எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, March 28, 2011

நமச்சிவாய வாழ்க,நாதன் தாள் வாழ்க ஏக பாதர்!

ஏகபாத மூர்த்தியை அடுத்துக் காணலாம். ஈசனின் வடிவங்களில் முக்கிய ஐந்து மூர்த்திகளான ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரில் ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோரை சிவபெருமானாகவே வணங்கி வருகிறோம். ருத்ர வழிபாடுகள் அனைத்தும் சிவனுக்குச் செய்யப்படுவதே ஆகும். ஏனெனில் ருத்ரன் ஈசனின் நெஞ்சிலேயே ஒடுங்கி இருப்பதாய்க் கூறுவார்கள். ஈசனின் உருவே ருத்ரனின் திருவுருவமாக வழிபடப் படும். ருத்ரவழிபாடுகள் அனைத்துமே ஈசனைச் சென்றடையும். ஆனால் இவர்கள் அனைவருமே பிரளய காலத்தில் ஈசனிடமே ஒடுங்குவார்கள். ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் ஏற்படும்போது உலகமே நீரில் மூழ்கி அழியும் என்று சொல்லப் படுகிறது. பிரம்மனின் பகல் முடிந்து இரவு ஏற்படும்போது ஊழிக்காலம் ஏற்படும் என்று கூறுவார்கள். அதன் கணக்கு வருமாறு:

நமது ஒருவருடத்தை தேவர்களின் ஒரு நாளாகக் கணக்கிடப்படுகிறது. தேவர்களின் ஒரு ஆண்டு என்பது நமக்கு 365 வருடங்கள் ஆகும். இது மாதிரிக் கிட்டத்தட்ட பனிரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தால் தேவர்களின் ஓர் ஊழிக்காலம் ஆகும். இப்படி 4,000 ஊழிக்காலம் முடிந்தால் பிரம்மாவின் ஒரு பகல் பூர்த்தி அடையும் என்கின்றனர். ஆகவே பிரம்மாவின் இரவின் போது மஹா பிரளயம் ஏற்படும்போது மஹாவிஷ்ணு, பிரம்மா முதற்கொண்டு அனைவருமே ஈசனிடம் ஒடுங்கிவிடுவார்கள். ஈசனின் வலபாகத்தில் பிரம்மாவும் இடபாகத்தில் விஷ்ணுவும், நெஞ்சில் ருத்ரனும் ஒடுங்குவார்கள். அப்போது ஈசன் ஒற்றைக்காலோடு ஏகபாதராய்க் காட்சி தருவார் என்று கூறுகின்றனர். இவரே ஏகபாதமூர்த்தி. அதாவது இந்த உலகமாகிய இகம் முடிந்து அனைத்துமே பரமாகிய தத்துவத்தில் கலந்து பரமாக நிலைத்து நிற்பதைக் குறிக்கும் என்று ஆன்மீகப் பெரியோர்கள் கூற்று. அனைத்து உயிர்களும் ஈசனின் திருவடியில் ஒடுங்கி இருக்கையில் வலக்கரத்தில் சூலத்தை ஏந்தியவண்ணம், இடக்கரத்தில் மழுவோடும், முன் வலக்கரத்தில் அபய ஹஸ்த முத்திரை காட்டியவண்ணம் முன் இடக்கரம் வரத முத்திரைக் காட்ட புலித்தோல் உடுத்தியவண்ணம் மணிமாலைகளை அணிந்துகொண்டு ஜடாபாரத்தில் சந்திரன் விளங்க கங்கையோடு தோற்றமளிக்கிறார் ஏகபாத மூர்த்தி.

இந்த ஏகபாத மூர்த்தியின் சிறப்பைக் குறித்து திருஞானசம்பந்தர் தம் திருமறைக்காடு தேவாரத்தில் கீழ்க்கண்ட வண்ணம் பாடி உள்ளார்.

பாடல் எண் : 7
இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு
பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர்
மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

பேரூழிக்காலத்தில் பெரிய இந்நிலமாகிய மண் புனலில் ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி வளியில் ஒடுங்க, வளி ஆகாயத்தில் ஒடுங்க, பரந்துபட்ட இவ்வுலகமும் உலகப் பொருள்களும் ஆகிய அனைத்தும் அழிய, அதுபோது பிரம விட்டுணுக்களது முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன், வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசை முரலும் மறைவனம் அமரும் பரமன் ஆவான்.

இவ்வுலகை மீண்டும் படைக்கும் திருவுள்ளம் கொண்டு ஈசன், ஏகபாதராய்த் திருவடிவம் ஏற்றபின்னர், நெஞ்சில் இருந்து தம்மில் ஒரு கூறாய் ருத்ரரைத் தோற்றுவிக்கிறார். பின்னர் வலப்பாகத்திலிருந்து பிரம்மாவையும், இடப்பாகத்தில் இருந்து விஷ்ணுவையும் தோற்றுவிக்கிறார். இவ்விதம் மூர்த்திகள் தோன்றும் வண்ணம் வடிக்கப்பட்ட அரிய சிற்ப அற்புதம் திரிபாத மூர்த்தி எனப்படுகிறது. மஹாபாரதத்தில் இவ்வடிவத்தைப் பற்றிய விவரங்கள் கிடைப்பதாய்க் கூறுகின்றனர். பார்க்கணும், எந்த பருவத்திலேனு தெரியலை!

திருவண்ணாமலையில் இந்த திரிபாதமூர்த்தியாக ஈசன் தோன்றும் காட்சியை விழாவாக நடத்துவதாகவும், அவ்விழாவில் அம்பிகைக்கு ஈசன் முதலில் ஏகபாதராகவும், பின்னர் திரிபாதமூர்த்தியாகவும், பின்னர் திரிமூர்த்தியாகவும் காட்சிதருவதாய் ஐதீகம். ஈசன் மூன்று முறை வீதிகளில் திருவுலா வரும்போதும் பிரம்மா விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவராக மூன்று முறை வலம் வருவதாயும் கூறுகின்றனர். நாசிக் அருகே உள்ள ஜ்யோதிர்லிங்க க்ஷேத்திரமான த்ரியம்பகேஸ்வர்ரில் மும்மூர்த்திகளும் ஜ்யோதிர்லிங்கத்தின் ஆவுடையாரில் அடக்கம் என்றும் தெரியவருகிறது. அடுத்து நாம் அனைவரும் நன்கறிந்த லிங்கோத்பவர் வருகிறார்.

2 comments:

Anonymous said...

வழக்கம் போல் பதிவு அருமை.
மேலும் தொடர வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

நன்றி ஆகமக்கடல், வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.