குதிரை கனைக்கவும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. குதிரை நல்ல உயரம். என் கணவரின் கணிப்பிலே அது 7 முதல் 8 அடிக்குக் குறையாது. எனக்கோ இமயமலை அளவு உயரமாய்த் தெரிஞ்சது. நல்ல வெள்ளை நிறம். நல்ல அடர்த்தியான வால் நேர்த்தியான அலங்காரம். குதிரைக்கு முகத்திலும் அலங்காரம். உட்காருமிடத்திலும் நல்ல மெத்தென்று தான் துணிகள் போடப் பட்டிருந்தன. உட்காரக் கால் வைத்து ஏறும் சேணம்? சேணம் என்ற வார்த்தை சரியா இது? தெரியலை. ஏறும் வளையம் தரையில் இருந்து மூன்று அடி உயரத்தில் .இருந்தது.என் வலது கால் ஏற்கெனவே சரியில்லை. நடக்கும்போதே மடிந்து விடும். வலது காலைத் தூக்கி வைத்து ஏறமுடியாது. இடது காலைத் தூக்கி ஏற வசதியாக இல்லை.என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்தேன். குதிரைக்காரியோ அவசரப் படுத்திக் கொண்டிருந்தாள். நான் என் கணவர் வரட்டும் இரு என்று அவளிடம் எவ்வளவோ ஜாடை செய்து சொல்லியும் அவள் புரிந்து கொள்ளவே இல்லை. ஏதோ நான் பிறந்தது முதல் குதிரையிலேயே சவாரி செய்து வந்தவள் என்று எண்ணிக் கொண்டாள் போல் இருக்கிறது. இவர் எங்கே போனார் என்று பார்த்தால் ஆள் விலாசமே தெரியவில்லை. அதுக்குள்ஏறிப் பார்க்கலாம்னு முயற்சி செய்தால் என்னால் காலைத் தூக்கி வைக்கவே முடியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. நான் தயங்கிக் கொண்டிருந்த போது அந்தப் பெண் திடீரென திபெத்திய மொழியில் ஏதோ கத்தினாள். என்னவென்று புரிந்து கொள்வதற்குள் நான் குதிரையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி ஆட்கள். அப்புறம் ஒரு வழியாகப் புரிந்தது. அந்தப் பெண் கூட வந்தவர்கள் உதவியுடன் என்னைக் குதிரையில் ஏற்றி இருக்கிறாள் என்று. நான் சுதாரித்துக் கொள்வதற்குள் குதிரை கிளம்பி விட்டது. அப்பவும் என் கணவரைத் தேடினேன். அந்த நீண்ட, வளைந்த மலைப்பாதையில் அவர் வருகிறாரா இல்லையா எனவே தெரியவில்லை. குதிரை வேக நடை போட்டது. கூடவே அந்தப் பெண்ணும் வேக நடை போட்டாள். அவளுடைய சிறிய பாதங்கள் அந்தக் கல்லிலும், பாறையிலும் சற்றும் தடுமாறாமல் போய்க் கொண்டிருந்தது.
குதிரைக்காரர்களில் ஒருத்தர் நடந்து போகும் அலுப்புத் தெரியாமல் இருக்க ஏதோ ஒரு நாட்டுப் புறப்பாடலை ஆரம்பிக்கப் பின் அந்தப் பெண்களும் கூடவே அதற்குத் தகுந்தாற்போல பாட ஊர்வலம் போல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் எனக்கு உள்ளூறத் திகில். பாதை சரியான மலைப்பாதை. பாறைகளும், கற்களும் நிறைந்தது. பாறைகள் என்றால் பாறைகள். குதிரை அவற்றை எப்படித்தான் மிதித்துக் கொண்டு போனதோ தெரியவில்லை. மிகக் குறுகலான பாதை. குதிரையின் காலடியும், அந்தப் பெண்களின் காலடியும் மட்டும் வைக்கலாம். அவ்வளவு குறுகலான பாதை. ஒரு பக்கம் நெடிதுயர்ந்த மலைச் சிகரங்கள். இடது பக்கமாய்க் கரைக்குக் கீழே பல அடி ஆழத்தில் "வைதருணி நதி" கிட்டத் தட்ட 200 முதல் 250 அடி வரை அகலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆழம் என்னவோ தெரியாது. நதி வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. நதியின் மறு கரையில் மலைச் சிகரங்கள் காலை வெயிலில் பள பளக்கின்றன. அவற்றின் பிரதிபலிப்பின் வேகத்தைப் பார்த்ததும் கண்கள் கூசும். ஆகவே தான் கறுப்புக் கண்ணாடி அவசியம்.
குளிருக்கான ஆடை அணிகள், இவற்றோடு நடப்பதே சிரமமாக இருக்கும் அந்த மலைப்பாதையில். இதிலே குதிரை மேலே வேறே போவது என்றால் கேட்கவே வேண்டாம். எனக்கு முன்னால் தெலுங்கு எழுத்தாளப் பெண்மணி ஸ்ரீலட்சுமி போய்க் கொண்டிருந்தார். அவருடைய தோழிகளும் முன்னால் போனார்கள். எனக்குப் பின்னால் திரு வெங்கடேசன், திரு ராமச்சந்திரன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். என்னோட உதவிக்கு வரும் ஆள் எங்கேயோ முன்னால் போய்க் கொண்டிருந்தான். எல்லாரும் அவனைக் கூப்பிட்டுக் கிட்ட வைத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அவன் வந்தால் தானே. குதிரை போகும் திசைக்கு நேர்மாறாக ஆறு ஓடுகிறது. குதிரையில் போய்க் கொண்டே ஆற்றைப் பார்க்கும்போது அந்தக் கரையில் இருக்கும் பெரிய பெரிய மலைகளும் கூடவே நகர்கிற மாதிரி ஒரு பிரமை. எனக்குத் தானா எல்லாருக்குமா தெரியவில்லை. முன்னால் பார்த்தால் மலை ஏறும் பாதை. பின்னால் பார்த்தாலோ மலை ஏறி வந்த பாதை ஆழத்தில் தெரியும். பக்கவாட்டில் வலது பக்கமாய்ப் பெரிய பெரிய மலைகள். இடது பக்கமாய் ஓடும் நதி. எங்கே பார்ப்பது? இயற்கையை ரசிக்க வேண்டும் என்று நினைத்தாலும், இந்த மனக்குரங்கானது பயத்தையே ரசித்து வர ஆரம்பித்தது.
சில கி.மீ தூரம் போனதும் நதி அங்கே ஒரு சிறு கிளையாக இரண்டு மலைகளுக்கிடையில் பிரிகிறது. அங்கே இறங்கி ஒரு கி.மீ. வரை நதியில் போய்ப் பின் மறுபக்க மலையில் மேலே ஏற வேண்டும். குதிரை இறங்க ஆரம்பித்தது.குதிரை இறங்கும்போது நாம் பின்னால் சாய்ந்து கொள்ளவேண்டும் என்றும் குதிரை ஏறும்போது முன்னால் சாய வேண்டும் என்றும் ஏற்கெனவே சொல்லி இருந்தார்கள். பின்னால் சாயும் என் முயற்சியில் கால் வளையத்தில் இருந்து விடுபட்டது. எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. என்னுடைய உதவி ஆளைக் கூப்பிடுமாறுக் கூட வந்தவர்களிடம் சொல்ல அவர்களும் அப்படியே செய்தார்கள். அவன் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலை ஆட்டி விட்டுப் பின் போய் விட்டான். என்ன செய்வது என்றே புரியவில்லை. நாமாகச் சரி செய்து கொள்வோம் என்று குனிந்து பார்த்தேன். வளையத்தில் காலை மாட்டிக் கொள்ள முயற்சி செய்தேன். அடுத்த நிமிஷம் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தேன்.
3 comments:
ஆஹா வேதா(ளாம்)வுக்கு நடந்த மாதிரியே நடந்துடுத்து.இப்போ இருப்பதே கிட்ட தட்ட ஆகாயம்தான் இன்னும் ஆகாயம் என்றால்... சி.ஐ.டி. சந்துரு வேலை மாதிரி முக்கியமான் இடத்தில் என்ன ஸஸ்பென்சு?
ஹிஹிஹி, முக்கியமான் இடத்தில் சஸ்பென்ஸ் கொடுத்தால் தான் நாளைக்கு வந்து படிப்பீங்க. இல்லாட்டி இதற்கு வாசகர்கள் வேண்டாமா? கொஞ்சம் பொறுங்க, இன்னிக்கும் எழுத முடியாது. நாளைக்குத் தான்.
//வளையத்தில் காலை மாட்டிக் கொள்ள முயற்சி செய்தேன். அடுத்த நிமிஷம் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தேன்.//
Aiyoo Mami!Neegalum suspence vaika arambichuteenga.(sorry for the thanglish.Could not access that tamil typing immediately).
Very interesting.--SKM
Post a Comment