எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, April 09, 2009

ஜெய் சோம்நாத்! 1

ரிக் வேதத்தில்
யத்ரகங்கா ச யமுனா யத்ர ப்ராச்சி ஸரஸ்வதி
யத்ர ஸோமேஷ்வரோ தேவஸ்தத்ர மாம்ருதம் க்ருதீந்த்ராயேந்தோ பரிஸ்ரவ! என்று சொல்லப் பட்டிருப்பதாய்க் கூறுகின்றது சோமநாத் கோயிலின் பெருமை பற்றிக் கூறும்போது. இங்கே காணப்படும் 1869-ல் சோம்நாத் கோயிலின் தோற்றத்தைச் சுட்டுகின்றது. படம் உபயம்:கூகிளார்.

“எங்கே கங்கை, யமுனை மற்றும் புராதனமான ஸரஸ்வதி மூன்றும் சேருகின்றதோ, எங்கே அந்த சர்வேஸ்வரன் ஆன சோமநாதர் கோயில் கொண்டிருக்கின்றாரோ அந்த இடம் என்னைப் புனிதன் ஆக்கட்டும். ஏ, சந்திரா, உன்னுடைய அமுதக் கிரணத்தை இந்திரன் மீது பொழிவாயாக!” இது தான் பொதுவான அர்த்தம். வாங்கப்பா, விஷயம் தெரிஞ்சவங்க வந்து அர்த்தம் சொல்லலாம். சோமநாதர் கோயில், இருக்கும் ஊரும் அவர் பெயராலேயே சோம்நாத் என்றே அழைக்கப்படுகின்றது தற்காலத்தில். ஆனால் பூர்வீகத்தில் இந்த க்ஷேத்திரத்துக்கு பிரபாஸ க்ஷேத்திரம் என்றே பெயர். எப்போது என்று காலம் நிர்ணயிக்க முடியாத காலகட்டத்தில் இருந்தே இங்கே இந்தக் கோயிலில் சோமநாதர் குடி இருக்கின்றார் என்றே சொல்லுகின்றார்கள். இந்தியாவின் பனிரண்டு ஜ்யோதிர்லிங்கங்களில் முதன்மையானது இந்த சோமநாதலிங்கமே. சோமநாத பட்டினம் என்றும் தேவ பட்டினம் என்றும் இது அழைக்கப் பட்டு வந்தது.

இந்த ப்ரபாஸ க்ஷேத்திரம் குஜராத்தின் செளராஷ்டிராவின் தென் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தின் பெருமையை ஸ்காந்த புராணமும் சொல்லுகின்றது. (ஹிஹி, இன்னும் தேடலை, மறந்து போச்சு) ப்ரபாஸ காண்டம் என்ற பெயரிலேயே ஏழாவது(?) காண்டம் உள்ளது ஸ்காந்தத்தில். ப்ரபாஸ காண்டத்தில் முதலில் சோமநாத்தைப் பற்றியும், பின்னர் கிர் மலைக்காடுகள் பற்றியும், பின்னர் மவுண்ட் அபு (அற்புத மலைகள்)பற்றியும், கடைசியில் துவாரகை பற்றியும் குறிப்புகள் வருகின்றன. சோமநாத்தில் உள்ள தீர்த்தம் பற்றிச் சொல்லும் அத்தியாயத்தில் இந்த தீர்த்தத்தின் மகிமை பற்றிச் சொல்லப் பட்டிருக்கின்றது. சர்வேஸ்வரன் ஆன ஈசன், இந்தத் தீர்த்தத்தில் உலகின் கடைசிநாள் வரையிலும் அதன் பின்னரும் கூட இருப்பான் எனச் சொல்லப் படுகின்றது. பல்வேறு விதமான பிரம்மாக்கள் வந்து போய்விட்டனர். இப்போது இருப்பது ஏழாவது பிரம்மாவான சதானந்தர். ஆகவே இங்கே உள்ள ஈசனுக்குப் பெயர் சோமநாதர். இதன் முன்னால் இருந்த ஆறு பிரம்மாக்களும் இருந்த சமயம் ஈசனின் பெயர் முறையே ம்ருத்யுஞ்சயர், காலாக்னிருத்ரர், அமிர்தேசர், அநாமயர், க்ரிதிவாஸர், பைரவநாதர். இதன் பின்னர் வரப் போகும் எட்டாவது பிரம்மாவின் பெயர் சதுர்வக்த்ரா, அப்போது ஈசன் பிராணநாதன் என்ற பெயரோடு விளங்குவான். ஈசன் ஒருவனே ஆனால் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப் படுகின்றான்.

ரிக்வேதத்தின் இந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப் படும் ஸரஸ்வதி நதியானது இமயத்தில் உற்பத்தியாகி, மார்வார், அற்புதா என அழைக்கப் பட்ட அபுமலைத் தொடர்கள் வழியே குஜராத்துக்கு வந்து பிரபாஸக்ஷேத்திரம் ஆன சோம்நாத்தில் கடலுடன் கலந்திருக்கின்றது. இந்தப் பகுதியின் நீள, அகலங்கள் அப்போது 12 யோஜனை அளவில் இருந்திருக்கின்றது. க்ஷேத்திர பீடம் மட்டும் ஐந்து யோஜனைகள். கர்பகிருஹம் மட்டும் இரண்டு மைல் தூரம் இருந்துள்ளது. இந்தக் கோயிலின் கிழக்கே தப்தோடகஸ்வாமியின் கோயிலும், மேற்கே மாதவர் கோயிலும், வடக்கே பத்ரா நதியும், தென்பாகத்தில் கடலும் உள்ளன. வேதகாலத்து ரிஷிகளால் காலாக்னி ருத்ரர் என அறியப் பட்டவர் இங்கே முதலில் பைரவர் என பிரதிஷ்டை செய்யப் பட்டார். அக்னி ஈசானன் என்ற பெயரிலும் இவர் அழைக்கப் பட்டார். ஒவ்வொரு கல்பம் மாறும்போதும் இதே மூர்த்தம் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப் பட்டு வருகின்றது என பிரபாஸ காண்டம் சொல்லுகின்றது. ஐந்து முகங்கள் கொண்டவர் இந்த லிங்க மூர்த்தம், ஹம்ஸமும், நாதமும் சேர்ந்ததாய்க் கருதப் படுகின்றது. தக்ஷனால் ஏற்பட்ட சாபத்தை நீக்கிக் கொள்ள இந்தக் காலபைரவ லிங்கத்தை வழிபட்டு சந்திரன் வழிபட்டுத் தன் பாவங்களைப் போக்கிக்கொண்டதாயும், தன் பெயரால் இந்த லிங்கம் அழைக்கப் படவேண்டும் என்ற அவன் வேண்டுகோளின்படி அன்று முதல் சோமநாதர் என அழைக்கப் படுவதாயும் சந்திர குலத்தவருக்கு அதன் பின்னர் சோமநாதரே குலதெய்வமாக ஆனார் எனவும் கூறுகின்றார்கள். சந்திரன் முதலில் தங்கத்திலும், பின்னர் ராவணனால் வெள்ளியாலும் அதன் பின்னர் ஸ்ரீகிருஷ்ணரால் சந்தன மரத்திலும் கட்டப் பட்டது. இந்தக் கோயில் பலமுறைகள் அந்நியர் ஆதிக்கத்தில் சிதைக்கப் பட்டது. அதைப் பற்றி வரும் நாட்களில் பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் சிதைக்கப் பட்ட கோயிலைக் கட்டியது சோமபுரா ஷில்பாகர் பிராமணர்கள்.

படங்கள் எடுப்பது முற்றிலும் தடை செய்யப் பட்டிருப்பதால் ஓரளவு படங்களே போட முடியும்.

6 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அருமை...ப்ரபாஸ க்ஷேத்ரத்தை பற்றி முழுதும் அறிய க் காத்திருக்கிறேன்.

Unknown said...

//அருமை...ப்ரபாஸ க்ஷேத்ரத்தை பற்றி முழுதும் அறிய க் காத்திருக்கிறேன்.//

நானும். உங்களுக்கு போய் வந்த புண்ணியம், பிரயாணத்தைச் சொன்ன புண்ணியம்னு நிறைய! நன்றி.

திவாண்ணா said...

//படங்கள் எடுப்பது முற்றிலும் தடை செய்யப் பட்டிருப்பதால் ஓரளவு படங்களே போட முடியும். //

ஏன் அப்படி?
ம்ம்ம்ம்....

Geetha Sambasivam said...

வாங்க மெளலி, படிச்சுட்டு வரீங்கனு நம்பறேன்! :))))))

Geetha Sambasivam said...

வாங்க கெபி, இந்த மாதிரி எப்போவோ வந்து சொல்லிட்டா, சரி, படிக்கிறீங்கனு நானும் புரிஞ்சுக்கிறேன். :)))))))

Geetha Sambasivam said...

@திவா, காமிராவை காவலர்கள் வாங்கி வச்சுக்கறாங்க. நாம கோயிலை விட்டு வெளியே போறோம்னு தெரிஞ்சதும் தான் கொடுப்பாங்க. எடுத்தால் கோபுரமும், சுற்றிலும் உள்ள வளாகமும் தான் எடுக்க முடியும். ஆகையால் கூகிளாரின் உதவியோடு தான் படங்கள் போடமுடியும். பாதுகாப்புச் சோதனையும், அதனால் வரும் கட்டுப்பாடும் குஜராத்தின் அனைத்து நகரங்களிலும் தெரிகிறது. இ மெயில் கொடுக்க பரவுசிங் செண்டர் போனால் கூட நம்மிடம் அடையாள அட்டை கேட்டு, வாங்கி வச்சுக்கொண்டே அனுமதிக்கிறார்கள். நாம வேலையை முடித்துக் கொண்டு கிளம்பும்போதே பணம் கொடுத்ததும், அடையாள அட்டை திரும்பக் கொடுப்பாங்க.