எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, September 21, 2007

சிதம்பர ரகசியம் - ஆடுகிற ஆட்டம் என்ன சொல்வேன்?





தீட்சிதர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததும் பார்க்கலாம். இப்போது நடராஜரின் நாட்டியத்தைப் பற்றிச் சற்று பார்ப்போம். இந்த உலகம் இயங்குவதற்கே காரணம் நடராஜர் தான். ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், புல், பூண்டு, செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள்,குன்றுகள், தடாகங்கள்,மிருகங்கள், மனிதர்கள், பூக்கள், காய்கள், பழங்கள், பறவைகள், பறக்கின்றன, ஊர்கின்றன இவற்றின் அசைவுகள், வண்ணச் சேர்க்கை எல்லாவற்றையுமே இயற்கை என்று சொல்லிவிட்டுப் போகலாம்தான். ஆனால் இயற்கை இந்த வண்ணக்கலவையைக் கொண்டு வந்தது எப்படி? பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது? அனைத்துக்கும் காரணம் இந்த இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் ஆட்டம் தான். ஆனந்த நடராஜன், ஆனந்த தாண்டவம் ஆடும் வேளையில், வசந்தம் வந்து மெல்லக் கதவைத் தட்டுகிறது, பூக்கள் மலர்கின்றன, வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. புள்ளினங்கள் ஆர்க்கின்றன, மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. அவனின் தாண்டவம் ருத்ர தாண்டவம் என்றால் அதற்குத் தகுந்தாற்போல் புயல் அடிக்கிறது, பெருமழை பொழிகிறது, இடி இடிக்கின்றது, மின்னல் கண்ணைப் பறிக்கிறது, கோபம் எல்லை மீறினால் சுனாமியும் வந்து விடுகிறது. விஞ்ஞான பூர்வமாக பூகம்பம் ஏற்படுவதால் நிகழும் நிகழ்வுகள் இவை என்று சொன்னாலும், இந்த நிகழ்வுகள் ஏற்பட்க் காரணம் என்ன?

எல்லை அற்றப் பரம்பொருளின் இடைவிடாத ஆட்டத்தை"சதாதாண்டவம்" என்று சொல்கின்றனர். அதனாலேயே அந்த ஆடுபவனுக்கும் "சபாபதி" "சபாநாயகன்" "நடராஜராஜா" என்றெல்லாம பெயர்கள் உண்டு. இதை "நடாந்த தாண்டவம்" எனவும் சொல்கின்றனர். முடிவில்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும் ஆட்டம் என அர்த்தம் இதற்கு. சிவனின் நாட்டியக் கோலங்கள் பலவகைப் பட்டது. அதில் இந்த ஆனந்தத் தாண்டவம் முதல் வகையாக்வும், சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாகவும் உள்ளது.

பரத முனிவர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தின் படி சிவனின் நாட்டிய வகைகள் 7 முக்கியமான பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்லது. அவை :

1.ஆனந்த தாண்டவம் - சிதம்பரம் , பொன்னம்பலம்
2.சந்தியா தாண்டவம் - மதுரை, வெள்ளி அம்பலம்
3.உமா தாண்டவம் -
4.கெளரி தாண்டவம் - மயூர நாதர் கோவில், மாயூரம், திருப்பத்தூர்,
5.காளிகா தாண்டவம் - ரத்தின சபை - திருவாலங்காடு
6.திரிபுர தாண்டவம் - சித்திர சபை - திருக்குற்றாலம்
7.ஊர்த்துவ தாண்டவம்- சிதம்பரம், திருவாலங்காடு, காஞ்சி, திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராமங்கலம்.

இது தவிர, பிரளய காலத்தில் ஆடப் படும் சம்ஹார தாண்டவமும் சொல்லப் படுகிறது.

1 comment:

அபி அப்பா said...

அதனால் தான் எங்க ஊர் சுவாமிக்கு "ஸ்ரீ கௌரி மயூர நாதர்" என்கிற பெயர் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்!!!