எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, June 06, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்.

காலதூஷகன் என்னும் திருடன் ஒருவன் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தான். அவன் தன்னோட கொள்ளைப் பணத்தில் பாதியை ஸ்ரீவைகுண்டத்துப் பெருமாளுக்குக் கொடுப்பதை வழக்கமாய் வைத்திருந்தான். ஒருமுறை கொள்ளை அடிக்கும்போது அரசனின் காவலர்களால் பிடிக்கப் பட்டான். கடவுளை நிந்தித்தான். கடவுளே, என்னோட கொள்ளையில் உனக்கும் பங்கு சரிபாதியாய்க் கொடுத்துட்டுத் தானே வரேன். என்னை இப்படிப் பிடிச்சுக் கொடுத்துட்டியேனு மனம் நொந்தான். சரி, போகட்டும், இப்போ என் கிட்டே இருக்கிற எல்லாமும் உனக்கே தான் கொடுத்துடறேன். என்னை எப்படியாவது இந்த ராஜ தண்டனையிலே இருந்து காப்பாத்துனு அவனைச் சரணடைந்தான். பார்த்தார் பெருமாள். இந்தத் திருடனுக்கு ஞானம் உதயம் ஆகும் நேரம் வந்தாச்சு. அரசனுக்கும் இவனைப் பத்திப் புரியணும், அதே சமயம், இவனையும் காக்கவேண்டும். திருடனுக்கு ஞானமும் வரவேண்டும் என எண்ணிய ஈசன் கள்ளனைப் போல வேடம் தரித்து மன்னனிடம் சென்றார்.

கோபியரிடம் வெண்ணெய் திருடி உண்டவனுக்குக் கள்ளன் வேஷம் தரிப்பதில் என்ன கஷ்டம்? அவன் இஷ்டப் படும் வேஷம் அல்லவோ அது?? கள்ளனைப் பார்த்த மன்னனுக்கு அவன் பேரில் கோபமே வரவில்லை. என்ன காரணமோ பரிவும், அன்பும், பாசமும், பக்தியுமே மேலிட்டது. திகைத்த மன்னன் கள்ளனைப் பார்த்து, "இது என்ன மாயம்? நீயோ கள்ளன், என்னால் தண்டிக்கப் படவேண்டியவன். ஆனால் எனக்கு உன்னிடம் அளவுகடந்த பக்தியும், பாசமும் மேலிடுகின்றதே?" எனக் கேட்டான். கள்ளன் அதற்குப் பதில் சொன்னான்.
"அரசே! பணத்திற்கு என இருக்கும் பங்காளிகள் நான்குவகைப்படுவர். முதலாவது தர்மம், இரண்டாவது, அக்னி, மூன்றாவது அரசன், நான்காவது திருடன். இதில் உன்னுடைய அரசால் சம்பாதிக்கப் படும், உரிய வகையில் செலவிடப் படவில்லை. தர்மத்தின் பாதையில் உன் அரசாங்க சம்பாத்தியம் செல்லவில்லை. அதை உனக்கு உணர்த்தவே நாம் இவ்விதம் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினோம்." என்று உரைத்துத் தம் சுயரூபத்தைக் காட்டினார்.

மன்னனுக்கு உண்மை புரிந்தது. அன்றிலிருந்து தன்னுடைய கஜானாவின் பணம் எல்லாம் உரிய நேர்மையான வழியில் செலவிடப் படுகின்றதா என்று கவனித்துச் செலவிட்டான். திருடனை மன்னித்துவிட்டான். அரசனும், திருடனும் இறை அருளால் ஞானம் பெற்றனர். பெருமானுக்கோ கள்ளருக்கெல்லம் பிரான் என்ற பட்டப் பெயர் நிலைத்து நின்றது. அன்றிலிருந்து கள்ளபிரான் என அழைக்கப் படுகின்றார் இவர்.

இந்த ஸ்ரீவைகுண்டத்தின் மற்றொரு சிறப்பு, நம்மாழ்வார் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழா ஐந்தாம் நாள் ஆழ்வார் திருநகரியில் இருந்து வந்து கலந்து கொண்டு காலையில் மங்களாசாசனமும், திருமஞ்சனம், கோஷ்டி போன்றவற்றிலும் கலந்து கொண்டு, மாலையில் நம்மாழ்வாருக்குரிய அன்னவாகனத்திலும், பொலிந்து நின்ற எம்பிரான் கருட வாகனத்திலும் திருவீதி உலா வந்து மறுநாள் நம்மாழ்வார் மங்களாசாசனம் பெற்று விடைபெற்றுச் செல்லும் காட்சியும் கண்கொள்ளாக் காட்சி என்று சொல்லுகின்றனர். ஆனால் கூட்டத்தில் எப்படிப் பார்க்க முடியும்? புரியலை. சாதாரண நாட்களில் சென்றால் பெருமாளை திவ்ய தரிசனம் செய்யலாம்.

600 அடி நீளமான கோயிலின் உட்புறத்து கர்ப்பகிருஹத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானை சூரியன் சித்திரை, ஐப்பசி மற்றும் பெளர்ணமி தினங்களில், தன்னுடைய கிரணங்கள் பகவான் காலடியில் படும்படி வந்து தரிசிப்பது சிறப்பாய்க் கருதப் படுகின்றது. மார்கழி மாசம் நடக்கும் திரு அத்யயன உற்சவம் பின் பத்து நாட்களில் பரமபத வாசல் திறப்பு, படியேற்றம், பத்தி உலா, கற்பூர சேவை போன்றவை காணக் கிடைக்காத காட்சி எனச் சொல்லப் படுகின்றது. சுவர்க்கத்திலிருந்து ஆஸ்தானம் புறப்பாடு வெள்ளித் தோளுக்கினியானில் பனிக்காக குல்லாய், வெல்வெட் போர்வையுடனே கிளம்பி பத்தி உலா நடக்கும். சிம்ம கதி, சர்ப கதியுடன், தாள வாத்தியங்கள் முக வீணை முழங்க படியேற்றமும் கற்பூர சேவையும் நடைபெறுகிறது. சாதாரணமாய் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பிடிக்கும் இந்த சேவை இங்கே ஒரு விநாடிக்குள் பெருமான் ஆஸ்தானத்தில் சேவை சாதிப்பதும், ஒரு நிமிஷத்திற்குள் கற்பூர சேவையும் நடந்து முடிகின்றது.

அடுத்து வரகுணமங்கை என்னும் நத்தம் செல்லுகின்றோம்.

4 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள். பதிவு மிகவிளக்கங்களுடன் நன்றாக போகிறது. ஆமாம் எப்போது தாமிரபரணிக்கரையில் வசிப்பவர்களுடன் சில நாட்கள் பதிவு வரும்

SV said...

migavum arumai!!

swartham sathsangam said...

பதிவு மிகவும் அருமை. தங்கள் சேவை தொடரட்டும். இறைவனை வேண்டிகொள்கிறேன்.

swartham sathsangam said...

பதிவு மிகவும் அருமை. தங்கள் சேவை தொடரட்டும். இறைவனை வேண்டிகொள்கிறேன்.