எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, May 22, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! மஹேஸ்வர மூர்த்தி

சதாசிவ மூர்த்தியின் ஆயிரத்தில் ஒரு கூறிலிருந்து தோன்றியவரே மகேசர் என்பதைக் குறிப்பிட மறந்துள்ளேன். மகேச மூர்த்தி மகேச வடிவங்கள் என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறார். இவரே படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகியவற்றை நேரடியாக இயற்றுவதாய்ச் சொல்வார்கள். உருவத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் இவரின் வடிவங்களே இனி நாம் காணப் போவது. இந்த மகேச மூர்த்தி அடியவர்களைத் தண்டிக்கவும், அடியவர்களுக்கு உதவிகள் செய்து காக்கவும் பல வடிவங்களில் எடுத்துப் பல திருவிளையாடல்களைப் புரிகின்றார். இவரை நின்ற கோலம், அமர்ந்த கோலம், நாட்டியம் ஆடும் கூத்துக்கோலம், வாகங்களில் ஏறி வரும் கோலம், உக்கிரமாய் இருத்தல், சாந்த ஸ்வரூபியாய்க் காட்சி அளித்தல் எனப் பல்வேறு நிலைகளிலும் காண்போம்.

மகேச மூர்த்திக்கு ஒரு முகம், மூன்று கண்கள், ஜடா மகுடம், நான்கு கரங்கள், ஆகியவற்றுடன் காட்சி அளிக்கின்றார். பின்னிரு கரங்களில் மானும், மழுவும் காணப்படும். முன்னிரு கரங்கள் அபயஹஸ்தமாகக் காண்கின்றது. மகேச்வர வடிவங்களைச் சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுக்கும் பொருந்துமாறு 25 விதங்களில் குறிப்பிடுவார்கள். அதாவது சதாசிவ மூர்த்தியின் தத் புருஷம் என்னும் முகத்தில் இருந்து தோன்றியவர்கள்

1.பிட்சாடன மூர்த்தி
2.காமதகனர்
3.கால சம்ஹாரர்
4.ஜலந்தரவதர்
5.திரிபுராந்தகர்

அடுத்து ஈசான முகத்தில் இருந்து தோன்றியவர்கள்

1.சோமாஸ்கந்தர்
2.நடராஜர்
3.ரிஷபாரூடர்
4.கல்யாண சுந்தரர்
5. சந்திர சேகரர்

அடுத்து அகோர முகத்தில் இருந்து

1.கஜ சம்ஹார மூர்த்தி
2.வீரபத்ரர்
3.தட்சினா மூர்த்தி
4,கிராத மூர்த்தி
5.நீலகண்டர்

அடுத்து வாமதேவ முகத்தில் இருந்து

1.கங்காளர்
2.சக்ரதானர்
3.கஜமுக அனுக்ரஹர்
4,.சண்டோ அனுக்ரஹர்
5.ஏக பாதர்

அடுத்து சத்யோஜாத முகத்தில் இருந்து

1.லிங்கோத்பவர்
2.சுகாசனர்
3.உமா மகேசுவரர்
4.சங்கர நாராயணர்
5. அர்த்த நாரீசுவரர்.

உலகத்தார் உய்யும் பொருட்டும், உலகைக் காக்கவும் ஈசன் பல வடிவங்களை எடுப்பதாய்ச் சிவனடியார்கள் கூற்று. அவை மூன்று வகைப் படும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம். இதில் போகம் இன்பத்தையும், யோகம், அமைதியையும், வேகம், கோபத்தையும் குறிக்கின்றன. பொதுவாக மகேச வடிவத்தை இல்லறத்தாரே பெரிதும் பூசை செய்வர் என்பது வழக்கு. அதற்கேற்பத் திருமூலரின் திருமந்திரத்திலும்,ஏழாம் தந்திரம் பாடல் எண் மூன்று, அத்தியாயம் 13. மாகேசுர பூஜையில் இவ்வாறு கூறுகின்றார்:

பாடல் எண் : 3

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.

சிவனடியார்களை "மாகேசுரன்" என்று சொல்லும் திருமூலர் அந்த மகேசனுக்குள் அடங்கியவர்களே மாகேசுவரர் என்றும் கூறுகின்றார். சிவனைத் துதிக்கும் இல்லறத்தார் விருந்தோம்பலிலே சிவனடியார்களான மாகேசுவரனையும் துதிக்கலாம் என்று கூறுகின்றார். இறைவன் திரு உருவம் எப்படி இருக்கும் என நாம் அறியும்படிக்கு இந்த மகேசுவரனின் 25 வடிவங்களையும், சைவத் திருமுறைப் பாடல்களிலும், சாத்திரங்களிலும் குறிப்பிடப் படுகின்றது. சில கோயில்களில் சில வடிவங்களைத் தேர்ந்த சிற்பிகள் கல்லால் ஆன சிலைகளாகவும், பஞ்ச லோகப் படிமங்களாகவும் செய்து வைத்துச் சென்றிருக்கின்றார்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே!


டிஸ்கி: முதல் பத்தி விடுபட்டுப் போனதை இன்று தான் சரி செய்திருக்கிறேன். நன்றி.

5 comments:

எல் கே said...

பல புதிய விவரங்கள். தொடர்ந்து எழுதுங்கள்

sury siva said...

http://farm1.static.flickr.com/34/116783072_6206655554_o.jpg

நீங்கள் குறிப்பிடும் மஹேச்வர மூர்த்தி இவரா ?
இல்லயெனின் எங்கே காணப்பெறுகிறோம் ??
சதாசிவத்தின் பஞ்ச முக விளக்கம்
ரத்தினச்சுருக்கமாக இருக்கிறது.
மிகவும் நன்றாக இருக்கிறது.

சுப்பு ரத்தினம்.

Geetha Sambasivam said...

நன்றி எல்கே,

சூரி சார், மஹேஸ்வர மூர்த்தி படம் சேமிப்பிலே இருந்தது காணோம், கூகிளாண்டவரைக் கேட்கணும், எங்கே காண முடியும்னு விபரம் குறிப்புகளைப் பார்த்துட்டு எழுதறேன். ரொம்ப நன்றி ஆர்வமாய்ப் படித்து வருவதற்கும், ஊக்கம் கொடுப்பதற்கும்.

Geetha Sambasivam said...

அருமையான படம் சூரி சார், ரொம்ப நன்றி, சேமிச்சு வச்சுண்டேன். உங்களுக்குச் சீக்கிரமா பதில் கொடுக்கிறேன். கொஞ்சம் அதிகமான வேலை. அதோட வம்பும் வளர்க்க வேண்டி இருக்கே! :)))))))

Geetha Sambasivam said...

நீங்க அனுப்பின படம் சதாசிவ மூர்த்திதான். சதாசிவ மூர்த்தியின் கூறில் ஆயிரத்தில் ஒரு கூறில் இருந்து மகேசர் தோன்றுகிறார். காப்பி, பேஸ்ட் பண்ணினப்போ சிலது விட்டுப் போயிருக்கிறதைக் கவனிக்கலை. பதிவைத் திருத்தி வெளியிடுகிறேன். நன்றி, நீங்க சுட்டிக் காட்டலைனா அப்படியே இருந்திருக்கும். மஹேச்வர மூர்த்திக்கு உருவத் திருமேனி தான். ஆகையால் மான், மழுவோடு காணப்படும் ஈசன் வடிவுதான் மஹேஸ்வர மூர்த்தி. இது பற்றி விரிவாக எழுதிடறேன்.