எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, June 07, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, நடராஜர்


எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.


உமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம். காத்தல் தொழிலை நிலைத்திருக்கச் செய்யும் தாண்டவமாய்க் கருதுவார்கள்.

ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.


காளிகா தாண்டவம்: இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. ஐந்தொழில்களையும் குறிக்கும் நடனம் காளிகா தாண்டவம் எனப் படுகிறது. இது திருநெல்வேலியில் காணப்படுகிறது. திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சிலரால் சொல்லப் படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப் படுகிறது.



கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.



திரிபுர தாண்டவம்: முப்புரங்களையும் தன்னுடைய "அட்டஹாசம்" எனப்படும் சிரிப்பாலும் நெற்றிக்கண்ணாலும் அழித்த இறைவன் ஆடிய ஆட்டமே திரிபுர தாண்டவம் எனப்படுகிறது. 16 கைகளுடன் காணப் படும் இறைவனின் இடப்பக்கம் கெளரியும், வலப்பக்கம் ஸ்கந்தனும் காணப்படுகிறார்கள். திருக்குற்றாலத்துச் சித்திர சபையில் காணப்படுகிறது இந்தத் திரிபுர தாண்டவக்கோலம். ஸ்கந்தனையும், உமை அம்மையும் பயந்து விலகும் கோலத்தில் சில சிற்பங்களையும், ஓவியங்களையும் காணலாம். இது திருக்குற்றாலச் சித்திர சபையில் பிரம்மாவால் வரையப் பட்டதாக ஐதீகம். ஆனால் இப்போ இந்தச் சித்திர சபை நடராஜரின் நிலையை நினைத்தால் ரத்தக் கண்ணீர் வரும். அவ்வளவு மோசமான பராமரிப்பில் இருக்கிறார் சித்திர சபை நடராஜர்.

Tuesday, June 01, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜர்!

சந்தியா தாண்டவம் என்பது மாலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆடப் பட்டது. பொதுவாக சிவனின் தாண்டவங்கள் அனைத்துமே மாலை நேரத்தில் அமைந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் இது கைலை மலையில் ஆல மரத்தின் அடியில் ஆடப் பட்டதாய்க் கூறப் படுகிறது. ஆனந்தத் தாண்டவத்தில் இருக்கும் "அபஸ்மார புருஷம்" (தன்னை மறந்த நிலை?)என்பது இதில் இருக்காது. மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடும் ஆட்டம் "சந்தியா தாண்டவம்" என்று சொல்லப் படுகிறது. மற்ற ஊர்களில் எல்லாம் இடது பதம் தூக்கி ஆடும் நடராஜர் மதுரை வெள்ளியம்பலத்தில் மட்டும் வலது பதம் தூக்கி ஆடுவார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அன்னை மீனாக்ஷியைத் திருமணம் செய்து கொண்ட சுந்தரேஸ்வரர், திருமணத்திற்கு வந்திருந்த ரிஷி, முனிவர்களை விருந்துண்ண அழைக்க, வியாக்ரபாதரும், பரஞ்சோதியும் தாங்கள் இருவரும் தினமும் தில்லையம்பலத்து ஆடிய ஈசனின் ஆட்டத்தைக் கண்ட பின்னரே உணவருந்தும் வழக்கம் எனச் சொல்ல, புன்னகை புரிந்த ஈசன் மதுரை மாநகரிலே ஒரு வெள்ளியம்பலத்தை உருவாக்கி அங்கேயே திருநடனம் புரிந்தார். அந்த வடிவிலேயே அர்ச்சாவதாரமாக இருந்து மீனாக்ஷி அம்மன் கோயிலின் வெள்ளியம்பலத்தில் ஈசன் அருள் புரிந்து வந்த ஒரு சமயத்தில், விக்கிரம பாண்டியனுக்குப் பின்னர் ராஜசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவனைப் பற்றித்திருவிளையாடல் புராணம் கூறுவதாவது:

கண்ணகன் புவி இராச சேகரன் பொதுக் கடிந்து செங்கோல் ஓச்சி
வண்ண வெண் குடை நிழற்றுவான் ஆனந்த வடிவமாய தனி மன்றுள்
அண்ணால் ஆடிய திரு நடனத்து அன்பினால் ஆடல் நூல் ஒழித்து ஏனை
எண்ணி மூ இரு பத்து முக்கலையும் கற்று இறை முறை செய்யும் நாளில்.

ராஜசேகர பாண்டியன் ஆடல்கலையைத் தவிர மற்ற கலைகளில் நன்கு தேர்ந்தவன். அவன் அவைக்குச் சோழ நாட்டில் இருந்து வந்த ஓர் புலவன், அவனுக்கு பரதம் தெரியாது எனக் கண்டு ஆச்சரியமடைந்து, அப்போது பூம்புகாரில் ஆண்டு கொண்டிருந்த கரிகால் பெருவளத்தானுக்குத் தெரியாததே இல்லை எனப் பெருமிதமாய்ச் சொன்னான்.

பொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து அலர் வேம்பின்
கன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல் கரிகால் எம்
மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது உனக்கு ஒன்று
தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான்.

இதைக் கேட்ட ராஜசேகர பாண்டியன் மனம் வெதும்பி பரதமும் கற்றுத் தேர்ந்திட வேண்டும் என எண்ணி பரதம் பயிலத்தொடங்கினான்.

ஆடல் நூல் வரம்பு கண்டவர் ஆகி அவ்வழி ஆடாலும் பயின்ற
நாடக நடை தேர் புலவரைத்துருவி நண்ணிய அவர்க்கு எலாம் மகிழ்ச்சி
வீடரும் சிறப்பால் அறுவையும் பூணும் வெறுக்கையும் வெறுத்திடக் கொடுத்துப்
பாடல் வண்டாற்றும் தாரினான் பரதப் பனுவலும் கசடு அறப் பயில்வான்.

உரைத்த இக் கூத்துக் கற்கும் போது தன் உடன் பிறப்பில் சால
வருத்த நோய் எய்தி இந்த வருத்த நான் மறையும் தேறா
அருத்தமாய் அறிவாய் வெள்ளி அம்பலத்து ஆடி நின்ற
நிருத்தனார் தமக்கும் உண்டே என்பது நினைவில் கொண்டான்.

இந்தக் கூத்துக் கற்கும்போது தன் உடலின் அனைத்து அங்கங்களுக்கும் ஏற்படும் நோவை உணர்ந்த ராஜசேகர பாண்டியன், "ஆஹா, இதைக் கற்கும் எனக்கு இவ்வளவு நோவு ஏற்பட்டதெனில், இடையறாது ஆடும் ஈசனின் கால்களும் இதை விட அதிகமாய் நோவு எடுக்குமே" என வருந்தினான். ஈசனின் நிலையை எண்ணி, எண்ணித் துயரம் அதிகம் கொண்டான் ராஜசேகர பாண்டியன். இதற்கு என்ன செய்யலாம் என யோசித்த மன்னன் அன்றிரவு வெள்ளியம்பலம் சென்றான். தன்னிரு கைகளையும் சிரமேல் கூப்பிக்கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருக ஈச்னை வேண்டினான். ஆடிய பாதத்தை ஊன்றி, வலக்காலைத் தூக்கி ஆடும்படியும் அவ்வாறு ஈசன் கால் மாறி ஆடவில்லை எனில் தன் சுரிகை என்னும் வாளை நிலத்தில் ஊன்றி அதன் மேல் வீழ்ந்து தன் உயிரை விடப் போவதாயும் ஈசனிடம் கூறிவிட்டுப் பாண்டியன் வாள் மேல் வீழ்ந்து உயிரை விடத் தயாரானான்.

விண்டக மலர்த்தாள் ஏத்தி வெள்ளி அம் பலத்துள் அன்பர்
தொண்டகம் மலர நின்ற சோதி மெய்ஞ் ஞானக் கூத்தைக்
கண்டக மகிழ்ந்து தாழ்ந்து கண்புனல் சேரச் செம்கை
முண்டக முடிமேல் ஏற்றி முகிழ்த்து நின்று இதனை வேண்டும்.

1480. நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா.

ஆஹா, என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்? தூக்கிய திருவடியை ஊன்றி, ஊன்றிய திருவடியைத் தூக்கிக்கொண்டு கால்மாற்றி ஆடத்தொடங்கினான் கூத்தபிரான்.

நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே.

பெரியாய் சரணம் சிறியாய் சரணம்
கரி ஆகிய அம் கணனே சரணம்
அரியாய் எளியாய் அடி மாறி நடம்
புரிவாய் சரணம் புனிதா சரணம்.

என்று இப்படியே இந்தத் திருநடம் யாரும் காண
நின்று அருள் செய்ய வேண்டும் நிருமலமான வெள்ளி
மன்றவ அடியேன் வெண்டும் வரம் இது என்று தாழ்ந்தான்
அன்று தொட்டு இன்று எம் கோன் அந் நட நிலையாய் நின்றான்.

அதைக்கண்ட ராஜசேகரன் இந்தத் திருநடனம் அனைவரும் காணும் வண்ணம் இப்படியே நின்று அருள் செய்யவேண்டும் என வேண்ட அன்று தொட்டு இன்று வரை வலக்காலைத் தூக்கி ஆடிய நிலையிலேயே ஈசன் காட்சி தருகிறார் மதுரை வெள்ளியம்பலத்தில்.




டிஸ்கி: அந்த அந்த நாட்டியக் கோலத்துக்கு ஏற்ற படங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. படம் போட ஆரம்பிச்ச பின்னர் நிறுத்தவும் முடியலை. தவறான நாட்டிய முத்திரைகளுடன் கூடிய படங்களுக்கு மன்னிக்கவும்.

Sunday, May 30, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! நடராஜா, நடராஜா

ஆனந்த தாண்டவம் என்பது சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்றும், தன்னுடைய பக்தர்களான பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் மற்ற பக்தர்களுக்காகவும் வேண்டி இறைவனால் ஆடப்பட்டது. இதைத் தேவாதி தேவர்களும் கண்டார்கள். இந்த நாட்டியத்தைக் காணத் தேவர்கள் மட்டுமில்லாமல் அந்த ஸ்ரீமந்நாராயணனே தன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, கோவிந்த ராஜனாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு தினந்தோறும் கண்டு களிக்கிறான் என்றால் அந்த ஆட்டத்தை என்னவென்று சொல்லுவது?

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொன்னிலே சிறந்தது அம்பொன் எனக் கூறுகின்றனர். அத்தகைய அம்பொன்னினால் ஆன தில்லைப் பதியின் ஐந்து ஆவரணங்கள் எனப்படும் ஐந்து சபைகளிலும் முதல் ஆவரணமான பொன்னம்பலத்திலே ஐந்தொழிலையும் செய்யும் வண்ணம் சக்தியாகவும் நின்று, பேரானந்தப் பெருவெளியில் நடனம் ஆடுகின்றான் எனத் திருமூலர் குறிப்பிடுகிறார்.


ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.

அந்த ஈசன் ஆடும்போது அவன் மட்டுமா ஆடுகிறான்? அவனோடு சேர்ந்து நாம் அனைவரும் அல்லவோ அவன் ஆட்டி வைக்கிறபடி ஆடுகின்றோம்? ஆதி, அந்தங்களைக் கடந்து செய்யும் இந்த ஆட்டம் ஓங்காரமான பிரணவ நாதமோடு ஆடப் படுகிறதன்றோ? என்பது திருமூலர் வாக்கு.


அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே

தில்லைச் சிற்றம்பலத்திலே ஓயாது ஆடும் கூத்தன் ஆடும் ஆட்டத்தின் போது அவனுடைய இரு திருவடிகளில் இருந்து எழும் சிலம்பின் ஓசையானது நாதமாகவும், விந்தாகவும் மாறி நிற்க, அவற்றினின்று தோன்றும் ஐந்து தத்துவங்களையும் உயிர்களுக்குப் பொருத்தி அவற்றிற்கு அறிவைத் தருகிறான் ஈசன். ஐந்து தத்துவங்களாகத் திருமூலர் குறிப்பிடுவது:

அபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை ஆகியன வாகும்.

Thursday, May 27, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜா, நடராஜா!


இந்த உலகும் சரி, பஞ்ச பூதங்களும் சரி, சதா காலமும் ஆடிக் கொண்டே இருக்கிறது. பாடிக் கொண்டே இருக்கிறது. இந்த மண்ணில் இருந்தே அனைத்து வகைச் செடி, கொடிகள், மரங்கள், நதிகள் தோன்றி இருக்கின்றன. இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அசைவுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. பூமிக்குள் இருந்து கிடைக்கும் நவரத்தினங்கள் ஒளி வீசிப் பிரகாசிக்கின்றன என்றால், மரங்கள் இலைகளை ஆட்டி அசைக்கின்றது, சர, சர வென்ற சப்தத்துடனேயே. செடி, கொடிகளும் அவ்வாறே தம் இலைகளை ஆட்டுகின்றன. அதே போல் நதிகளும் அலைகளுடனேயே ஓடுகின்றது. சுழித்துக் கொண்டு ஓடுகின்றது. பிரவாகம் எடுத்துப் பேரொலி கொடுத்துக் கொண்டு ஓடுகின்றது. அருவியாக ஓசையோடு கொட்டுகின்றது.

விண்ணிலோ என்றால் இடி, இடிக்கின்றது, மின்னல் மின்னுகின்றது. மழை கொட்டுகின்றது. இப்படி அனைத்திலும் ஓர் அசைவு ஏற்பட்டு அசைவுகளே இல்லாத உலகே இல்லை எனும்படி இருக்கின்றது. காற்று தென்றலாய் வருடுகின்றது, புயலாய் வீசுகின்றது. அக்னியோ ஊழித் தீ போல் எரிகின்றது, அல்லது சிறு நெருப்பாகக் கண கண வெனப் பிரகாசிக்கின்றது. பஞ்ச பூதங்களும் நடனம் ஆடுகின்றன. அசைவின்றி எதுவும் இல்லை. அறிவியலில் அணு கூட அசைவதாகவே சொல்கின்றனர். இந்த மாபெரும் அறிவியல் தத்துவத்தின் வடிவமே நடராஜர் ஆவார்.

இந்த நடராஜர் ஆடிய ஏழுவகைத் தாண்டவங்கள் பற்றியும், அவற்றில் முதன்மையாக விளங்கும் நடராஜ அமைப்பைப் பற்றியும் இனி காண்போம். இப்போது நடராஜரின் நாட்டியத்தைப் பற்றிச் சற்று பார்ப்போம். இந்த உலகம் இயங்குவதற்கே காரணம் நடராஜர் தான். ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், புல், பூண்டு, செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள்,குன்றுகள், தடாகங்கள்,மிருகங்கள், மனிதர்கள், பூக்கள், காய்கள், பழங்கள், பறவைகள், பறக்கின்றன, ஊர்கின்றன இவற்றின் அசைவுகள், வண்ணச் சேர்க்கை எல்லாவற்றையுமே இயற்கை என்று சொல்லிவிட்டுப் போகலாம்தான். ஆனால் இயற்கை இந்த வண்ணக்கலவையைக் கொண்டு வந்தது எப்படி? பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது? அனைத்துக்கும் காரணம் இந்த இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் ஆட்டம் தான். ஆனந்த நடராஜன், ஆனந்த தாண்டவம் ஆடும் வேளையில், வசந்தம் வந்து மெல்லக் கதவைத் தட்டுகிறது, பூக்கள் மலர்கின்றன, வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. புள்ளினங்கள் ஆர்க்கின்றன, மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. அவனின் தாண்டவம் ருத்ர தாண்டவம் என்றால் அதற்குத் தகுந்தாற்போல் புயல் அடிக்கிறது, பெருமழை பொழிகிறது, இடி இடிக்கின்றது, மின்னல் கண்ணைப் பறிக்கிறது, கோபம் எல்லை மீறினால் சுனாமியும் வந்து விடுகிறது. விஞ்ஞான பூர்வமாக பூகம்பம் ஏற்படுவதால் நிகழும் நிகழ்வுகள் இவை என்று சொன்னாலும், இந்த நிகழ்வுகள் ஏற்பட்க் காரணம் என்ன?

எல்லை அற்றப் பரம்பொருளின் இடைவிடாத ஆட்டத்தை"சதாதாண்டவம்" என்று சொல்கின்றனர். அதனாலேயே அந்த ஆடுபவனுக்கும் "சபாபதி" "சபாநாயகன்" "நடராஜராஜா" என்றெல்லாம பெயர்கள் உண்டு. இதை "நடாந்த தாண்டவம்" எனவும் சொல்கின்றனர். முடிவில்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும் ஆட்டம் என அர்த்தம் இதற்கு. சிவனின் நாட்டியக் கோலங்கள் பலவகைப் பட்டது. அதில் இந்த ஆனந்தத் தாண்டவம் முதல் வகையாக்வும், சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாகவும் உள்ளது.

பரத முனிவர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தின் படி சிவனின் நாட்டிய வகைகள் 7 முக்கியமான பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்லது. அவை :

1.ஆனந்த தாண்டவம் - சிதம்பரம் , பொன்னம்பலம்
2.சந்தியா தாண்டவம் - மதுரை, வெள்ளி அம்பலம்
3.உமா தாண்டவம் -
4.கெளரி தாண்டவம் - மயூர நாதர் கோவில், மாயூரம், திருப்பத்தூர்,
5.காளிகா தாண்டவம் - ரத்தின சபை - திருவாலங்காடு
6.திரிபுர தாண்டவம் - சித்திர சபை - திருக்குற்றாலம்
7.ஊர்த்துவ தாண்டவம்- சிதம்பரம், திருவாலங்காடு, காஞ்சி, திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராமங்கலம்.

இது தவிர, பிரளய காலத்தில் ஆடப் படும் சம்ஹார தாண்டவமும் சொல்லப் படுகிறது. முடிந்த வரை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம், சதாசிவ மூர்த்தியின் படம் திரு நடராஜ தீக்ஷிதர் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் படத்தையும் இங்கே போடுகிறேன்.

Wednesday, May 26, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சோமாஸ்கந்தர்!

அடுத்து நாம் காணப் போவது சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும். உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் காட்சி அளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி என அழைக்கப் படுகின்றது. இந்தத் திருமேனியைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு எனக் கூறப் படுகின்றது. இறைவன் ஒரு இனிய அன்பான கணவனாய், பாசமிக்க தந்தையாய்க் காட்சி அளிக்கும் இந்த மூர்த்தம் திருவாரூரில் மிகச் சிறப்பு வாய்ந்து விளங்குகின்றது. சச்சிதானந்தம் ஆன இறைவனை சத்= இறைவன், சித்=இறைவி என்றும் இருவரும் சேர்ந்தே ஆனந்தம்=கந்தன் என்றும் விளங்குவதாயும் சொல்லுவார்கள். உண்மையான இறைவனும், நன்மையான இறைவியும் சேர்ந்து படைத்த அழகே வடிவான கந்தன் எனவும் சொல்லலாம்.

நமது பாரதத்தின் திரிவேணி சங்கமத்தில் இணையும் வெண்மை நிறக் கங்கையைப் போல் உடல் முழுதும் அணிந்த வெண்ணிறத் திருநீறோடு இறைவனும், கருநிஆஅ யமுனை போன்ற உமை அம்மையும், சிவந்த நிற சரஸ்வதி போன்ற செக்கச் சிவந்த சிவகுமாரன் ஆன ஸ்கந்தனும் சேர்ந்தே சோமாஸ்கந்த மூர்த்தி ஆனார்கள் என்பது வழக்கு. பொதுவாகக் கர்ப்பகிரகங்களின் வலப்பக்கங்களில் காணப் படும் சோமாஸ்கந்த விக்ரகம் பல்லவர் காலத்தில் பிரபலம் ஆகி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் காலங்களில் கருவறைக்குப் பின்புறம் கருவறைச் சுவரில் இந்த மூர்த்தம் வைக்கப் பட்டு வழிபட்டு வந்ததாயும் தெரிய வருகின்றது.

ஈசன் அமர்ந்த திருக்கோலத்தில் இடக்காலை மடித்துக் கொண்டும், வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டும், புலித் தோலோ அல்லது பட்டாடையோ அணிந்து கொண்டும் இருப்பார். நான்கு திருக்கரங்களில் பின்னால் உள்ள இரு கரங்களிலும் முறையே மானும், மழுவும் இருக்கும். முன்னால் உள்ள இருகரங்களும் முறையே அபய முத்திரையும், வரத முத்திரையும் காட்டிக் கொண்டிருக்கும். அம்பிகை நேர்மாறாக வலக்காலை மடித்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பார். வலக்கரம் தாமரையுடனும், இடக்கரம் மேனியில் அமர்த்தியும் காணப்படும். அம்பிகையின் மடியிலோ அல்லது இருவருக்கும் நடுவே ஆடிக் கொண்டோ குழந்தை கந்தன் ஆனந்தமாய்க் காட்சி தருவான்.

ஆடிய கோலத்தில் இருக்கும் கந்தனின் இடக்கரம் பழத்தையும், வலக்கரம் ஆள்காட்டி விரலைக் காட்டியபடியும் காணப்படும். நம்மைச்சுட்டிக் காட்டுவதாயும் அமைந்திருக்கும் இந்தக் கோலம் காணக் கிடைக்காத அரிய காட்சி. பல அருங்காட்சியகங்களில் காணப் படும் இந்த சோமாஸ்கந்த வடிவம் திருக்கருகாவூர், திருக்கள்ளில் போன்ற இடங்களிலும், சப்த விடங்கத் தலங்களில் முதன்மையான திருவாரூரிலும் காணப்படுகின்றது.திருவாரூரில் தியாகராஜா என்ற பெயரில் வழங்கப்படுபவர் இந்த ஸோமாஸ்கந்தரே ஆவார். இந்த மூர்த்தத்தையே மஹாவிஷ்ணு புத்திரப் பேறு வேண்டி தன் இதயத்தில் இருத்தி வழிபட்டதாய்ச் சொல்வார்கள். இந்த சோமாஸ்கந்தரைத் தான் தியாக ராஜராகப் போற்றி வழிபடுகின்றோம். குமரகுருபரர் தம் திருவாரூர் நான்மணி மாலையில் இவரைப் போற்றிப் பல பாடல்கள் பாடி இருக்கின்றார்.

என்பணிந்த தென்கமலை யீசனார் பூங்கோயில்
முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்பென்னாம்
புண்சுமந்தோ நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
மண்சுமந்தா ரென்றுருகு வர்.

வரந்தந் தருள வரதம்வைத் தாலென் வரதமிடக்
கரந்தந்த தாலிவர் கையதன் றேபலி காதலித்துச்
சிரந்தந்த செங்கைக் கமலேசர் நாமந் தியாகரென்ப
தரந்தந்த வாள்விழி யாடந்த தாங்கொ லறம்வளர்த்தே


மல்லல்வளங் கனிந்தபுகழ்க் கமலேசர் திருவுருவும் வாம பாகத்
தல்லமர்பைங் குழலுமையா டிருவுருவு மிருவருக்கும் அமுத மான
கொல்லயில்வேற் பசுங்குழவி திருவுருவு மருவுருவாம் குணங்கண் மூன்றின்
நல்லுருவா தலினன்றோ விவரகில காரணராய் நவில்கின் றாரே. 32


குமரகுருபரரின் திருவாரூர் நான்மணி மாலையில் இருந்து.

சோமாஸ்கந்தர், இல்லற வாழ்வின் இன்பத்தினையும், நன் மக்கட் பேறு, போன்றவற்றை வலியுறுத்தும் வண்ணம் இறைவனே தன் குடும்ப சமேதராய் பக்தர்களைக் காப்பதற்கு என ஏற்பட்டது. இவரைத் துதித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் எனவும், சோமாஸ்கந்தருடன் இருக்கும் உமையம்மையை, "புத்திர செளபாக்கிய ப்ரதாயினி" என்றும் சொல்லப் படுகின்றது. அடுத்து வருபவர் சிவ வடிவங்களிலேயே அனைவர் மனதையும் கவர்ந்த நடராஜர் ஆவார்.

Saturday, May 22, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! மஹேஸ்வர மூர்த்தி

சதாசிவ மூர்த்தியின் ஆயிரத்தில் ஒரு கூறிலிருந்து தோன்றியவரே மகேசர் என்பதைக் குறிப்பிட மறந்துள்ளேன். மகேச மூர்த்தி மகேச வடிவங்கள் என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறார். இவரே படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகியவற்றை நேரடியாக இயற்றுவதாய்ச் சொல்வார்கள். உருவத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் இவரின் வடிவங்களே இனி நாம் காணப் போவது. இந்த மகேச மூர்த்தி அடியவர்களைத் தண்டிக்கவும், அடியவர்களுக்கு உதவிகள் செய்து காக்கவும் பல வடிவங்களில் எடுத்துப் பல திருவிளையாடல்களைப் புரிகின்றார். இவரை நின்ற கோலம், அமர்ந்த கோலம், நாட்டியம் ஆடும் கூத்துக்கோலம், வாகங்களில் ஏறி வரும் கோலம், உக்கிரமாய் இருத்தல், சாந்த ஸ்வரூபியாய்க் காட்சி அளித்தல் எனப் பல்வேறு நிலைகளிலும் காண்போம்.

மகேச மூர்த்திக்கு ஒரு முகம், மூன்று கண்கள், ஜடா மகுடம், நான்கு கரங்கள், ஆகியவற்றுடன் காட்சி அளிக்கின்றார். பின்னிரு கரங்களில் மானும், மழுவும் காணப்படும். முன்னிரு கரங்கள் அபயஹஸ்தமாகக் காண்கின்றது. மகேச்வர வடிவங்களைச் சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுக்கும் பொருந்துமாறு 25 விதங்களில் குறிப்பிடுவார்கள். அதாவது சதாசிவ மூர்த்தியின் தத் புருஷம் என்னும் முகத்தில் இருந்து தோன்றியவர்கள்

1.பிட்சாடன மூர்த்தி
2.காமதகனர்
3.கால சம்ஹாரர்
4.ஜலந்தரவதர்
5.திரிபுராந்தகர்

அடுத்து ஈசான முகத்தில் இருந்து தோன்றியவர்கள்

1.சோமாஸ்கந்தர்
2.நடராஜர்
3.ரிஷபாரூடர்
4.கல்யாண சுந்தரர்
5. சந்திர சேகரர்

அடுத்து அகோர முகத்தில் இருந்து

1.கஜ சம்ஹார மூர்த்தி
2.வீரபத்ரர்
3.தட்சினா மூர்த்தி
4,கிராத மூர்த்தி
5.நீலகண்டர்

அடுத்து வாமதேவ முகத்தில் இருந்து

1.கங்காளர்
2.சக்ரதானர்
3.கஜமுக அனுக்ரஹர்
4,.சண்டோ அனுக்ரஹர்
5.ஏக பாதர்

அடுத்து சத்யோஜாத முகத்தில் இருந்து

1.லிங்கோத்பவர்
2.சுகாசனர்
3.உமா மகேசுவரர்
4.சங்கர நாராயணர்
5. அர்த்த நாரீசுவரர்.

உலகத்தார் உய்யும் பொருட்டும், உலகைக் காக்கவும் ஈசன் பல வடிவங்களை எடுப்பதாய்ச் சிவனடியார்கள் கூற்று. அவை மூன்று வகைப் படும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம். இதில் போகம் இன்பத்தையும், யோகம், அமைதியையும், வேகம், கோபத்தையும் குறிக்கின்றன. பொதுவாக மகேச வடிவத்தை இல்லறத்தாரே பெரிதும் பூசை செய்வர் என்பது வழக்கு. அதற்கேற்பத் திருமூலரின் திருமந்திரத்திலும்,ஏழாம் தந்திரம் பாடல் எண் மூன்று, அத்தியாயம் 13. மாகேசுர பூஜையில் இவ்வாறு கூறுகின்றார்:

பாடல் எண் : 3

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.

சிவனடியார்களை "மாகேசுரன்" என்று சொல்லும் திருமூலர் அந்த மகேசனுக்குள் அடங்கியவர்களே மாகேசுவரர் என்றும் கூறுகின்றார். சிவனைத் துதிக்கும் இல்லறத்தார் விருந்தோம்பலிலே சிவனடியார்களான மாகேசுவரனையும் துதிக்கலாம் என்று கூறுகின்றார். இறைவன் திரு உருவம் எப்படி இருக்கும் என நாம் அறியும்படிக்கு இந்த மகேசுவரனின் 25 வடிவங்களையும், சைவத் திருமுறைப் பாடல்களிலும், சாத்திரங்களிலும் குறிப்பிடப் படுகின்றது. சில கோயில்களில் சில வடிவங்களைத் தேர்ந்த சிற்பிகள் கல்லால் ஆன சிலைகளாகவும், பஞ்ச லோகப் படிமங்களாகவும் செய்து வைத்துச் சென்றிருக்கின்றார்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே!


டிஸ்கி: முதல் பத்தி விடுபட்டுப் போனதை இன்று தான் சரி செய்திருக்கிறேன். நன்றி.

Sunday, May 16, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சதாசிவ மூர்த்தி!


பஞ்ச முக லிங்கங்கள் தவிர்த்து, ஈசனின் ஆறாவது முகமும் உள்ளது. இந்த ஆறாவது முகம் கீழ்நோக்கியே காணப் படுகிறது. இது "அதோ முகம்" என அழைக்கப் படுகிறது. ஈசனின் ஐந்தாவது முகம் மேல் நோக்கி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டும், ஆறாவது முகம் கீழ் நோக்கி பாதாளத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும். இந்த ஆறாவது முகம் நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்றாகும். இந்த ஆறு முகங்களில் இருந்தும், அவற்றின் நெற்றிக் கண்களில் இருந்து விளைந்த நெருப்புப் பொறிகளில் தோன்றியவரே முருகப் பெருமான் ஆவார். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் பொங்கி வந்த போது, அதை விழுங்கியது இந்த ஆறாவது முகமே எனவும் சொல்லப் படுகிறது.

ஆகவே ஈசனின் நீலகண்டமே ஆறாவது முகமாய்க் கருதுவோர்களும் உண்டு. ஆறுமுகங்களுடன் கூடிய லிங்கங்கள் எங்கும் வழிபாட்டுக்குக் காணக் கிடைக்கவில்லை. ஏனெனில் முருகப் பெருமானே சிவ ஸ்வரூபம் என்பதால் அவரே ஆறுமுக, சிவனாய்க் கருதி வழிபடுவோரும் உண்டு. திருவானைக் காவில் உள்ள தென் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகரும், மற்றொரு லிங்கத்தில் முருகப் பெருமானும் காணப் படுவதாய்ச் சொல்கின்றனர். காஞ்சியில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் கோயிலிலும், முன் மண்டபத்தின் லிங்கத் திருமேனியில் பிடாரியின் உருவம் அமைக்கப் பட்டு, சக்தி லிங்கம் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். அடுத்து சதாசிவ மூர்த்தி பற்றிப் பார்ப்போமா?

திருமூலர் திருமந்திரத்தில் சதாசிவ மூர்த்தியைப் பற்றித் துதிக்கையில் இவ்வாறு கூறுகிறார்:
"கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்
தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே!" (ஏழாம் தந்திரம் பாடல் ஒன்று)
எனக் கூறுகின்றார்.
சதாசிவ வடிவத்துக்கு முகம் ஐந்து, திருப்பாதங்கள் இரண்டு, பத்துக் கைகள், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களாக மொத்தம் பதினைந்து கண்கள் இவற்றோடு தாமரைப் பீடத்தில் நிற்பதாய்க் கூறுகின்றார்.


சதாசிவ மூர்த்திக்கு ஐந்து முகங்கள் இருப்பதாய் அறிகின்றோம். சிவ ஆகமங்களை அந்த ஐந்து முகங்களில் இருந்தும் உபதேசிக்கும் பொருட்டு ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பதாயும் ஆன்றோர் கூறுகின்றனர். ஒவ்வொரு திருமுகமும் ஒவ்வொருவருக்கு உரியது எனவும் சொல்லப் படுகின்றது. கிழக்குப் பார்த்த திருமுகம் ஈஸ்வரனுக்கு உரியது எனவும், அதைத்
"தத்புருஷம்" என அழைப்பதாயும், மேற்கே பார்க்கும் முகம் பிரம்மனுக்கு உரியது எனவும், "சத்யோ ஜாதம்" என அழைக்கப் படுவதாயும், தெற்கே பார்க்கும் முகம் ருத்ரனுக்கு உரியது எனவும், "அகோர முகம்" என அழைக்கப் படுவதாயும், வடக்கே பார்க்கும் திருமுகம், விஷ்ணுவுக்கு உரியது எனவும், "வாமதேவம்" என அழைக்கப் படுவதாயும், உச்சியில் விளங்கும் சதாசிவனின் முகம் "ஈசானம்" எனவும் அழைக்கப் படுவதாய் அறிகின்றோம். ஈசனின் ஐந்தொழில்களையும் குறிக்கும் இவை எனவும் சொல்லப் படுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளுதல் என்னும் ஐந்தொழில்களயும் ஐந்து முகங்களும் குறிக்கின்றன என்றும் தெரிந்து கொள்கின்றோம்.




நான்கு திக்குகளிலும் உள்ள நான்கு முகங்களாலும் முறையே ஐந்து வீதம் 20 ஆகமங்களும், உச்சியில் உள்ள ஈசான முகம் 8 ஆகமங்களையும் அருளியதாய்ச் சொல்லப் படுகின்றது. மேலும் இந்த மேற்கண்ட ஐந்து மந்திரங்களாலேயே ஈசனின் உடல் ஆனது என்றும் அறிகின்றோம். சாமானியமான நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வடிவம் கொண்ட இந்த உடலில் உள்ள ஐந்து வித சக்திகளே, ஈசனின் ஐந்தொழில்களுக்கும் காரணமாகவும், காரியமாகவும் ஆகின்றது. உலகுக்கு எல்லாம் ஈசனாய் இருந்து ஞானத்தை அந்த ஞான வடிவான ஈசன் அருளுவதால் இவரை ஈசான மூர்த்தி, அகோர மூர்த்தி, வாமதேவர், சத்யோஜாதர், சதாசிவம் என்று எல்லாம் அழைக்கின்றோம். இவரை ஐந்து மட்டுமில்லாமல் 25 முகங்கள் வரையும் கொண்டவராயும் சித்திரிக்கப் படுகின்றார். ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலிலும் சதாசிவ மூர்த்தியின் வடிவங்கள் காணப் படுகின்றது. சென்னை ம்யூசியத்தில் இவரின் செம்புத் திருமேனி காட்சிப் பொருளாக வைக்கப் பட்டுள்ளதாயும் அறிய வருகிறது.

இந்த சதாசிவ மூர்த்தியில் இருந்து தோன்றியவராய்ச் சொல்லப் படும் மகேச மூர்த்தியைப் பற்றி அடுத்துக் காணலாம்.

டிஸ்கி: சதாசிவ மூர்த்தி படத்தை மறந்து போய்ப் போன பதிவிலே போட்டுட்டேன்.மன்னிக்கவும்.