எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, January 09, 2007

ஓம் நமச்சிவாயா-26

திகில் தொடரா மாறிடுச்சேனு அட்லாண்டாவிலே இருந்து ஜீவாவும், கலிஃபோர்னியாவிலே இருந்து எஸ்.கே.எம்மும் கேட்டிருக்காங்க. எங்களுக்கு நேர்ந்த ஆபத்துக்களைத் தெரிவிச்சால் போறவங்க கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு செயல் படலாமேன்னு ஒரு எண்ணம் அதான், வேறே ஒண்ணும் இல்லை.

நாங்கள் பயணம் செய்த வண்டியின் டிரைவர் இருக்கிறதிலேயே ரொம்பவே அனுபவம் வாய்ந்தவர்னு எல்லாரும் சொல்வாங்க. எந்த வண்டியிலே பிரச்னை என்றாலும் இவர் முன்னாலே போயிடுவார் உதவி செய்ய. கடைசியிலே அந்த வண்டி கிளம்பினதும் தான் வந்து எங்க வண்டியைக் கிளப்புவார். ஆனால் எங்களை முன்னால் போய்ச் சேர்த்துடுவார். கிட்டத் தட்ட இருபது நாட்களாய்ப் பயணித்து வந்ததில் நாங்கள் ஒரு நெருக்கத்தையும், பாதுகாப்பையும் உணர ஆரம்பித்ததால் சற்றும் பயம் இல்லாமல் வண்டியில் உட்கார்ந்து தூங்க ஆரம்பித்தோம். ஆனால் டிரைவர் எப்போதும் போல் இல்லாமல் வண்டியின் முன்னே உள்ள சக்கரங்களைக் கவனிப்பதும், பின் வண்டியை ஓட்டுவதுமாய் இருந்தார். அமெரிக்க நாடு போல் இங்கே சீனாவிலும் இடது பக்கமாய் ஓட்ட வேண்டும். வெளியே பார்த்துக் கொண்டே வந்தார். பர்யாங்கை நோக்கிப் போக சில மலைகள் இறங்க வேண்டும். அவ்வாறு ஒரு 2 முறை மலை இறங்கி விட்டு, பள்ளத்தாக்கில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. சாலையில் இரு பக்கமும் மூன்று அடி அகல, ஆழத்தில் பள்ளங்கள் தோண்டிப் போட்டிருந்தது. எதற்கு என்று புரியவில்லை. ஆனால் வண்டிகள் போய்க் கொண்டிருந்ததால் அதைப் பற்றிச் சிந்தனை செய்யவே இல்லை. எங்கள் வண்டி இம்முறை சற்று முன்னால் போய்க் கொண்டிருந்தது.

நானும் சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன். திடீரென வண்டி வேகம் எடுக்கிற மாதிரி ஒரு உணர்வு தோன்ற சட்டெனக் கண் விழித்தேன். வண்டியில் என் இருபக்கமும் உட்கார்ந்திருந்த என் கணவர் மற்றும் ட்ராவல்ஸ் காரப் பையன் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெரியவர் சங்கரனும் தூங்கிக் கொண்டிருந்தாப் போல் இருந்தது. வண்டி திடீரென ஒரு பக்கமாய் ஓட ஆரம்பித்தது. சாலை நடுவில் போகாமல் இம்மாதிரிக் குறுக்கே போய் முன்னால் போவது எங்கள் டிரைவரின் வழக்கம் என்பதால் நான் ஒண்ணும் கலவரமாய் உணரவில்லை. ஆனால் டிரைவர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வண்டியை மெதுவாய்த் தன் கட்டுப் பாட்டில் கொண்டுவரப் போராடுவதை உணர்ந்தேன். அதே சமயம் வண்டி சாலையின் வலது பக்கம் உள்ள பள்ளத்திற்குள் போய் இறங்கி ஒரு பக்கத்துச் சக்கரங்கள் உள்ளே மாட்டிக் கொள்ள மற்ற சக்கரங்கள் மேலே தூக்கிக் கொள்ள வண்டி இரு சக்கரங்களின் உதவியால் அந்தப் பள்ளத்திற்குள் செங்குத்தாக நின்றது. நான் பயத்தில் அலறவே என் கணவரும், கூட வந்த பயணியும் விழித்துக் கொள்ளவே நிலைமையைப் புரிந்து கொண்ட சங்கரன் அவர்கள் என்னிடம், "கத்தாதீங்க, இந்தச் சமயததில் தான் தைரியமாய் இருக்கணும்." என்று சொல்லித் தேற்றவே, என் பக்கத்தில் இருந்த பையன் பள்ளத்தின் பக்கம் உட்கார்ந்திருந்ததால் வண்டியின் ஜன்னல் வழியாக மெதுவாக வெளியேறி எங்களையும் வெளியேற்ற முயன்றான். பெரியவரும் அந்தப் பக்கமாகவே மெதுவாக இறங்கினார்.

என் கணவரின் உயரம் காரணமாக அவரால் அந்தப் பக்கம் இறங்க முடிய வில்லை. இதற்குள் வண்டியைப் பிரேக் போட்டு நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கிக் குதித்து எங்கள் பக்க ஜன்னலைத் திறந்து விட்டு என் கணவர் இறங்க உதவி செய்தார். அவர் மெதுவாய் இறங்கி விட்டுப் பின் என்னை இறக்கினார். ஏற்கெனவே சரியில்லாத வலது காலுடன் இருந்த நான் இப்போது குதிரையில் இருந்து விழுந்து அடி வேறு பட்டுக் கொண்டிருக்கிறேன். இறங்குவதற்குள் நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். அவ்வளவு வலி. மற்ற வண்டிகள் நிறுத்தப் பட்டு, எல்லாரும் உதவிக்கு ஓடி வந்தார்கள். டிரைவர் ஆபத்தை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்ததால் அதிகம் அடியோ, காயமோ படாமல் நாங்கள் தப்பித்திருக்கிறோம். அந்தச் சமயம் அவர் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டதால் எங்கள் உயிர் மட்டும் இல்லாமல் உடல் காயமும் இல்லாமல் போனதை உணர்ந்தோம். இது இறை அருள் இல்லாமல் வேறு என்ன? பின் ரொம்பப் போராட்டத்துக்குப் பின் கயிறு, சங்கிலி எல்லாம் கட்டி இழுத்து வண்டியை வெளியே கொண்டு வந்து சக்கரங்களை மாற்றிப் பின் பயணத்தைத் தொடர்ந்தோம்.

4 comments:

வடுவூர் குமார் said...

பல பதிவுகளுக்கு பின்னூட்டம் இட தட்டும் போது என் கணினியில்/இணையத்தில் உள்ள பிராப்ளம் இருந்ததால் தாண்டி போய்விட்டேன்.
இனிமேல் தான் விட்டதை படிக்கவேண்டும்.

EarthlyTraveler said...

அப்பாடி!இப்போதான் போன உயிர் திரும்பி வந்தது.
அந்த வண்டியோட்டி நீண்ட ஆயுளோடு நல்லா இருக்கட்டும்.ஒரு வேளை வண்டிகள் சாலையை விட்டு நகர்ந்தாலும் அதள பாதாளத்திற்கு போய் விடாமலிருக்கத்தான் அந்த 3 அடி பள்ளமோ?கடவுளின் கிருபையன்றி வேறு என்ன சொல்ல?--SKM

Geetha Sambasivam said...

குமார், மெதுவாப்படிச்சுட்டுப் பின்னூட்டம் போடுங்க. இந்தக் கணினி/இணையம் தொந்திரவு எனக்கும் இன்னும் இருக்கு. அதிலே எழுதறதே பெரிய விஷயம். அப்புறம் அந்த "கெளரி குண்ட்" அன்னை வியாபித்திருக்கும் இடமாகக் கருதப் படுகிறது. அந்தத் தண்ணீரும் மிக மிகப் புனிதமாய்க் கருதப் படுகிறது. டோல்மா-பாஸில் இருந்து கிட்டே இருக்கிற காரணத்தால் 10 நிமிஷங்களுக்குள் அந்த இடத்தைத் தாண்டி விட வேண்டும். அதுவே கொஞ்சம் கஷ்டம். பிராணவாயு ரொம்பக் கம்மி. கெளரிக் குண்ட் போய் வருவது இயலாது அல்லவா? அதனால் யோகா, மலை ஏற்றம் இவற்றில் நன்கு பயிற்சி பெற்று மூச்சை அடக்கி ஆளும் திறமை பெற்றவர்கள் மட்டும் போவார்கள் என்று தோன்றுகிறது. எங்களுடன் வந்த ட்ராவல்ஸ்காரப் பையன்களில் ஒருத்தருக்கு அங்கே போகும்போது இம்முறை மூச்சுத் திணறல் ஏற்பட்டதாய்ச் சொன்னார். இத்தனைக்கும் அவர் 2006-ம் வருடத்தில் 3-வது முறையாகக் கைலை யாத்திரைக்குழுவில் வந்தார்.

Geetha Sambasivam said...

எஸ்.கே.எம். இருக்கே, இன்னும் இருக்கே? சஸ்பென்ஸ் இன்னும் இருக்கே!