எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, November 04, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

மறு நாள் காலையில் அவர்கள் தண்டு இறங்கி இருந்த இடத்தில் பிள்ளை உலகாரியரைப் பார்த்த அவருடைய அணுக்கத் தொண்டரான "விளாஞ்சோலைப் பிள்ளை" என்பார் உலகாரியரின் நிலையையும் திருவரங்கத்தை விட்டு வர நேர்ந்ததையும் அரங்கன் இப்படி ஊர் ஊராகச் சுற்ற வேண்டிய அவலநிலையையும் எண்ணி எண்ணி அழுதார். அதற்குப் பிள்ளை உலகாரியர்,"இதுவும் அரங்கன் லீலை" என்றே எண்ணிக் கொள்ள வேண்டும் என விளாஞ்சோலைப் பிள்ளைக்குச் சமாதானம் சொன்னார்.  இதைத் "திருவரங்கன் உலா"வாகக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். மேலும் அரங்கன் மேல் தீராத பக்தி கொண்டு அவனையே சரண் அடைந்தவர்களுக்கு அரங்கன் மேல் பக்தி ஒருக்காலும் குறையாது எனவும் எந்தத் துயரத்தையும் ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள் எனவும் அப்படி எண்ணினால் அவர்கள் ஆத்திகர்களே இல்லை. பொய்யான ஆத்திகம் பேசுபவர்கள் என்றும் கூறினார்.

அன்று அங்கே கழித்து விட்டு மறுநாள் காலையில் திருவரங்கன் உலா காட்டு வழியில் சென்ற போது ஒரு கள்ளர் கூட்டம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அவர்களிடம் பொன்னும், நகையும், பொருளும் இருக்குமெனச் சோதனை போட்ட கள்ளர் தலைவன் மூட்டைகளில் புஞ்சை தானியங்களும் பல்லக்கில் திருவரங்கன் எவ்விதமான ஆடை, ஆபரணங்களின் பகட்டில்லாமல் எளிமையாகக் காட்சி கொடுத்ததையும் பார்த்துத் திடுக்கிட்டான். பரிசனங்களை விசாரித்து நடந்தவற்றைத் தெரிந்து கொண்டான். திருவரங்கப் பெருமாளின் செல்வமும், செல்வாக்கும் குறித்து அறிந்திருந்த அவன் இப்போது மனம் வருந்திப் பின்னர் தன்னிடமுள்ள கொள்ளை அடித்த மூட்டைகளைப் பிரித்து காசு, பணம், நகைகள் என அள்ளி எடுத்து ஒரு தாம்பாளம் நிறைய வைத்து அதைப் பிள்ளை உலகாரியரிடம் நீட்டினான்.

பிள்ளை உலகாரியர் அவற்றை ஏற்க மறுத்தார். கொள்ளை அடித்துச் சேர்த்த பொருட்களைத் தாமும் தம் பரிசனங்களும், அரங்கனின் அடியார்களும் தொடமாட்டோம் என உறுதிபடக் கூறினார். பரிசனங்களுக்கு உணவு வழங்கத் தேவையான பொருளையாவது பெற்றுக்கொள்ளும்படி கள்வர் தலைவன் வேண்டியும் பிள்ளை உலகாரியர் பட்டினி கிடந்து மரித்தாலும் மரிப்போம். ஆனால் இந்தப் பொருட்களைத் தொட மாட்டோம். எனத் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். கள்வர் தலைவனிடம் உன் உண்மையான சொத்துக்களைக் கண்டடை என்று சொல்லிவிட்டு ஊர்வலம் மேலே நகர உத்தரவிட்டார் பிள்ளை உலகாரியர். தன் உண்மையான சொத்து எது எனக் கேட்ட கள்வர் தலைவனுக்கு அரங்கனின் நாமத்தைச் சொல்லும்படியும் அந்தச் சொத்து அவனுக்குத் தானாக வந்து சேரும் என்றும் கூறினார் பிள்ளை உலகாரியர்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் வந்த குலசேகரனுக்கு இந்தக் கூட்டத்தில் வாசந்திகா இருக்கும் இடம் தெரியவில்லை. எங்கே இருப்பாள் என யோசித்த அவன் முன்னர் வந்து நின்றார் ஓர் ஊர்வலத்தார். தன் தலையில் பாகை கட்டிக் கொண்டு வந்து நின்ற அவரைப் பார்த்த குலசேகரன் யார் என யோசிப்பதற்குள்ளாக, கலகலவெனச் சிரிக்கும் சப்தம் கேட்டு உற்றுப் பார்க்க ஊர்வலத்தார் வேஷத்தில் வாசந்திகா நிற்பது புரிந்தது.  காட்டில் அனைவரிடமிருந்தும் தப்பிப்பதற்காகவும் தான் பெண் என்பது புரியாமல் இருப்பதற்காகவும் இந்த வேஷத்தில் வருவதாக வாசந்திகா சொல்ல அதை ஆமோதித்தான் குலசேகரன்.

அப்போது குலசேகரன் தன்னையும் மச்சக்காரரையும் பார்த்து வரும்படி திருக்கோஷ்டியூருக்கு அனுப்பியது வாசந்திகா தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டான். வாசந்திகாவும் அதை உறுதி செய்தாள். தில்லிப் படை வீரர்களிடமிருந்து தப்பிக்கும் வழிதெரியாமல் தான் அப்படிச் செய்ததாகவும் கூறினாள். மச்சக்காரரை எப்படி நம்ப முடிந்தது என்னும் கேள்விக்கு, குலசேகரன் அவருக்கு ஆதரவு காட்டியதில் இருந்து மச்சக்காரர் நல்லவர் என்னும் எண்ணம் தனக்கு வந்தது என்றும் சொன்னாள். மச்சக்காரரைக் காப்பாற்ற வேண்டி அரங்கன் ஊர்வலத்தையே துறந்து குலசேகரன் சென்றதையும் ஆகவே மச்சக்காரர் உண்மையிலே நல் மனம் கொண்டவர் தான் என்பது உறுதிப்பட்டதாகவும் கூறினாள்.

குலசேகரன் தன்னை விரட்டினாலும் தான் திரும்ப அவனை அழைத்துக் கொண்டதையும் குறளனைப் போல் சஞ்சலங்கள் தன்னிடம் இல்லை எனவும் கூறினாள்.  மேலும் குலசேகரனைப் போன்றவர்களுக்காகவும் அவர்களை எல்லாம் மகிழ்விக்கவுமே தான் அரங்கனுக்கு எதிரில் ஆடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னாள். அங்குள்ள மற்றக் கூட்டத்தாரை விடக் குலசேகரன் ஒருவன் தான் ஆடும் ஆட்டத்தின் காரணத்தையும் அரங்கனுக்காக மட்டுமின்றி அவனுக்காகவும் தான் ஆடுவதையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் சொன்னாள் வாசந்திகா. 

Wednesday, November 01, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஹேமலேகாவைக் குறைந்த நேரமே சந்தித்த குலசேகரனுக்கு அவள் எப்படி இருப்பாள் என்பதே நினைவில் இல்லை. அந்த நினைவில் அவன் வாசந்திகாவைப் பார்க்க வாசந்திகாவோ அவன் தன் மேல் காதல் கொண்டிருக்கிறான் என்னும் குதூகல நினைவில் மூழ்கினாள்.  குலசேகரனுடன் ஆனந்தப் பேச்சு வார்த்தையும் மூழ்க நினைத்த வாசந்திகாவுக்கு ஏமாற்றமே மேலிட்டது. குலசேகரன் முழுவதும் தன் நினைவில் வந்து விட்டான். தான் மேற்கொண்டிருக்கும் முக்கியமான காரியத்தைக் குறித்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். மேம்போக்காக வாசந்திகா கேட்டவற்றுக்குப் பதில்களை அளித்தான். வாசந்திகாவோ அங்கே கிடந்த ஓர் பாறையை அரங்கனாகவும் அரங்கன் பாம்பணை மேல் படுத்திருக்கும் கோலமாகவும் எண்ணிக் கொண்டு நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றைப் பாடிக் கொண்டு ஆடவும் ஆரம்பித்தாள்.

பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்

காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்

சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும்,

நீதியாய்! நிற்சார்ந்து நின்று.

குலசேகரனின் நொந்த மனதுக்குப் பாசுரமும் அதன் பொருளும் அவள் பிடித்த அபிநயங்களும் ஆறுதலை அளித்தன. அவன் முகத்தைக் கண்ட வாசந்திகாவும் அவன் உண்மையில் தன் மேல் காதல் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடனேயே விடைபெற்றுச் சென்றாள். மறுநாள் அனைவரும் புறப்படுவதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த வேளையில் பிள்ளை உலகாரியரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்குப் போய் விட்டிருந்தது. தொண்டர்களும் பரிசனங்களும் அழுது புலம்பிக் கொண்டு அவரின் கூடாரத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். பலவாறு சொல்லிப் பிரலாபித்தார்கள்.

இப்போது பிள்ளை உலகாரியரின் தாய், தந்தை குறித்து ஓர் சிறிய குறிப்பு.  வைணவ ஆசிரியப் பெருந்தகைகளில் ஒருவரான "நம்பிள்ளை" என்பாருக்கு "வடக்குத் திருவீதிப் பிள்ளை" என்றொரு சீடர் இருந்தார். அவர் திருமணம் ஆகியும் மனைவி மேல் பற்றில்லாமல் துறவி போல் பிரமசரிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். அதைக் கண்ட அவர் தாய்க்கு வருத்தம் மேலிட அவர் தம் பிள்ளையின் ஆசிரியரான நம்பிள்ளையை அணுகி நிலைமையைச் சொல்லிப் புலம்பினார். தம் குலம் தழைக்க வேண்டும் என்ற ஆசையினைப் பகிர்ந்து கொண்டார். மகன் இப்படித் தன் மனைவியைப் பாராமுகமாக இருப்பதை எண்ணி வருந்தினார்.

நம்பிள்ளை அவரைச் சமாதானம் செய்து அவர் மருமகளை அழைத்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லி ஆசிர்வாதங்கள் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் தம் சீடரான திருவீதிப்பிள்ளையை அழைத்து அவரைத் தம் மனைவியுடன் அன்றிரவு மட்டும் சுகித்து இருக்கும்படி சொல்லி, இது குருவின் கட்டளை என்றும் தெளிவு செய்து அனுப்பி வைத்தார். குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்டு திருவீதிப் பிள்ளை அன்றிரவு தன் மனைவியுடன் சுகித்திருந்தார். அதன் விளைவாகப் பிறந்தவரே பிள்ளை உலகாரியர் என்பார்கள்.

இந்தக் கதை நடந்து வந்த சமயம் பிள்ளை உலகாரியருக்குப் பிராயம் அறுபதை நெருங்கி கொண்டிருந்தது. வைணவ சமயத்தை நிலை நிறுத்த வேண்டி "பதினெட்டு ரகசியங்கள்" என்னும் நூலை எழுதி இருந்தார். அவற்றுள் சூத்திரங்களாக உள்ள "ஶ்ரீ வசன பூஷணம்" என்னும் நூலுக்குப் பலரும் வியாக்கியானங்கள் எழுதி இருப்பதோடு இன்னமும் எழுதியும் வருகின்றனர். இவர் ஆரம்பத்தில் இருந்தே பிரமசரியத்தில் ஈடுபாடு கொண்டதால் திருமணமே செய்து கொள்ளாமல் வழ்ந்து வந்தார். அரங்கன் சேவையையே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வந்த அவருக்குக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய குழப்பமான சூழ்நிலைகளால் உடல்நிலையும் மனோநிலையும் பரிபூரணமாகக் கெட்டுப் போயிருந்தது.

ஆழ்ந்த மன வருத்தத்தில் இருந்த அவர்  அரங்கனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செவ்வனே முடிக்க ஆசைப்பட்டார். அதை இப்போது தம்மால் நிறைவேற்ற முடியுமா என்னும் ஐயம் அவரைப் பிடித்து ஆட்டியது.  ஏற்கெனவே இருந்த பலவீனம், மனோவியாகூலம் எல்லாம் சேர்ந்து அவரை மயக்க நிலையில் தள்ளி இருந்தது.  அதைக் கண்ட அவர் சீடர்கள் மனம் வருந்தினார்கள். கூடாரத்திலிருந்து வெளியே வந்த அவர்களில் சிலர் தங்களுக்குள்ளாக ஆலோசனைகள் நடத்தினார்கள். ஆற்றங்கரையோரமாகத் தங்கி இருந்ததால் அந்தப் ப்ரதேசத்தில் அதிக நாட்கள் தங்கக் கூடாது என்பதால் ஓர் பல்லக்கை ஏற்பாடு செய்து பிள்ளை உலகாரியரை அதில் படுக்க வைத்துச் சுமந்து செல்லத் தீர்மானித்தார்கள். 

Sunday, October 29, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

பிள்ளை உலகாரியரைக் கண்ட குலசேகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அந்தத் தோப்பின் ஓர் ஓரமாகத் திரை போட்டு மேலே விதானத்தால் மூடி நடுவில் ஓர் படுக்கையை விரித்துப் படுத்திருந்தார் பிள்ளை உலகாரியர். அவரை வணங்கித் தன் கவலையையும் தெரிவித்தான் குலசேகரன். அதற்குப் பிள்ளை உலகாரியர் அவர்களை ஆசுவாசம் செய்தார். பின்னர் அவர்களை ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருக்கும்படி வற்புறுத்தினார். அப்போது தான் அரங்கனைக் காப்பாற்றி எடுத்துச் செல்ல முடியும் என்றும் எடுத்துச் சொன்னார்.  அதைக் கேட்ட குறளன் என்பவனும் குலசேகரனும் அதற்கு ஒத்துக் கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் அரங்கனின் ஊர்வலத்தில் வந்த சாதாரண மக்களும் அரங்கனின் பரிசனங்களும் ஒன்று கூடி மச்சக்காரனின் உடலைத் தகுந்த மரியாதைகளுடன் புதைத்தார்கள்.  அவர்களுடன் வந்த ஶ்ரீபாதம் தாங்கி ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவரை வேட்டுவர் குடியிருப்பில் தங்கிச் சிகிச்சை எடுக்கும்படி ஏற்பாடுகள் செய்து பின்னர் சுத்திகள் எல்லாம் செய்து முடித்து நிலவு மேலே எழும்பினதும் அரங்கனது பயணத்தைத் துவக்கினார்கள். காற்று தென்றலாக வீசியது. நிலவோ வெள்ளியை உருக்கி ஊற்றினாற்போல் ஒளியைப் பொழிந்தது. குலசேகரனுக்கு அந்தப் பயணத்தின் இடையே மச்சக்காரனின் நினைவு வந்தபோதெல்லாம் தேம்பி அழுதான். கடைசியில் அவர்கள் பாதி இரவில் ஓர் காட்டாற்றின் கரையில் வந்து பயணத்தை நிறுத்திக் கொண்டார்கள்.

அங்கேயே வேட்டுவர் தந்த தானியங்களை அடுப்பிலிட்டு வேக வைத்துக் கஞ்சி போல் காய்ச்சி அரங்கனுக்கு நிவேதனம் செய்து அவர்களும் உண்டார்கள்.  பின்னர் அனைவரும் படுக்க ஆயத்தம் செய்தனர். குலசேகரனுக்கு உணவு இறங்கவில்லை. படுக்கவும் பிடிக்கவில்லை. மிகக் கவலையுடன் அவன் காட்டாற்றில் இறங்கினான். கரையிலிருந்து கீழிறங்கி ஆற்றின் மணல்வெளிக்குச் சென்று அங்கே படுத்தான். மனம் புழுங்கியது.  அடுத்தடுத்து நேர்ந்த தாயின் மரணம், தான் அன்புடன் பழகிய மச்சக்காரனின் மரணம் இரண்டும் அவனை வாட்டியது. குறுகிய நேரமே பழகினாலும் மச்சக்காரன் மிகவும் நல்லவன் என்றும் வெள்ளை மனம் கொண்டவன் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. 

அவன் மனதில் அரங்கன் பால் கொண்டிருந்த மாசு மருவற்ற தூய பக்தியை எண்ணி எண்ணிக் குலசேகரன் மனம் விம்மினான். அந்த பக்தியினால் அன்றோ அவன் அவ்வளவு அடிகளைத் தாங்கி இருக்கிறான்.  அதனால் அன்றோ அவன் இறக்கவும் நேரிட்டது! தன்னையும் அறியாமல் தூங்கிய குலசேகரனுக்குக் கொடிய கனவுகள் மாறி மாறி வந்தன. மச்சக்காரனின் இறந்த உடலைக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு தான் அந்தக் காட்டாற்றின் கரைக்கு வந்ததாக அவனுக்குள் ஓர் எண்ணம். அதுவே கனவாகவும் வந்தது. உடலை தகனம் செய்ய நினைக்கையில் அவனை யாரோ மதுரமான குரலில், "ஆர்ய!" என்று அழைத்தனர்.

குலசேகரன் முன்னால் அப்போது நின்று கொண்டிருந்தது ஹேமலேகா! அவனுக்கு அது கனவா, நனவா என்றே புரியவில்லை. ஹேமலேகா, ஹேமலேகா என்றழைத்த வண்ணம் தன்னை உலுக்கிக் கொண்டு எழுந்தவன் எதிரே உண்மையாகவே அவள் அமர்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டான்.  மீண்டும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்க்க அது ஹேமலேகா இல்லை, வாசந்திகா என்பதும் புரிந்தது. எப்படியோ அவன் உண்ணாமல் வந்து விட்டதைக் கவனித்திருந்த வாசந்திகா ஓர் தொன்னை நிறையக் கூழை நிறைத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். ஹேமலேகாவின் நினைவிலேயே இருந்த குலசேகரனுக்கு அது அவளே கொடுப்பது போலிருக்க மறுப்புச் சொல்லாமல் வாங்கி அருந்தினான். 

Wednesday, October 25, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

வந்த வீரர்கள் மச்சக்காரனையும் அவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த குலசேகரனையும் பார்த்துத் தயங்கி  நின்றார்கள். மச்சக்காரன் அவர்களை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டுவிட்டு இவர்களை எல்லாம் விட்டு விடு, இவர்களுக்கும் அரங்கனுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறினான். அவன் குரலின் கண்டிப்பைக் கண்ட தில்லி வீரர்கள் தலைவன் அரை மனதோடு அதற்குச் சம்மதித்தாலும் மச்சக்காரனின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு கொஞ்சம் சந்தேகம் அடைந்தான். அதற்கு மச்சக்காரன் காட்டு வழியில் வந்தபோது திருடர்கள் அடித்துவிட்டதாய்க் கூறினான். குதிரை வீரர்களிடம் திட்டவட்டமாக இந்தக் கூட்டத்தினரைத் தொந்திரவு செய்யாமல் போக விடு என்றும் கூறினான். அவர்கள் அகன்றனர்.

குலசேகரன் மச்சக்காரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றி கூறினான். குலசேகரனிடம் அவர்களில் ஒருவர் பேசியதை வைத்துத் தான் விஷயத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறிய மச்சக்காரன் அரங்கனைக் காப்பாற்ற வேண்டியே அவர்கள் இப்படி மறைமுகமாகத் தன்னை வேண்டி இருக்கிறார்கள் என்பதையும் தான் புரிந்து கொண்டதாய்த் தெரிவித்தான். அதனால் அவர்கள் தப்பிச் செல்லத் தான் அனுமதி கொடுக்கச் சொன்னதாயும் கூறினான். மேலும் அரங்கனை இவர்களிடமிருந்து காப்பாற்றத் தான் ஓர் காரணமாக அமைந்தது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டான்.

அரங்கன் ஊர்வலத்தார் பலரும் குலசேகரன் இருக்குமிடம் தெரிந்து கொண்டு அங்கே வந்து அவனையும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். அதற்குக் குலசேகரன் மறுக்க அவர்கள் சொன்ன சமாதானங்களையும் ஏற்க மறுக்க மச்சக்காரன் அவனை ஒத்துக் கொள்ளச் சொன்னான். ஆனால் குலசேகரனோ மச்சக்காரன் இல்லாமல் தான் பயணம் செய்யப் போவதில்லை என்று சொல்லிவிட்டான். கூட்டத்தினர் மச்சக்காரனையும் உடன் அழைத்துச் செல்வதாக உறுதி கூறிக் குலசேகரனை மீண்டும் வற்புறுத்தக் குலசேகரனும் மனம் இசைந்தான். குதிரை மீது மச்சக்காரனைக் குப்புறப் படுக்க வைத்துத் தான் கவனமாகக் குதிரையை ஓட்டியவண்ணம் உடன் சென்றான் குலசேகரன்.

சிறிது நாழிகையில் அவர்கள் வேட்டுவக்குடியை நெருங்கினார்கள். பூவரச மரங்கள் நிறைந்த தோப்பில் பரிவாரங்கள் அனைவரும் கூடி இருந்து மச்சக்காரனையும் குலசேகரனையும் வரவேற்றனர். மச்சக்காரன் படுத்திருந்த குதிரையை அரங்கனின் பல்லக்குக்கு அருகே இழுத்துச் சென்றான் குலசேகரன். மாலை நேர வழிபாட்டுக்கான நேரம்! திரை திறக்கப்பட்டு அரங்கனாகிய அழகிய மணவாளர் திவ்ய தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட குலசேகரன் மச்சக்காரனை எழுப்பி அரங்கனைத் தரிசனம் செய்யச் சொன்னான். மச்சக்காரனிடமிருந்து பதிலே வராமல் போகத் திடுக்கிட்ட குலசேகரன் அவனை உலுக்கி எழுப்ப அவன் உடல் குதிரையிலிருந்து கீழே விழுந்தது.

குலசேகரன் மண்ணில் அந்த உடல் விழுவதற்குள்ளாகத் தன் கைகளில் பிடித்து மெல்லக் கீழே கிடத்தினான். மச்சக்காரன் முகத்தில் புன்னகை மறையவே இல்லை! அரங்கனைப் பார்க்கப் போகிறோம் என்னும் மகிழ்ச்சியில் எழுந்த அந்தப் புன்னகை மறையாமலேயே அவன் மறைந்து விட்டான். குலசேகரன் அவனை உலுக்கு உலுக்கென்று உலுக்கியும் அவன் கண் திறக்கவில்லை.  பெரிதாக ஓவென்று அலறி அழுதான் குலசேகரன். அவன் அலறலைக் கேட்ட குதிரையும் கனைத்தது அதுவும் அழுவது போல் தோன்றியது.குலசேகரனுக்குக் கோபம் வந்தது.

கூட்டத்தினரைப் பார்த்துக் கோபத்துடன், "ஒரு உயிர் அநியாயமாகப் போய்விட்டது.அரங்கன் மீது முழு விசுவாசமும் பக்தியும் கொண்டிருந்த ஓர் உயிர்! இவருடைய வெளி வேஷத்தைப் பார்த்து நீங்கள் இவரை இகழ்ந்தீர்கள்! இவருடைய உள் மனதை யாரும் பார்க்கவில்லை! அரங்கன் மீது இவர் கொண்டிருந்த அபாரமான காதல் காரணமாகவே இன்று நீங்களும் சரி, அரங்கனும் சரி பாதுகாக்கப் பட்டிருக்கிறீர்கள். இவர் இல்லை எனில் தில்லித் துருக்கர்கள் உங்களை எல்லாம் கொன்று போட்டுவிட்டு அரங்கனைத் தூக்கிச் சென்றிருப்பார்கள். உண்மையில் இவர் தான் அரங்கனின் உண்மையான பக்தர்! நீங்களோ நானோ அல்ல!" என்றான்.

அப்போது அங்கே குறளன் என்பவன் முன்னே வந்து குலசேகரனிடம் மன்னிப்புக் கேட்கக் குலசேகரனின் கோபம் மேலும் பொங்கியது. குறளனின் அடியால் தான் அவர் முதுகு பிளந்து கடந்த மூன்று நாட்களாகத் துடித்ததைக் குலசேகரனால் மறக்க முடியவில்லை. அப்படி இருந்தும் அரங்கனையும் அவர் பக்தர்களையும் மச்சக்காரப் பெரியவர் காட்டிக் கொடுக்கவில்லை என்பதை நினைத்து அவன் மனம் நன்றியில் நிறைந்தது. எனினும் குறளனின் மேல் கோபம் தணியவில்லை. அப்போது குறளன் தாய் செய்ததுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். தான் செய்த செயலுக்கான தண்டனையும் தனக்குக் கிடைத்ததாகக் கூறித் தன் முதுகில் தில்லித் துருக்கர்கள் கொடுத்திருந்த சாட்டை அடிகளைக் காட்டினான்.

என்றாலும் மச்சக்காரர் இறக்கும் முன்னர் அரங்கனைப் பார்த்திருந்தால் ஒருக்கால் பிழைத்திருப்பாரோ என்னும் எண்ணம் குலசேகரனுக்குள் தோன்றியது. மச்சக்காரருக்குத் தான் கொடுத்த அடிகள் தான் தமக்குத் திரும்பி வந்ததாகக் குறளன் கூறியதில் குலசேகரனுக்குக் கொஞ்சம் வருத்தமும் அதே சமயம் இனம் புரியா ஆறுதலும் ஏற்பட்டது. மச்சக்காரர் உண்மையில் மகான் தான்! அதான் உடனடியாகக் குறளனுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் சமயம் பிள்ளை உலகாரியர் அழைப்பதாகப் பரிசனங்களில் ஒருவர் வந்து குலசேகரனை அழைத்தார்!

Tuesday, October 24, 2017

நாளை முதல் எழுதுவேன்!

ரொம்ப வருஷமா எழுதலையோனு நினைச்சிருந்தேன். இந்தப்பக்கமே வர முடியலை! புத்தகங்கள், குறிப்புகள் எல்லாவற்றையும் தனியா எடுத்து வைச்சிருந்தேன். அவற்றைத் தேடி எடுக்கலை! அதோடு போன செப்டெம்பரில் இருந்து அடுத்தடுத்துக் குடும்பப் பிரச்னைகள், நிகழ்வுகள், அமெரிக்காப் பயணம், திரும்பி வந்து மாமியாரின் காரியங்கள் என ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தினம் ஒரு தரமாவது இங்கே எதுவும் எழுதலையேனு வருத்தம் வரும். இனியாவது கொஞ்சம் சுறுசுறுப்பு வரணும் என அந்தப் பெருமாளையே நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு நாளையிலிருந்து எழுத ஆரம்பிக்கணும். யாரும் படிக்கலைனாக் கூடப் பரவாயில்லை. எடுத்த காரியத்தை முடிக்கணும்.

Saturday, September 03, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்~ தில்லி வீரர்களின் கொடூரம்!

வரும் படைகள் எவருடையது என்ற குழப்பத்தில் அனைவரும் ஆழ்ந்தனர். வருபவர்கள் தில்லிப் படையினர் என்பது விரைவில் தெரிந்தது. உடனே அங்கிருந்தோரில் ஒருவன் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வேட்டுவர் குடியிருப்பில் மறைந்திருக்கும்படி அறிவுறுத்தினான். உடனே அனைவரும் அழகியமணவாளரின் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வேட்டுவர் குடியிருப்பை நோக்கி ஓடினார்கள். நோய்வாய்ப் பட்டிருந்தவர்களோடு பிள்ளை உலகாரியரும் அங்கேயே தங்கி விட்டார்.  அடுத்த சில கணங்களில் அந்தத் தோப்பை தில்லி சுல்தானின் படை நெருங்கி விட்டது. குதிரைகள் ஒரு நூறு ஒரே நேரத்தில் சடசடவென்ற சப்தத்தோடு நின்றன.

அவர்களின் தலைவன் பரிவாரங்களையும் பிள்ளை உலகாரியரையும் பார்த்து, "யார் நீங்கள்? எங்கே போகிறீர்கள்?" என்று வினவ அவர்கள் ராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை செல்வதாகக் கூறினார்கள். ஆனால் தலைவன் அதை நம்பாமல் உரக்கச் சிரித்தான். பொய் சொல்லுவதாகவும் ஏளனம் செய்தான். ஆனால் ஶ்ரீரங்கத்துப் பரிவாரங்களும் மற்றவர்களும் விடாமல் ராமேஸ்வரமே செல்வதாகக் கூற ராமேஸ்வரம் செல்லும் வழி இதுவல்ல வென்று அந்த தில்லி சுல்தானின் படைத்தலைவன் கூறினான். பின்னர் அவர்கள் ஶ்ரீரங்கத்திலிருந்து வருவதைத் தான் அறிந்து கொண்டு விட்டதாகவும் கூறினான். ஆனால் ஶ்ரீரங்கத்துக்காரர்கள் விடாமல் நோய்வாய்ப்பட்டதால் அங்கே தங்கி இருப்பதாகவும், நிழலும் நீரும் இங்கே கிடைப்பதால் தங்கி இருப்பதாகவும் கூறினார்கள். பின்னர் அவன் பார்வை அங்கே படுத்திருந்த உலகாரியர் மேல் பட்டது. அவரின் தீர்க்கமான நாமத்தைப் பார்த்த அவன் அவர் அருகே சென்று அவரைப் பார்த்து எழுப்பினான்.

"ஹே, கிழவா! எழுந்திரு! உன்னைப் போல் நாமம் தரித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை அறிவேன். நீ உண்மையைச் சொல்ல வேண்டும். எங்கே போகப் புறப்பட்டீர்கள்?" என்று வினவினான். உலகாரியரோ, "நாங்கள் ஶ்ரீவைணவர்கள். பகவானின் திருநாமமே எங்களுக்கு அமிர்தம். அதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை!" என்றார். இதைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்ட அந்தத் தலைவன் தன் கையிலிருந்த சாட்டையை எடுத்து ஓங்கி அவரை அடிக்க வேண்டும் என்று கையைத் தூக்கக் கூட்டத்திலிருந்த பலரும் ஓடோடி வந்து உலகாரியரை மறைத்துக் கொண்டு, எங்களை அடித்துக் கொள், அவரை ஒன்றும் செய்யாதே! என்று அலறினார்கள்.  கோபம் கொண்ட அந்தத் தலைவன் சாட்டையை ஓங்கி அங்கிருந்த ஓர் ஆளின் மேல் அடித்தான். வீறிட்டுக் கத்தினான் அவன். மீண்டும் மீண்டும் சாட்டையை ஓங்கிக் கொண்டு அதே ஆளையே திரும்பத் திரும்ப அடிக்க அவன் அடி வாங்குவதைக் கண்டு தாங்க முடியாத பிள்ளை உலகாரியர் மயங்கிக் கீழே விழுந்தார்.

பரிவாரங்கள் கோபத்தில் கொந்தளித்தனர். அப்போது ஒருவன் ஓடோடி வந்து, தலைவனைப் பார்த்து, "நிறுத்துங்கள், பிரபு!" என்று கத்தினான். யாரென்று பார்த்தால் அரங்கனோடு வேட்டுவர் குடிக்கு மறைந்திருக்கச் சென்றவர்களில் ஒருவன் அங்கே வந்து தாங்கள் யாத்திரிகர்கள் தாம் என்றும் அதை தில்லி சுல்தானின் ஒற்றர் தலைவனுக்கு நிரூபித்துக் காட்டிவிட்டதாகவும் கூற தலைவனுக்கு ஆச்சரியம். யார் அந்த ஒற்றர் தலைவன் என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு அந்த ஆள் அவரைப் பெயர் மூலம் அறிந்ததில்லை என்றும் அடையாளம் தெரியும் என்று கூறிவிட்டுக் கன்னத்தில் பெரிய மச்சம் இருக்கும் என்றும் கூறினான். "அவரா" என்று தயங்கிய தலைவன் அவர் தான் என்றும் சொல்வதற்கும் நிரூபித்ததற்கும் என்ன அத்தாட்சி என்று கேட்டான்.

அதற்கு வந்தவன் அவரே இங்கே பக்கத்தில் திருக்கோட்டியூரில் இருப்பதாகவும் இங்கே இருந்து அரை நாழிகைப் பயணத்தில் அவரைக் காணலாம் என்றும் கூறினான். அதற்குத் தலைவன் அவனையே அந்த ஒற்றர் தலைவனைக் காட்டும்படி கூற இருவரும் திருக்கோட்டியூருக்குக் கிளம்பினார்கள். அனைவரும் உடன் சென்றனர். அரை நாழிகைக்கும் குறைவான நேரத்திலேயே திருக்கோட்டியூரை அடைந்தனர். எல்லா இடங்களிலும் தேடியவர்களுக்குக் கடைசியில் ஒரு வீட்டுத்திண்ணை மேல் மச்சக்காரன் இருப்பதையும் அவர்கள் தலைவனான குலசேகரன் என்பான் அங்கே இருந்து மச்சக்காரனுக்குப் பணிவிடை செய்வதையும் பார்த்தார்கள். கூட்டமாக ஆட்கள் வருவதைப் பார்த்தக் குலசேகரன் என்பான் திரும்பிப்பார்க்க தில்லிப் படை வீரர்களையும் அவர்களுடன் ஶ்ரீரங்கத்து ஆள் ஒருவனையும் பார்த்தான்.

ஶ்ரீரங்கத்து ஆள்குலசேகரனிடம் தாங்கள் யாத்திரிகர்கள் என்பதை நம்பாமல் தில்லி வீரர்கள் கொடுக்கும் தொந்திரவைச் சொன்னான்.அரங்கன் ஊர்வலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துத் தொந்திரவு கொடுப்பதாகவும் அனைவரையும் சாட்டையால் அடிப்பதையும் கூறி உங்கள் ஒற்றர் தலைவனே இதை அறிவார் என்று கூறி இங்கே அழைத்து வந்ததாகச் சொன்னான். அப்போது இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மச்சக்கார ஒற்றர் தலைவன் மெல்ல முனகவும் குலசேகரன் அவனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டான். தன் மடியில் சாய்த்த வண்ணம் அமர்த்திக் கொண்டான்.

Saturday, August 20, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனும் பட்டினி!

இந்த சுரதானியையும் ஒருவன் காதலித்ததாகவும், அரங்கனையே நினைத்திருந்த சுரதானி இறந்த பின்னர் அவள்  விருப்பமான அரங்கன் மேல் அவள் கொண்ட காதல் அவனுக்கும் வந்துவிட்டதாகவும், சுரதானி காதலித்த அந்த அழகிய மணவாளர் மேல் அவனுக்கும் ஈர்ப்பு பிறந்துவிட்டதாகவும் ஒரு கூற்று உண்டு. அந்த அரங்கன் மேல் கொண்ட காதல் மாறாமல் பார்க்கும் பொருளை எல்லாம் அரங்கனாகவே அவன் பாவித்ததாகவும் அப்படி ஓர் நாள் அவன் சுட்ட ரொட்டியை எடுத்துக் கொண்டு ஓடிய கோழியையும் அரங்கனாகவே பாவித்து, நெய் தடவாத ரொட்டியை எடுத்துச் சென்று விட்டாயே அரங்கா என்று கூவிய வண்ணம் தொடர்ந்தவனுக்கு ஓர் அற்புத அனுபவம் கிட்டியதாகவும், அந்த நேரமே அவன் ஜீவன் முக்தனாக மாறி விட்டான் என்றும் அவனுக்கு முக்தி கிடைத்து அரங்கனின் கழல்களை அடைந்ததாகவும் சொல்கின்றனர்.

ஆண்டாள் வைத்த பக்திக்குப் பின்னர் சுரதானியின் காதலே அதிகம் பேசப்படுகிறது. ஆகவே பின்னர் வந்த நாட்களில் கோவிலில் சுரதானியின் உருவத்தைச் சித்திரமாக எழுதி வைத்து தினம் காலை கோதுமை ரொட்டி, கிச்சடி என்னும் பருப்புச் சேர்த்த பொங்கல் ஆகியவற்றை நிவேதனமாகப் படைப்பதாகவும் அந்த நேரத்தில் அரங்கனுக்குக் கைலி உடுத்துவதாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. அரங்கன் விக்ரஹம் மாற்றில்லாப் பசும்பொன்னால் செய்யப்பட்டிருப்பதாக ஓர் கூற்று. மேலும் விக்ரஹத்தினுள் வைர, வைடூரியங்களையும் நவரத்தினங்களையும் புதைத்து மறைத்து வைத்திருப்பதாகவும் சுல்தானின் வீரர்கள் நினைத்தனர்.

ஆனால் சுரதானியின் தந்தை சுரதானி இறந்த பின்னர் பாரசீகமே திரும்பினாலும் உறவினர்களில் சிலர் இங்கேயே இருந்து வந்தனர். அவர்களுக்கு அந்த அரங்கன் சிலையில் ஏதோ மாய, மந்திரம் இருப்பதாகவும், வசிய சக்தி அதில் இருப்பதாகவும் நம்பினார்கள். ஆகவே அந்த விக்ரஹத்தை எப்படியேனும் தேடி அடைந்து உருக்கி உலோகமாக மாற்றி விடவேண்டும் என்னும் வெறியில் விக்ரஹத்தைத் தேடி அலைந்தனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைக்காக நம் அரங்கனைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் அரங்கனோ எவரும் அறியாமல் காட்டுக்குள் ஒளிந்து ஒளிந்து பரிசனங்களாலும் முக்கிய பக்தர்களாலும் எடுத்துச் செல்லப்பட்டு வந்தான்.

திருக்கோஷ்டியூருக்கு அருகே உள்ள சோலைகளில் அரங்கன் மறைத்து வைக்கப் பட்டிருந்தான், ஊர் மக்களுக்கே அந்த விஷயம் தெரியாது. அரங்கனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சாமான்கள் வாங்க வந்தபோது ஊர் மக்கள் இல்லாமல் ஊரே வெறிச்சோடி இருப்பதைக் கண்டு அங்கிருந்த ஓரிருவரிடம் விசாரித்தால் டில்லி சுல்தானின் சூறைக்கும் படையெடுப்புக்கும் பயந்து மக்கள் ஊரை விட்டே ஓடிவிட்டதாகத் தகவல்கள் கிடைத்தன.  ஆகவே உணவுப் பொருள்கள் ஏதும் கிடைக்காமல் அரங்கனுடன் சென்ற பலருக்கும் உடல் நலிவு ஏற்பட்டது. உலகாரியரின்  உடலும் மிகவும் நலிந்து விட்டிருந்தது.  முன்பிருந்த பொலிவு அவரிடம் இப்போது இல்லை.  நகருக்குள் வந்து அவருக்காகக் கஞ்சிக்குச் சிறிதேனும் உணவு சம்பாதிக்க வந்த மக்களும் ஏதும் கிடைக்காமல் தயங்கிக் கொண்டிருந்தனர்.

அங்கே வந்த ஓர் அரங்கவாசியைக் கண்டதும் அவன் டில்லி ஒற்றனாக இருப்பானோ என்றே நினைத்துக் கொண்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இவன் கண்களில் படாமல் அரங்கன் ஊர்வலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முடிவு கட்டினார்கள். ஆனால் உண்மையில் வந்தவன் ஒற்றனே அல்ல. நல்லவனே ஆகும். எல்லோரும் ஒருவர் மற்றவரைச் சந்தேகப்படும் அளவுக்கு மனம் வெறுத்துப் போய் மாறி விட்டனர். இதைக் கண்ட அந்த அரங்கவாசிக்குத் தன் நிலைமை கண்டு வேதனை ஏற்பட்டது.  ஆனால் அவனைக் கண்டு தப்பி ஓடியவர்கள் அரங்கன் ஒளிந்திருந்த இடம் சென்று டில்லி ஒற்றன் தங்களைத் தேடி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உலகாரியரின் உடல்நிலை இந்த ஆலோசனைகளில் கலந்து கொண்டு கருத்துச் சொல்லும்படியாக இல்லை.

அங்கிருந்த வேறொரு முதியவர் பார்த்துச் சொன்னதும் அனைவரும் அப்போது ராகுகாலமாக இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை என்று அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பினர். ஒரே ஓட்டமாக ஓடினார்கள். அவர்கள் நடக்க அவர்கள் சென்ற பாதை சுருங்கிக் கொண்டே வந்தது. ஓர் இடத்தில் ஶ்ரீபாதம் தாங்கி ஒருவன் மயங்கி விழ அனைவரும் அரங்கனின் பல்லக்குக் கவிழாமல் பாதுகாத்துக் கீழே இறக்கிவிட்டு ஶ்ரீபாதம் தாங்கிக்கு மயக்கம் தெளிவித்தார்கள். ஆனால் பல நாட்கள் உணவில்லாமல் இருந்த அவனுக்கு மயக்கம் தெளிந்தாலும் முன்போல் நடமாட முடியவில்லை.  உலகாரியரிடம் கேட்டுக் கொண்டு அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றால் அது வேட்டுவரின் கிராமமாக இருந்தது. அங்கிருந்து வேறிடம் செல்லலாம் என அனைவரும் முயன்றால் சிலரால் எழுந்து நடமாடவே முடியவில்லை. ஒரு வாய்த் தண்ணீராவது வேண்டும் என்று பலரும் அங்கிருந்து எழுந்திருக்க முடியாமல் படுத்து விட்டனர்.

அப்போது அங்கிருந்த பக்தர்கள் பலரும் அரங்கனுக்கும் அமுது படைக்க முடியாமல் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையிலிருந்து மீள்வது எப்படி என்று கலங்கினார்கள். உலகாரியர் இது அரங்கன் நமக்கு வைத்திருக்கும் சோதனை என்றும் பசி, களைப்பு எல்லாம் நம் போன்ற சாமானியர்களுக்குத் தான் என்றும் அரங்கனுக்கு இல்லை என்றும் தெளிவூட்டினார். இத்தகைய சோதனைகள் மூலம் நம் பக்தி புடம் போடப்படுவதாகவும் உலகாரியர் கூறினார். உணவைத் தேடிச் சென்ற மக்கள் அங்கிருந்த வேட்டுவர் தலைவனிடம் நடந்ததை நடந்தபடியே கூறி உதவி கேட்டான். தானியங்களும் தண்ணீரும் கொடுத்து உதவும்படி கேட்டார்கள். நடந்ததைக் கேட்டறிந்த வேட்டுவர் தலைவன் குடியிருப்பில் இருந்த புல்லரிசி, தினை மாவு, தேன், பனங்கிழங்குகள், காட்டுக் கிழங்குகள், பழங்கள் என்று சேகரித்துக் கொண்டு அவர்களுடன் சென்றான்.

பின்னர் அரங்கனின் பல்லக்கின் எதிரே நின்று கொண்டு அனைவரும் அவர்கள் பாணியில் ஒரு நடனம் செய்து அரங்கனுக்கு அஞ்சலி செய்தனர். வேட்டுவர் குடியிருப்பின் ஊருணிக்கிணற்றிலிருந்து குடிநீரும், குடியிருப்புகளிலிருந்து காய்ச்சிய பாலும் வந்தது. அந்தப் பாலில் கொஞ்சம் போல் ஶ்ரீபாதம் தாங்கிக் கொடுத்தால் நீண்ட நாட்கள் உணவுண்ணாமல் இருந்த காரணத்தாலோ என்னமோ அவரால் அதைக் குடிக்க முடியவில்லை. கொஞ்சம் போல் குடித்தவர் பின்னர் அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் மூச்சு குறுக அப்படியே கிடந்தார்.

அந்தச் சமயம் அங்கே இருந்த பலருக்குள்ளாகவும் தில்லி ஒற்றன் என்று நினைத்தவன் பெரிய வீரனாக இருந்ததால் அவனுடைய பாதுகாப்பு தங்களுக்கு வேண்டும் என்றும், உண்மையில் அவன் அரங்கவாசி என்றும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த வீரனுடன் நண்பனாக இருந்த இன்னொருவனோ அவன் அரங்க வாசி தான் ஆனால் இப்போது ஒற்றனாக மாறிவிட்டான் என்றும் அவன் தங்களுடன் சேரக் கூடாது என்றும் அரங்கனை தில்லிக்காரர்களிடம் காட்டிக் கொடுத்துவிடுவான் என்றும் கடுமையாக மறுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே ஒரு பெரிய படை வீரர்கள் குதிரைகளில் வரும் மாபெரும் சப்தம் அலை ஓசை போல் கேட்டது. அனைவர் நெஞ்சமும் தடக் தடக் என்று அடித்துக் கொண்டது.