எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, November 16, 2010

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!


தக்ஷிணாமூர்த்தி தென்முகம் காட்டி அமர்ந்திருப்பதன் காரணம் கேட்டிருந்தார் ப்ரியா. பொதுவாய் வடக்கு வாழ வைக்கும் என்று சொல்வது உண்டு அல்லவா?? எந்த ஒரு நல்ல காரியத்தையும் தென்பக்கம் பார்த்துச் செய்யக் கூடாது என்றும் கூறுவார்கள். தென் திசை அழிவைக்குறிக்கும். ஆகவே அழிவைக்குறிக்கும் திசையை நோக்கி அமர்ந்திருக்கும் ஈசனின் திருவுருவை நாம் வாழ வைக்கும் வடதிசை நோக்கி அமர்வோம் அன்றோ?? நம் ஆன்மாக்கள் உய்வுறவேண்டி ஈசனே அங்ஙனம் அமர்ந்திருக்கிறார். இது தவிர த+க்ஷி+ணா என்பது நமது மும்மலங்களான ஆணவம்,கன்மம், மாயை ஆகியவற்றையும் குறிக்கும் என்றும் திரு நடராஜ தீக்ஷிதர் அவர்கள் தெரிவிக்கிறார். ஆணவன், கன்மம், மாயை அகல மோனத்தின் மூலம் ஞாநத்தை உணர்த்தியஞாநகுருவான தக்ஷிணாமூர்த்தியை வழிபடுதல் சிறப்பு என்றும் கூறுகிறார்.

ஒரு சமயம் பிரம்மாவிற்குப் படைப்பில் ஆர்வம் இல்லாமல் போக, நான்கு குமாரர்களைப் படைத்து அவர்களிடம் தன்பொறுப்பை ஒப்படைக்க எண்ணுகிறார் பிரம்மகுமாரர்களாகிய சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர் ஆகிய நால்வரும் பிறவி ஞாநம் பெற்றுத் திகழ்ந்தார்கள். பிரம்மா தன் மக்களிடம்பொறுப்பை ஒப்படைக்க எண்ணியபோது, நாரதருக்கு அதுகுறித்துத்தெரிய வந்தது. தன் சகோதரர்கள் பிரம்ம ஞாநத்தை அறிந்தவர்கள் என்பதும், தாங்கள் யார் என்ற ஞாநம் பெற்றவர்கள் என்பதும் தெரிந்ததால் நாரதர் சகோதரர்களை எச்சரிக்கிறார். அவர்களும் இம்மாதிரியான சிருஷ்டிப்பொறுப்பை ஏற்க மனமின்றித் தங்களுக்கேற்ற குருவை நாடி ஒவ்வொரு இடமாய்த் தேடிச்செல்கின்றனர். தங்கள் தந்தை சிருஷ்டியில் மூழ்கி இருப்பதும் அது குறித்த பிரச்னைகளையும் அறிந்த அவர்கள் தங்களால் அது இயலாது என்று வைகுண்டத்தில் மஹாவிஷ்ணுவை நாடிச் செல்கின்றனர். அவரோ அங்கு ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி உடனிருக்கப் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கக் காண்கின்றனர். ஆஹா, இவரும் குடும்பஸ்தராகவே இருக்கிறாரே என எண்ணிக்கொண்டு, கைலை நோக்கிச் செல்கின்றனர்.

சநத்குமாரர்கள் தன்னை நாடி வருவதைத் தெரிந்து கொண்ட ஈசன் இங்கேயும் தான் தன் மனைவியோடு இருப்பதை அறிந்துகொண்டால் சநத்குமாரர்கள் ஏமாந்து போய்விடுவார்கள் என்பதோடு அவர்களுக்கு முக்திக்கு வழியும் காட்ட முடியாது என்பதையும் புரிந்து கொண்டு, தான் ஒரு பதினாறு வயதுப்பால யோகியாக மாறி, மானசரோவர் ஏரியின் வடகரையில் ஒரு வடவிருட்சத்தின் கீழ் தென் முகம் நோக்கி அமர்கின்றார்.

கைலை வரும் வழியில் வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்த தவம் செய்யும் யோகியைக் கண்ட சநத்குமாரர்கள் இவரே தங்களுக்கு ஏற்ற குரு எனத் தெளிந்து அவரிடம் வந்து அமர்கின்றனர். பாலயோகியும் சீடர்களை வரவேற்கிறார். சநத்குமாரர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்க யோகியும் அதற்கேற்ற பதில்களைக் கொடுக்கிறார். இவர்கள் சந்தேகங்கள் மேன்மேலும் எழும்புகின்றன. யோகியும் அசராமல் பதில் கொடுக்கிறார். கடைசியில் இந்த சந்தேகங்களும், அவற்றுக்குப் பதில் கொடுப்பதும் ஒரு வருஷம் தொடர்ந்து நடைபெற்று வர, ஈசன் இனி இது ஒன்றே அனைத்திற்கும் ஒரே பதில் எனக் கூறுவது போல் சின்முத்திரை காட்டி நீடித்த மெளனத்தில் சமாதி நிலையில் அமர்கிறார். ஈசன் சமாதி நிலையில் அமர்ந்ததுமே சநத்குமாரர்கள் மனதிலும் இனம் காணா அமைதி, ஆநந்தம். ஈசனுடைய சமாதிநிலையின் சர்வத்துவம் அவர்களிடமும் வந்து அடைய அவர்களும் சச்சிதாநந்தப் பெரு வெள்ளத்தில் மூழ்கி அமைதி அடைகின்றனர். இதுவே சத்தியம், இதுவே நித்தியம், இதுவே அநந்தம் என்று தெளிவும் அடைகின்றனர்

5 comments:

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

அருமையான பதிவு.
பொதுவாகவே, ஈசனுக்கு உரிய திசை தெற்கு. ஈச அம்சமான, தென் திசைப் பரமனை நாம் வடக்கு நோக்கி தான் வழிபடுகின்றோம். ஆகவே வடதிசை வாழவைக்கும் திசை.
த, க்ஷி, ண - என்பன மூன்று பீஜாக்ஷரங்க. தம், க்ஷிம், ணம் இந்த மூன்று அக்ஷரங்களைச் சொல்லும்போதே மும்மலங்கள் அழிகின்றனவாம்.
பீஜாக்ஷர மூர்த்தியே தக்ஷிணாமூர்த்தி.
வேறு எந்த மூர்த்திக்கும் இல்லாத ஒரு சிறப்பு இது. பரமசிவனின் பீஜாக்ஷரங்கள் ஐந்து எழுத்துக் கொண்ட நமசிவய. அவரை நாம் நமசிவய மூர்த்தி என்று அழைப்பதில்லை.
பீஜாக்ஷர வடிவாகவே ஒளிபொருந்தி அமர்ந்திருக்கின்றார். அவரின் பாத ஒளியைக் கண்டே திருவாதவூரர் மாணிக்கவாசகர் ஆனார்.
வட ஆல மரம் ஞானத்தைக் குறிக்கின்றது. ஞானத்தின் நிழலில் அமர்கின்றவர். மரம் எப்படி எங்கெங்கும் கிளைகள் பரப்பி ஊன்றி வளர்கின்றதோ, எங்கும் ஆன்ம ஞானத்தை தக்ஷிணாமூர்த்தி ஊன்றவைக்கின்றார்.
நன்றிகள் பல.
நி.த. நடராஜ தீக்ஷிதர்

திவாண்ணா said...

எந்த ஒரு நல்ல காரியத்தையும் தென்பக்கம் பார்த்துச் செய்யக் கூடாது என்றும் கூறுவார்கள். தென் திசை அழிவைக்குறிக்கும்.//

அதென்ன அப்படி சொல்லிட்டீங்க?
தென் திசை பித்ருக்களுக்கும் எமனுக்கும் உரியது. தேவர்கள் சகாயம் நமக்கு வேன்டி இருக்கறாப்போலே பித்ருக்கள் உதவியும் வேணுமில்லையா?

ஹிஹிஹிஹி நானும் படிக்கிறேன். :P

Geetha Sambasivam said...

வாங்க தீக்ஷிதரே, நீங்க சொன்ன பீஜாக்ஷரங்கள் பற்றிய செய்தியைப் பதிவாய்ப் போடப் போறேன்னு சொன்னதாலே நான் அதை என்னோட பதிவிலே குறிப்பிடவில்லை! :)))))))) இங்கே பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி.

Geetha Sambasivam said...

வாங்க திவா, ஆமாம், அதை எழுதணும்னு முதல்லே நினைச்சேன். அப்புறமா வேண்டாம்னு இருந்துட்டேன். :)))))நீங்களும் படிக்கிறதுக்கு நன்னியோ நன்னி! :P

Jayashree said...

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்க முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வர்க்கும் வாக்கிறந்த பூரணமாய்
மறைக்கபாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவ தொடக்கை வெல்வாம்


“ மௌன சாமி, சும்மா சின் முத்திரை காமிச்சுண்டு உக்காந்திருக்கிற கோலமே சநத்குமார ஸ்வாமிக்கும் சனகாதி முனிவருக்கும் எல்லலாம் புரிய வச்சுடுத்து. ஒவ்வொத்தருக்கும் வளர வளர அவாஅவா நிலைக்கு ஏத்தாப்பல அவரொட ஒவொரு போஸும் ஒரு ஞ்யானத்தை கொடுக்கும். மந்திரம் கிந்திரமெல்லாம் வேண்டாம் எங்கையாவது தப்பும் தவறுமாய் சொல்லறதுக்கு . அவரோட கோலம் ஞ்யானம். அதுனால தினோம் ஒரு நிமிஷமானாலும் கண்ண மூடறச்சே அந்த கோலத்தை ஞ்யாபக படுத்திக்கோ, அது உன் ப்ரொஃபெஷன்ல சரியான பாதைல போக வைப்பார்” நு என் அம்மா முதல் முதல்ல சேந்தப்போ எனக்கு சொல்லிதந்தது.அப்ப எனக்கு அவரை உருவகப்படுத்திக்க தெரியலை. முதல் முதலா 1985 ல ஷிரிடி ல தரிசனம் பண்ணினப்போ அம்மா சொல்லறவர் மாதிரி இருக்கேனு உணர்ந்தது. 2 வருஷம் முன்னால ஆலங்குடி போனப்போ புரிஞ்சது நன்னா பாத்தேன்