எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, July 15, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ம்ருத்யுஞ்சயர்!

அடுத்து வருபவர் நாம் அனைவரும் அறிந்த ஒருவரே. ம்ருத்யுஞ்சயர் என்றும் காலகண்டர், காலகாலர், காலாந்தகர் எனவும் பல்வேறு பெயர்களால் அழைக்கப் படும் காலசம்ஹார மூர்த்தி. மாயவரத்துக்கு அருகே உள்ள திருக்கடையூரில் இந்த மூர்த்தத் திருமேனி, காலனை அழிக்கும் கோலத்தில் காண முடியும். ஒரு நிமிஷத்துக்கு மட்டுமே திரையைத் திறந்து தீப ஆராதனையைக் காட்டிவிட்டுப் பின்னர் மூடிவிடுவார்கள். மிக உக்கிரமாய்க் கோபத்துடன் இருப்பதால் இம்மாதிரிச் செய்கின்றனர். என்றாலும் இவர் ஒரு பக்தனுக்காக வேண்டியே இவ்விதம் கோபம் கொண்டு காலனைக் காலால் உதைத்தார். இந்தக் கதையும் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. கெளசிகரின் புதல்வர் ஆன மிருகண்டு, தன் மனைவியான மருத்துவதியுடன் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்குப் புத்திரப்பேறு இல்லை. புத்திரப் பேறு வேண்டி தவம் இயற்றிய அவருக்கு பிரம்மாவின் அருளால் ஒரு புத்திரன் பிறந்தான். மிக மிக புத்திசாலியும், சிறந்த சிவ பக்தனும் ஆன அந்தப் பையனுக்கு ஆயுள் 16 மட்டுமே என்பது பிரம்மன் விதித்திருந்த ஓர் கணக்கு. இந்த விஷயம் தாய், தந்தையருக்கும் தெரிந்தே இருந்தது. செய்வதறியாமல் துக்கத்தில் ஆழ்ந்து இருந்தனர் தாய், தந்தையர். மார்க்கண்டேயனோ, நிஷ்கவலையாகத் தானுண்டு, தன் சிவ பூஜையுண்டு என்று இருந்து வந்தான். ஆயிற்று. பதினாறு வயதும் பூர்த்தி ஆகும் நாளும் வந்தது. என்றும் போல் அன்றும் மார்க்கண்டேயன் சிவ பூஜையில் வழக்கமான உற்சாகத்துடனேயே ஈடுபட, அவன் முன்னே தோன்றியவர்களோ யமதூதர்கள். மார்க்கண்டேயனை அழைத்துச் செல்லவே அங்கு வந்திருப்பதாய் அவர்கள் தெரிவிக்க, அந்த இளம்பிள்ளையோ, தான் வழிபட்டுக் கொண்டிருந்த சிவலிங்கத்தைத் தன்னிரு கைகளால் இறுகக் கட்டிக் கொண்டான். எமதூதர்கள் திகைக்க, எமனே நேரில் வந்தான். நிலைமையைப் பார்த்துவிட்டு, மார்க்கண்டேயன் கட்டிக் கொண்டிருக்கும் சிவலிங்கத்தோடு சேர்த்து பாசக்கயிற்றை வீசி அவனை இழுக்க, லிங்கம் அசைந்து கொடுத்தது. மார்க்கண்டேயன் வந்துவிடுவான் என நினைத்தக் காலதேவன் முன் தோன்றினார் காலாந்தகர். காலனைத் தம் காலால் உதைக்க, அவனும் கீழே வீழ்ந்தான். மார்க்கண்டேயனும் சிரஞ்சீவியாக என்றும் பதினாறு என்ற வரமும் பெற்றான். இறைவனும் அந்த லிங்கத்திலேயே மறைந்தார்.

விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதொ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே. திருக்கடவூர் வீரட்டம் தேவாரம்


சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே. திருக்கடவூர் மயானம் தேவாரம்

பின்னர் உலகில் எவரும் மரணம் அடையாமல் பூமி பாரம் தாங்காது பூமா தேவி வருந்த, திருமாலை வேண்டினாள் அவள். திருமாலும், பிரம்மாவும் ஈசனிடம் முறையிட்டனர். சிவனும் அவர்கள் வேண்டுகோளில் உண்மை இருப்பதைப் புரிந்து கொண்டு, எமனுக்கு மீண்டும் உயிரை எடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அருளினார். இந்த இடம் திருப்பைஞ்ஞீலி என்ற தலத்தில் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. காலகாலர் என்ற பெயர் ஏன் வந்தது என்றால் காற்றுக்குக் கால் என்ற ஒரு பொருள் வரும். காற்று ஓரிடத்தில் நில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் தன்மை படைத்தது. காற்று இல்லாமல் இவ்வுலகில் எந்த உயிரும் இல்லை. அந்தக் காற்றில் உள்ள பிராண சக்தியே ஈசன் ஆவார். அவர் அந்தக் காற்றுக்கே காற்றாகவும், கூற்றாகவும் விளங்குவதால் அவருக்குக் காலகாலன், காலாந்தகர் என்றெல்லாம் பெயர்கள் வந்தன. நம் உடலுக்குள் மூச்சுக் காற்றாக ஓடுவதும் அவனே. நொடிக்கு நொடி இறந்து கொண்டே இருக்கும் நம்மை உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதும் அவனே. மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டு யாருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே இருக்கும் காலத்தைக் கணக்கிட்டு உயிர்களை மரணம் என்ற பிடிக்குள் அடங்கச் செய்ய ஈசனால் நியமிக்கப் பட்டவன் காலன் என்று நாம் அழைக்கும் யமன். அந்தக் காலனையே காலால் உதைத்தமையாலும் அவர் காலாந்தகர் எனப் பட்டார்.


விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே. திருப்பைஞ்ஞீலித் தேவாரம்.

மேற்கண்ட தேவாரப் பாடல்களை அருளிச் செய்தவர் திருநாவுக்கரசப் பெருமான்.

8 comments:

aandon ganesh said...

i am very new to this site.wat a research from you madem.hats off to u.its very useful to younger generation.thanks to my mom also who introduce this site to me.
love & grace

ராம்ஜி_யாஹூ said...

அருமை நன்றிகள்
நம சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் எம் நெஞ்சில் நீங்காதார் வாழ்க

Jayashree said...

ஆமாம் கால சம்ஹார மூர்த்தியின் செப்பு சிலை வெளியே, ஒரு நிமிட தரிசனம் தான் . ஸ்வாமி அம்ருத கடேஸ்வரர் ப்ரதான விக்ரஹம்.
மார்கண்டேயர் வழிபட்ட 108 சிவ ஸ்தலங்களில் திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் அவருக்கு அங்கே சிரஞ்சீவியாக இருக்க அருளியதாக வரலாறு உண்டு.107 வது திருக்கடையுர் மயானம், 108 திருக்கடையுர்னு நினைக்கிறேன்
"ஓம் ம்ருத்யுஞ்சயாய மஹாடெவாய த்ராஹி மாம்சரணாகதம்
ஜன்மம்ருத்யுஜராவ்யாதி பீடிதம் கர்மபந்தநை:
ஓம் கால சமஹார மூர்தியே நம:

VERY BEAUTIFULLY WRITTEN AND WELL REASEARCHED POSTS MRS. SHIVAM.ENJOYED AND UNDERSTOOD A LOT FROM THEM. YOU CERTAINLY DESERVE AN AWARD FOR THIS .சிவ தூதியாகிவிடீர்கள்!!

Geetha Sambasivam said...

வாங்க சிங்கம், பதிவுகள் போடலையா? பூட்டி வச்சிருக்கீங்க போல?? அது சரி, உங்க அம்மா யாரு?? எனக்கும் அறிமுகம் செய்து வைக்கலாமே! :)))))))

Geetha Sambasivam said...

வாங்க ராம்ஜி யாஹூ நன்றிப்பா.

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, நாங்களும் பார்த்தோம் திருக்கடையூரில், சிதம்பர ரகசியம் மாதிரி அபூர்வமாத் தான் திரை விலக்கி தரிசனம் தருவார் கால சம்ஹாரமூர்த்தி. அப்புறம் ரொம்பப் புகழ்ச்சி வேண்டாமே! அதுக்குத் தகுந்தவளா என்னை மாத்திக்க முயல்கிறேன். நன்றிங்க.

Jayashree said...

இதுல ரொம்ப புகழ்ச்சி எங்க இருக்கு?. Well researched என்பது மறுக்க முடியாத உண்மை!! சிவனின் சேவை செய்பவர்கள் சிவனடியார்கள், சிவதூதர்கள். பெண்பால் தூதி!!:))))))))))))))))))))

Geetha Sambasivam said...

நன்றி ஜெயஸ்ரீ ! :D