எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, February 19, 2007

62. ஓம் நமச்சிவாயா- கண்டகி நதியின் கதை

இப்போ நாம் "கண்டகி நதி" பற்றிய வரலாறு பார்க்கலாம். இது என்னுடைய புத்தகக்குறிப்புக்களில் இருந்து கொடுக்கிறேன். ஏனெனில் நாங்கள் முக்திநாத் போனபோது ட்ராவல்ஸ்காரர்கள் யாரும் வரவில்லை. ஹெலிகாப்டரில் இருந்தும் எங்களை இறக்கிவிட்டு விட்டு அங்கேயே விமான ஓட்டிகள் இருக்கத் துணைக்கு வந்த உதவியாளர் எங்களை ஒருங்கிணைத்துக்
கூட்டிச் செல்லும் வேலையில் இருந்ததால் அவரும் ஒன்றும் சொல்லவில்லை. இதில் தவறு ஏதும் இருந்தால் நான் தான் பொறுப்பு. இது ஒரு செவிவழிக் கதை.

நேபாளத்தில் உள்ள "மஸ்டாங்" என்னும் மாவட்டத்தில் சுமார் 5,000 மீட்டர்
உயரத்தில் உள்ள "தாமோதர் பீடபூமி"யில் 60-க்கும் மேற்பட்ட பனிச்சிகரங்கள் உள்ளன. அன்னை தாட்சாயணியின் வலது கன்னம் துண்டு துண்டாக வீழ்ந்ததாயும், அப்படி வீழ்ந்த இடங்கள் பள்ளங்கள்
ஆனதாயும், அந்தப் பள்ளங்களில் இந்தப்பனிச்சிகரங்களில் இருந்து உருகி
ஓடிய நீர் வழிந்து ஏரிகளாய் மாறினதாயும் சொல்கிறார்கள். இந்த ஏரிகள் "தாமோதர் குண்டங்கள்" என்று அழைக்கப் படுகின்றன. திபெத் நாட்டின் எல்லைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் குண்டத்தில் இருந்து உற்பத்தி ஆகும் நதிகளில் ஒன்றுதான் கண்டகி நதி. இந்த நதியின் வேறு பெயர்கள் ஸம்ட கண்டகி, நாராயணி, காளி கண்டகி என்பது ஆகும். இதன் அருகில் தான் பிரசித்தி பெற்ற "சாளக்கிராம மலை"யும் அதன் அருகிலே உள்ள கிராமம் "சாளக்கிராமம்" எனவும் அழைக்கப் படுகிறது. கண்டகி நதியைப்
பற்றிய ஒரு செவிவழிக் கதையை இப்போது பார்ப்போம்.

வேசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு
விசித்திரமான குணம் இருந்தது. அது என்ன வென்றால், தன்னை நாடி வரும்
ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம
பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத்
தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை
ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாது
திகைக்க,அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான்.
உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய
யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.
அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய சிசுருஷைகள் புரிந்தாள். உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி.

அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. என்ன பரிதாபம்! வாலிபன் உயிரோடு இல்லை. இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின்
அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள்.
திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம்
அற்புதம் நிகழ்கிறது. இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு,சக்ர
கதாபாணியான ஸ்ரீமந்நாராயாணன் காட்சி அளிக்கிறார். கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய்ச்
சொல்கிறார். கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் என்ன? எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் இருக்க வேண்டும்
என்பது தான் அது. அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார்" ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு
சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று
சொல்லுகிறார். சாபம் பெற்ற நாராயணன் சாளக்கிராம மலையாக மாறக் கண்டகி அதே பேரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடுவதாய்ச் சொல்கிறார்கள். இதே கதை ஒரு ஜெர்மன் புத்தகத்திலும் இருப்பதாய்ப் படித்தேன்.

சாளக்கிராம மலையைப் பூச்சிகள் துளைத்தெடுத்ததால் சாளக்கிராமங்கள் உருவாகி நதியிலும், நதிக்கரையிலும் கிடைப்பதாய்ச் சொல்கிறார்கள். இமயமலையின் இந்தப் பகுதியில் முன்னால் சமுத்திரம் இருந்ததாயும், அது வற்றி போய்க் கடல்வாழ் பூச்சிகளின் ஓடாக இருக்கலாம் எனவும் சொல்லப் படுகிறது. சாளக்கிராமம் மூன்று வகைப்படுகிறது.

முதல் வகை: உடையாமல், துவாரம் இல்லாமல், கூழாங்கல் போல் இருக்கும்.
குளிர்ச்சியாக இருக்கும்.

2-ம்வகை: சரிபாதி உடைந்து உள்ளே சக்கரம் போன்ற அமைப்புடன் கூடியது

3-ம் வகை:துவாரம், சக்கரம் இவற்றுடன் ரேகைகளும் தென்படும்.

எந்தச் சாளக்கிராமமாய் இருந்தாலும் தினமும் பூஜை செய்ய வேண்டும். தினமும் சாளக்கிராம ஆராதனை செய்தால் முக்தி கிடைக்கும் என்பதாய் ஒரு நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. நாங்கள் தாமோதர் பள்ளத்தாக்குப் போனோமே தவிர, கண்டகி உற்பத்தி ஆகும் இடத்துக்குப் போகவில்லை. அதற்குக் கூடுதலாய் நாட்கள் பிடிக்கும். நாங்கள் அன்றே திரும்ப வேண்டுமே? ஆகவே முக்திநாத்திலேயே நேரடியாய் இறங்கிக்
கொண்டோம். 108 திவ்ய தேசங்களில் 106-வது முக்திநாத். இது சென்று வருவது கஷ்டம் என்பதால் கடைசியில் வைத்திருக்கிறார்கள். 107-வது வைகுண்டம். 108-வது திருப்பாற்கடல்.

இங்கே எல்லாம் போய்விட்டுத் திரும்பியவர் "நம்மாழ்வார்" மட்டும் தான் என நினைக்கிறேன். நாங்க தான் கைலைப்பயணத்தின் போதே வைகுண்டம், சொர்க்கம் எல்லாம் எட்டிப் பார்த்துவிட்டுத் தானே வந்திருக்கிறோம்.
ஆகவே அடுத்ததாய் முக்தி நாதரின் தரிசனம் பார்க்கலாம்.

8 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

என்ன மேடம், ரொம்ப டிஸ்கி எல்லாம் பலமா போட்டு எழுதறீங்க....

மெளலி (மதுரையம்பதி) said...

ஆமா கண்டகி நதிகரையில் கிடைப்பது சாளக்கிராமம்.
சிந்து/யமுனா நதிக்கரையில் கிடைப்பது? எதிலோ படித்த ஞாபகம், சரியா நினைவிற்கு வரவில்லை......

Mazalais.com said...

தக்ஷனின் யாகத்துக்குச் சென்ற தாக்ஷாயணி தீயில் விழுந்து உயிர் மாய்த்ததாகத் தான் புராணம். அவளது உடலைக் கண்டம் துண்டமாக வெட்டி வீசினார்கள் அதில் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு இடத்தில் விழுந்தது என்பதெல்லாம் கட்டுக்கதை.
பெண்ணுக்கு இலக்கணமாக ஒரு விலைமாதை உதாரணமாகக் கூறுவதும் ஆண்களின் வக்கிர புத்தியையே காட்டுகிறது. பெண்களை விலைக்கு விற்கும் பழக்கம் நிறைந்த நேபாளம் மற்றும் வட இந்தியாவில் உள்ளவர்கள் புராணங்களைத் தங்களுக்கு சாதகமாக எப்படி வேண்டுமானாலும் திரித்துக் கூறுவதில் கைதேந்தவர்கள்.

ஆகிரா

VSK said...

விவரமான, வியக்க வைக்கும் தகவல்கள்.

நேரில் சென்று பார்ப்பது போன்ற ஒரு உணர்வு.

Porkodi (பொற்கொடி) said...

30 ku apram 62a?! :-/

Porkodi (பொற்கொடி) said...

indha maadhiri kadhaigal kekkarappo endha alavukku apo bhakti irundurku, ippo apdi illiye yen nu pala kelvigal ezhudhu :(

Geetha Sambasivam said...

அதெல்லாம் இல்லை மதுரையம்பதி, என்னோட நினைவுகளிலே இருந்து எழுதினா என்னோட பொறுப்புத் தான் இல்லையா? அதான் சொன்னேன்.
அப்புறம், சிந்து/யமுனையில் கிடைக்கிறதா நான் கேள்விப் படலை. சிந்துவுக்குப் போகலை. யமுனை நிறையப் போயிருக்கேன், காலிந்திங்கற பேருக்கு ஏற்ப நீரே கறுப்பாகத் தெரியும். பார்த்திருப்பீங்கன்னு நம்பறேன்.

Geetha Sambasivam said...

ஆகிரா, உங்க பதில் வந்தது. அதைத் தனியா ஒரு பதிவாப் போடறேன்.

@எஸ்.கே.சார், ரொம்பவே நன்றி.

@போர்க்கொடி, பக்திங்கறது எப்பவுமே இருக்கு. வெளிப்பாடுதான் வேறே வேறேயா இருக்கு.