எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, August 17, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அந்தகாசுர வதம்!


இரண்யாட்சன், இரண்யகசிபு ஆகிய இரு அசுரர்களும் பல தவங்கள் செய்து வரங்களைப் பெற்றனர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதில் இரண்யகசிபுவுக்கு பிரஹலாதன் உட்பட மூன்று பிள்ளைகள் பிறந்திருந்தனர். ஆனால் இரண்யாட்சனுக்குக் குழந்தைச் செல்வமே ஏற்படவில்லை. ஆகையால் அவன் சிவனைக் குறித்து எவராலும் வெல்ல முடியாத தாயினால் மட்டும் மரணம் நிகழக் கூடிய ஒரு மகன் வேண்டும் எனத் தவம் இருந்து வந்தான். அப்போது ஒருநாள் உமையவள் இறைவனார் கண்களை விளையாட்டாய் மூட உலகமே இருளில் ஆழ்ந்தது. சூரிய, சந்திரர்களின் ஒளியும் இல்லாமல் போய் இருந்த அந்த நேரத்தில் அம்பிகையின் சக்தி மூலமும், ஈசனின் நெற்றிக்கண்ணின் வெப்பத்தில் இருந்தும் கரிய நிறமுள்ள ஓர் குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே ஜடாமுடி, தாடி, மீசை எனப் பயங்கரத் தோற்றத்துடன் பிறந்த அந்தக் குழந்தையின் அழுகையோ நாராசமாக இருந்தது. சிரித்தால் அகிலாண்டமும் நடுங்கியது. ஆனால் என்ன இது? இந்தக் குழந்தைக்குக் கண்களே இல்லையே? ஆம்! அந்தக் குழந்தை ஈசனின் கண்களை அன்னை மூடிய தருணத்தில் பிறந்ததால் பார்வை அற்று அந்தகனாய் இருந்தது. அந்தகன் எனவே பெயரிட்டார்கள் அந்தக் குழந்தைக்கு.

பிள்ளைவரம் வேண்டிய இரண்யாட்சனிடன் ஈசன், “உனக்குப் பிள்ளை பெறும் பேறு கிடையாது. ஆனால் எவராலும் வெல்லமுடியாத வலிமை உள்ள இந்தக் குழந்தையை உன் பெற்ற மகனைப் போல் வளர்த்துவா. “ என்று சொல்லி அந்தகாசுரனைக் கொடுத்தார். அந்தகனும் இரண்யாட்சனிடம் செல்வாக்கோடு வளர்ந்து வந்தான். இரண்யாட்சனோ தனக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைத்துவிட்டது என்ற மமதை தலை மேல் ஏற, அனைத்து மக்களையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். இந்தப் பூமியையே ஒரு பாய்போல் சுருட்டிக் கடலுக்கு அடியில் கொண்டு போய் மறைத்துவிட்டான். அனைவரும் பிரம்மாவிடமும், விஷ்ணுவிடமும் முறையிட, விஷ்ணுவும் வராஹ அவதாரம் எடுத்துக் கடலுக்கடியில் இருந்த பூமியை மீட்டுக் கொண்டுவந்து சேர்த்தார். இரண்யாட்சனும் அழிக்கப் பட்டான். இரண்யாட்சனின் மகனாக அந்தகன் அங்கீகரிக்கப் பட்டிருந்தாலும், அவனுக்குப் பார்வை இல்லாமையால் அவனால் இரண்யாட்சனுக்குப் பின் அரசாளமுடியவில்லை. இரண்யகசிபு முடிசூட்டப் பட்டான். அவனோ அண்ணனுக்கு நான் சளைத்தவனோ, இளைத்தவனோ அல்ல என்னும் நோக்கோடு செயல்பட்டான். அனைவரையும் தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது எனப் பணித்தான். மீறினவர்களைத் தண்டித்தான்.

ஆனால் இரண்யகசிபுவின் சொந்த மகனான பிரஹலாதனோ விஷ்ணுவைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று சொல்லிவந்தான். மகனுக்குப் பலவிதங்களிலும் தண்டனை கொடுத்த இரண்யகசிபு, கோபத்துடன்,” எங்கே இருக்கிறார் உன் விஷ்ணு? காட்டு, பார்க்கலாம்!’ என்று கோபத்துடன் அருகே இருந்த தூணை உதைக்க, மஹாவிஷ்ணு, நரசிம்மமாக அவதாரம் செய்து அவனை அழித்து பிரஹலாதனுக்கு முடிசூட்டினார். இவ்விதம் பார்வை இல்லாத காரணத்தால் அரசாட்சி கிடைக்கவில்லை என்பதால் மனம் நொந்த அந்தகன் பிரம்மாவை தியானித்துக் கடுந்தவம் மேற்கொண்டான். பிரம்மவால் பல வரங்கள் கிடைத்தன. முக்கியமாய் அவனுக்குப் பார்வையும், அழகான மேனியும் பிரம்மா கொடுத்தார். ஆனால் அந்தகாசுரன் சாகாவரமும் கேட்க அதை மறுத்தார் பிரம்மா. பின்னர் அந்தகன் தந்திரம் செய்வதாய் நினைத்துக் கொண்டு, “ எனக்குத் தாயாக இருக்கக் கூடிய பெண் ஒருத்தியால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும். அதுவும் காரணமின்றி நிகழக்கூடாது. அந்தத் தாய் மேல் நான் மோகம் கொள்ளும் சந்தர்ப்பத்தில் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்.” என்று கேட்டுக் கொண்டான். தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்ட பிரம்மா, அப்படியே வரம் தந்தார்.

தாய் மேல் எவனாவது மோகம் கொள்ளுவானா? அல்லது தாய் தான் தன் குழந்தையை அழிப்பாளா? ஆகவே, நம்மை எவராலும் வெல்லமுடியாது என்றே அந்தகாசுரன் திடமாக எண்ணினான். பார்வையும் கிடைத்தது. அழகான உருவும் பெற்றான். பூலோக அரசர்கள் அனைவரையும் வென்றான். மந்தரமலை அடிவாரத்தில் தனக்கெனத் தனியாக ஒரு நகரை உருவாக்கிக் கொண்டான். தன் விருப்பம் போல் வாழத் தொடங்கினான். அவன் மந்திரிகள் அவனுக்கு துர்போதனைகளே அதிகம் சொல்லிக் கொடுத்து அவன் மீள முடியாமல் செய்தும் வந்தனர். மதுவும், மாதுவுமே அந்தகனுக்கு முக்கியமான சுகபோகம் எனச் செய்தனர். அவன் மோகத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. மந்திரிகள் ஒரு நாள் காட்டில் ஒரு குகையில் முனிவர் ஒருவர் தன் மனைவியோடு இருப்பதைக் கண்டனர். முனி பத்தினியின் தெய்வீக அழகு அவர்கள் கண்களைக் கவர, தங்கள் மன்னனுக்கு ஏற்ற பெண் இவள் என எண்ணி அந்தகனிடம் போய் அவள் அழகை வர்ணித்தனர். ஆனால் அந்தப் பெண்ணோ அழகில் மட்டும் தெய்வீகம் இல்லை, உண்மையாகவே தெய்வப் பெண்ணாம் அன்னையவள் அங்கே ஈசனோடு வந்திருந்தாள். அதை அறியாமல் அந்தகனுக்கு அந்தப் பெண்பால் மோகத்தை மூட்டிவிட அந்தகனும் மோகம் தலைக்கேறியவனாய் குகைக்கு வந்து அந்தப் பெண்ணைக் கவர்ந்து செல்ல நினைத்தான். முனிவரை எதிர்த்து அவனால் முடியவில்லை.

தனி ஒருவனால் முடியாமல், தன் சேனைகளைத் திரட்டிக் கொண்டு வந்தான். முனிவருடன் போரிட்டான். ஆனால் சர்வேசனோ அவனது படைகளைச் சின்னாபின்னமாக்கியதோடு அந்தகனையும் தாக்கினார். ஓட்டம் பிடித்தான் அந்தகன். அந்தகனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார் ஈசன். தேவியாலேயே அது முடியவேண்டும் என்பதும் உணர்ந்து தேவியைக் குகையிலேயே தனித்திருக்க வைத்துவிட்டுத் தாம் மட்டும் நந்தியெம்பெருமானோடு கிளம்பிச் சென்றார். இங்கே அன்னைக்குத் துணையாக சப்தகன்னியரும் இருந்தனர். அந்தகனுக்கு தேவி தனித்திருக்கும் செய்தி கிடைத்து மீண்டும் ஒரு பெரிய சேனையோடு வந்தான். போர் நடந்தது. அந்தகனின் சேநாதிபதியான “விசுஸன்” என்பவன் பெரிய பாம்பாக மாறி வந்து தேவிக்குத் துணையாகப் போரிட்ட அனைவரையும் விழுங்க, யோக சக்தியால் அறிந்த ஈசன், அம்பினால் விசுஸனை அழித்தார். எனினும் அசுர சக்தி வளர்ந்தது. சுக்ராசாரியார் தனது “ம்ருத்யுஞ்ச மந்திர”த்தின் மஹிமையால் அசுரர்களைப் பிழைக்க வைத்துக் கொண்டிருந்தார். தேவர்கள் சுக்ராசாரியாரைத் தந்திரமாய்ப் பிடித்து ஒரு பழமாக மாற்றி ஈசனிடம் கொடுக்க அவரும் பழத்தை விழுங்கிவிட்டார். அசுர சேனையும் பாதிப்படைந்தது. ஆனாலும் அந்தகன் தன் மாயையால் மும்மூர்த்திகளைப் போன்ற தோற்றம் எடுத்து வந்து அனைவரையும் குழப்பினான். முடிவு நெருங்குவதை நினைத்த ஈசன் தன் வலத்தோளில் இருந்து தன் சக்தியைத் தோற்றுவித்தார். பல முகங்கள், பல நாக்குகளோடு தோன்றிய அந்தச் சக்தியானது மேலும் பல சக்திகளை உண்டாக்கி, அசுரர்களின் ரத்தம் தரையில் விழுமுன் உறிஞ்சிக் குடித்தனர். இதனால் அசுர ரத்தத்தில் இருந்து மேலும் அசுரர்கள் உருவாகாமல் அசுர சேனை அழிய ஆரம்பித்தது. விரைவில் சிவனுடன் தனித்துப் போரிட வேண்டி வந்தது அந்தகனுக்கு.

அந்தகனை வீழ்த்தித் தன் சூலத்தால் அவன் உடலில் குத்தித் தூக்கினார் ஈசன். பின் சூலத்தைத் தன் அம்சம் ஆன ருத்ரனிடம் அளிக்க, அவரும் அதை ஏந்திய வண்ணம் உலகை வலம் வந்தார். அந்தகனின் ரத்தம் பூமியில் விழுந்தால் மீண்டும் அசுர குலம் தலை எடுக்கும் என்பதால் அவரோடு கூடவே ஒரு பூதம் அந்த ரத்தத்தைக் குடித்துக் கொண்டே வந்தது. சூலத்தில் தொங்கிய அந்தகன் இறக்கவில்லை. ரத்தம் உறிஞ்சப் பட்டது. ம்ருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தான். மேலும் சிறந்த சிவ பக்தன் ஆனதால் சிவநாமத்தையும் பஞ்சாக்ஷரத்தையும் உச்சரித்தான். ஆயிரம் வருடங்கள் இவ்வாறு சிவனாருக்குக் குடை போல் வலம் வந்த அந்தகன் அதன் காரணமாகவே முக்தியும் பெற்றான். அவனை “ப்ரிங்கிரீடன்” என்ற பெயரில் தன் சிவகணங்களில் ஒருவராக திருக்கைலையில் இருக்குமாறு அருளுகின்றார். இந்த அந்தகாசுர வதம் புரிந்த மூர்த்தியை அந்தகாசுர சம்ஹாரர் என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்த மூர்த்தியின் வடிவம் திருக்கோயிலூரில் காணக்கிடைக்கும் என்று சொல்லப் படுகிறது.

அறையார்கழ லந்தன்றனை அயின்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
முறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையான்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. திருஞாநசம்பந்தர் தேவாரம்


ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை
நான்முகனும் அறியாத நெறியார் கையிற்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்
தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்
காலத்தா லுதைசெய்து காதல் செய்த
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. ஆறாம் திருமுறை, நாவுக்கரசர் தேவாரம்


காஞ்சிக்கருகே திருப்புட்குழி என்னு ஊர் பெயர் மாறி மணிகண்டீஸ்வரர் கோயில் என்னும் பெயரால் வழங்கப் படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் போன்ற ஊர்களில் அந்தகாசுர வதம் பற்றியும் அவனை அழித்த பைரவர் பற்றியும் காணலாம். அருணகிரிநாதரின் திருவேற்காடு திருப்புகழிலும் அந்தகாசுர வதம் பற்றிய குறிப்பைக் காணலாம்.

பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
பாசந்தா திருமாலின் ...... மருகோனே

பதம் பிரித்துப் பொருளோடு:


பாடு அம்பு ஆர் திரி சூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே ... பெருமை வாய்ந்த அம்பு போல கூர்மை வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை* வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின் மருகனே,//

ஈசனின் வீரட்டானத் திருத்தலங்களில் திருக்கோயிலூர் இரண்டாவதாய்ச் சொல்லப் படுகிறது. அந்தகாசுரனைச் சூலத்தால் ஈசன் குத்தியபோது சிந்திய ரத்தத்தில் இருந்து அசுரர்கள் மேன்மேலும் உற்பத்தி ஆகவே காளி கபாலத்தால் அதை ஏந்துகிறாள். சிந்திய ரத்தக்கோடுகள் குறுக்கும், நெடுக்குமாய் எட்டுத் திசைகளிலும் விழுந்து 64 பதங்களாய் விழ, ஈசன் ஒவ்வொரு பதத்திலும் தன் விஸ்வரூப அம்சமான பைரவரைப் பிரதிஷ்டை செய்கிறார். 64 பைரவர்களாலும் அந்தகாசுரன் அழிக்கப் படுவதாய் ஐதீகம். வீடுகட்ட வாஸ்து புருஷன் நித்திரை விடும் நாளில் ஆரம்பிப்பது வழக்கம். இந்த 64 பைரவர்களுக்கும் செய்யப்படும் வழிபாடே வாஸ்து சாந்தி நிவர்த்தி எனப்படும். இவர்களுக்குச் செய்யப் படும் வழிபாடே வாஸ்து பூஜை என்றும் சொல்லப் படும். அடுத்த பதில் பைரவர் அஷ்டகமும், பஞ்சரத்னமும் ஒரு பார்வை. பைரவர் பற்றித் தனியாகப் பதிவு வரும்.

8 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்

virutcham said...

//இந்தப் பூமியையே ஒரு பாய்போல் சுருட்டிக் கடலுக்கு அடியில் கொண்டு போய் மறைத்துவிட்டான்.//

ஒரு பந்து போல் இல்லையோ?
பூமி உருண்டை என்ற அறிவியல் கருத்துக்களோடு நமது புராணங்கள் ஒத்துப் போவதாக சொல்வதுண்டு.
பாய் போல் என்பது அதை மறுதலிக்கிறது

Geetha Sambasivam said...

நீங்க சொல்றது மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்தப்போ நடந்தது, விருட்சம். இது வேறே, அது வேறே! :)))))))))) பூமியைக் கோளம் என்று எப்போவோ நமது புராணங்களும், மற்ற அடியார்களின் பாடல்களும் சொல்லியாச்சு.

Geetha Sambasivam said...

நன்றி ராம்ஜி யாஹூ!

Jayashree said...

SYMBOLIC REPRESENTATION OF DESTRUCTION OF VEIL OF IGNORANCE (ANDHAKASURAN)AND GETTING ENLIGHTENED.இல்லையா? மஹா சக்தியோட ATTRIBUTES துணை நிற்க. உஜ்ஜைனி மஹா காளேஸ்வர் புராணத்துல சொல்லிக்கேட்டது. உஜ்ஜைனி ல தானே ருத்ர ஸாகர், கோடி தீர்தம் ?

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, ரொம்ப பிசி போல?? :))) பார்க்கவே முடியறதில்லை இப்போல்லாம்??? :D உஜ்ஜைன் போனதில்லை. இரண்டு முறை முயன்றோம், போக முடியலை, இனி எப்படியோ, பார்க்கலாம். :))))))

virutcham said...

//இந்தப் பூமியையே ஒரு பாய்போல் சுருட்டிக் கடலுக்கு அடியில் கொண்டு போய் மறைத்துவிட்டான். அனைவரும் பிரம்மாவிடமும், விஷ்ணுவிடமும் முறையிட, விஷ்ணுவும் வராஹ அவதாரம் எடுத்துக் கடலுக்கடியில் இருந்த பூமியை மீட்டுக் கொண்டுவந்து சேர்த்தார்.//

இது வராஹ அவதாரம் தானே.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, சமாளிக்கிறேன்னு தெரியலையா விருட்சம்??? பாய்னு கவனக்குறைவா எழுதி உங்க கமெண்ட்ஸும் வந்துடுச்சு, திருத்தவேண்டாம்னு கமெண்ட்ஸிலே சமாளிஃபையிங்!திருத்திடறேன் அப்பா/அம்மா! நீங்க அரசா?? ஆலா???:)))))))))))