எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, January 04, 2009

சிதம்பர ரகசியம் - கோபுர தரிசனம், பாப விமோசனம்!


அடுத்து ஆயிரக்கால் மண்டபம். இது தான் ராஜ சபை என்று அழைக்கப் படும். தேவாஸ்ரய மண்டபம் எனவும் அழைக்கப் படும். இந்த ஆயிரக்கால் மண்டபம் மூடியே இருப்பதால் நான் இன்னும் பார்க்கவில்லை. நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும் நாட்களில் மட்டுமே திறக்கப் படுகின்றது. உள்ளே 984 தூண்கள் போல் இருப்பதாயும், வெளியே உள்ள தூண்களும் சேர்ந்தே ஆயிரம் என்றும் சொல்லுகின்றனர். தூண்களில் பரத நாட்டிய சாஸ்திரத்தை விளக்கிக் கூறும் சிற்பங்கள் இருக்கின்றன என்றும் சொல்லுகின்றனர்.

இது தவிர இந்தக் கோயிலின் கோபுரங்களின் அமைப்பும் வியக்க வைக்கின்றது. இவை பிற்காலச் சோழ மரபின் படி கட்டப் பட்டதாய் அறிய வருகின்றது.. கிழக்கு கோபுரம் மற்றவற்றை எல்லாம் பழமை வாய்ந்தது எனவும், அதுதான் மற்றவற்றை விடப் பெரியது எனவும் சொல்கின்றனர். 118 அடிகள் உள்ள அந்தக் கோபுரத்திலும் அருமையான, அழகான சிற்பங்களால் அமைந்துள்ளது. தெற்கு கோபுரம் பாண்டியனால் எழுப்பப் பட்டிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். ஏனெனில் கோபுரத்தில் மீன் சின்னம் உள்ளது என்றும் தெரிய வருகின்றது. கோபுரத்தின் நுழைவாயிலின் மேலே உள்ள மத்திய பாகத்தில் மீன் சின்னம் இருப்பதோடு அல்லாமல், கட்டிட அமைப்பும் பாண்டிய நாட்டுக் கோயிலான மதுரையின் சுந்தரேஸ்வரர் கோயில் கோபுர அமைப்பில் இருப்பதாகவும் சிலர் கருத்து என்றும் தெரிய வருகின்றது. நாட்டிய சாஸ்திரத்தை எடுத்துச் சொல்லும் சிற்பங்கள் அநேகமாய் அனைத்து கோபுரங்களிலும் காணப் பட்டாலும், கிழக்கு கோபுரத்தில் காணப்படும் 108 அபிநய முத்திரைகளுடனும், கிரந்த லிபியுடனும் கூடிய சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக உள்ளன மேற்கு கோபுரத்தில் சூரியன், சுப்ரமணியர், நர்த்தன விநாயகர் உருவங்கள் காணக் கிடைக்கின்றன. மேற்கு கோபுரத்தின் கீழ் பகுதியில் சுப்ரமணியர் தாரகனை மயில் மீது வந்து வதம் செய்யும் காட்சியைக் காண முடிவதாய்ச் சொல்லுகின்றனர். வடக்கு கோபுரத்தில் துர்கை, விஷ்ணு, கருடன் போன்றவர்களின் சிற்பத் திருமேனிகள் கிடைக்கின்றன. வடக்கு கோபுரத்தில் சிவ-பார்வதி திருமணக் காட்சி, பிரம்மா புரோகிதராய் இருந்து திருமணம் செய்து வைப்பதும், அனைத்து தேவாதி தேவர்களும் திருமணத்தைக் கண்டு களிப்பதும் காண முடிகின்றது. இது தவிரவும், நிருத்தசபையின் சிற்பங்களும் சிவகாமசுந்தரி ஆலயத்தின் சிற்பங்களும், பாண்டிய நாயகரின் கோயிலின் சிற்பங்களும், குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்குக் கண்ணையும், கருத்தையும் கவரக் கூடியவை.

கோபுரம் படங்கள் உபயம்:கூகிளாண்டவர் தயவில். ஆகவே தவறுகள் இருப்பதற்கு நானே காரணம்.

2 comments:

jeevagv said...

பாபநாசம் சிவன்:
பல்லவி
காண வேண்டாமோ இரு
கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம் (காண)

அனுபல்லவி
வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால்
மேதினி போற்றும் சிதம்பர தேவனைக் (காண)

சரணம்
வையத்தினிலே கருப்பையுள் கிடந்துள்ளம்
நையப் பிறவாமல் ஐயன் திருநடம் (காண)

ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக்
கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்கு முன் (காண)

Geetha Sambasivam said...

அருமை ஜீவா, சரியான பாட்டுகளை தயாரா வச்சிருக்கீங்க, நன்றி.