எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, January 23, 2011

அண்ணாமலைக்கு அரோஹரா!

2,668 அடி உயரமும் எட்டு மைல் சுற்றளவும் உள்ள திருவண்ணாமலையில் அரிய மூலிகைகளும், குகைகளும் உள்ளன. இந்த மலை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜதம் என்னும் ஈசனின் ஐந்து முகங்களை நினைவூட்டும் பஞ்சகிரி என்றும் கூறுகின்றனர். கிரிவலம் வரும்போது ஒரு இடத்தில் இந்த ஐந்து முக தரிசனத்தைக் காணலாம். கிழக்குத் திசையில் கிளம்புகையில் பார்க்கும்போது ஒன்றாய்த் தெரியும் மலையானது சுற்றும்போது இரண்டு, மூன்று என்று ஆரம்பித்து முடிக்கையில் ஐந்தாய்த் தெரியும் என்றனர். இந்தப் பஞ்சமுக தரிசனம் எங்களால் பார்க்க முடிந்தது. அது கிடைத்தாலும் கிரிவலம் நடந்து செய்யவில்லை என்பதால் திசைகள் சரிவரப் புரியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். திடீர்ப்பயணம் என்பதோடு இரவே ஊர் திரும்பும் திட்டமும் கூட. இரண்டு நாட்களாவது தங்கி இருந்து பார்க்கவேண்டும். அண்ணாலையில் அடிக்கு ஆயிரம் லிங்கங்கள் என்ற வழக்குச் சொல்லும், அதை ஒட்டிய ஐதீகமும் இருப்பதால் ஊரில் பெரும்பாலோர் செருப்பணிந்து நடப்பதில்லை.

அருணாசலேஸ்வரரின் மற்றப் பெயர்கள்: “லிங்கோத்பவர், இமயலிங்கம், பிரம்மலிங்கம், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாண சுந்தரர், அருணாசலேஸ்வரர், ஈசானலிங்கம், சிதம்பரேஸ்வரர், அக்னி லிங்கம், சம்புகேஸ்வரர், சநாதனேஸ்வரர், நாரதேஸ்வரர், சந்ந்தேஸ்வரர், வால்மீகீஸ்வரர், சநத்குமாரர், சனகேஸ்வரர், வியாச லிங்கம், வசிஷ்ட லிங்கம், குபேர லிங்கம், வாமரிஷீஸ்வரர், சஹஸ்ர லிங்கம், கெளசிகேஸ்வரர், குத்சரிஷீஸ்வரர், வைசம்பாதனேஸ்வரர், வருண லிங்கம், தும்புரேஸ்வரர், காசிலிங்கம், சதலிங்கம், விக்ரபாண்டீஸ்வரர், வாயுலிங்கம் ஆகியன. மேலும் இங்குள்ள மூலஸ்தானத் திருமேனியை ஸ்வர்ணபந்தன முறையில் பிரதிஷ்டை செய்யப் பட்டதாயும் கூறுகின்றனர். இங்கு மலையே லிங்கம் என்பதால் அருணாசலேஸ்வரர் சந்நிதியில் உள்ள நந்தியெம்பருமான் மலையைப் பார்த்த வண்னமே அமர்ந்துள்ளார். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களின் நந்திகளும் அவ்வாறே மலையைப் பார்த்த வண்ணமே உள்ளன. இங்கு உள்ள 106கல்வெட்டுக்களிலும் அருணாசலேஸ்வரரை, திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மஹாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணாநாட்டு உடையார் என்று குறிப்பிடப் பட்டுள்ளார். நாட்டிய சாஸ்திரத்தின் தாண்டவ லக்ஷணம் என்னும் நூற்றியெட்டு நாட்டிய நிலைகளையும் விளக்கும் சிற்பங்கள் ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பாதாள லிங்கேஸ்வர்ர் சந்நிதியில் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இதை எல்லாம் நிதானமாய்ப் பார்க்கவேண்டும். :(

இந்தக் கோயிலில் சித்ரகுப்தருக்குத் தனிச் சந்நிதி உள்ளது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. இங்கு உள்ள திருக்குளமும் சிவகங்கை என்ற பெயராலேயே அழைக்கப் படுகிறது. இந்தக் குளத்துக்கு இறங்கும் வாயிலருகே கம்பத்து இளையனார் சந்நிதி உள்ளது. இங்கே முருகப்பெருமான் வில்லேந்திய கோலத்தில் காட்சி அளிக்கிறான். அருணகிரியாரின் வேண்டுகோளின்படி பிரெளடதேவனுக்கு முருகன் காட்சி அளித்த இடம் இது தான் என்கின்றனர். கோப்பெருங்சிங்கன் என்னும் அரசன் அருணாசலேஸ்வரருக்குக் காதணிகள், ரத்தினமுடி, பிரபாவளி என்னும் ஆபரணம், கல்பவிருக்ஷம், முத்து விதானம், ரத்தினக் கட்டில் ஆகியவற்றையும் உண்ணாமுலை அம்மனுக்காக கற்கள் பதித்த அங்கியும் முருகனின் மயிலுக்குத் தங்க்க் கவசமும் செய்து வைத்திருக்கிறான். அண்ணாமலையாரை வேண்டி குழந்தைப் பேற்றுக்காகப் பல பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் கரும்புக்கட்டுகள் மற்றும் புடவைத் தொட்டில் கட்டிக் குழந்தையைப் படுக்க வைத்து மாடவீதிகளை வலம் வந்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.


குழந்தைச் செல்வம் இல்லாத வல்லாள மஹாராஜாவுக்கு அண்ணாமலையாரே ஒவ்வொரு வருடமும் சிராத்தம் செய்து வருகிறார். வல்லாள மஹாராஜா இறைவனை வேண்டிக் குழந்தைப் பேற்றுக்காகப் பிரார்த்திக்க ஈசன் ஒரு சிவனடியாராகக் காட்சி அளிக்கிறார். சிவனடியாரை வணங்கி அவருக்கு வேண்டிய சேவைகள் செய்த மஹாராஜாவிடம், தன்னுடன் தங்க ஒரு பெண் வேண்டும் என்று அடியார் கேட்கத் தன் மனைவியான சல்லமாதேவியை அனுப்பி வைக்கிறான் வல்லாளன். அங்கே சென்ற சல்லமாதேவியோ அடியாரைக் காணாமல் ஒரு பச்சிளங்குழந்தையைக் கண்டு திகைக்கிறாள். மன்ன்னை அழைக்க வியப்படைந்த மன்னன் வந்து பார்க்க, அசரீரியாய்க் குரல் கேட்கப் பின்னர் ரிஷபாரூடராய் ஈசன் காட்சி அளித்து, இப்பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லாத வல்லாள ராஜனுக்குத் தாமே குழந்தையாய் வந்ததாயும், அவனுக்குரிய ஈமக்கடன்களைத் தாமே செய்யப் போவதாயும் கூறி மன்னனை மகிழ்விக்கிறார் ஈசன். அது முதல் ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் மக நக்ஷத்திரத்தில் கொண்டப்பட்டு என்னும் கிராமத்தில் வல்லாளராஜனுக்கு ஈமக்கடன்கள் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் அங்கே எழுந்தருளுகின்றார்.


மாணிக்க வாசகர் இங்கே வந்து தங்கி இருக்கையில் தான் திருவெம்பாவையைப் பாடினார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரைத் தவிர கணம்புல் என்னும் புல்லை விற்று அண்ணாமலையாருக்குத் தினமும் தீபம் ஏற்றி வந்த கணம்புல்லாநாயனார் என்பவருக்கு ஒரு நாள் புல்லே விற்காமல் விளக்கு எப்படி ஏற்றுவது என யோசித்துத் தன் தலை முடியையே திரியாக்கி எரிக்க, அவரின் பக்தியைக் கண்டு ஈசன், அன்னையோடு அவருக்குக் காட்சி அளித்த தலம் திருவண்ணாமலையே ஆகும். எல்லாவற்றுக்கும் மேல் அருணகிரியாருக்கு முருகன் குருவாக வந்து அவரும் முருகன் மேல் திருப்புகழ் பாடக் காரணமாய் அமைந்த கோபுரம் இந்தக் கோயில் கோபுரமே. அதைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்.
ஸ்ரீரமணாஸ்ரமத்தின் தியான மண்டபம்.

2 comments:

சுவாமிநாதன் said...

அருமையாக இருந்தது. அங்குள்ள லிங்கங்களை பற்றி தெரிந்து கொண்டேன், நன்றி

Geetha Sambasivam said...

நல்வரவு சுவாமிநாதன்.