எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, August 15, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! வீரபத்திரர்!

வீரபத்திரர்:-
சிவபெருமானின் வடிவங்களில் மிகவும் முக்கியமானது வீரபத்திரவடிவம். தக்ஷனின் யாககுண்டத்தில் விழுந்து இறந்த அன்னையின் முடிவுக்கு தக்ஷனைத் தண்டிக்க எண்ணிய ஈசன் தன்னில் இருந்து உருவாக்கிய வடிவே வீரபத்திர வடிவம். தக்ஷன் கதை நமக்கெல்லாம் நன்கு தெரியும். அருமையும் பெருமையுமாக வளர்த்த தன் மகள் தாக்ஷாயணியை ஈசனுக்கு மணம் புரிவித்ததில் தக்ஷனுக்கு இஷ்டமே இல்லை. பித்தன் ஆன ஈசனுக்குப் போய் என் மகளைக் கொடுக்கும்படி நேர்ந்துவிட்டதே எனப் புலம்பினான். மேலும் முதல்முறை மணம் செய்விக்க ஏற்பாடுகள் செய்தபோது ஈசன் மறைந்து போக, மறுமுறை மீண்டும் தவம் செய்து தாக்ஷாயணி ஈசனை அடைந்திருந்தாள். ஆனால் தக்ஷனுக்குத் தெரியாமலேயே இது நடக்க நேரிட்டது. அதிலும் தக்ஷனுக்குக்கோபம். ஆனாலும் தேவர்களால் சமாதான மொழிகள் கூறப் பட்டு ஈசனையும், அன்னையையும் பார்க்க கைலை வந்த தக்ஷன் பூதகணங்களால் தடுக்கப் படவே. தக்ஷப் பிரஜாபதியான என்னை இகழ்ந்த உங்கள் ஈசனை நான் இனி வணங்க மாட்டேன். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் என்னை வணங்குகின்றனர். சுடுகாட்டில் சாம்பலைப் பூசிக் கொண்டு திரியும் உங்கள் சிவன் ஒரு பித்தன். நான் மட்டுமில்லாமல் இனி உலகில் எவரும் ஈசனை வணங்கக் கூடாது.” என்று கூறி விட்டுத் திரும்பித் தன் நாட்டு மக்களுக்குக் கட்டளையும் போட்டான்.

அதன் பின்னர் தந்தையான பிரம்மா செய்த யாகத்துக்கு ஈசன் சார்பில் வந்திருந்த நந்தி தேவரையும், ஈசனையும் இழிவு செய்தும் பேசினான் தக்ஷன். அதோடு நில்லாமல் இனி எந்த வேள்விக்கும் ஈசனை அழைக்கக் கூடாது. வேத மந்திரங்களையே மாற்றவேண்டும் எனவும் தந்தையிடம் சொன்னான். நந்திதேவர் கோபத்துடன் வந்த இடத்தில் அவனுடன் தகராறு செய்யவேண்டாம் என்ற எண்ணத்தில் செல்வதாய்க் கூறிவிட்டு தக்ஷனுக்கு விரைவில் அழிவு ஏற்படும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்து தக்ஷன் யாகம் செய்ய முற்பட்டு அதற்கு ஈசனைத் தவிர அனைவரையும் அழைத்தான். ததீசி முனிவர் ஈசனை விலக்கிச் செய்யும் யாகத்தால் பலன் இல்லை எனக் கூறிவிட்டு அந்த யாகசாலையில் இருந்து சென்றுவிட்டார். மேலும் பல துர்சகுனங்கள் ஏற்பட்டாலும் விடாமல் தக்ஷன் யாகத்தைத் தொடர்ந்தான். நாரதரால் விஷயம் கேள்விப் பட்டு தாக்ஷாயணி யாகத்துக்குச் சென்று தந்தையை உண்மையை உணர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அங்கே வந்து சேர்ந்தாள். தாக்ஷாயணியையும் பெற்ற மகள் எனக் கூடப் பார்க்காமல் இகழ்ந்த தக்ஷன், ஈசனையும் அவ்வாறே இகழ்ந்து பேசினான். கோபம் கொண்ட அன்னை கைலையை அடைந்து நடந்த விஷயங்களைக் கூற ஈசனின் கழுத்தின் விஷத்தின் ஒரு கூறு அவரின் நெற்றிக்கண் வழியே ஆயிரம் முகங்களுடனும், இரண்டாயிரம் கரங்களோடும் தோன்றிய வீர புருஷனே வீரபத்திரன்.அம்மையின் கோபத்தில் இருந்து தோன்றியவளே பத்ரகாளி. இருவரும் தக்ஷனின் யாகசாலையை அடைய தக்ஷன் வீரபத்திரரை யார் எனக் கேட்க, தாம் சிவகுமாரன் எனவும் யாகத்தின் அவிர்பாகத்துக்காக வந்திருப்பதாயும் கூற தக்ஷன் தர மறுக்கிறான். கோபம் கொண்ட வீரபத்திரர் யாகசாலைக்குள் புகுந்து தாக்குகின்றார்.

தேவர்கள் மேலேயும் தாக்குதல் நடத்தி குபேரன், அக்னி, யமன், இந்திரன், நிருதி போன்றவர்களுக்கு மேனியின் ஒரு உறுப்பு இழக்க நேரிடுகிறது. அப்படியும் கோபம் தணியாது இருந்த வீரபத்திரர் தக்ஷனின் தலையை அறுத்துக் கீழே விழுமுன் தடுத்து அக்னியிடம் கொடுத்து உண்ணச் செய்தார். அப்போது அங்கே ஈசன் விடையேறு வாகனனாகத் தோன்றி அனைவரையும் உயிர்ப்பித்தார். வீரபத்திரரை நோக்க அவரும் யாகப் பசுவாக வந்திருந்த ஒரு செம்மறி ஆட்டின் தலையை வெட்டி தக்ஷன் உடலில் பொருத்த அன்றிலிருந்து தக்ஷனுக்கு ஆட்டுத் தலை கிடைக்கிறது. மனிதத் தலையோடு ஆணவம் பிடித்துத் திரிந்த தக்ஷன் ஆட்டுத் தலை பொருத்தப் பட்டதில் மனம் மாறி ஈசனைத் துதிக்கிறான். வீரபத்திரரும், காளியும் கைலை செல்கின்றனர். இந்த வடிவே ஈசனின் வீரபத்திர வடிவு. சிவனின் அட்ட வீரட்டானங்களில் இந்த தக்ஷனின் வதமும் ஒன்று என்றாலும் இதை ஈசன் நேரடியாகத் தான் நிகழ்த்தாமல் வீரபத்திரரைத் தோற்றுவித்து அவர் மூலமே நடத்திக் கொண்டார்.

வட மாநிலத்தில் ஹரித்வாரில் தான் தக்ஷன் யாகம் செய்ததும், தாக்ஷாயணி யாக குண்டத்தில் விழுந்ததும் நடந்ததாய்க் கூறுகின்றனர். கங்கால் என்ற பெயரில் உள்ள இடத்தில் தக்ஷேஸ்வர மஹாதேவர் என்ற பெயரில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார். இங்கே தான் வீரபத்திரரும், காளியும் தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள். மேலும் இங்கே சதிகுண்டம் என்ற பெயரிலேயே குண்டம் ஒன்றும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் திருப்பறியலூர் தான் அட்ட வீரட்டானத் தலங்களில் தக்ஷனின் தலையைக் கொய்த இடமாகக் கருதப் படுகிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒன்றும் இந்த ஊரைக் குறித்துக் காணக் கிடைக்கிறது.

1437.
கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.
1.134.1
1438

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.மாணிக்க வாசகரோ தம் திருவுந்தியாரில் தக்ஷன் தலையைக் கொய்தது பற்றிக் கூறியதாவது:

"சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வபாடி உந்தீ பற
உருத்திர நாதனுக்கு உந்தீபற.

4 comments:

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

ஸ்ரீமதி,
சிவபெருமானால் மறு உயிர் பெற்ற ஆட்டுத் தலை கொண்ட தக்ஷன், சிவனைத் துதித்துப் பாடியது தான் யஜுர் வேதத்தின் முக்கிய பகுதியாகிய ஸ்ரீ ருத்ரத்தினை அடுத்து வரும் சமகம் என்பது. ஒவ்வொரு பதத்திலும் ஆட்டின் சப்தமாகிய "மே" என்ற சப்தம் வரும் வகையில் அமைந்தது. 'மே' என்றால் வேண்டும் என்பது அர்த்தமாகும். "ஸஞ்சமே, மயச்சமே, ப்ரியஞ்சமே" என்று ஒவ்வொரு பதத்திலும் "மே" என்று அமையும்.
சாட எடுத்தது தக்கன் தன் வேள்வியில் - அப்பர் சுவாமிகள்.

Geetha Sambasivam said...

நன்றி தீக்ஷிதரே, சமகம் நீங்க சொன்னாப்போல் மே மே என முடியும் என்பதைக் கேட்டுத் தெரிஞ்சு இருந்தாலும் தக்ஷன் சிவனைத் துதித்துப் பாடியது என்ற விபரம் இப்போத் தான் தெரியும். அப்பர் ஸ்வாமிகளோட பதிகத்தையும் பார்க்கலை. நன்றி.

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஜி

Anonymous said...

especialli veerabhadra is work shipped in andhra karnataka and mnorth india try to visit the ancient veerabhadra tample in kumbakonam near mahamaham kulam