எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, June 21, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!


தாமிரபரணியின் வடகரையில் வரகுணமங்கையில் இருந்து ஒரு மைல் தள்ளி அமைந்துள்ளது திருப்புளியங்குடி ஆகும். நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப் பட்டது. ஸ்ருதிஸாகரஸேகர விமானம் அல்லது வேதஸார விமானம் என அழைக்கப் படும் விமானத்தில் புஜங்க சயனக் கோலத்தில் கிழக்கே பார்த்தபடி எழுந்தருளி இருக்கின்றார் பெருமாள். தாயார் பெயர், மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளியங்குடி வல்லி, ஆகியன. வருணன், நரன், தர்மராஜா ஆகியோருக்குப் பிரத்யக்ஷமாய்க் காக்ஷி அளித்தார். ஸ்ரீ எனப் படும் மகாலக்ஷ்மியோடு இந்த மலைகளின் அழகையும், அங்கே பூக்கும் மலர்களின் அழகையும் கண்டு பெருமாள் இந்த இடத்தில் தங்கி லக்ஷ்மியோடு மகிழ்ந்திருந்தார். அதைக் கண்ட பூமாதேவி சற்றே மனக்கிலேசங்கொண்டவளாய் மனம் வருந்த, அவள் மனவருத்தம் பூமியெங்கும் வறட்சியாக மாறியது. பூலோக மக்கள் துன்பம் அடையக் கண்ட ஈசனை அனைவரும் பிரார்த்தித்து வேண்ட அவரும் பாதாளம் சென்று மறைந்திருந்த பூதேவியை அழைத்து வந்து செல்வத் திருமகளோடு நட்புக் கொள்ளுமாறு வேண்ட இருவரும் மனம் உவந்து நட்புப் பாராட்டினார்கள்.

இருவருடனும் இந்தக் கோயிலில் பெருமாள், "காசினவேந்தன்" (காசினி=பூமி) பூமிபாலன் என்னும் பெயருடன் காக்ஷி கொடுக்கின்றார். இந்தத் தலத்தின் புராணம் சொல்லுவது:

"இந்திரன் இந்திராணியுடன் தாமரைத் தடாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கே ஒரு ரிஷி மாற்றுருவில் தன் மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தார். உண்மை தெரியாத இந்திரன் வஜ்ஜிராயுதத்தால் ரிஷியை அடிக்க அவர் சுய உருவில் துடிதுடித்து இறந்தார். பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க இந்திரன் செய்வதறியாது தவித்தான். தேவகுருவான பிரஹஸ்பதி அவனை திருப்புளியங்குடிக்குச் சென்று பிரார்த்தித்துத் தவம் இயற்றிப் பூமிபாலரை வேண்டச் சொல்லி அனுப்பி வைக்கின்றார். இந்திரன் பாவங்கள் அனைத்தும் தொலைந்து இந்தத் தலம் ஒரு பிரசித்தி பெற்ற க்ஷேத்திரமாக மாறியது.

இந்திரன் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் வேள்வி ஒன்று செய்ய நினைத்தான். அவ்விதம் வேள்விக்கு ஏற்பாடுகள் செய்ய அரக்கன் ஒருவனால் இடையூறு ஏற்பட்டது. பூமிபாலர் இந்திரனுக்கு உதவ வேண்டி அவனைக் கதையால் அடிக்க, என்ன ஆச்சரியம்?? அந்த அரக்கனுக்கு தெய்வீக விமானம் ஒன்று வந்து அவனை அழைத்துக் கொண்டு தெய்வலோகம் செல்ல ஆரம்பிக்க, வியந்த இந்திரன் இதற்கான காரணத்தைக் கேட்டான். வசிஷ்டமுனிவரின் பிள்ளைகளால் வேள்விக்கு ஏற்பாடு செய்த யக்ஞசர்மா என்னும் அந்தணன் ரிஷி குமாரர்களுக்கு உரிய தக்ஷிணை கொடுக்காமல் ஏமாற்ற நினைக்க, அவர்களால் அரக்கனாய் மாறும் வண்ணம் சபிக்கப் படுகின்றான். விமோசனம் வேண்டிய யக்ஞசர்மாவிடம் இந்திரன் செய்யும் வேள்வியில் பூமிபாலரால் கதையால் அடிக்கப் படுவாய். அப்போது விமோசனம் கிடைக்கும் என்று கேள்விப் பட்டு இத்தனை நாள் காத்திருந்ததாயும், இப்போது சாபவிமோசனமும் முக்தியும் பெற்றுச் செல்லுவதாயும் அந்த அந்தணன் கூறினான்.

இதிலே சொல்லும் வரிசையில் நாங்கள் செல்லவில்லை. எங்க வண்டியின் ஓட்டுநர் எந்த ஊர்கள் அடுத்தடுத்து வருகின்றன, ஒரே கரையில் வருகின்றன என்பதைப் பார்த்தே கூட்டிச் சென்றார். இதில் முதல்நாள் நாங்கள் சென்றபோது திருச்செந்தூரும் போனோம். அதுவும் நடுவில் வரும். ஆனால் சாப்பாடுக்குக் கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்தது. இத்தனை கோயில்களிலும் கோஷ்டி நடப்பது காலை பத்துமணிக்குப் பின்னரே. அதுக்கு அப்புறமே பிரசாதம் கிடைக்கும். நாங்கள் காலை வேளையிலேயே சென்றுவிட்டதால் சாப்பாடு கிடைக்காமல் கொஞ்சம் கஷ்டப் பட்டோம். எங்கே வேணாலும் சாப்பிடும்படிக்கு வயிறு ஒத்துழைக்கவில்லை என்பது வேறே. இப்போ அடுத்துச் செல்ல இருப்பது பெருங்குளம் அல்லது திருக்குளந்தை.

இந்த ஊருக்குச் செல்ல நிஜமாவே ஒரு பெரிய பெருங்குளத்தைச் சுற்றிக் கொண்டே போகவேண்டி இருக்கிறது. தாமிரபரணி ஜீவநதியே என்றாலும் நாங்கள் சென்றது தை மாதம் என்பதால் தண்ணீர் நிறையவே இருந்தது. அந்தக் கரும்பச்சை நிற நீர் நிலைகளும், சுற்றிலும் நீலநிற மலைத் தொடர்களும், வயல்களின் பச்சை நிறப் பயிர்களும், செம்மண்ணும், கரிசல் மண்ணும் கலந்த மண் வாசனையும் சேர்ந்து ஒரு சொர்க்கத்தையே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. பறவைகளின் சந்தோஷக் கூச்சல்கள் ஆங்காங்கே கண்ணுக்கும், மனதுக்கும் நிறைவாய் இருந்தது. பிரயாணமும் மிகவும் செளகரியமாயும், சுகமாயும் இருந்தது. குளத்துத் தண்ணீர் அசுத்தம் செய்யப் படவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.

1 comment:

குப்பன்.யாஹூ said...

நன்றிகள் பல.மிக அருமை.

ஆம் நீங்கள் சொல்வது போலவே ஸ்ரிவைகுன்டம் முதல் ஏரல் ஆத்தூர் செல்லும் பாதை பெருங்குளம், பெற்மாநகரம் எல்லாம் அற்புதமான இடங்கள்.

குப்பன்_யாஹூ