எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, October 31, 2007

சிதம்பர ரகசியம் - தில்லை வாழ் அந்தணர்கள்! - 2

எல்லாரும் என்னைப் பாராட்டி எழுதும்போது ரொம்பவே கூச்சமாயும், கொஞ்சம் கஷ்டமாயும் இருக்கிறது. இந்தச் சிதம்பர ரகசியம் தொடர் எழுதுவதிலே என் பங்கு என்பது ஒண்ணுமே இல்லை, பல குறிப்புக்களைக் கொடுத்து உதவிய எங்கள் கட்டளை தீட்சிதர் ராமலிங்க தீட்சிதர் அவர்களுக்கும், நண்பர் ஆகிரா அவர்களும், நண்பர் சிவசிவா அவர்களும், ஸ்வாமி சிவானந்தர் எழுதிய நடராஜர் பற்றிய தகவலகளும், சிவன் பற்றிய தகவல்களும்,பதஞ்சலி யோக சாஸ்திரம் பற்றிய வலைத் தளம், ஸ்ரீவித்யை பற்றிய வலைத்தளம், temple.net மற்றும் tamil.net போன்ற வலைத்தளங்களும், theevaaram.org, saivam.org, wikipedia.org, தமிழ்நாட்டுக் கோயில்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் வலைத்தளம், தல புராணங்கள் என உள்ளனவும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றிய வலைத்தளங்கள், இன்னும் கூகிள் தேடலில் கிடைத்த சில அரிய வலைத்தளங்களுமே இதற்குக் காரணகர்த்தாக்கள். அவற்றை நான் உபயோகம் செய்து கொண்டதைத் தவிர என் பங்கு ஏதுமே இல்லை. ஆகவே காரணம் ஏதும் இல்லாமல் என்னைப் புகழ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது கூட மாலிக்காஃபூர் பற்றித் தகவல் தேடுகிறேன். "திண்ணை"யில் அரவிந்தன் நீலகண்டன் எழுதினது தவிர, கண்ணபிரான் கே.ஆர்.எஸ். கூகிளில் books.google.com -ல் உள்ள ஒரு புத்தகத்தின் பக்கங்களைச் சுட்டி கொடுத்திருந்தார். என்றாலும் அதில் வரும் பிரமஹஸ்தபுரம் ஒருவேளை சிதம்பரத்தைக் குறிக்கலாம் என்ற அனுமானத்தைத் தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை. books.google.com -ல் புத்தகங்கள் என்ன விலைக்கு விற்பார்களோ, நம்மால் முடியாது என்று நான் மேலே போய் முயற்சி செய்தும் பார்க்கவில்லை! :(( இனி நம்முடைய அடுத்த பதிவுகளுக்கு வருவோமா?
*************************************************************************************

முன் குறிப்பிட்ட பதிவில் சொன்னாற்போல், திருவாரூர் தியாகேசரால் எடுத்துக் கொடுக்கப் பட்ட வரியான "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று சுந்தரர் சிறப்பித்துக் குறிப்பிட்டத் திருத் தொண்டத் தொகையில் வருகிறார்போல், தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றிச் சில குறிப்புக்களை இங்கே தருகிறேன். காசியில் இருந்து 3,000/- பேராய்க் கிளம்பியதாய்ச் சொல்லப் பட்ட இவர்கள் சிதம்பரத்தை வந்தடைந்தபோது ஒருவர் குறைந்திருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. திகைத்தவர்களை இறைவன் அந்த ஒருவர் தாமே என உணர்த்துகிறார். கேரளாவின் நம்பூதிரி பிராமணர்களைப் போல் முன் குடுமியுடன் காட்சி அளிக்கும் இந்தத் தீட்சிதர்கள் தங்கள் குலப் பெண்களைத் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்விக்கிறார்கள். வேறு பெண்களை எடுப்பதும் இல்லை, வேறு இடத்தில் பெண்களைக் கொடுப்பதும் இல்லை, இதன் காரணமாகவே "தில்லைப் பெண் எல்லை தாண்டாள்" என்னும் பழமொழி ஏற்பட்டதாயும் சொல்கின்றனர்.

தங்களில் ஒருவராய் நடராஜரைக் கருதும் இவர்களுக்குத் தான் இந்தக் கோயிலில் பூஜை செய்யும் முழு உரிமையும் இன்று வரை உள்ளது. சிதம்பர மகாத்மியம் நூலில் இறைவனே இவ்வாறு நந்தியிடம் கூறுவதாயும் சொல்லுகின்றனர். ஒரு தீட்சிதர் மட்டுமில்லாமல் தில்லையில் கோவிலைச் சுற்றி இருக்கும் தீட்சிதர்களின் மொத்தக் குடும்பமே இந்த இறை பணியில் தங்கள் வீட்டுப் பணி போல் நினைத்து ஈடு பட்டுள்ளது. தங்களின் குடும்பச் சொத்தாக ஒவ்வொரு தீட்சிதர் குடும்பமும் நினைக்கும் இந்தக் கோயிலின் நிர்வாகமும் அவர்களிடம் தான் உள்ளது. கோவிலின் வருமானத்தில் இருந்தே அன்றாட பூஜைகளையும், தங்களின் குடும்பத்தையும் நடத்தி வருகின்றனர். கோவிலுக்கும் வருமானம் என்பது பக்தர்களின் கட்டளைகளில் இருந்து தான். அது போல இறைவனை வழிபடுவதிலும் அவர்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றைப் போலவே பாவிக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் நடக்கும் "சைவ ஆகம முறை" யில் வழிபாடு இங்கே நடப்பதில்லை. முழுக்க முழுக்க வைதீக முறைப்படி வழிபாடு நடக்கும் ஒரே சிவன் கோயில் இது தான். இங்கே ஒரு விஷயம் சொல்லணும், இந்த சைவ ஆகமத்துக்கும், வைதீகத்துக்கும் வேறுபாடுகள் தேடிக் கொண்டே இருக்கேன், சிலரிடம் கேட்கவும் கேட்டிருக்கிறேன், இன்னும் பதில் வரலை. :(

பலவிதமான யாகங்கள், யக்ஞங்கள் செய்ததாயும், இன்றும் செய்வதாயும் சொல்லப் படும் இவர்களை இறைவனுக்குச் சமமாகவும், எப்போது என்று சொல்ல முடியாத காலத்தில் இருந்தே நடராஜருக்கு வழிபாடுகள் இவர்கள் செய்து வந்ததாயும் சொல்லப் படுகின்றது. பொதுவாக இவர்கள் அனைவரும் யஜுர்வேதிகளாய் இருந்தாலும் வெகு சிலர் ரிக்வேதிகளாயும் இருக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் சேவை செய்யும் சிவாச்சாரியார்களில் இருந்து இவர்கள் வேறுபட்டவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற அந்தணர்களோடு திருமணம் போன்ற எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தில்லைச் சிதம்பரத்தானைத் தவிர, இங்கே அவனின் நாட்டியத்தைப் பார்க்கக் கோயில் கொண்டிருக்கும் கோவிந்த ராஜரையும் இவர்களே முதலில் பூஜித்து வந்திருக்கின்றனர். இது திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் ஒன்றில் இருந்து தெரிய வருகின்றது.

"மூவாயிர நான்மறையாளர் நாளும் முறையாய் வணங்க அணங்காய் சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக் கூடசென்று சேர்மின்களே!" என்று திருமங்கை ஆழ்வார் அவர்களும்,

"செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள்
அந்தணர்களொரு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான் தானே!" எனக் குலசேகர ஆழ்வாரும் பாடியுள்ளார்.

10 comments:

Unknown said...

// காசியில் இருந்து 3,000/- பேராய்க் கிளம்பியதாய்ச் சொல்லப் பட்ட இவர்கள் //

//தங்களின் குடும்பச் சொத்தாக ஒவ்வொரு தீட்சிதர் குடும்பமும் நினைக்கும் இந்தக் கோயிலின் நிர்வாகமும் அவர்களிடம் தான் உள்ளது. //

//தங்களில் ஒருவராய் நடராஜரைக் கருதும் இவர்களுக்குத் தான் இந்தக் கோயிலில் பூஜை செய்யும் முழு உரிமையும் இன்று வரை உள்ளது. சிதம்பர மகாத்மியம் நூலில் இறைவனே இவ்வாறு நந்தியிடம் கூறுவதாயும் சொல்லுகின்றனர். //

:-))

**

நாளைய தலைமுறை (3000 வருடம் என்று வைத்துக் கொள்ளுங்கள்) பொழுது போகாத போது 2000 -2007 -ல் எடுக்கப்பட்ட தமிழ்ப்படங்களைப் பார்த்து...

"நம் முன்னோர்கள் காதலிக்கும் போது துணை நடிகர்களுடன் மரத்தைச் சுற்றியும், ரோட்டிலும் ஆடித்தான் காதல் செய்தார்கள். அப்படித்தான் டைரக்டர் சங்கர் படத்தில் சொல்லியிருக்கார்" என்று சொல்லக்கூடும். ஆனால் உண்மையைச் சொல்ல நாம் இருக்க மாட்டோம்.

இறைவன் நந்தியிடம் சொன்னார் தொந்தியிடம் சொன்னார் என்று சொல்லும் வர்ணனைக்கும் உண்மைக்கும் உள்ள வித்தியாசம் "நம்பிக்கையாளர்களுக்கு" தெரியப்போவது இல்லை.

உழுதவனுக்கு நிலம் சொந்தம் எனபது போல் பூசை செய்தவனுக்கு வழி வழியான உரிமைகள் வந்து இருக்கலாம். அல்லது அந்தக் கால இராசமார்கள் தானமாக எழுதி வைத்து இருக்கலாம்.

நந்தியிடம் சொன்ன இறைவன் ஏன் அவனின் பக்தனிடம் சொல்லாமல் அடி வாங்க வைக்கிறார். இறைவனே தெளிவாக பக்தர்களிடம் சொல்லிவிட்டால் அங்குதான் நின்று பாடுவேன் என்று அடம்பிடிக்காமல் அவரவர் பொழைப்பைப் பார்த்துக் கொண்டு போவார்கள்.

**

தீட்சிதர் வட்டங்களில் நடக்கும் கொடுமைகளை நீக்க அந்தக் கடவுள் இன்னொருமுறை வருவாரா? அல்லது நந்தியிடம் சொல்வாரா?

//சிறுவயதுத் திருமணம் என்பதால் சிறுவயது முதலே கருவுறுதல், குழந்தை பிறப்பு, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுகின்றன. விதவையான பெண்களுக்கு மறுமணத்தை இந்த இனக்குழு அனுமதிப்பதில்லை.
//

//..சிறுவயதுத் திருமணங்கள், பெண்களுக்குக் கல்வி உரிமை மறுப்பு, அடிப்படை உரிமைகள் மறுப்பு, உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் குறுகிய அகமண முறை ஆகியவை இன்னமும் தொடர்கின்றன ...//

பார்க்க:
சிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்
http://thoughtsintamil.blogspot.com/2006/06/blog-post_23.html

**

Geetha Sambasivam said...

வாங்க பலூன் மாமா, என்ன பேரு, ஏன் இந்தப் பேருனு தான் புரியலை! போகட்டும் நல்லாவே இருக்கு பேரு, உங்க வரவுக்கும், கருத்துக்கும் ரொம்பவே நன்றி, நீங்க சொன்ன சுட்டியைப் பார்க்காமலா இருப்பேன்? எப்போவோ வந்தது இல்லையா? இது எழுத ஆரம்பிக்கும் முன்னரே பார்த்துட்டேனோனு நினைக்கிறேன். ரொம்பவே நன்றி, நீங்க வந்ததுக்கு!

Unknown said...

கீதா,
உங்கள் வீட்டிற்கு நான் வரும்போது கூடவே எனது வீட்டுச் சமையல் அலுவலர்களை அழைத்து வந்து, இங்கும் இவர்கள்தான் எனக்குச் சமைப்பார்கள்..நீங்கள் சும்மா வேடிக்கை பாருங்கள்... என்று சொன்னால் அது உங்களுக்கு நான் செய்யும் அவமரியாதை.

இமயத்தில் இருந்து வந்த கடவுள், தங்கப்போகும் இடத்தில் பாட்டுப்பாட சில கோஸ்டிகளை கூடவே அழைத்து வந்தார். அந்த கோஷ்டிகள் புனிதமானவர்கள் அவர்களுக்குத்தான் எல்லா உரிமையும் என்று நந்தியிடம் சொன்னார்... என்ற ரீதியில் வரலாறு (புனைவு/கதை) இருக்கிறது என்றால் நான் அதை அவமானமாகவே கருதுகிறேன். மேலும் அது இறைவனின் பார்பனிசமாகவும்* கருதுகிறேன். :-((

**

இன்று குறைந்த பட்சம் எனது எதிர்ப்பை பதிவு செய்யாவிட்டால் நாளை நந்தியிடம் சொன்னார் எனபது போல் கீதாவும் பிளாக்கில் சொல்லியுள்ளார் என்று வலுச்சேர்க்கும். :-))

***

சிதம்பர இரகசியத்தில் தீட்சிதர்கள் பெருமையை மட்டுமே பார்க்காமல் ,பூசை செய்யும் உரிமைக்காக பால்ய விவாகம், விதவை மறுமணம் மறுப்பு ... etc என்று ஒரு இனம் செய்யும் சீர்கேடுகளையும் பதிவு செய்யுங்கள்.

பார்ப்பனிசம்:*
நிறம் அடிப்படையில் Discriminate செய்வது Racism.

பிறப்பின் அடிப்படையில் Discriminate செய்வது Parpanisam.

பிறப்பின் அடிப்படையில் தன்னை உயர்வாகவும் ஒரு சிலரைத் தாழ்வாகவும் நினைப்பது பார்ப்பனிசம்.
இந்த எண்ணம் இல்லாத அனைவரும் மரியாதைக்குரியவர்களே irrespective of their family beliefs (beliefs of their father/mother etc.,)

Geetha Sambasivam said...

பலூன் மாமா, முதலில் நடராஜர் இவர்களை அழைத்து வந்ததாய்ச் சொல்லவே இல்லை, கைலையில் நடராஜரைக் காணோம்னு தேடிட்டு வந்து, காசியை அடைந்து, சிதம்பரத்தில் இருப்பது தெரிந்து வந்தார்கள் எனத் தான் சொல்லி இருக்கேன். தவிர, இந்தப் பதிவை நான் ஒரு விவாதக் களமாக ஆக்க விரும்பவில்லை.

அவங்க சாப்பாடு, தினசரிச் செலவுகள் என்று எல்லாமே நடராஜர் கோவிலில் இருந்து தான். வாழ்க்கையே நடராஜருடன் தான் பின்னிப் பிணைந்துள்ளது. அதை அவங்களும் மறுக்கவில்லை, மற்ற விவரங்களுக்குள் போய், இதை ஒரு அரசியல் கட்டுரையாக மாற்ற நான் விரும்பவில்லை. நான் பலமுறை சிதம்பரம் சென்றிருக்கிறேன் என்பதோடு சிறு வயதுத் திருமணங்களில் இருந்து அனைத்தும் நன்றாக அறிந்தும் வைத்திருக்கிறேன். இந்தப் பதிவு அது எதையும் குறித்து அல்ல. தீட்சிதர்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி இந்தப் பதிவு எழுதவில்லை! ஆனாலும் தீட்சிதர்கள் பற்றி எழுதும்போது இம்மாதிரியான விமரிசனங்களையும் எதிர்பார்க்கவே செய்தேன். இறைவன் தன்னைப் பார்ப்பனன் என்று ஒருநாளும் சொன்னதில்லை, சொல்லுவதும் இல்லை, சொல்லப் போவதும் இல்லை! பூநூல் தரித்தவர்கள் எல்லாரும் பார்ப்பனர்களே என்ற அறியாமையே இதற்குக் காரணம். இதைக் கூட நான் இங்கே தவிர்த்திருக்கத் தான் வேண்டும், என்றாலும் எழுதி விட்டேன், இனி மாற்றப் போவது இல்லை! உங்கள் ஆதரவுக்கும், கருத்துக்கும் ரொம்பவே நன்றி பலூன் மாமா! அடிக்கடி வந்து விமரிசனம் செய்யுங்கள். உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

Unknown said...

கீதா,
நிச்சயம் எனது மனம் புண்படவில்லை. அதுபோல் உங்களையும் ,உங்கள் நம்பிக்கைகளையும் புண்படுத்த வேண்டும் என்று எந்த எண்ணமும் இல்லை.விவாதங்கள் முடிவே இல்லாதவை , மேலும் அவை முன் முடிவுகளுடன் ஆரம்பிக்கப்படுவையாதலால் அதில் ஈடுபடுவதும் இல்லை.

தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றி நீங்கள் "சிதம்பர இரகசியத்தில்" சொன்னபோது அவர்களின் மறுபக்கத்தையும் சொல்வது நல்லது என்ற எண்ணத்தில் போட்டு வைத்தேன்.

நான் பர்ப்பனிசம் என்று சொல்வது பூணூல் போன்ற வெளி அடையாளங்களை அல்ல. பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டும் மனங்களையே.

உங்களின் ஆன்மிகப் பயணத்தை தொடருங்கள்.

நன்றி !

Geetha Sambasivam said...

நிச்சயமாய் நீங்கள் என்னைப் புண்படுத்தவில்லை, பலூன் மாமா, உங்களின் கருத்துக்களுக்கும், என்னோட உணர்வுகளைப் புரிந்து கொண்டதற்கும் மிக மிக நன்றி. பதிவின் போக்கை மாற்ற வேண்டாம் என்பதே என் கருத்து. ரொம்பவே நன்றி மீண்டும்.

மெளலி (மதுரையம்பதி) said...

எப்போதும் போல நிறைந்த தகவல்கள்...நன்றி கீதாம்மா.

எந்த இடக்கும் இல்லாமல், நேர்மையாக, மரியாதையுடன் தனது கருத்துக்களை சொல்லியிருக்கும் பலூன் மாமாவுக்கும் நன்றிகள் பல.

Baskaran said...

நான் என்னத்தை சொல்லுறது...

சிவன் எங்கு உள்ளார் என்று யாருக்கு தெரியும்.

sree Gurudev Datha

Geetha Sambasivam said...

நம்மிடையே உள்ளார் பாஸ்கரன். திருக்கயிலையில் ஆஞ்சநேயரும், தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக உலாவி வருவதாகப் பெரியோர்கள் கூற்று. திருக்கயிலையில் நாங்க சென்ற பரிக்ரமாவை வெளிச்சுற்று என்பார்கள். அதைத் தவிர உள் சுற்று என ஒன்று உள்ளது. அது இந்த வெளிச்சுற்றை ஏழு முறை முடித்தவர்கள் தான் சுற்றச் செல்லலாம் என்னும் விதி இருப்பதாகவும் கேள்விப் பட்டேன்.

இதைத் தவிரவும் இந்திய வழிக் கயிலைப் பயணத்தில் ஆதி கயிலைக்கு அருகே பாதாளத்தில் ஓர் அற்புதமான கோயில் இருப்பதாகவும் அங்கே போய்ப் பார்த்துவிட்டு வந்தவர்கள் படங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் எத்தனையோ அற்புதங்கள் இருக்கின்றன. பல வெளிவரவே இல்லை.

Baskaran said...

மிகவும் அன்பான பதில். இதை படிப்பதர்கே புண்ணியம் செயத்திருக்கவேண்டும்.கயிலை நாதரின் அருள் உங்களிடம் உள்ளது.