எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, February 07, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 7 சிக்கல் சிங்காரவேலர்!

வலி இருந்தாலும் பயணத்தைத் தொடரலாம் என்று என் கணவர் சொன்னதால் அரை மனதோடு சிக்கலுக்குப் பயணத்தைத் தொடர்ந்தோம். திரும்பிவிடலாம் என்ற எண்ணம் இருந்தாலும், அவர் தோள்பட்டையில் வலி மட்டும் தான் வேறே ஒண்ணும் இல்லைனு சொன்னார். சரினு நம்பிட்டேன். ஆனால் நேரமாக நேரமாக வலி ஜாஸ்தியாகி இருக்கிறது. வண்டி போய்க்கொண்டிருந்தது. சிக்கலில் வலி நிவாரணிகளை வாங்கிக்கொண்டு போகலாம் என்ற முடிவு எடுத்தோம். மாத்திரைகள் எதுவும் சாப்பிடமுடியாது. ஆகையால் வலிக்கான தைலமோ, அல்லது லோஷனோ, ஆயிண்ட்மெண்டோ வாங்கிக்க முடிவு செய்துகொண்டு சிக்கலுக்கு வந்து சேர்ந்தோம். கோச்செங்கணான் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. சிக்கல் சிங்காரவேலன் என்றே கேள்விப்பட்டுச் சென்ற எனக்கு அங்கே மூலவர் ஈசன் என்பதும், அம்பிகையும் இருக்கிறாள், சிங்காரவேலர் வேலை மட்டும் வாங்கிக்கொள்ள இங்கே வந்தார், என்பதும் புதிய விஷயமாய் இருந்தது. மூலவரே சிங்காரவேலர் என நினைத்திருந்தேன். என்றாலும் குமரன் இருப்பதாலோ என்னமோ மலை போன்ற உயரமான அமைப்பிலேயே கோயில் இருந்தது. ராஜகோபுரம் உள்ளது. நுழைந்ததுமே கல்யாணமண்டபம், கார்த்திகை மண்டபம் என மண்டபங்கள் காணப்படுகின்றன. இந்தக் கோயிலும் சுத்தமான பராமரிப்பில் காணப்பட்டது. இங்கேயும் சனைசரர் தனியாகவும், நவகிரஹ சந்நிதியும் காணப்பட்டது. இவை கீழேயே இருந்தன. வசதியாகப் போய்ச் சுற்றி இருக்கலாம். நேரம் இப்படி இருக்கையில் யாரை என்ன சொல்ல முடியும்?? இனி சிக்கல் தலவரலாற்றைப் பார்ப்போமா??

மல்லிகை தான் இங்கே தலவிருக்ஷம் என்றார்கள். ஒரு காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடமாம். ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையான கோயில். வசிஷ்டர் ஆசிரமம் இருந்த இடம் என்று தலவரலாறு சொல்கிறது. ஈசனைத் தினமும் வழிபட்டு வந்தாராம் வசிஷ்டர். அப்போது காமதேனு ஒரு சாபத்தின் காரணமாக பூமிக்கு வந்து இந்தத் தலத்திற்கு வந்தது. இங்கே இருந்த தீர்த்தத்தில் நீராடியது. நீராடும்போது காமதேனு பாலைச் சொரிய, அந்தப் பால் பெருகிக் குளமே பாற்குளமாக மாறியது. க்ஷீரபுஷ்கரணி என அழைக்கின்றனர். பெருகி வந்த பாலில் இருந்து உருண்டு, திரண்டு வந்த வெண்ணெயை எடுத்து வசிஷ்டர் சிவலிங்கமாக்கி வழிபட்டார். வழிபாடு முடிந்ததும், வெண்ணெய் லிங்கத்தை எடுக்க முனைந்தார். அது அவரால் முடியாமல் வெண்ணெய் லிங்கம் அவர் கையிலேயே சிக்கிக் கொண்டது. சிக்கிக்கொண்ட இடமாதலால் சிக்கல் எனப் பெயர் பெற்றது என்று சொல்கின்றனர். ஈசனின் திருமேனி வெண்ணெய்த் திருமேனி என்றும் நவநீதேஸ்வரர், திருவெண்ணெய்நாதர் என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறார்.

அன்னையின் பெயர் வேல்நெடுங்கண்ணி. இங்கே தான் சூரபத்மனை வதம் செய்வதற்காக வந்த சிங்காரவேலனுக்கு அன்னை வேல் கொடுத்து ஆசிகள் வழங்குகிறாள். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சஷ்டித் திருவிழா நடைபெறும்போது வேல்வாங்கும் விழாவில் தாயிடம் வேல் வாங்கிக் கொண்டு முருகப் பெருமான் தன் கோயிலுக்கு வந்து அமர்ந்த பின்னால், வேலின் வீரியம் தாங்காமல் சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சி இன்றளவும் நடைபெறுகிறது. பட்டுத் துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை பெருக்கெடுக்கும் என்று சொல்கின்றார்கள். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்ற வழக்குச் சொல்லும் இருக்கிறது என்றனர்.

இதைக் கட்டுமலைக்கோயில் என அழைக்கின்றனர். கோயிலின் மையத்தில் உள்ள சில படிகள் மூலம் மேலே ஏறிச் சென்று திருவெண்ணெய் நாதரைத் தரிசனம் செய்யவேண்டும். அப்பாவிற்கு அருகேயே பிள்ளையின் சந்நிதியும் காணப்படுகிறது. சிக்கல் சிங்காரவேலர் மிக மிக அழகர். பார்க்கக் கண் கோடி வேண்டும். பார்த்துக்கொண்டே இருக்கலாம். உற்சவ விக்கிரஹம். சில்பா சிற்பி செய்த சிலை ஷண்முகர் வடிவம் வெளிப்பிரஹாரத்தில் பரிவார தேவதைகளில் ஒன்றாய் இருப்பதாய்ச் சொன்னார்கள். இந்தக் கட்டுமலையின் கீழேயே அன்னை வேல்நெடுங்கண்ணியின் சந்நிதி உள்ளது. அன்னை பிள்ளைக்கு வேல் தருவது போன்றதொரு சிற்பம் சந்நிதியின் மேல் பாகம் காணப்படுகிறது. பெருமாள் தனிச் சந்நிதி கொண்டு கோலவாமனப் பெருமாள் என்ற பெயரில் காணப்படுகிறார்.

இம்மாதிரியாக ஈசனும், திருமாலும் ஒரே கூரையின் கீழ் குடிகொண்டு அருள் பாலிக்கும் கோயில்கள் பத்தோ, பனிரண்டோ தான் இருப்பதாயும், சிக்கல் அதில் மிக மிக முக்கியமான ஒன்று எனவும் கூறினார்கள். இரு தேவியருடனும் காட்சி தருகின்றார் பெருமாள். ஆஞ்சநேயருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. வாமன அவதாரம் எடுத்தபோது பெருமாள் இந்தத் தலம் வந்து ஈசனை வழிபட்டு மஹாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாய்க் கூறப்படுகிறது. இங்கே திருமாலைத் தவிர, விஸ்வாமித்திரர் பெண்ணிடம் சபலம் கொண்டு இழந்த தவவலிமையைத் திரும்பப் பெற்றிருக்கிறார் எனச் சொல்கின்றனர். மேலும் முசுகுந்தச் சக்கரவர்த்தியின் பிரம்மஹத்தி தோஷமும், இங்கே தான் நீங்கியது எனச் சொல்கின்றனர். அகத்தியரும் வந்து வழிபட்டதாய்க் கூறுகின்றனர். இந்தத் தலத்தில் ஈசன் மட்டுமில்லாமல், முருகன், திருமால், அநுமன் என நால்வருமே பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை இங்கேதான் மிகவும் சிறப்பு வாய்ந்தது எனச் சொல்லப் படுகிறது. அம்மனின் சக்தியே வேலாக மாறி முருகனுக்குக் கொடுக்கப் பட்டதால் இந்த அர்ச்சனையை இங்கே சஷ்டி விழா நடக்கும்போது மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். அன்னைக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. சக்தி பீடங்களில் இதுவும் மிக முக்கியமானதாய்ச் சொல்லப் படுகிறது. முருகனுக்கு வேல் வழங்கும் முன் அன்னை தவமிருந்ததாகவும், அப்போது அஞ்சு வட்டத்து அம்மன் என்ற பெயரில் வழங்கப்பட்டாள் எனவும், அந்த அஞ்சு வட்டத்து அம்மன் கோயில் அருகிலுள்ள கீவளூர் எனப்படும் கீழ்வேளூரில் இருக்கிறது எனவும் தெரிய வருகிறது. அந்தக் கோயிலுக்குப் போகமுடியவில்லை. இங்கேயே அவரால் நடக்கமுடியலை. ஆகவே நேரே திருவாரூர் போனோம்.

திருவாரூர் கோயிலைப் பற்றி எழுதும் முன்னர் கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் பற்றிய சிறு குறிப்பு. திருவாரூர் கோயில் இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்ததும் சிறு வயதிலிருந்து அங்கே அடிக்கடி சென்று வந்த என் கணவருக்குக் கண்ணீரே வந்துவிட்டது. ஒரு பதிவில் எழுதி முடிக்கவேண்டிய விஷயமும் இல்லை. திருவாரூர் பத்தி சிதம்பரம் அளவுக்கு எழுத உதவிகள் கிட்டவில்லை எனினும் தெரிந்த விஷயங்களே நாலைந்து பதிவுக்கு மேல் வரும். ஆகவே கடைசியில் திருவாரூர். அடுத்து கும்பகோணம் சார்ங்கபாணி கோயில். இதுவும் ஒரு மாடக்கோயிலே. நாளை பார்ப்போம்.

3 comments:

சாந்தி மாரியப்பன் said...

கோவில்களைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிஞ்ச்சுக்க முடியுது, நன்றிம்மா.

பயணத்தின்போது எதிர்பாராத கஷ்டங்கள் வந்தாலும்,அதை தாங்கும் சக்தியையும் அவந்தான் கொடுக்கறான்.

Geetha Sambasivam said...

அமைதியாப் படிச்சுட்டு இருக்கீங்க போல, நன்றிம்மா. தாங்கும் சக்தியைக் கொடுத்தாலே போதும் இல்லையா??

எல் கே said...

aha saarangabani kovila.. miga arumayana kovil