எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

6. கோபாலகிருஷ்ணன் - 1

மே 15, 2006

நாங்கள் தரிசனம் செய்யும்போது பசு மாட்டின் மேல் சாய்ந்த கோலத்தில் ஒரு கையில் புல்லாங்குழலுடனும், மறு கையில் மாடு கட்டும் கயிறுடனும் கிருஷ்ணனை அலங்கரித்து இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அலங்கரிக்கப் படும் கண்ணனின் நிர்மால்ய தரிசனம் (தினம் காலை 5மணியில் இருந்து 5-30-க்குள்} மிகவும் நன்றாக இருக்கும் என்றும் சொன்னார்கள். அன்று உடனே மூகாம்பிகை கோவிலுக்குச் செல்லும் திட்டம் இருந்தமையால் நாங்கள் உடுப்பியில் தங்கவில்லை. சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் உள்ள ஜன்னல் தான் வெளியில் இருந்து பகவான் தரிசனம் கிடைக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் உள்ள ஆஞ்சனேயரைத் தரிசனம் செய்து கொண்டு வந்தால் திரும்பியதும் மத்வரின் சிலை அலங்கரிக்கப் பட்டுக் காட்சி அளிக்கிறது. எதிரே ஸ்ரீமடத்தின் பூஜை அறை. அனுமதிக்கப் பட்டவர்கள் மட்டும் போகலாம். அதன் பக்கத்தில் உள்ள வாசல் வழியே போனால் வலது பக்கம் வெளியே போகும் வாசல். இடது பக்கம் நவக்ரஹ சன்னதி மற்றும் சாப்பாடு போடும் இடம் எல்லாம் உள்ளது. நாங்கள் நவக்ரஹ தரிசனம் முடித்து வெளியே வந்து அங்கே எல்லாராலும் சிபாரிசு செய்யப் பட்ட "மித்ர சமாஜம்" என்னும் ஹோட்டலில் காலை உணவை முடித்துக் கொண்டோம். உண்மையிலேயே காலை உணவு நன்றாக இருந்தது.

பின் அங்கிருந்து கொல்லூர் நோக்கிச் சென்றோம். மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலை. அலுக்காத பயணம். வழியெங்கும் காபித் தோட்டங்கள் மற்றும் காபியின் ஊடு பயிராக ஆரஞ்சுச் செடிகள், அங்கங்கே பலா மரங்கள் காய்த்துத் தொங்கின. நல்ல அற்புதமான சுகமான பயணம்.மேலே போகப் போக மழையும் கூட வருகிறது. ஒரு மலையில் பெய்தால் இன்னோர் மலையில் பெய்வது இல்லை. மலையில் உயரத்தில் கூட தண்ணீர் கொண்டு போவதற்கான இணைப்புக்கள். எல்லாக் குழாயிலும் தண்ணீர் கொட்டுவதால் குழாய்களில் கூட்டமே இல்லை. வழியில் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் பேருந்துக்குக் காத்திருக்கிறதிப் பார்க்க முடிகிறது. நம் வண்டியைப் பார்த்ததும் கை காட்டிக் கூப்பிட்டவர்கள் அனேகம். எனக்கு எங்கே போனாலும் தண்ணீரைப் பார்த்தால் தமிழ் நாட்டின் தீராத தண்ணீர் தாகம் தான் நினைவு வரும். பத்ரிநாத் செல்லும்போதும் இப்படித்தான் எங்கும் தண்ணீர், எதிலும் தண்ணீர். மேலே தண்ணீரை ஏற்றுவதற்கு எந்த மோட்டாரின் உதவியும் இன்றி அங்கெல்லாம் தண்ணீரின் அதிவேக அழுத்தம் காரணமாக மேலே உள்ள தொட்டிகள், மற்றும் மலை மேல் உள்ள வீடுகள் எல்லாவற்றுக்கும் தண்ணீர் ஏறிவிடும். நமக்கெல்லாம் வண்டியில் வரும் தண்ணீரோ அல்லது மாநகராட்சி கொடுக்கும் தண்ணீரோ நிரந்தரமாகக் கிடைத்தால் அதுவே பெரிது. இப்படியெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

மலைகள் ஏறி இறங்கியதும் கோவிலுக்குச் செல்லும் வழி வந்தது.வண்டிகள் உள்ளே போக முடியாது என்பதால் கோவிலுக்குப் போகும் வழியிலேயே நசீர் எங்களை இறக்கி விட்டு விட்டுத் தான் கார்கள் நிற்குமிடத்தில் காத்திருப்பதாகச் சொன்னார். பொதுவாக இந்த மாதிரிக் கோவிலுக்குப் போகும்போது நாங்கள் அர்ச்சனையோ, பூவோ அல்லது பழம், தேங்காயோ வாங்கிப் போவது இல்லை. எங்களால் முடிந்ததைக் கோவில் உண்டியலில் போட்டு விடுவோம். சில கசப்பான சம்பவங்களால் இந்த மாதிரி முடிவு. கோவிலில் வரிசையில் காத்திருக்க நேரிட்டாலும் 10 நிமிடங்களில் அம்பாள் தரிசனம் கிடைத்தது. மத்தியான நேரம். ஆதலால் அம்பாள் சரஸ்வதி அலங்காரம். காலை மஹாலக்ஷ்மி, மத்தியானம் சரஸ்வதி, மாலை மஹாசக்தி என்று நினக்கிறேன். மத்தியானம் சரஸ்வதி என்பது மட்டும் நிச்சயம். நமது முன்னாள் முதல்வர் திரு M.G.R. அவர்கள் கொடுத்த வாள் அம்பாளின் வலது கரத்தில் மேல் நோக்கி வைக்கப்பட்டிருந்தது. நல்ல கூட்டம். ஆனாலும் நல்ல நிர்வாகத் திறமை இருப்பதால் நன்கு நிர்வகிக்கிறார்கள். சிலர் புத்தகங்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து அம்மன் பாதத்தில் வைத்துப் பூஜை செய்து எடுத்துப் போகிறார்கள். இதில் மலையாளிகள் தான் அதிகம். இந்தக் கோவிலின் அம்மனின் மூலசக்தி ஆதி சங்கரரால் தனியாகப் பிரதிஷ்டை செய்யப் பட்டு உள்ளது. (தாய் மூகாம்பிகை படத்தில் திருடனாக வரும் ஜெய்சங்கர் இந்த இடத்திற்குப் போனதும் தான் ஞானஸ்தனாக மாறி வருவார்.) பிரசாதம் வாங்கும் சமயம் அது பற்றிக் கேட்டதும் அதற்குத் தனிச் சீட்டு வாங்க வேண்டும் என்றும் 25ரூ/- என்றும் சொன்னார்கள். உடனே போய்ச் சீட்டு வாங்கி வந்தோம்.

வெளிப் பிரஹாரத்திலேயே அம்மன் சந்நதிக்குப் பின் புறம் ஒரு தனி அறை இருக்கிறது. பூட்டி வைத்திருக்கிறார்கள். சீட்டு வாங்கி வருபவர்களுக்குத் திறந்து காட்டுகிறார்கள். இது பற்றிப் பலருக்கும் தெரியவில்லை. கோவிலில் எல்லா மொழிகளிலும் இது பற்றி அறிவிப்பு செய்தால் நன்றாக இருக்கும். உள்ளே ஏறிப் போய் ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதையும் அவருக்கு முன்னால் ஸ்ரீசக்கரத்தையும் பார்த்தோம். ஒரு 5 நிமிஷம் அங்கே செலவிட்டோம். வெளியில் வந்தால் ஒரு கூட்டம் காத்திருந்தது. வெளியில் வந்ததும் தரிசனம் செய்யும் கூட்டம் சற்றுக் குறைவாக இருந்தபடியால் மறுபடி மறுபடி என்று ஒரு மூன்றுதரம் அம்மன் தரிசனம் செய்தோம். அங்கிருந்த ஒரு கோயில் ஊழியர் சிரித்துக் கொண்டே" ஏனும்மா இதி"என்று கன்னடத்தில் கேட்க முதல் முறையாக வந்திருப்பது பற்றிச் சொன்னோம். பிறகும் சிறிது நேரம் தரிசனம் முடித்து விட்டுப் பின் அரைமனதாக வெளியில் வந்தோம். கொல்லூரில் இருந்து "ஹொரநாடு" என்ற ஊர் போய் அங்கு உள்ளத் தங்க அன்னபூரணியைப் பார்ப்பதாக முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால் ஹொரநாடு கொல்லூரில் இருந்து சிருங்கேரி செல்லும் வழியில் இல்லை. சற்றுக் கிழக்கே இருக்கிறது. கொல்லூரில் இருந்து குறைந்த பக்ஷம் 3 மணி நேரம் ஆகும் என்றார்கள். அப்போதே மதியம் 12-க்கு மேல் ஆகிவிட்டது. ஆகவே நாங்கள் சிருங்கேரி தான் பக்கத்தில் என்று டிரைவரை சிருங்கேரியில் விட்டு விட்டுத் திரும்பும்படிச் சொல்லிவிட்டுக் காரில் ஏறினோம். வண்டி மலை ஏற ஆரம்பித்தது. போகிறோம், போகிறோம், போய்க் கொண்டே இருக்கிறோம்.

5. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 4

மே 14,2006

கோபிச்சந்தனத்தைப் பெற்றுக்கொண்ட மத்வர் ஒரு உள்ளுணர்ச்சியுடன் அதை உடைக்க அதில் இருக்கிறான் ஸ்ரீகிருஷ்ணன் ஒரு கையில் மத்துடனும் மறு கையில் கயிறுடனும். ஒரு அடி உயரம்தான் இருக்கும் என்று தோன்றுகிறது அந்தக் கிருஷ்ணன். கொள்ளை அழகுடன் இருக்கும் அவனைப் பார்த்தால் இரு கைகளாலும் வாரி அணைத்துக் கொஞ்சத் தோன்றுகிறது. நமக்கே இப்படி என்றால் கிருஷ்ண பக்தியில் திளைத்த மத்வரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஸ்ரீகிருஷ்ணனின் புகழைப் பாடிக் கொண்டே 4 மைல் தூரம் அந்த விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு உடுப்பிக்கு வர்கிறார் மத்வர். அவரால் பாடப் பட்ட அந்த ஸ்லோகங்கள் "த்வாதஸ ஸ்தோத்ரா" என்று அழைக்கப்படுகிறது. அந்த விக்ரஹத்தைப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் குளிப்பாட்டிப் பிரதிஷ்டை செய்கிறார். அந்தக் குளம் தற்சமயம் "மத்வ சரோவர்" என்று அழைக்கப் படுகிறது. கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. கோவிலின் உள்ளிருந்தும் குளத்திற்கு வரப் பாதை இருக்கிறது. பூஜை முறைகள் ஸ்ரீமத்வரால் ஏற்படுத்தப் பட்டு இன்றளவும் பின்பற்றப்படுகின்றன. பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் மத்வரால் ஏற்படுத்தப்பட்ட 8 மடங்களைச் சேர்ந்த "பால சன்யாசிகள்" என்றழைக்கப் படும் மடங்களைச் சேர்ந்த துறவிகளால் தான். இவர்களைத் தவிர வேறு எவருக்கும் பூஜை செய்யவோ இக்ரஹத்தை தொடவோ அனுமதி இல்லை.

கோவில் கேரளப் பாணி தான். ஸ்ரீகிருஷ்ண மடம் என்று அழைக்கப் படும் கோவிலில் முன் வாசலே கிடையாது. ஸ்ரீகிருஷ்ணர் மேற்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். மேற்குப் பார்த்த வாசலில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதன் வழியாக யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிருஷ்ணரைத் தரிசனம் செய்யலாம் என்பதற்காக வைத்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமாகப் பார்க்க முடியவில்லை. உள்ளே இருப்பவர்கள் கொஞ்சம் விலகினால் ஏதோ கொஞ்சம் தெரியும். அந்த ஜன்னலுக்கு முன் ஒரு சிறிய கோபுரம் உள்ளது. போது ஜனங்கள் தெற்கு வாசல் வழியாக உள்ளே செல்ல வழி வைத்திருக்கிறார்கள். மெட்டல் டிடெக்டரைக் கடந்து உள்ளே போனால் வாசலில் வலது பக்கம் இருக்கும் மத்வ சரோவரைப் பார்க்கலாம். இது கிருத யுகத்தில் "வ்ரஜ தீர்த்தம்" என்றும், "அனந்த சரோவர்" என்று முறையே த்ரேதா மற்றும் துவாபர யுகத்திலும் அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒரு முறை கங்கை இந்த தீர்த்தத்தில் பிரவாஹம் எடுப்பதாகவும் சொகிறார்கள். இந்தக் குளத்து நீரால் தான் தினமும் அபிஷேஹம் செய்யப் படுகிறான் கண்ணன்.

மெட்டல் டிடெக்டரைக் கடந்து உள்ளே போகும் நான் போகும் போதே பிரஹாரம் சுற்றி ஸ்ரீகிருஷ்ணனின் சன்னிதியை அடைகிறோம். பகவான் மிகவும் சாந்நித்தியம் உள்ளவர் என்று சொல்லப்படுகிறார். ஜீவன் இன்னும் இருப்பதாகவும் நம்பப்படுமிறது. ஆதலால் கண்ணனை நாம் நேருக்கு நேர் பார்க்க முடியாது. கண்ணனின் தரிசனம் 9 ஓட்டைகளைக் கொண்ட ஒரு ஜன்னல் வழியாகத் தான் நடைபெறுகிறது. வெள்ளித் தகடால் மூடப்பட்ட அந்த ஜன்னல் நவகிரஹ ஜன்னல் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளித் தகட்டில் மஹாவிஷ்ணுவின் 24 உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பார்க்கும்போது கண்ணன் மாடு மேய்க்கும் கோலத்தில் இருந்தான். அவன் நடையும், சடையும், எனக்கு "ஆடாது அசங்காது வா" என்ற ஊத்துக்காடு வேங்கடசுப்பைய்யரின் பாடல் தான் நினைவு வந்தது. சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக் கோவிந்தன் குழல் கொடூதினபோது, பறவையின் கணங்கள் வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கவிழ்ந்திறங்கிக் கால் பரப்பிட்டுச் செவியாட்டகில்லாவே என்று ஆழ்வார்களும் பாடியது கண்ணனை நேரில் பார்த்துத் தான் என்று புரிந்தது. என் கண்ணில் கண்ணீரை அடக்க முடியவில்லை. அந்தக் கள்வனைத் தூக்கி கொஞ்சி வேண்டுவன எல்லாம் செய்ததற்கு யசோதை செய்த தவம் மாபெரும் தவம். அது பெற்ற தாய் தேவகிக்குக் கூடக் கிடைக்கவில்லையே. பார்த்தால் நாம் கையில் தூக்கிக் கொஞ்சலாம்போல் கண்ணன். சென்னப் பட்டினம் அருகில் (இதுவும் கர்நாடகா தான். மைசூரில் இருந்து பங்களூர் வரும் வழியில் உள்ளது) தொட்டமளூர் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீராம அப்ரமேயர் கோயிலில் குடி கொண்டிருக்கும் குழந்தைக் கண்ணன் தவழ்ந்த கோலத்தில் இருக்கிறான். அவன் மூன்று முதல் ஆறு மாதத்திற்கு உட்பட்டவன் என்றால் இவன் நடக்க ஆரம்பித்து உள்ள குழந்தை. நாமும் கைப் பிடித்துக் கூடப் போகவேண்டும் என்ற ஆவல் எழுவது தவிர்க்க முடியாதது. பார்த்துக் கொண்டே இருந்தோம். கோவில் பணியாளர்கள் அப்படி ஒன்றும் அவசரப் படுத்துவது இல்லை. குறைந்தது 2 நிமிடமாவது பார்க்க அனுமதிக்கிறார்கள்.

4. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 3

மே 07, 2006

உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் முழுக்க முழுக்க சாளிகிராமத்தால் ஆனவர். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆணையின் பெயரில் விஸ்வகர்மா என்னும் தேவதச்சன் இதைச் செய்து முடிக்கிறான். துவாபரயுக முடிவில் தேவகிக்குத் தான் தன் குழந்தையான ஸ்ரீகிருஷ்ணரின் பால லீலைகளைப் பார்க்க முடியவில்லை என்று வருத்தப் படுகிறாள். தன்னைப் பெற்ற தாயின் வருத்தம் தீரக் கிருஷ்ணர் தன் தாயான தேவகிக்கு மீண்டும் பாலலீலைகளை நிகழ்த்திக் காட்டுகிறார். அதை மறைந்திருந்து பார்க்கும் ருக்மிணி அந்த பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், வெண்ணை திருடி உண்ணும் பாலகன், யசோதையிடம் திருவாய் திறந்து உலகம் காட்டிய கண்ணனின் பாலலீலைகளில் மெய்மறந்து அந்த பாலரூபம் தனக்கு தினமும் தான் பூஜை செய்து வழிபட ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கண்ணனிடமே கண்ணனைத் தருமாறு கேட்கிறாள். கண்ணனும் இசைந்து விஸ்வகர்மாவிடம் சொல்லிச் செய்து தரச் சொன்ன அந்த பாலகிருஷ்ணன் ஒரு கையில் மத்தோடும், மறு கையில் கயிறோடும் இருக்கிறான். ருக்மிணி பூஜை செய்து வந்த அந்த விக்ரஹம், அர்ஜுனன் கையில் கிடைக்க அவன் அதை ருக்மிணியின் தோட்டத்தில் மறைத்து வைக்கிறான். காலப்போக்கில் அந்த விக்ரஹம் கோபிச்சந்தனத்தால் மூடப் படுகிறது. துவாரகாவிலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு சிறிய கப்பலில் அந்த விக்ரஹம் கோபிச்சந்தனத்தால் மூடப்பட்ட நிலையில் ஏற்றப்பட்டு மேற்குக்கடற்கரைப் பகுதிக்கு வியாபாரத்திற்கு வருகிறது. உடுப்பிக்கு அருகில் "வடபண்டேஸ்வர்" என்னும் கடற்கரைப் பட்டினத்திற்கு அருகில் வரும்போது புயற்காற்று அடிக்கிறது. பகவான் ஸ்ரீமத்வருக்கு ஞானதிருஷ்டியில் கப்பலும் அதற்குள் கோபிச்சந்தனத்தால் மூடப்பட்ட கிருஷ்ணரும் தெரிகிறார்கள். உடனே அவர் கடற்கரை நோக்கி போய்த் தன் மேல்வஸ்திரத்தை வீசிக் காற்றை நிறுத்துகிறார். கப்பல் தலைவன் அவரின் புனிதம் உணர்ந்து தன் கப்பலையே அவருக்குக் காணிக்கையாக்குகிறான். ஆனால் மத்வரோ அந்த கோபிச்சந்தனத்தோடு திருப்தி அடைகிறார்.

3. மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 2

மே 07, 2006

முதல் நாள் சுப்ரமண்யாவில் இருந்து மங்களூர் திரும்பும் வழியில் மங்களூர் கோயில்கள் எல்லாம் பார்த்துக்கொண்டு வரும்போது டிரைவரிடம் மறுநாள் சீக்கிரம் வரும்படிக் கேட்டுக் கொண்டோம். அதன்படி திரு நசீரும் காலை 5-30 மணிக்கு வந்தார். நல்ல அருமையான காலை நேரம். சுகமான காற்று. பயணம் இனிமையாக இருந்தது. வழியில் நேத்ராவதி ஆற்றைக் கார் கடந்தது. கர்நாடகாவிற்கு எவ்வளவு இயற்கை வளங்களை ஆண்டவன் கொடுத்திருக்கிறான் என்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. தண்ணீருக்குக் கூடப் பிறரிடம் கை ஏந்தும் நிலையில் இருக்கும் நாம் இருக்கும் கொஞ்ச வளங்களையும் அழித்துக் கொண்டு இருக்கிறோம். தாமிரபரணி நதியை விட்டால் தமிழ் நாட்டில் உற்பத்தி ஆகும் நதி எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நேத்ராவதி ஆற்றுக்குப்பின் 2,3 இடங்களில் back water எனப்படும் இடங்களை வண்டி கடந்து "கட்டீல்" என்னும் க்ஷேத்திரத்தை நோக்கிப் போனது. மங்களூரில் இருந்து கட்டீல் 10 அல்லது 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோயில் நந்தினி ஆற்றின் நடுவில் உள்ளது. கட்டீல் என்றால் இடுப்பு என்று அர்த்தமாம். கோவில் ஆற்றின் நடுவில் அதன் இடுப்புப் போன்ற பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இந்தப்பெயர்.

ஜாபாலி முனிவரின் யாகத்திற்காக அவர் காமதேனுவின் உதவியை நாட அது தன் மகளான நந்தினியின் உதவியுடன் யாகத்தை முடிக்கச் சொல்கிறது. நந்தினியோ முனிவருக்கு உதவ மறுக்க முனிவர் அதைத் தண்ணீராக மாறும்படி சபிக்கிறார். மனம் வருந்திய நந்தினி சாபவிமோசனம் வேண்ட" நீ பூ உலகில் ஒரு நதியாக ஓடிக் கொண்டிரு. அப்போது தேவியானவள் உன் இடுப்பில் குழந்தை வடிவில் உட்கார்ந்து கொள்ளும்போது உனக்கு சாபவிமோசனம்" என்கிறார் முனிவர். தேவியை நந்தினி வேண்ட தேவியும் அருள் பாலிக்கிறாள். குழந்தை ரூபத்தில் வரும் தேவியைத் தன் இரு கைகளாலும் எடுத்து அணைத்துத் தன் இடுப்பில் வைக்க நந்தினிக்குச் சாப விமோசனம் கிடைக்கிறது. ஆனால் பூ உலக மக்களின் நன்மைக்காக நந்தினியை அதன் சக்தியை ஆறாக மாற்றி ஓடும்படி தேவி கேட்டுக்கொள்கிறாள். தானும் இந்த வடிவிலேயே ஆற்றுக்கு நடுவில் கோயில் கொள்வதாகவும் சொல்கிறாள். அதன்படி ஏற்பட்டது தான் கட்டீல் ஸ்ரீ ஜலதுர்கா கோயில்.

கோயில் கேரள பாணியில் தான் உள்ளது. தென் கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கோயில்களும் கேரள பாணியில் தான் உள்ளது. இதையும் பரசுராம க்ஷேத்திரம் என்று தான் கூறுகிறார்கள். கோயில் மட்டுமில்லாமல் வழிபாடு முறைகளும் கேரளப்பாணிதான். நாங்கள் போன போது கோயில் ஊழியர்களையும் சில உள்ளூர் பக்தர்களையும் தவிர யாரும் இல்லை. ஆகவே தரிசனம் நன்றாக இருந்தது. எல்லாக் கோயில்களிலும் நாம் வரிசையில் வரும்போதே பிரஹாரம் சுற்றி விடும்படியான அமைப்புடன் உள்ளே விடுவதால் பிரஹாரமும் சுற்ற முடிகிறது. அம்பாள் தரிசனம் முடிந்து பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தோம். அங்கேயே ஒரு ஹோட்டலில் காபி என்ற பெயரில் கொடுக்கப்பட்ட ஒரு திரவத்தைக் குடித்துவிட்டு அங்கிருந்து உடுப்பி நோக்கிப் புறப்பட்டோம்.

2.மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி - 1

ஏப்ரல் 30 2006

கடந்த 20-ம் தேதி ஆரம்பித்த எங்கள் பயணம் இன்று காலை வெற்றிகரமாக முடிந்தது.மீண்டும் ஒரு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணம். எனக்குத் தெரிந்த வரை கடவுள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உலகத்து அழகை எல்லாம் அடக்கப் பார்த்து இருக்கிறான் என நினைக்கிறேன். எத்தனை முறை போனாலும் அலுக்காத பயணம். இந்த முறை கர்நாடகாவில் மங்களூரில் தொடங்கினோம். மங்களூர் வரை ரயில் பயணம். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கிக்கொண்டு அங்கிருந்து ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு சுற்று வட்டாரக் கோவில்களுக்குப் போய் வருவது திட்டம். திட்டப்படி போய் அறை எடுத்து அங்கிருந்து ஒரு வண்டியில் வெள்ளி காலை கிளம்பினோம். எங்களுக்கு வண்டி ஓட்டி வந்த டிரைவர் நசீர் அந்தப் பகுதியைப் பூகோள முறையில் நன்கு தெரிந்து வைத்திருந்தார். அதே போல் மங்களூரில் நல்ல சாப்பாடு கிடைக்கும் இடமும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதுவும் சைவ உணவு கிடைக்கும் இடம். அதே போல முதலில் அவர் அழைத்துச் சென்ற "Janatha Deluxe" என்ற ஹோட்டலில் காலை உணவு முடித்துக் கொண்டோம். அது மங்களூரின் முக்கியப் பகுதியான ஹாப்பன்காட்{ என்று நினைக்கிறேன்.} டில் இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தூரம்தான்.நாங்கள் இருந்த "Shamoons Palace" ஹோட்டல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்னால்.அங்கிருந்தும் நடந்து போகலாம். ஜனதா டீலக்ஸ் ஹோட்டலில் காபி மிகவும் அருமை.ரொம்ப சாப்பாடு பற்றி எழுதினால் சாப்பாடு பற்றிய பதிவாக மாறிவிடும்.

மங்களூரில் இருந்து முதலில் தர்மஸ்தலா போனோம். அதுவும் கொஞ்சம் மலைவழிப் பயணம் தான். காடுகள் செழிப்பாக இருக்கின்றன. நல்லவேளை முக்கால் பாகம் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் கேரளாவிலும், கர்நாடகாவிலும் போய் விட்டன. நாம் இத்தனை நாட்கள் பொட்டலாக்கி இருப்போம். பின் மழை இல்லை, தண்ணீர் இல்லை என்று சொல்லிக் கொண்டுப் பக்கத்து மாநிலங்களிடம் கை ஏந்துவோம். அல்லது அரசு கொடுக்கும் இலவசங்களுக்கு எதிர்பார்ப்போம். இரண்டு பக்கமும் அடர்த்த்த்த்த்த்தியான காடுகள். பார்க்கவே மனதுக்கு மிக ரம்மியமாக சந்தோஷமாக இருக்கிறது. தர்மஸ்தலா நாங்கள் போய்ச் சேர்ந்த போது 10-45(காலை) மணி இருக்கும். கர்நாடகாவில் உள்ள எல்லாக் கோவில்களும் கழிப்ப றை வசதியோடு இருப்பது மிகச்சிறப்பு. எல்லா இடத்திலும் இலவசக்கழிப்பறை தான். மிகச்சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. மக்களும் கண்ட இடத்தில் அசுத்தம் செய்யப் பழகவில்லை. ஸ்ரீமஞ்சுநாத ஸ்வாமியைத் தரிசனம் செய்ய நாங்கள் வரிசையில் போய் நின்றபோது மணி 11 ஆகி இருந்தது.ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும் என்று நினைத்தோம். ஆனால் தரிசனம் கிடைக்கும் போது 2-15 ஆகி விட்டது. திருப்பதி மாதிரி கூண்டுகள் கடந்து கோவில் கிட்ட வரும்போது 1 மணி ஆகிவிட்டது. அப்போது பூஜைக்காகக் கோவில் நடை 1/2 மணி நேரம் மூடிவிட்டு 1-45 போலத்திறந்து மறுபடி உள்ளே விடுகிறார்கள். இந்த மாதிரி கோவில் நடைமுறையில் உள்ள பூஜை செய்யும் நேரங்களில் மூடிவிட்டுப் பின் 1/2 மணிக்கெல்லாம் திறக்கிறார்கள். தீபாராதனை சமயம் 3 யானைகள் வந்து மஞ்சுநாத ஸ்வாமிக்கு மிக அழகாக நமஸ்காரம் செய்கின்றன. கோவில் பிராகாரம் என்பதால் படம் எடுக்க முடியவில்லை. யானைப் பிரியையான எனக்கு அதுவே கடவுள் தரிசனம் போல இருந்தது.{ உண்மையில் நான் மிகவும் யானை நேசிப்பாளி. வலைப்பதிய வந்த கொஞ்சநாளிலேயே திருமதி துளசி அதற்கு PATENT வாங்கிவிட்டது தெரிந்ததாலும் தன் வாரிசாக பொன்ஸை நியமித்து விட்டதாலும் அடக்கி வாசிக்கிறேன்.}

கடவுள் தரிசனம் செய்ய தினமும் 25,000 பேரிலிருந்து 50,000 பேர் வரை வருவதாகச் சொன்னார்கள். கர்நாடகாவிலேயே " திருப்பதி" மாதிரி அது ஒரு முக்கிய ஸ்தலம் ஆக இருந்து வருகிறது. எல்லாக் கோவில்களிலும் இலவசமாகச் சாப்பாடு போடுகிறார்கள். சாப்பாடு என்றால் சாதம், சாம்பார், ரசம் மற்றும் மோர் மட்டும்தான். கர்நாடக வழக்கப்படி முதலில் ரசம், பின் சாம்பார் அதற்குப்பின் மோர். சாதம் நிறையப் போடுகிறார்கள். ஊறுகாய்ப்பிரியர்கள் ஊறுகாய் என்று எழுதிப்பார்த்துக் கொள்ளலாம். இந்த சாப்பாடு சாப்பிடக் கூட்டம் நிறைய இருந்தாலும் கூடங்கள் 2,000லிருந்து 5,000 பேர் வரை சாப்பிடுகிற மாதிரி மிகப் பெரியனவாய் உள்ளது. அத்தனை பேருக்கும் எவர்சில்வர் தட்டு, தம்ளர் எல்லாம் மிகச்சுத்தம், சுத்தம். சுத்தம். தண்ணீரும் நிறைய இருக்கிறது. அதை உபயோகம் செய்வதும் முறையாக இருக்கிறது. தர்மஸ்தலாவில் நேரம் ஆகிவிட்டபடியால் நாங்கள் கோவிலில் சாப்பிடவில்லை. வெளியில் சிம்பிளாக ஆகாரம் (என் கணவர் மட்டும்) சாப்பிட்டார். நான் ஜூஸ் மட்டும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சுப்ரமண்யா போனோம். அதற்குள் மாலை 4 மணி ஆகிவிட்டது. அப்பா, அம்மாவைப் பார்த்து விட்டுக் களைத்து வந்த எங்களை ஸ்ரீ சுப்ரமண்யர் கூட்டம் அதிகம் இல்லாதபடிக்குப் பார்த்துக் கொண்டார். ஆகவே மிகவும் நல்ல முறையில் தரிசனம் முடிந்தது. அதற்குப்பின் அங்கேயே காபி மட்டும் சாப்பிட்டு விட்டுத் திரும்ப மங்களூர் கிளம்பினோம். எல்லா இடங்களிலும் காபி அநேகமாகத் தரமாக இருக்கிறது. மலைப்பிரதேசங்களில் நிறைய காபி, ஏலம் செடிகள்தான் தென்படுகிறது. எல்லாவீடுகளும் கேரள முறையில் கட்டப்பட்டு தோப்புக்கள் சூழ்ந்து உள்ளன. வீடுகளில் பலா மரங்கள் காய்த்துத் தொங்குகின்றன. ரோடோரங்களில் இருந்தாலும் யாரும் வெட்டி எடுத்துப் போவது இல்லை. அதே போல மாமரங்களும் மற்றப் பயன் தரும் மரங்களும் இருக்கின்றன. யாரும் யாரோடதையும் எடுப்பது கிடையாது. அவரவர்கள் தங்களுக்கு உள்ளதை வைத்துத் திருப்தியாக இருப்பது நன்றாகத் தெரிகிறது. கோவில் கள் போடும் இலவசச் சாப்பாடு தவிர அரசாங்கம் எதுவும் இலவசமாகத் தருவதாகத் தெரியவில்லை.கோவில்களும் கேரளப்பாணி தான். பூஜை முறைகளும் அப்படித்தான். எல்லாக் கோவில்களிலும் தரிசனம் முடிந்து வந்ததும் கொஞ்சதூரத்திலேயே ஒரு அர்ச்சகர் உட்கார்ந்து கொண்டு தீர்த்தம், சந்தனம் மற்றும் அர்ச்சனை செய்த உதிரிப்பூ முதலியன தருகிறார்கள். எல்லாருமே வரிசையில் வருவதால் எந்த சிரமமும் இல்லாமல் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கிறது. கடவுள் சன்னதியில் நாம் நிறைய நேரம் தரிசனம் செய்து கொண்டு நின்றால் கோபிப்பதும் இல்லை. முடிந்த வரை 5 நிமிஷமாவது நேரம் தருகிறார்கள். அதற்குப்பின்னாலும் போக சொல்லி வேண்டுகோள் தான் விடுக்கிறார்களே தவிர விரட்டுவது கிடையாது.

சுப்ரமண்யவிலிருந்து மங்களூர் போய் அங்கே அரபிக்கடலைப் பார்த்து விட்டுப் பின் மங்களாதேவி கோவில் போனோம். கூட்டம் நிறைய இருந்தாலும் கட்டுப்படுத்துவதால் சீக்கரம் தரிசன்ம் கிடைத்தி விடுகிறது. விதிவிலக்கு தர்மஸ்தலா மட்டும்தான். வரிசையிலேயே ஆயிரக்கணக்காக காத்து இருக்கின்றனர். மங்களாதேவி கோவிலில் இருந்துப் பக்கத்தில் உள்ள கத்ரி (நம்ம கோபால்நாத் ஊரு தாங்க)போனோம். அங்கே பல படிகள் மேலே ஏறிப்போனால் பாண்டவர் குகை, சீதாதேவியின் கிணறு முதலியனவும் மற்றும் சிலப்புராணகாலச்சின்னங்களும் இருக்கிறாதாகச் சொன்னார்கள். அதற்குள் மணி 8 ஆகி இருந்தது. நாங்கள் ஒரு 30 படி ஏறினோம். ஒவ்வொரு படியும் 2 அடிக்கு மேல் உயரம். அதற்கு மேல் என்னால் முடியவில்லை. ஆகவே என்னைத் தனியாக விடமுடியாமல் (எல்லாம் ஒரு சமாளிப்புத்தான். ஊன்மையில் அவருக்கும் முடியவில்லை) திரும்பிவிட்டோம்.மற்றவை நாளை.

Friday, August 25, 2006

1 . சோதனை பதிவு

ஓம்!

சோதனை பதிவு

"குறை ஒன்றும் இல்லை கண்ணா"

கனவுகள் மெய்ப்பட வேண்டும்.