எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, September 23, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நீல கண்டர்

அடுத்து நாம் காணப் போவது நீலகண்டர். விடமுண்ட கண்டன். விஷத்தை உண்பது என்பது எளிதல்ல. ஆனால் மகேச்வரன் அதையும் உண்டான். உலக மக்கள் உய்யுமாறு அவர்கள் நலனுக்கெனத் தான் விஷத்தை உண்டான். நம்மிடம் எப்போதுமே மரண பயம் உண்டு. அதைத் தவிர மற்ற சில பயங்களும், கவலைகளும் உண்டு. எதற்கேனும் கவலைப்படுவோம். இது இல்லையே அது இல்லையே என ஏங்குவோம். இவை அனைத்தையும் வென்றாலேயே நாம் சுகித்திருக்க முடியும். ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை நம்மால். சாதாரணமான பயங்களையும், கவலைகளையும், ஏக்கங்களையும், விருப்பங்களையும் விட நம் அனைவரையும் ஆட்டிப்படைப்பது மரணபயமே. பிறந்த குழந்தை கூடப்பாதுகாப்பை நாடும். உயிரின் இயல்பு அதுவே. இந்த மரணத்தை வெல்லவே யோகியர்களும், சித்தர்களும், ஞானிகளும் சாதனைகள் செய்து வருகின்றனர். பலதரப்பட்ட தெய்வீக மூலிகைகளின் மூலம் சித்தர்கள் தங்கள் உடலை வஜ்ரம் போல் செய்துகொண்டால், யோகியர்களோ யோக சாதனைகள் மூலம் அவற்றை அடைகின்றனர்.

ஆனால் தேவர்களோ அமுதம் உண்டதன் மூலம் அமரத்துவம் பெற்றனர் என்பதைப் படித்திருக்கிறோம். தேவர்களுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. நம்மைப்போலவே அவர்களும் என்றாலும் அமரத்துவம் அவர்களை நம்மிலிருந்து வேறுபடுத்திக்காட்டும். இத்தகைய நிலையை அவர்கள் எவ்வாறு அடைந்தார்கள் என்பதைப்பார்ப்போமா! பிரஜாபதியான காச்யபரின் குழந்தைகளே தேவர்களும், அசுரர்களும். இவ்வுலக நியதிக்கேற்ப சகோதரச் சண்டை எப்போதும், எந்நேரமும். தேவர்கள் அசுரர்களுடனான சண்டையில் ஒரு சமயம் ஜெயித்தாலும் தோல்வியும் வாட்டியது. மேலும் எப்படிப்பட்ட ஆயுதங்களைப் பிரயோகித்தாலும் சிதையாத உறுதியான தேகம், இறவாப் பெருநிலை அடையவேண்டும் என யோசித்தனர்.

பிரஜாபதிக்கெல்லாம் மூலகர்த்தாவான பிரம்மனிடம் சென்று தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர். அவரோ மஹாவிஷ்ணுவைப்பிரார்த்திக்கச் சொன்னார். அவரது திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும் என்றார். அதற்கு மஹாவிஷ்ணுவின் உதவி இல்லாமல் இயலாது என்றார். அமிர்தம் கிடைத்ததோ அளவற்ற வலிமையும், இறவா நிலையும் பெறலாம் என ஆலோசனை கூறினார். தேவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவிடம் சென்று பாற்கடலைக்கடைய வேண்டும் என உதவி கேட்டு நின்றனர். மஹாவிஷ்ணுவோ பாற்கடலைத் தேவர்களால் மட்டும் தனியாய்க் கடையமுடியாது என்றும், அசுரர்களையும் உதவிக்கு அழைக்குமாறு கூறினார். அசுரர்களும் தேவர்களுக்குக் கிடைக்கப்போகும் அமிர்தத்தில் பங்கு கொடுக்குமாறு ஆகிவிடுமே என தேவர்கள் பயந்தனர். மஹாவிஷ்ணுவோ தைரியமாய் அழைக்குமாறும், அசுரர்கள் அமிர்தம் உண்ணாமல் இருப்பது தம் பொறுப்பு எனவும் உறுதி கொடுத்தார்.

அதன் மேல் அசுரர்களையும் அழைத்தனர். இருவரும் சேர்ந்து பாற்கடலைக் கடைய முடிவு செய்தனர். மத்து வேண்டுமே. மந்திரமலை மத்தானது. ஆனால் மந்திரமலையைப் பெயர்க்க முடியவில்லை. மீண்டும் மஹாவிஷ்ணு உதவிக்கு வந்தார். கருடன் மூலம் மந்திரமலை பாற்கடலுக்கு வந்து சேர்ந்தது. மத்தைச் சுற்றக் கயிற்றுக்கு எங்கே போவது?? இவ்வளவு பெரிய மலைக்குச் சாதாரணக் கயிறு போதாதே? யோசித்துவிட்டு தங்கள் சகோதர முறையாகும் அஷ்டமா நாகங்களின் ஒன்றான வாசுகியைப் போய்க் கேட்டனர். வாசுகியும் கயிறாக இருக்கச் சம்மதம் கொடுத்தது. வாசுகியை மந்தரமலையைச் சுற்றிக் கட்டித் தலைப்பக்கம் தேவர்களும், வால் பக்கம் அசுரர்களும் நிற்க அசுரர்களோ பெரும் வீரர்களும் தேவர்களை வென்றவர்களும் ஆன தாங்கள் வால்பக்கம் நிற்பது தங்கள் வீரத்துக்கு இழுக்கு எனக் கருத, மாற்றி நின்று கொண்டனர். கடைய ஆரம்பித்தனர். ஆனால் என்ன இது??

மந்தரமலை உள்ளே அழுந்தியது. அசையவே இல்லை. சுற்றிச் சுற்றி வரவேண்டாமோ? மாறாக தேவர்களுக்கும், அசுரர்களுக்குமே தலை சுற்ற ஆரம்பித்தது. யோசித்தனர். அடியில் ஏதேனும் வைத்து மலையைத் தாங்கிப் பிடித்தால் மலை உள்ளே அழுந்திக்கொள்ளாது என்ற யோசனை உருவாக என்ன செய்யலாம் என மீண்டும் யோசனை! இவ்வளவு பெரிய மலையை யார் தாங்குவார்கள்?? மஹாவிஷ்ணுவே சரணம்! பலத்த யோசனைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பின்னர் ஆமை உருவில் மந்தரமலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு மஹாவிஷ்ணு பாற்கடலுக்கு அடியே செல்ல மீண்டும் கடைய ஆரம்பித்தனர். நாட்கள் சென்றன.

ஆனால் பாற்கடலில் இருந்து எதுவும் வரவில்லை. பாற்கடலோ பொங்கித் ததும்ப ஆரம்பித்தது. வாசுகிக்கோ வலி பொறுக்க முடியவில்லை. தனது ஆயிரம் வாய்களாலும் விஷத்தைக் கக்கப் பாற்கடலில் இருந்தும் விஷம் பொங்கிப் பிரவாஹித்தது.

Saturday, August 20, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க! ஸ்ரீசரப மூர்த்தி


சரபர் நரசிம்ம மூர்த்தியோடு சம்பந்தப்பட்டவர். ஹிரண்யாக்ஷன் இறந்ததும், ஹிரண்யகசிபுவுக்கு விஷ்ணுவின் மீதும் அவர் பக்தர்கள் மேலும் அடங்காத கோபம் வந்தது. அந்தக் கோபம் நாளாவட்டத்தில் வன்மமாக மாறுகிறது. ஆகவே விஷ்ணுவின் பெயரையே குடிமக்கள் சொல்லக் கூடாது; ஆசிரியர்கள் கற்றுத்தரக் கூடாது; என்றெல்லாம் அவன் போட்ட சட்டங்களும், அதை மீறிய அவன் குமாரன் பிரஹலாதன் பற்றியும் நாம் நன்கறிவோம். பிரஹலாதனைக் கொல்ல முயற்சி செய்த ஹிரண்யகசிபுவிடமிருந்து அவனைக்காக்க வேண்டி தோன்றிய நரசிம்மம் ஆனது ஹிரண்யகசிபுவைக் கொன்று அவன் ரத்தத்தைக் குடித்த பின்னரும் கோபம் தணியாமல் இருக்கவே ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி சாந்தப் படுத்தச் சென்றாள். ஆனால் அவளாலும் இயலாமல் போகவே தேவர்கள் கவலை கொண்டனர். இதற்குச் சரியான ஆலோசனையை ஈசனாலேயே தர இயலும் என்பதால் ஈசனை நாடுகின்றனர். தன்னால் தான் நரசிம்மத்தின் கோபத்தை அடக்க இயலும் என்று ஈசன் எடுத்த வடிவமே ஸ்ரீசரபமூர்த்தி என்பார்கள். ஒரு சிலர் ஈசன் வீரபத்திரரைப்பணித்ததாகவும், வீரபத்திரரே ஸ்ரீசரபராக மாறினார் எனவும் கூறுகின்றனர். லிங்க புராணத்தில் வீரபத்திரர் சரபராக வந்ததாய்க் குறிக்கப் பட்டிருக்கும் என்றும் தெரிய வருகிறது.

எட்டுக் கால்களோடும், இரண்டு முகங்களோடும், (இரண்டும் சிங்க முகங்கள்) ஆனால் மனித உடலில் பொன்னிறமான இரு இறக்கைகள் பறவைகளைப் போலவும், சிங்கத்தைப் போன்ற கூரிய நகங்களுடன் கூடிய நான்கு கால்கள், வால் நீண்டு விலங்கைப் போலவும் காட்சி கொடுத்த இந்த அதிசய வடிவம் ஸ்ரீசரப மூர்த்தி ஆவார். இவர் பகைவர்களுக்கெல்லாம் பகைவர். நரசிம்மரையே அடக்கியதால் நரசிம்ம சம்ஹாரி என அழைக்கப் படுகிறர். ஸ்ரீ சரபரை வழிபட்டால் இவரின் அளவற்ற சக்தியால் இயற்கைச் சீற்றங்கள், பேராபத்துக்களிலிருந்து தப்பலாம் எனவும், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத நோய் அகலும் எனவும் கூறுகின்றனர். மேலும் பரிகாரம் செய்ய முடியாத எந்தக் கஷ்டமானாலும் சரியாகிவிடும் எனவும், மரண பயம் ஏற்படாது எனவும் கூறுகின்றனர்.

இந்த அதி உக்ரமூர்த்தியை ஆகாச பைரவர் எனவும் கூறுகின்றனர். இவருக்கும் ஈசனைப் போல் மூன்று கண்கள் உண்டு. சூரியன், சந்திரன் ஆகிய இருகண்களைத் தவிர அக்னி நெற்றிக்கண்ணாக விளங்குகிறது. இரண்டு இறக்கைகளையும் முறையே காளியாகவும், துர்க்கையாகவும் கூறுவார்கள். நாக்கை பூமியின் பாத வலையம் எனவும், கால் நகங்களில் இந்திரன் இருப்பதாகவும், வயிற்றில் காலாக்னியும், இரு தொடைகளும் முறையே காலன், ம்ருத்யுவாகவும் திகழ்கின்றதாய்ச் சொல்வார்கள். வலிமை வாய்ந்த சரபரைத் துதிப்பதால் கொடிய பகைவனையும் வெல்ல முடியும் என்றும், போர்களில் வெற்றி கிடைக்கும் எனவும் சொல்லப் படுகிறது. பெரும்பாலும் தெலுங்கு பேசும் ஆந்திர மாநிலத்தை ஆண்ட சாளுக்கிய மன்னர்களாலேயே ஸ்ரீ சரபர் வழிபடப் பட்டதாய்த் தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர் காலத்திலேயே சரபர் வழிபாடு பிரபலம் அடைந்ததாயும் தெரிய வருகிறது. சிதம்பரம் கோயிலில் சரபருக்கு எனத் தனி சந்நிதி இருப்பதை ஏற்கெனவே சிதம்பர ரகசியம் தொடரில் பார்த்தோம்.

இதைத் தவிர மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட கும்பகோணத்தை அடுத்த திரிபுவனத்தில் சரபருக்குத் தனி சந்நிதி உண்டு. ஆனால் முதன் முதல் கும்பகோணத்தை அடுத்த வீர சோழீச்சுரம் கோயிலில் தான் சரபருக்கு முதல் சிற்பம் அமைக்கப்பட்டதாய் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கோயிலில் ஐராவதேஸ்வரர் கோயிலின் ராஜகம்பீர மண்டபம் எனப்படும் வெளி மண்டபத்தில் ஸ்ரீ சரபரை வணங்கிய வண்ணம் நரசிம்மர் காட்சி கொடுப்பதைக் காணலாம். புகைப்படம் எடுக்க முடியவில்லை. ப்ரத்யங்கிரா எனப்படும் காளியும், சூலினி எனப்படும் துர்கையும் இவரின் சக்திகளாய்ச் சொல்லப் படுகிறது.


Wednesday, August 10, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!


பைரவர்களின் எட்டு வடிவங்களும், அவருக்கு ஏற்ற பெண் தெய்வங்களும்.

அஷ்டாங்க பைரவர்- பிராம்மி
ருரு பைரவர்- மாஹேஸ்வரி
சந்த பைரவர்- கெளமாரி
க்ரோத பைரவர்- வைஷ்ணவி
உன்மத்த பைரவர்- வாராஹி
கபால பைரவர்-நாரசிம்ஹி
பீஷண பைரவர்- சாமுண்டி
சம்ஹார பைரவர்- சண்டிகா

எட்டு பைரவர்களையும் இயற்கையின் எட்டு சக்திகளாய்க் குறிப்பிடப் படுவது உண்டு. அவை மண், விண், காற்று, நீர், நெருப்பு, சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா. இவர்களில் காசியில் இருப்பவரைக் காலபைரவர் என்று அழைப்பார்கள். ஆனாலும் காசியில் அஷ்ட பைரவர்களுக்கும் எட்டு இடங்களில் சந்நிதி இருப்பதாகவும், தீவிர சிவ பக்தர்கள் இந்த இடங்களுக்கு “அஷ்ட பைரவ யாத்திரை” செல்வதாகவும் அறிகிறோம். சீர்காழியிலும் தோணியப்பர் சந்நிதியின் வெளிப் பிரகாரத்தின் தென்பகுதியில் அஷ்ட பைரவர்களைக் காண முடியும். தமிழ் நாட்டிலும் அஷ்ட பைரவத் தலங்கள் உள்ளன. அவை செட்டிநாடு என அழைக்கப் படும் காரைக்குடிப் பக்கம் திருப்பத்தூர், அழகாபுரி, வைரவன்பட்டி, பெருஞ்சிக்கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய இடங்கள் அஷ்ட பைரவத் தலமாகப் போற்றப் படுகிறது. ஆந்திராவின் தேவார வைப்புத்தலமான ராமகிரியில் விஜய பைரவர் என்ற பெயரில் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய பைரவர் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் அறிகிறோம். அங்கே பைரவரின் பீடத்தின் கீழே பைரவ சக்கரமும் ஸ்தாபித்திருப்பதாய் அறிகிறோம்.

தமிழ்நாட்டில் பைரவ வழிபாடு மிகவும் பிரசித்தியாக இருந்தது என்பதற்கு அடையாளமாக, நாயன்மார்களில் முக்கியமானவரான சிறுத்தொண்ட நாயனார், பைரவ சமயத்தைச் சார்ந்திருப்பதை வைத்து அறிகிறோம். மேலும் இயற்பகை நாயனாரும் பைரவ சமயம் என்றும் ஈசன் இவர்களை எல்லாம் பைரவ வடிவிலேயே காட்சி கொடுத்து அருளியதாகவும் அறிகிறோம். வடுகர், க்ஷேத்திரபாலகர் போன்ற பெயர்களும் பைரவருக்கு உரியது. பழைய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே க்ஷேத்திரபாலபுரம் என்ற பெயரில் பைரவருக்குத் தனியாகக் கோயில் உள்ளது. சீர்காழிக் கோயிலில் கட்டுமலையில் தோணியப்பர் சந்நிதிக்கு மேலே உள்ள தென்கோடி விமானத்தின் தேவர் வடுகநாதர், சட்டைநாதர் என்றெல்லாம் வழங்கப் படும் பைரவரே ஆவார். ஆண் மகன் தன் குழந்தைப் பருவத்தைக்கடந்து வாலிபப் பருவத்தை எய்தும் முன்னர் இருக்கும் நிலையே வடுகன் எனப்படும். அந்தக் கோலத்திலேயே இருப்பதால் இவருக்கு வடுகநாதர் என்று பெயர்.

இந்த வடுகநாதர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் அவருக்கு அபிஷேஹம் கிடையாது. புனுகு சார்த்துவார்கள். இவருக்குப் பூஜையும் இரவு நேரத்திலேயே நடைபெறும். பெண்கள் தலையில் மலர் சூடிக்கொண்டு இவரைத் தரிசிப்பதைத் தவிர்க்கச் சொல்லுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு நேரத்தில் வடுக நாதருக்குப் புனுகு சார்த்தி, நெய்யில் வடைமாலை சாற்றி, முழுத்தேங்காயை நிவேதனம் செய்தல் சிறப்பாகச் சொல்லப் படும். மேற்கண்ட எட்டு பைரவர்களைத் தவிர ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அனைவரிலும் சிறப்பாக வழிபடுபவர். சிதம்பரம் கோயிலில் நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் இடப்பக்கம் இருக்கும் விக்கிரஹங்களில் சந்திரசேகரருக்கு அடுத்து ஸ்வர்ணாகர்ஷண பைரவர் இடம் பெற்றிருப்பார். ஒரு காலத்தில் இவரே தில்லை வாழ் அந்தணர்களின் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்ததாகச் சொல்கின்றனர். தினசரி காலை சந்நிதி திறக்கையில் அங்கே ஓர் ஓலைச்சுவடியில் பொற்காசுகள் வைக்கப் பட்டிருக்கும் எனவும், அதை தீக்ஷிதர்கள் தங்களுக்குள் குடும்பத் தேவைக்கு ஏற்பப் பிரித்துக்கொள்வார்கள் எனவும் கூறுகின்றனர். இன்றும் பணக் கஷ்டம் ஏற்பட்டால் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு அபிஷேஹ, ஆராதனைகள் செய்தல் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணம் நிறைவேற வேண்டியும் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை, அபிஷேஹம் செய்யலாம். எல்லாச் சிவன் கோயில்களிலும் தினசரி வழிபாடுகள் சூரியனில் ஆரம்பித்து இரவு பைரவரில் முடியும். என்னதான் ஈசனின் அம்சம் என்றாலும் இவரையும் ஈசனாகவே கருதுவார்கள். பைரவர் சந்நிதி கிழக்குப் பார்த்து இருப்பது நல்லதில்லை என்றும் ஐதீகம். பொதுவாக பைரவர் கோயில்களில் வடக்குப்பார்த்தே இருப்பார். தெற்குத் திசையில் சந்நிதி அமைந்திருக்கும்.

அடுத்துப் பார்க்கப் போவது சரபர், ஏனெனில் இவரும் பைரவரின் ஒரு வடிவமே எனக் கருதப்படுகிறார்.

Wednesday, July 27, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!

சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தோடு சித்தானான்”

என்று ஸ்வர்ணாகர்ண பைரவாஷ்டகம் கூறுகிறது. பைரவரின் அவதாரத்தின் காரணமும் சதுர்முகனின் தலையைக் கொய்வது தான். ஈசனைப் போலவே ஐந்து முகங்களுடனே இருந்தான் பிரம்மாவும். சதுர்முகனின் ஐந்து முகங்களையும் ஒரு சமயம் ஒரு சேரப்பார்த்த தேவியே ஈசனுக்கும், சதுர்முகனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு கண நேரம் மயங்க சதுர்முகனின் ஆணவம் தலைக்கு ஏறியது. மதிமயங்கிய சதுர்முகன் சிவநிந்தனை செய்யத் துவங்க, அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டி ஈசன் அந்த ஐந்தாவது சிரத்தைத் துண்டிக்க எண்ணி பைரவரைத் தோற்றுவித்தார். வடுகனாக, (சின்னஞ்சிறு பிரம்மசாரியை வடு என்பார்கள்) சிவந்த நிறத்துடனும், ஜூவாலை வீசும் ஜடாமுடிகளுடனும், அந்த சிவந்த ஜடாமுடியில் குளிர் நிலவான சந்திரப் பிறையுடனும், கைகளில் உடுக்கை, சூலம், ஏந்தியவண்ணம், பாசக்கயிற்றையும் ஏந்திய வண்ணம் தோன்றிய பைரவர் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுக்க அதுவும் அவர் கரங்களில் தங்கலாயிற்று. நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக மாறி வாகனமாக மாற, மூன்று கண்களோடும், இவ்வுலகையும், மற்றும் அனைவரையும் காப்பாற்றும் க்ஷேத்திர பாலகராய், பூத, பிசாசுக்கூட்டங்களுக்கும் தலைவனாய்த் தோன்றினார் பைரவர். இவரை வடுக பைரவர் என்பார்கள்.

இந்தக் கதையை பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி தேடிய கதையோடும் சம்பந்தப்படுத்தி, அதிலே பிரம்மா பொய்யுரைத்ததால் பிரம்மாவின் சிரத்தை அறுக்குமாறு கட்டளையிட்டதாயும் ஒரு கூற்று உண்டு. எப்படி இருந்தாலும் பிரம்மாவின் ஆணவத்தை அடக்கி ஒடுக்கத் தோன்றியவரே பைரவர். இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கண்டியூர் என்பார்கள். ஈசனின் அட்ட வீரட்டானத் தலங்களில் முதன்மையான வீரமும் இதுவே. முதன்மையான வீரட்டானத் தலமும் இதுவே. பிரம்மாவின் சிரத்தைக் கொய்த பைரவருக்கு இங்கே தனிச் சந்நிதி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். பிரம்மாவின் சிரத்தைக் கொய்தவண்ணம் காணப்படும் சிற்ப அதிசயம் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ளதாயும் கேள்விப் படுகிறோம். இதிலே பிரம்மா தன் ஐந்தாவது தலையை இழந்துவிட்டு அந்த பயத்துடனேயே நிற்பது போல் காட்சி அளிக்கிறார் என்றும் தெரிய வருகிறது. கொஞ்சம் கோபத்துடன் பைரவர் காணப்படுவார். இவ்வுலகைக்காக்கும் பொறுப்பை ஈசன் பைரவருக்கு அளித்திருப்பதாயும், இரவெல்லாம் தன் வாகனமும், தோழனுமான நாயுடன் பைரவர் சுற்றி வந்து காவல் புரிவதாயும் ஐதீகம்.

பைரவர் என்றாலே பயங்கரமான ஆள் என்றே அர்த்தம். பாதுகாவலர் என்பதால் பெண்கள் இவரை வழிபட்டால் பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்து காத்துவருவார். வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே இவரும் உறுதியாகத் தன் காவல் வேலையைச் செய்து வருவதால் சில இடங்களில் இவர் வைரவர் எனவும் அழைக்கப் படுகிறார். வைரவன் பட்டி என்ற பெயரில் ஒரு தலம் செட்டிநாட்டுப் பகுதியில் காண முடியும். சில இடங்களில் ஒரே ஒரு நாயுடனேயே காணப்படுவார். சிவன் கோயில்களின் வெளிபிரஹாரத்திலேயே குடி கொண்டிருக்கும் வைரவர் என்னும் பைரவரின் சந்நிதியில் கோயிலைப் பூட்டிச் சாவியை வைத்துவிடுவார் என்றும் மறுநாள் காலை வரை சாவி அந்த இடத்திலெயே இருக்கும் என்று செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.


இந்தியாவில் பைரவ வழிபாடு பிரபலமான ஒன்று என்றாலும் ராஜஸ்தானிலும், நேபாளத்திலும், காசியிலும் மிகச் சிறப்பாக வழிபடுகின்றனர். பெளத்தர்களுக்கும் பைரவ வழிபாடு உண்டு என்றும் ஒரு செய்தி தெரிவிக்கிறது. இது குறித்த உறுதியான தகவல் இல்லை. பைரவரை எட்டு விதமாக வழிபடுகின்றனர்.

கால பைரவர்
அஸிதாங்க பைரவர்
சம்ஹார பைரவர்
ருரு பைரவர்
க்ரோத பைரவர்
கபால பைரவர்
ருத்ர பைரவர்
உன்மத்த பைரவர்
கால பைரவர் தான் சனி பகவானின் குரு என்றும் கருதப்படுகிறார். சிங்களத்திலும் பைரவ வழிபாடு உண்டு. சொத்துக்களைப்பாதுகாப்பவராய்க் கருதப் படுகிறார். தமிழ்நாட்டிலோ வைரவர் என்ற பெயரில் எட்டுத் திக்கையும் காக்கும் கிராம தேவதையின் உருவிலோ, அல்லது வைரவர் என்ற பெயரிலோ வணங்கப் படுகிறார். சிவ வழிபாட்டின் அகோர வழிபாடு என்னும் பிரிவில் பைரவர் முக்கியமான அங்கம் வகிக்கிறார்.

Tuesday, July 19, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!

அஞ்சையும் அடக்கி ஆற்றலுடையனாய் அநேக காலம்
வஞ்ச மிள் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்களாகி விசையொரு பாயுங்கங்கை
செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!

திருநாவுக்கரசரின் இந்தப் பாடல் ஐம்புலன்களையும் அடக்கித் தவம் புரிந்து கங்கையை விண்ணிலிருந்து மண்ணுக்குக் கொண்டு வந்த பகீரதனின் எல்லையற்ற ஆற்றலையும் பகீரதனுக்காகப் பன்முகங்களுடன் விரைந்து வந்த கங்கையையும் திருச்சேறை என்னும் ஊரில் உள்ள ஈசன் தன் செஞ்சடையில் ஏற்று அருள் புரிந்ததாகப் பாடி இருக்கிறார். இந்தத் திருச்சேறையில் தான் ஸ்ரீருணவிமோசன லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதை அறிந்து பார்க்க வேண்டிச் சென்றோம். சென்ற சமயம் கோயிலில் குருக்கள் இல்லை. வரக் கொஞ்சம் நேரம் ஆகும் என்றதால் அரை மணி போல் காத்திருந்துவிட்டுத் திரும்பிவிட்டோம். கருவறையை லேசாய் மூடி இருந்தனர். அதில் உள்ள இடைவெளி மூலம் தரிசனம் செய்து கொண்டோம். சுயம்புலிங்கம் என்று சொன்னார்கள். மேலும் இந்தக் கோயிலில் துர்க்கைக்கு மூன்று சந்நிதிகள் காணப்பட்டன. இங்குள்ள பைரவரும் அப்பரால் பாடப்பட்டவர் என்றார்கள். பைரவரைக்குறித்த பாடல்,

“விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடுதமருங்கை
தரித்ததோர் கோலே கால பைரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!”

இவ்வண்ணம் பூமிக்கு வந்தாள் கங்கை. இமவானின் மூத்தமகளாகக் கருதப் படும் கங்கையைத் தன் சடையில் ஈசன் தாங்கிக்கொண்ட கோலமே ஸ்ரீகங்காதரர் ஆகும். கங்காதரரின் திருவுருவம் யோகபட்டத்தோடு, ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் விரிசடையில் ஆமை, மீன், முதலை போன்ற உயிரினங்களோடு கங்கையின் திருமுகம் காணப்படும் என்றும் ஈசனின் கரங்கள் மான், மழுவைத் தாங்கி, சின் முத்திரை காட்டிய வண்ணம் இன்னொரு கீழ்க் கை வரத முத்திரையும் காட்டிக்கொண்டு காட்சி அளிக்கும் என்று வர்ணிக்கப் படுகிறது. இந்தப் படம் கிடைக்கவில்லை. மீன்களோடு ஒரு படம் இருந்தது. அதையும் கூகிளில் தேடினேன். வரவில்லை. 

ஈசன் தன் செஞ்சடையில் இருந்து கங்கையை எடுத்து வெளியே விடும் வண்ணம் காட்சி அளிக்கும் திருவடிவங்களே பல ஆலயங்களிலும் காண முடியும். அருகே சற்றே முகத்தைத் திருப்பிய வண்ணம் எழிலார்ந்த கோலத்தில் அன்னையும், வணங்கிய நிலையில் பகீரதனும் காணப்படுவார்கள். நந்தி ஈசன் விடும் கங்கை நீரை வாங்கி உமிழும் கோலத்தில் காணப்படுவார். மிக அரிய சிற்பம் இது. இன்னும் காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயில், புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களிலும் காணமுடியும். இதிலே காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் பலமுறை தரிசித்தும் சரியாய் நினைவில் இல்லை. அதேபோல் மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாளையும் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகின்றன.  ஆனால் கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலிலும், தாராசுரத்திலும், திருவிடைமருதூரிலும் இருப்பதாய்க்கேள்விப்படுகிறோம். அடுத்த முறை அங்கே செல்லுகையில் கட்டாயமாய்ப் பார்த்துப் படங்கள் எடுத்து வரவேண்டும். சிதம்பரத்தில் கங்கைக்குத் தனியே சந்நிதி உண்டு.


அடுத்து நாம் காணப் போவது நெடுநாளாகக் காண வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீகாலபைரவர். பைரவர் ஈசனின் பல்வேறு வடிவங்களில் மிக முக்கியமானவர். இவரே கோயில்களின் பாதுகாப்புக்கும் உரிய கடவுள் ஆவார். ஈசன் கோயில்களை பைரவரே காத்து வருவதாக ஐதீகம். முன்காலங்களில் கோயில்களைப் பூட்டிச் சாவியை வெளிப் பிராஹாரத்தில் காணப்படும் பைரவர் சந்நிதியில் வைத்துவிடுவார்களாம். பைரவர் தன் வாகனம் ஆன நாயுடன் கோயிலைச் சுற்றி உலா வந்து கொண்டிருப்பார் என்றும் பலர் கண்களிலும் பட்டிருக்கிறார் என்றும் கூறுவார்கள். சிதம்பரத்தில் பைரவர் தனம் தருபவராக இருந்திருக்கிறார். தில்லை வாழ் அந்தணர்கள் தங்கள் பிழைப்புக்குப் பணமோ, பொருளோ இல்லாமல் வருந்த ஈசன் பைரவருக்கு ஆணை யிட ஒவ்வொரு நாளும் இரவில் பைரவர் பொற்காசுகளை நடராஜர் சந்நிதியில் வைத்து விடுவார் என்றும் அதைக் காலையில் அன்றாட வழிபாட்டுக்கு வரும் தீக்ஷிதர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வார்கள் என்றும் சிதம்பரம் வாழ் தீக்ஷிதர்கள் கூறுவார்கள். சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதிக்கு அருகேயே கீழ்ப்பக்கமாக பைரவருக்கும் தனி இடம் உண்டு. அவருக்கு அபிஷேஹமும் உண்டு. இங்கே பைரவருக்கு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர். இனி பைரவர் குறித்த செய்திகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம்.

Sunday, July 10, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!


பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி, கங்கை பூமிக்கு வந்து பாதாளத்துக்கும் பாய்ந்து அவர்களை மோக்ஷம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டான். கங்கை, “அப்பா, பகீரதா! உன் நோக்கம் மிகவும் பெருமைக்குரிய ஒன்றே! நானும் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்குவாளா? அவளால் இயலாது. நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்ய முடியுமா உன்னால்? அப்படி எனில் நான் வருகிறேன்.” என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும், பூமியின் மகா பராக்கிரம சாலிகளையும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்தனர். பின்னர் மஹாவிஷ்ணுவை பகீரதன் வேண்ட, அவரோ, “இது ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெற்று அவர் மூலம் கங்கையை வரவழை.” என்று கூறிவிட்டார்.

பகீரதனும் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்ட, மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்தார். “பகீரதா, உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம்; உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும், உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கையை பூமிக்கும், பின்னர் பாதாளத்துக்கும் அழைத்து வர நான் உதவுகிறேன். எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன்.” என்றார். பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க, அவளும் மகிழ்வோடு வரச் சம்மதித்தாள். “ஹோ” வென்ற ஆரவாரமான சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்தாள் கங்கை. ஈசன் தன் சடையை விரித்துப் பிடிக்க, கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. ஆஹா, நம் வேகம் என்ன? இந்த சடாபாரத்தின் பலம் என்ன?? இதனால் நம்மைத் தாங்க இயலுமா என்ன? என் ஆற்றலையும், வேகத்தையும் இந்தப் பிக்ஷாடனனால் தாங்க இயலுமா?” என யோசித்தாள்.

எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டம் புரிந்து கொண்டவராய், நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார் சுருட்டி. திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவிக்க, பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைய, ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான். அவன் முன் தோன்றிய ஈசன், கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு, கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட, கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் தன் நீர்க்கரங்களால் அந்த ஆசிரமத்தை முற்றிலும் உருட்டித் தள்ளிக்கொண்டு முனிவரையும் நீர்ப்பெருக்கோடு உருட்டித் தள்ள ஆயத்தமானாள்.

கோபம் கொண்ட முனிவர், கங்கையை அப்படியே தன் கைகளால் எடுத்து அள்ளிக் குடித்து ஆசமனம் செய்துவிட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும், கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் எலும்புகள் மற்றும் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான். சகரபுத்திரர்களுக்கு நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்ததாக ஐதீகம். இந்தக் கங்கையைத் தலையில் தாங்கிய ஈசனே கங்காதரர் எனப்பட்டார்.

Sunday, July 03, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!

அடுத்து நாம் காணப் போவது கங்காதரரை. கங்கையை ஈசன் தலையில் சுமந்த காரணத்தையே இப்போது நாம் அறியப்போகிறோம். இக்ஷ்வாகு குலத்து அரசன் ஆன சகரனுக்கு முதல் மனைவி மூலம் இரு மகன்களும், இரண்டாம் மனைவி மூலம் அறுபதினாயிரம் புதல்வர்களும் இருந்தனராம். சகரன் அஸ்வமேத யாகம் செய்ய உத்தேசித்து, அஸ்வமேதக் குதிரையை நன்கு அலங்கரித்து மூவுலகையும் சுற்றிவர அனுப்பி வைத்தான். அந்தக் குதிரையை தேவேந்திரன் கவர்ந்து கொண்டு சென்று பாதாளத்தில் ஒளித்து வைக்கிறான். ஒளித்து வைத்த இடம் கபில முனிவரது ஆசிரமம். இந்த விஷயம் சகரனுக்குத் தெரியாது. குதிரையைக் காணோமே என்று தேடுகிறான். யாகத்திற்கு எனக் காப்புக் கட்டிக் கொண்டுவிட்டான். ஆகவே யாகசாலை எல்லையைத் தாண்டி அவன் செல்ல முடியாது. ஆகவே தன் அறுபதினாயிரம் புதல்வர்களையும் குதிரையைத் தேடி வரும்படி அனுப்பி வைக்கிறான்.

தேவலோகத்திலும், பூலோகத்திலும் குதிரையைத் தேடிக் காணாமல் ஏமாற்றம் அடைந்த சகரனின் புதல்வர்கள், கடைசியில் பாதாளத்திற்கு வருகின்றனர். அங்கே கபில முனிவரது ஆசிரமத்திற்கு அருகே குதிரை இருப்பதைக் கண்டு அங்கே சென்றனர். குதிரையைக் கபிலர் தான் பிடித்து வைத்திருப்பாரோ எனச் சந்தேகமும் கொண்டனர். இவர்களின் தேடுதலாலும் அத்து மீறி நுழைந்ததாலும் கோபம் கொண்ட கபிலர் அவர்களைச் சாம்பலாகும்படி சபிக்க, அவர்களும் அப்படியே எரிந்து சாம்பலாயினர். தன் புதல்வர்கள் திரும்பி வராததைக் கண்ட சகரன், அடுத்துத் தன் பேரன் ஆன அம்சுமான் என்பவனை அனுப்பி வைக்கிறான். அனைவரையும் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி சொல்லி அனுப்பி வைத்தான். அம்சுமானும் கிளம்பி விண்ணிலும், மண்ணிலும் குதிரையைத் தேடிவிட்டுப் பின்னர் பூமிக்கு அடியில் பாதாளத்தில் செல்ல வேண்டி அஷ்ட நாகங்களையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு அவற்றின் உதவியோடு பாதாளத்தை அடைந்தான். அங்கே கபிலரின் ஆசிரமத்தையும் அடைந்தான். அங்கே சென்று கபிலரை வணங்கிப் பணிந்து தான் வந்த காரியத்தைக் கூற மனம் வருந்திய கபிலர் தாம் அவர்களை எரிந்து சாம்பலாகும்படி சபித்ததைக் கூறி வருந்தினார். யாகக் குதிரையையும் அம்சுமானிடம் திரும்பக் கொடுத்தார். முனிவரின் செய்தியோடு ஆசிகளையும் பெற்றுக்கொண்ட அம்சுமான் குதிரையை ஓட்டிக்கொண்டு வந்து தன் பாட்டன் சகரனிடம் ஒப்படைத்தான். மனம் வருந்திய சகரன் தன் பிள்ளைகளின் நிலையைக் குறித்தும் அவர்களின் கதியை நினைத்தும் மனம் வருந்தினாலும் யாகத்தை நிறுத்தாமல் முடித்துவிட்டுப் பின்னர் பிள்ளைகளின் நற்கதிக்குத் தவம் இருந்தான், அவன் கோரிக்கை நிறைவேறாமலேயே இறந்தும் போனான்.

அதன் பின்னர் பேரன் அம்சுமான் பல காலம் ஆண்டு விட்டுத் தன் குமாரன் திலீபனுக்கு அரசாட்சியை அளித்தான். இறந்த முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்கத் தவம் மேற்கொண்டும் இருவராலும் அது நிறைவேறவே இல்லை. திலீபன் தன் மகன் பகீரதனுக்கு அரசுரிமையை அளித்துவிட்டு இறந்தான். பகீரதன் வழிவழியாகச் சொல்லி வந்த தன் குலத்து முன்னோர்களின் கதையைக் கேட்டிருந்தான். ஆகவே அவன் தன் முன்னோர்களுக்காகத் திருக்கோகர்ணத்தில் தவமிருந்து பிரம்மனை வேண்டினா. அவன் தவம் மிகக் கடுமையாக இருக்கக் கடைசியில் பிரம்மா தோன்றி அவனை வாழ்த்தினார். பின்னர் அவனிடம் அவன் குலத்து முன்னோர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் விண்ணில் ஓடும் கங்கையை பாதாளத்திற்குக் கொண்டு வந்து அந்தப் புனித நீரால் சாம்பலைக் கரைத்து எலும்புகளை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று ஆலோசனையும் கூறுகிறார்.