எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, January 04, 2007

ஓம் நமச்சிவாயா-25.

இப்போ மறுபடி நாம் நம்ம பயணத்தைத் தொடர்கிறோம். தார்ச்சன் காம்பில் இருந்து திருமதி ஸ்ரீலட்சுமியின் உறவினர்கள், மற்றும் ட்ராவல்ஸ்காரர் ஒருத்தர், விசா கொடுக்குமிடத்தில் உதவ ஒருத்தர், மற்றும் குழுவில் இருந்து வெங்கடேசன் என்ற மும்பையில் இருந்து வந்த நண்பரின் தம்பி திரு வரதராஜன் ஆகியோர் போலீஸ் விசாரணை முடித்து உடனேயே ஸ்ரீலட்சுமியின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டுக் காட்மாண்டு கிளம்ப ஏற்பாடு செய்வதற்காக திரு மனோஹர் மற்றும் திரு கிருஷ்ணா ஆகியோர் தங்க, மற்ற குழுவினர் எல்லாரும் அவரவர் வந்த வண்டிகளில் ஏறி "அஷ்டப்த்" எனப்படும் எட்டு மலைகளுக்கு நடுவில் "திருக்கைலை"யும் அதன் எதிரே "நந்தி பீடம்" எனப்படும் நந்தி மலையின் தரிசனமும் பார்க்கப் புறப்பட்டோம். சற்றுச் செங்குத்தான மலை, குறுகலான பாதை. ஏற்கெனவே எல்லாரும் பரிக்ரமாவினால் சற்றுக் களைப்பாக இருந்தார்கள்.ஸ்ரீலட்சுமியின் மரணமும் சேர்ந்து கொண்டதால் எல்லார் மனதிலும் இனம் சொல்ல முடியாத பயம் நிழலாடியது. மேலும் அங்கே செய்ய வேண்டிய பூஜைகள், மற்றும் யாத்திரை முடிவில் செய்ய வேண்டிய பூஜைகள் என்று எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் எல்லாரும் புறப்பட்டோம்.

நல்ல உயரமான மேல் மலைக்குப் போன பின் ஒரு சமவெளி. அங்கே ஒரு ஆறு ஓடுகிறது. அது மானசரோவருக்குப் போவதாய்ச் சிலரும் இல்லை, கங்கா என்று சிலரும், பிரம்மபுத்ரா என்று சிலரும் சொன்னார்கள். எங்கள் டிரைவர் திபெத்திய மொழியில் சொன்னது எங்களுக்குப்புரியவில்லை. எங்களுடன் துணைக்கு எங்கள் ட்ராவல்ஸ் குழுவில் இருந்து யாரும் வர முடியவில்லை. அவர்கள் இன்றிரவு நாங்கள் தங்கும் மானசரோவர் கரையில் டெண்ட் போட்டுத் தங்குமிடம் அமைக்கும் பணிக்காகப் போய் விட்டார்கள். ஆகவே சொல்ல யாருமில்லை. குன்றின் உச்சியில் ஒரு பெளத்த ஆலயமும், திபெத்திய வழக்கப் படி முக்கோண முறையில் கட்டப் பட்ட கொடிகளும் இருந்தன. எல்லாரும் மேலே போனார்கள். என்னால் ஏற முடியவில்லை என்பதால் நான் ஏறவில்லை. எங்கள் டிரைவர்கள் எல்லாரும் அந்த நதியில் இறங்கி அத்தனைக் குளிரிலும் குளித்தார்கள். அவர்கள் குளியலே வேடிக்கையாக இருந்தது. ஒண்ணு,தலையை மட்டும் நனைத்துக் கொள்கிறார்கள் அல்லது பாதி உடலுக்குக் குளிக்கிறார்கள். அந்த மாதிரித் தான் சிலர் தலை மட்டும் நனைத்தும், சிலர் பாதி உடலுமாகக் குளித்தார்கள். நீர் நிரப்பிக் கொண்டார்கள். பின்னர் கைலை எதிரேயே ரொம்பக் கிட்டத்தில் இருக்கிறாப்போல் தெரிகிறது. ஆனால் போக 2 நாள் ஆகும் என்றார்கள். கைலை தரிசனம் முடித்து எதிரே உள்ள சிறிய பலிபீடம் போன்ற குன்றையும், அதற்கு எதிரே நந்தியின் தரிசனமும் (ஒரு குன்று தான் நந்தி போல் அமைப்பில் உள்ளது.) முடித்துக் கொண்டு எல்லாரும் கீழே இறங்கினோம். வண்டி ஒரு மயிரிழை நகர்ந்தாலும் கீழே அதல பாதாளம் தான். அவ்வளவு குறுகல். மேலும் நாங்கள் இத்தனை நாள் மலை ஏறி வந்த பாதை ஒன்றுமே இல்லை என்பது போல் ஒரே கற்களும், பாறையும், புழுதியும் உள்ள சாலை. ஏதோ போட்டிருக்கிறார்கள் தர்மத்துக்கு. பாதை என்ற பெயர் அவ்வளவு தான். கைலை வழி பூராவும் இப்படித்தான் பாதை இருக்கிறது. முந்தைய மத்திய அரசு இதற்குக் கொஞ்சம் வசதியான வழியாக மாற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்ததாயும், அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் சில எதிர்பாராத நிகழ்வுகளினாலும்,அரசியல் காரணங்களாலும் அதை நடைமுறைப் படுத்த முடியவில்லை எனவும், பின் ஆட்சி மாறி விட்டது எனவும் எங்கள் ட்ராவல்ஸ் குழுவின் பணியாளர்கள் கூறினர்.

"அஷ்டபத்"தில் இருந்து நாங்கள் கிளம்பி அன்று தங்க வேண்டிய இடமான மானசரோவர் ஏரிக்கரையை அடைந்தோம். இது மற்றொரு பக்கம். இதன் ஃபோட்டோ எடுத்தால் இந்தப் பக்கம் வரவில்லை. மறுபடி முயற்சி செய்கிறேன். இந்தப் பக்கம் ஏரிக்கரை கடற்கரை மாதிரி ஒரே மணலாக இருக்கிறது. நீண்ட கடற்கரை போன்ற அமைப்பு மட்டுமல்லாமல் ஏரித் தண்ணீரே அலை அடித்துக் கொண்டிருந்தது. இங்கே தான் பூஜைக்கு உகந்த கற்கள் கிடைக்கும் என்றும் சிலருக்கு லிங்கம் போன்ற அமைப்புள்ள சிற்பமே கிடைக்கும் என்றும் சொல்லி இருந்ததால் எங்கள் குழுவினர் சிலரும், என் கணவரும் லிங்கம் தேடப் போய்விட்டார்கள். மேலும் மானசரோவர் தீர்த்தம் எடுக்க என்று எல்லாரும் கிளம்பும்போது ட்ராவல்ஸ்காரர்களின் உதவி ஆள் ஒருத்தர் தாங்கள் நிறைய தண்ணீர் எடுத்து வைத்திருப்பதாயும், காட்மாண்டு வந்ததும் எல்லாருக்கும் ஒரு 5 லிட்டர் கேனில் தண்ணீர் கிடைக்குமென்றும் சொல்லவே சிலர் திரும்பி விட்டார்கள். ஆனால் என் கணவர் எதற்கும் இருக்கட்டும் என்று தண்ணீர் எடுத்து வரப் போனார். அப்போது எங்கள் டிரைவர் அங்கே இறங்க வேண்டாம் எனவும், ஆழம் அதிகம் என்றும் ஜாடையில் சொல்லித் தான் தண்ணீர் பிடித்து வைப்பதாய்ச் சொல்லிக் கேனை வாங்கிப் போய் அவர் தண்ணீர் பிடித்து வண்டிக்குள் வைத்து விட்டார். இது எவ்வளவு நல்லது என்று காட்மாண்டு போய்த்தான் எங்களுக்குப் புரிந்தது. அன்று எங்களுக்குத் தங்குமிடத்திற்கு மட் ஹவுஸ் எனப்படும் களிமண்ணால் கட்டிய வீடுகள் 2 மட்டுமே கிடைத்ததால், அதில் என்னைப் போல் உடல் நலம் சரியில்லாதவர்களைத் தங்க வைத்து விட்டு மற்றவர்கள் வெளியே டெண்டில் தங்க வைக்கப் பட்டார்கள். இந்த இடத்தில் மட் ஹவுஸுக்கு உள்ளேயே குளிர் தாங்க முடியவில்லை. டெண்ட்டில் உள்ளவர்கள் எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். ஒரு வழியாக அன்றிரவு முடிந்து நாங்கள் மறு நாள் "பர்யாங்" செல்ல (திரும்பும் வழியில் வரும் முதல் ஊர்) தயார் செய்து கொண்டோம். திரு கிருஷ்ணாவும், திரு மனோஹரனும் அதற்குள் வந்து விட்டார்கள். எங்களுடன் வண்டியில் ஆரம்பம் முதல் வந்த பிரெஞ்ச் வாலிபர் மற்ற வெளிநாட்டுக் காரர்களுடன் சேர்ந்து கொண்டதால் எங்கள் குழுவின் தலைமைச் சமையல்காரப் பையன் எங்களுடன் வந்தார். வண்டியும் கிளம்பியது. இரவு சரியாகத் தூங்க முடியவில்லை அதிகக் குளிரால். எங்களிடம் மிகுந்த "ரெட்புல்" பானத்தை (நாங்கள் இருவரும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை) எங்கள் டிரைவரிடம் கொடுத்தோம். வண்டியில் ஏறினதும் எங்களுக்குத் தூக்கமாக வந்தது. சற்று ஆட்டம் போட்டுக்கொண்டே இருந்தது வண்டியும். அதைப் பற்றியும் நினைக்காமல் டிரைவர் வெளியே பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினார், அதையும் சரியாகக் கவனிக்காமல் நாங்கள் அலுப்புடன் இருந்தோம். வண்டி போய்க் கொண்டிருந்தது,சற்று நேரத்தில் நேரப் போகும் ஆபத்தை எதிர்பார்க்காமல்.

3 comments:

Anonymous said...

நமச்சிவாயா! இப்படி திகில் தொடரா பயணிக்குது!

EarthlyTraveler said...

suspence!!adukuma? Comments publish panreenga,but no replies. again "tata-indicom"problema?--SKM

வடுவூர் குமார் said...

பல பதிப்புகள் PDF முறைக்கு மாற்றி சேமித்து வைத்து படிக்க ஆசையாக இருக்கும்.அதில் உங்கள் இந்த பதிவு கூட.
அருமையாக இருக்கு.