்ணு, அக்னி-சிவன், ஆகிய மூன்றையுமே சுட்டிக் காட்டுகிறது, என ஆன்றோர் கூற்று. இயற்கையிலும், இறை சக்தியே நிரம்பி உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவே இவ்வாறு சொல்கின்றார்கள், இந்த லிங்க வடிவிலே அடிப்பகுதியான பிரம்ம பாகம் பூமியிலே மறைந்து இருக்கும் வண்ணமும், ஆவுடை என்று சொல்லப் படும் நடுப்பகுதியான விஷ்ணு பாகம், அபிஷேகங்களை ஏற்கும் இடமாகவும், பாணமாகிய மேல் பகுதிதான் மேலோங்கி நின்று ஜோதி போலவும் காட்சி அளிக்கின்றது. இந்த லிங்கங்களுக்கு உருவமும் உண்டு, அருவலிங்கம் என வெறும் பாணம் மட்டுமே உள்ள லிங்கங்களும் உண்டு. முகலிங்கங்கள் உருவம், அருவம் இரண்டும் அமையப் பெற்றிருக்கும். அடிப்பகுதியான பிரம்ம பாகமும், ஆவுடையும் இருக்கும், நடுவில் உள்ள பாணப் பகுதியில் முகம் இருக்கும். இப்படிப் பட்ட லிங்கங்கள் நம் நாட்டை விட நேபாளத்திலேயே அதிகம் காணப் படுகின்றது.

தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவண்ணாமலை, போன்ற ஊர்களில் முகலிங்கங்களும், சுசீந்திரம் தாணுமாலயர் கோவிலில் கண், காது, மூக்கு வைத்து அலங்கரிக்கப் பட்ட முகலிங்கமும், காளஹஸ்தி கோயிலிலும் மேற்கூறியவாறு அலங்கரிக்கப் பட்ட லிங்கமும், ஊட்டியிலும் இவ்வாறான லிங்கங்களும் காணப் படுகின்றன. லிங்கங்கள் பலவகைப் பட்டாலும், வழிபாட்டுக்கு உரியவையில் சிறப்பானவை சுயம்புலிங்கங்களே ஆகும். இந்தச் சுயம்பு லிங்கங்கள் தானாக உண்டானதும், கரடுமுரடாகவும் இருக்கும், மற்ற ரேகைகள் எதுவும் இருக்காது என்றும் சொல்கின்றனர். இது தவிர, குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறும் இஷ்டலிங்கங்கள் உண்டு. இவை தனிப்பட்ட வழிபாடுகளிலேயே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. பாமர மக்களுக்கு அருளும் வண்ணம் ஏற்பட்டவையே தேவர்கள், முனிவர்கள், மற்றும் மனிதர்களால் ஸ்தாபிக்கப் பட்ட பரார்த்தலிங்கம். இவையே பெரும்பாலும் கோயில்களில் வழிபாட்டுக்கு என அமைந்துள்ளவை.

அம்பிகை தன் தவங்களின் போது, தன் வழிபாடலுக்கு என ஸ்தாபித்தவை "தேவிக லிங்கம்" என்று சொல்லப் படும். இதிலே தேவர்கள் பூஜித்த லிங்கம், "திவ்யலிங்கம்" அல்லது "தெய்வ லிங்கம்" எனச் சொல்லப் படுகின்றது. இந்திரன் பூஜித்தது இந்திரலிங்கம், வருணன் பூஜித்தது, வருணலிங்கம், வாயு பூஜித்தது வாயுலிங்கம் என வகைப் படுத்தப் படுகின்றது. மனிதனாக ராமன் வாழ்ந்தபோது ஸ்தாபிதம் செய்தது, பின்னர் பூஜித்ததும், இன்றளவும் அனைவரும் வழிபட்டு வருவதும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமியான "மானுட லிங்கம்" ஆகும். முனிவர்களால் பூஜிக்கப் பட்டது "ஆர்ஷிக லிங்கம்" எனவும், அசுரர்களால் பூஜிக்கப் பட்டது, "ராட்சச லிங்கம்" எனவும் சொல்லப் படுகின்றது.

முகலிங்கங்கள் பற்றிய விளக்கத்துக்கு முன்னர் லிங்கம் பற்றிய விளக்கம் சரியாக் கொடுக்கலைனு தோணியதாலே இந்த விளக்கம். முக லிங்கங்கள் பற்றிப் படங்கள் கிடைத்ததும் ஞாயிறு அன்றோ அல்லது திங்கள் அன்றோ பதிவு எழுதுகிறேன்.

Wednesday, May 05, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இப்போக் கொஞ்ச நாட்களா எங்கேயும் பக்திச் சுற்றுலா போக முடியலை. அடுத்து இந்தப் பக்கத்திலே என்ன எழுதறதுனு கொஞ்சம் யோசனை. திருவாரூரே முற்றுப் பெற வில்லை. ஏனென்றால் கோயிலை முழுமையாகப் பார்க்கமுடியலை. சாயந்திரம் வரைக்கும் இருந்து பார்க்கலாம் என்றால் இவர் கீழே விழுந்து அது வேறே வேதனை. ஆகையால் உடனடியாகத் திரும்பிட்டோம். பின்னால் வாய்ப்புக் கிடைத்தால் கமலாம்பிகை அருளினால் திருவாரூர் பற்றிய தொகுப்பை இன்னும் விரிவாக எழுத எண்ணம். சித்தர்கள் பற்றி எழுதச் சொல்லி ஒரு ந்ண்பர் கேட்டிருக்கிறார். இன்னும் சிலரும் அதை ஆமோதித்திருக்கிறார்கள். முதல்லே நான் சித்தர்கள் பற்றி நல்லாப் படிச்சுத் தெரிஞ்சுக்கறேன். அப்புறமா எழுதறேன். ஆகவே இப்போ நாம் அனைவரும் அறிந்த ஒன்றைத் தெரிந்து கொள்வோமா? இவை ஏற்கெனவே ஒரு குழுமத்துக்கு எழுதி அனுப்பிச்சது. அதோட வேறொரு நண்பரின் இணைய தளத்திலும் சில பகுதிகள் வந்திருக்கின்றன. ஆகையால் அங்கே படிச்சவங்க பொறுத்துக்கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஈசனின் வடிவம் அறுபத்து நான்கு என்று சொல்கின்றனர். அவற்றில் சில வடிவங்கள் பற்றித் தெரிந்து கொள்வோமா???
************************************************************************************


அண்டமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமானுக்கு உருவம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சி எல்லாம் இல்லை. இடைவிடாது, எப்போதும் அவன் ஆடிக்கொண்டே இருப்பதாலேயே நம் இயக்கம் நடைபெறுகிறது. அத்தகைய இறைவனுக்கு, அடி,முடி காணுவதும் நம்மால் இயலாத ஒன்று. என்றாலும் இந்த ஈசனை நாம் "சிவன்" என்கிறோம். சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரீகங்கள் இருந்த காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. நாம் வழிபட ஒரு உருவம் யார் தந்தது என்ற ஆராய்ச்சியிலும் புக வில்லை. வடிவம் எப்படி ஏற்பட்டாலும் இன்றைக்கு முழுமுதல் வழிபாட்டில், சிவலிங்க வழிபாடும், நடராஜர் வழிபாடும், சோமாஸ்கந்தர் வழிபாடும் சிறப்பாகப் பேசப் படுகிறது.

இறைவனைக் கண்ணார, மனதாரக் கண்ட ஞானியர்கள் கூற்றுப் படி இறைவனின் வடிவங்களை உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில் உருவம் ஆன கருத்தின் படி பிரம்மா என்னும் நான்முகனும், திருமால் என்னும் காக்கும் கடவுள் ஆன விஷ்ணுவும், ருத்ரன், மகேசன் என்னும் அழித்து அருளும் வடிவங்களும் அடங்கும். அருவம் என்பது வடிவே இல்லாதது. இதில் அடங்குபவை சிவம், சக்தி,நாதம், பிந்து ஆகியவை. இந்த நான்கையும் வைத்து இறைவனை யோக முறையில் பூசித்தவர்களே சித்தர்கள் எனப் படுவார்கள். என்றாலும் சாதாரண மானிடர் ஆன நமக்கு ஒரு உருவம் வேண்டும் இல்லையா?
அப்படி உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் இறைவனைப் பூசிக்கும் ஒரு வடிவமே சிவலிங்க வழிபாடு. இந்தச் சிவலிங்க வழிபாட்டிலே முக லிங்கங்களும் உண்டு. சில சிவன் கோயில்களிலே லிங்கத்தில் முகம் இருக்கும். சிலவற்றில் முகம் இருக்காது. இந்த முகலிங்கங்கள், மற்றும் லிங்கங்கள் பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்.

Saturday, April 24, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம், திருவாரூரின் அவலம்!


கமலாம்பிகை சந்நிதிக்குப் போகும் முன்னரே, அங்கே தனிக்கோயிலாக இனொரு அம்மன் சந்நிதி உள்ளது. நீலோத்பலாம்பிகை என்னும் அல்லியங்கோதை என்னும் திருநாமம் கொண்ட அம்மன் அருகிலேயே தோழிப் பெண் கந்தனைத் தூக்கிக்கொண்டு. பிள்ளையை அருமையாய் அம்மை தொட்டுக்கொண்டிருக்கும் வண்ணம் காட்சி அளிக்கிறாள். இங்கேயே பள்ளியறையும் என்பது குறிப்பிடத் தக்கது. இல்லைனா இந்த சந்நிதியைப் பார்த்திருக்கத் தவறி இருக்கும். அவ்வளவு அவசரம். கோயில் ஊழியர்கள் சீக்கிரம், சீக்கிரம் என அவசரப் படுத்து கமலாம்பிகை சந்நிதிக்கு விரைந்தோம். பெரிய கோயிலின் வெளிச்சுற்றில் கமலாம்பிகை தனியாகக் கோயில் கொண்டுள்ளாள்.

தனிக்கோயில் என்றால் தனிதான். தனியான மதில் சுவரைத் தாண்டி உள்ளே சென்றால் தனிக் கொடிமரம், பலிபீடம், நந்தி. வடகிழக்குத் திசையை நோக்கி அமைந்துள்ளதாய்ச் சொல்கின்றனர். எனக்கு இந்தத் திசைக்குழப்பம் அதிகம் உண்டு என்பதால் அதைச் சரியாய்க் கவனிக்கவில்லை. நம் உடலின் மூலாதாரமே திருவாரூர் எனச் சொல்கின்றனர். அந்தத் திருவாரூர்க் கோயிலுலும் கமலாம்பிகையின் கோயில் அமைப்பு சந்திரயோகம் என்று திருமந்திரம் சொல்லும் யோகதத்துவங்களின் அமைப்பில் உள்ளதாய்க் கூறுகின்றனர். (அம்பாள் உபாசகர்கள் தான் இது பத்தி விளக்கணும், விளக்கலாம் என்ற விதி இருந்தால்) நம்ம நண்பர் அங்கே உச்சிஷ்ட கணபதி என்ற பெயரில் இருக்கார். அவர் கிட்டே அம்மாவைப் பார்க்க அநுமதி வாங்கிண்டு உள்ளே போனால், அநிந்திதை, கமலினி(ஆமாங்க சுந்தரரின் இரு மனைவியரே தான்) அவங்க துவாரபாலகிகளாய் இருக்கிறாங்களாம். இந்தக் கோயிலில் மட்டுமா? எல்லாக் கோயிலிலுமா? தெரியலை! யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் வலக்கையில் மலரோடு, இடக்கையை இடுப்பில் வைத்தவண்ணம், மேல் கரங்கள் அக்ஷமாலை, பாசம் ஏந்திய வண்ணம் காக்ஷி அளிக்க, ஒரு காலை மடக்கி, மற்றொரு காலைத் தொங்கவிட்டவண்ணம் காக்ஷி கொடுக்கிறாள் கமலாம்பிகை. முக்கியமான, முதன்மையான சக்தி பீடம் என்றும் ஞானசக்தி பீடம் எனவும் சொல்கின்றனர்.

பிராஹாரத்தில் சங்கரநாராயணி, ராஜராஜேஸ்வரி ஆகியோர் காணப்படுகின்றனர். பிராஹாரம் சுற்றி வரும்போது மேல் திசையில் காஸ்யபலிங்கர் சந்நிதிக்கு அருகே அக்ஷரபீடம். இந்த அக்ஷரபீடத்தைப் பார்த்தால் பிண்டி போன்ற அமைப்போடு உருவமற்று இருப்பதால் சட்டென யார் கண்ணையும், கருத்தையும் கவராத வண்ணம் இருக்கிறது. நாங்க சொல்லியே சிலர் தெரிந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. திருவாசி இருப்பதால் ஓரளவு இது முக்கியமான ஒன்று எனப் புரிந்து கொள்ளலாம். உற்றுக் கவனித்துத் தெரிந்து கொள்ளவேண்டும். நல்லவேளையா இங்கே வந்த குருக்கள் தீப ஆராதனை காட்டினதில் பீடத்தின் எழுத்துக்கள் கொஞ்சம் புரிய வந்தன. கீழே தாமரை போன்ற அமைப்பில் செதுக்கப் பட்டு, சுற்றித் திருவாசி. அதிலே எழுத்துக்கள். கிரந்தம் எனத் தோன்றுகிறது. ஓரளவு தான் கிட்டே போகமுடியும். உள்ளே போகமுடியாது என்பதால் பின்னாலும் எழுத்துக்கள் இருந்தால் அது தெரியவில்லை. நம் உடலின் ஆறு ஆதாரங்களும் இந்த 51 அக்ஷரங்களில் அடங்குவதாகவும், இதையே யோக சாதன அக்ஷரபீடம் என்றும் சொல்கின்றனர். வெகு நுணுக்கமான தத்துவங்கள் அடங்கிய ஒன்று. என் சிறு மூளைக்குள் ஓரளவு எழுத்துக்களும், அதன் முக்கியத்துவமும் மட்டுமே ஏறியது. இங்கேயே கொஞ்சம் தள்ளி சரஸ்வதியும் குடி கொண்டுள்ளாள்.

ஞானத்தைக் கமலாம்பிகையும், மொழி வல்லமையை அக்ஷரபீடமும், கல்வியை சரஸ்வதியும் தருவதாய் ஐதீகம். இப்படி ஒரே கோயிலிலேயே இவை அனைத்தும் அமைந்ததாய் மற்ற எதக் கோயிலிலும் காணமுடியாது என்று சொல்கின்றனர். நல்லவேளையாய் இங்கே கொஞ்சம் பார்க்க முடிந்தது. என்றாலும் கோயிலின் சேவகர் கையில் சாவியை வைத்துக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தது மனதில் தைத்துக்கொண்டிருந்ததால், அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல் திருவாரூர்ப் பயணம் அமைந்தது.

Thursday, April 22, 2010

நடந்தாய் வாழி காவேரி, காவேரி ஓரம், திருவாரூரின் அவலம்!

திருவாரூரில் தங்கி இருந்து அனைத்தையும் பார்க்கக் குறைந்தது இரண்டு நாட்களாவது வேண்டும். நாங்க அன்னிக்கு மட்டும் தங்கணும்னு தான் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால் அன்னிக்குக் காலம்பரக் கிளம்பினதுமே எட்டுக்குடியில் அவர் விழுந்ததும், எல்லா நிகழ்ச்சி நிரலும் மாறிவிட்டது. சீக்கிரமாய்க் கும்பகோணம் போயிட்டு ஊரைப் பார்க்கப் போகலாம் என்று தோன்றிவிட்டது. என்றாலும் வீதிவிடங்கர் வந்த வரலாற்றைத் தெரிந்து கொண்டோம். வன்மீகநாதர் என்னும் புற்றிடங்கொண்டாரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டாமா? அவர் வரலாறு:

புண்யபூமியான குருக்ஷேத்திரம். மாபெரும் யாகம் ஒன்று நடக்க ஏற்பாடு ஆகிறது. யாகத்தைச் செய்யப் போகிறவர்களும் சாமானியர்கள் அல்ல, தலைமை ஏற்பவரும் சாதாரணமானவர் அல்ல. யாகத்தைச் செய்யப் போகிறவர்கள் தேவாதிதேவர்கள். தலைமை ஏற்பவரோ சாட்சாத் மஹாவிஷ்ணுவே. பொருட்கள் சேகரிக்கப் பட்டன. யாகத்தின் மூலம் கிடைக்கப் போகும் பெருமையும், புகழும் அனைவருக்கும் சமம் என முன் கூட்டியே தீர்மானிக்கப் பட்டது. ஆனாலும் யாகம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையில் ஓய்வு எடுக்காமல் இருப்பவரே மிகச் சிறந்தவர் எனச் சொல்லவேண்டும் என்பதற்கும் ஒத்துக்கொண்டனர். அனைவரும் யாகத்தின் தலைமைப் பதவியான யக்ஞ-மான் பதவிக்கு (இன்றைய யஜமான் இதிலிருந்து வந்ததே) திருமாலே ஏற்றவர் என முடிவு செய்தனர்.

யாகத்தை இறுதிவரையிலும் ஓய்வே இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார் திருமால். எனினும் அவர் மனதின் ஓரத்தில் கொஞ்சம் செருக்கும் இருந்தது. தேவர்களை விட்டு விலக நினைத்தார். யாகத்தின் குண்டத்தில் இருந்து பலவகையான அஸ்திரங்கள் வந்தன. வில் ஒன்றும் வந்தது. வில் திருமாலின் இடக்கரத்தைப்போய் அடைய, அஸ்திரங்கள் அவர் வலக்கரத்துக்குச் சென்றது. தேவர்களை இதன் மூலம் அடக்க நினைத்தார் திருமால். மெல்ல மெல்ல அவர்களை விட்டு விலகி இந்தத் தலத்தை அடைந்தார். பராசக்திபுரம் என்ற பெயரால் அப்போது அழைக்கப் பட்டு வந்த இந்தத் திருத்தலத்திற்கு வந்த திருமால் சோர்வு மிகுதியால் வில்லின் நுனியைத் தன் தாடையில் அழுத்தியவண்ணம் தூங்கிவிட்டார். அப்போது தேவர்கள் திருமாலிடமிருந்து தப்பவேண்டி குலகுருவான பிரஹஸ்பதியின் ஆலோசனையின் பேரில் செல்லுருவில் பூமியைத் துளைக்க ஆரம்பித்தனர். துளைக்கும்போது வில்லின் கீழ்க்கயிறு அறுந்து போக வில்லின் நாண் அறுந்து திருமாலின் தலை துண்டானது. ஏழு உலகுக்கும் சென்ற அந்தத் தலை திரும்பத் திருமால் படுத்திருக்கும் இடமே வந்து விழுந்தது. பயந்து போன தேவர்கள் ஈசனைத் துதிக்க, அவர்கள் துளைத்த பூமியிலிருந்து பெரும் சப்தத்தோடு சிவலிங்க ரூபமாக ஈசன் வெளியே வந்தார்.

அவரை அனைவரும் அபயம் கேட்க அஸ்வினிதேவர்கள் உதவியுடன் திருமாலின் தலையை உடலோடு பொருத்துமாறு சொல்ல, அவ்விதமே திருமாலின் தலை பொருத்தப் பட்டது. தனக்குத் தலை வழங்கிய ஈசனைத் துதித்தாராம் திருமால். பின்னர் மது, கைடபரை வதம் செய்த திருமாலைத் திருமணம் புரியவேண்டி இந்த மூலட்டானேஸ்வரரைத் துதித்துத் தவம் இருந்தாளாம் ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி. அவள் தவம் இருந்ததாலேயே இந்த ஊர்க் குளம் கமலாலயம் எனப் பெயர் பெற்றது என்று சொல்வார்கள். மேலும் இந்தத் தலத்தில் தான் இந்திரனின் ஆலோசனைப்படி தசரதன் வன்மீகநாதர் என்னும் புற்றிடம் கொண்டாரைத் தரிசித்துச் சென்றானாம். அதன் பின்னரே புத்ரகாமேஷ்டியாகம் செய்து ராமர் முதலான நாலு புத்திரர்களையும் பெற்றான் என்றும் ஐதீகம்.


கமலாம்பாள் தொடர்கிறாள்.

Monday, April 19, 2010

நடந்தாய் வாழி காவேரி! திருவாரூரின் அவலம்!


மதிய நேரத்து வழிபாடு நடந்து கொண்டிருந்தது. முதலில் நாங்கள் வன்மீக நாதர் என்னும் புற்றிடங்கொண்ட நாயகரைத் தரிசிக்கச் சென்றோம். அபிஷேஹங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆகவே அங்கே திரை போட்டிருந்தது. கமலாம்பிகையைப் பார்ப்பதென்றால் அதுக்குத் தனியாகப் போகணும். கொஞ்சம் நேரம் ஆகும். ஆகவே கோயிலிலேயே குருக்கள் வீதிவிடங்கரையும் தியாகராஜரையும் முதலில் பார்க்குமாறு சொல்லவே அங்கே சென்றோம். பூவம்பலம் என்னும் பெயருக்கொப்ப பூக்களால் மிக மிக அழகாய் அலங்கரிக்கப் பட்டிருந்தது. நடுவில் இருந்த குமாரன் பூக்களால் மறைக்கப் பட்டிருந்தான். வெளியே தெரியவில்லை. நாதமும், பிந்துவும் சேர்ந்து பிறந்த கலை வெளியே உடனே தெரியாதன்றோ? தியாகராஜரைப் பார்க்கப் பார்க்க மனம் பரவசம் அடைந்தது. இன்னதென்று புரியாத ஓர் உணர்வு. அவருக்குப் பின்னால் இருந்த ஒரு சிறு மேடையில் ஒரு வெள்ளிப் பெட்டி இருந்தது. அலங்காரங்கள் செய்து பூக்கள் சார்த்தி வைக்கப் பட்டிருந்த அந்தப் பெட்டியில் தான் வீதிவிடங்கர் இருப்பதாய்ச் சொன்னார்கள். வன்மீக நாதருக்கு அபிஷேஹம் முடிந்ததும், வீதி விடங்கருக்கு அபிஷேஹம் நடக்கும் என்றும் இருந்து பார்த்துவிட்டுப் போங்கள் என்றும் சொன்னார்கள்.

கூட்டமும் அதிகம் இல்லை. நானும் முன்னால் போய் நின்று கொண்டிருந்தேன். திரும்ப மனம் வரவில்லை. பத்துப் பதினைந்து பேர் உள்ளூர் மக்கள் இருந்தனர். ஒருத்தர் வீதி விடங்கர் பத்தின கதையைச் சொல்ல ஆரம்பிக்க, கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன். வன்மீக நாதருக்கு அபிஷேக ஆராதிகள் முடிந்து இங்கே ஆரம்பம் ஆயிற்று. தில்லையில் ரத்தின சபாபதிக்குச் செய்வது போல் விஸ்தாரமாய் இருக்கும் என நம்பிக்கொண்டிருந்தேன். அங்கே எல்லாவித அபிஷேஹங்களும் நடக்கும். ஆண்டவன் ஆடிக்கொண்டிருப்பதால் அதற்கு இடையூறு நேராவண்ணம் மனதிலேயே மந்திரங்கள் ஜபிப்பார்கள் தில்லையிலும். அது போல் இங்கேயும் அஜபா நடனம் ஆயிற்றே. மனதிலேயே மந்திரம் ஜபித்தாலும் அபிஷேஹம் நடைபெற்றது எனக்கு அவ்வளவாய் மனதுக்குத் திருப்தியைத் தரவில்லை. என்னமோ அவசரம், அவசரமாய்ப் பாலை ஊற்றிவிட்டுப் பின்னர் தண்ணீரையும் ஊற்றினார்கள். பின்னர் ஒரு அலங்காரம் இல்லை, எதுவும் இல்லை, வீதிவிடங்கரைத் துடைத்துப் பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டார்கள். தீபாராதனை எடுத்தார்களா? சரியாய்த் தெரியவில்லை. ஒரே ஏமாற்றமாய் இருந்தது.

சரி அதுதான் போகட்டும் என்றால் இங்கே தேவாரமோ, திருவாசகமோ எதுவும் யாராலும் பாடப்படவில்லை. எத்தனை பதிகங்கள் இந்தக் கோயிலுக்கு என்றே? நாயன்மார்கள் அதிகப் பதிகங்கள் பாடியதே இந்தக் கோயிலின் மீது தான் என முதலிலேயே அதற்காகவே குறிப்பிட்டேன். ஆனால் யாருமே வாயைத் திறக்கவில்லை. எந்த ஓதுவாரும் கோயிலுக்கென இல்லையா எனக் கேட்க நினைத்தேன். நம்ம ம.பா. சரி, சரி, வா, போகலாம்னு கூப்பிட்டுக் கொண்டு, கமலாம்பிகை சந்நிதி மூடிடுவாங்களாம், அப்புறம் பார்க்க முடியாதுனு இழுத்துக்கொண்டு கிளம்பினார். அரை மனசாய் எந்த விபரமும் யாரிடமும் கேட்கமுடியலையேனு வருத்தத்தோடு கமலாம்பிகையைத் தரிசிக்கச் சென்றோம். வழியிலேயே ஒரு குருக்கள் நடை சார்த்தியாச்சு எனச் சொல்ல என்னடா இதுனு திகைத்தோம். ஆனாலும் கூட வந்த ஒரு சில உள்ளூர் மக்கள் அவங்களோடு வரச் சொல்லவே நாங்களும் பின்னால் நடந்தோம். மற்ற வர்ணனைகள், விளக்கங்கள் தொடரும்.