எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, June 30, 2012

பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோயில் 2


ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
பொழிப்புரை :

திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான் , அடியேனுக்குத் தாயாய் தந்தையாய் உடன்பிறந்த , சகோதர சகோதரியாராய் அமைந்து , மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாய் , அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாய்த் தேவர்களுக்கும் அன்பனாகிய சிவபெருமான் ஆவான் .

திருநாவுக்கரசர் திருப்பாதிரிப் புலியூர் தேவாரம்


வைகாசி விசாகத்தில் திருவிழா நடைபெறுகிறது.  பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவில் தேரோட்டமும் உண்டு.  தேரின் அகலம் அதிகம் என்பதால் அதைத் தெருவடைச்சான் நிகழ்வு என்கிறார்கள்.  இந்த வருஷத் தேரோட்டத்தில் தேர் அவ்வாறு இருந்ததா எனத் தெரியவில்லை.  மாசி மாதம் மஹா சிவராத்திரியன்றும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். கடலில் தீர்த்தவாரி நடைபெறும்.  அருகிலுள்ள தேவனாம்பட்டினத்துக்கு உற்சவர் எழுந்தருளி அருள் பாலிப்பார்.  பெளர்ணமி தினங்களில் பஞ்சப் பிராஹாரம் வலம் வருவார்கள்.  அப்பர் இங்கே அமர்ந்த வண்ணம் காட்சி கொடுக்கிறார்.

இது மிகப் பழமையான கோயில் என்பதற்கு இங்கிருக்கும் சப்தமாதாக்களே ஆதாரம் ஆகும். தேவார நால்வருக்கு முன்னரிருந்தே இந்தக் கோயில் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது.  இங்கு வழிபட்டால் உடல் சம்பந்தமான நோய் எதுவானாலும் தீர்ந்து போவதாகச் சொல்கின்றனர்.  ஸ்வாமி இங்கு கரங்களில் ஆயுதம் ஏதுமின்றிப் பாதிரி மலர்க்கொத்துக்களை ஏந்திய வண்ணம் காட்சி அளிக்கிறார்.  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரை, "அப்பரே" என அழைத்தது முதன்முதல் இந்தத் தலத்தில் என்று சொல்கின்றனர்.  அருணகிரிநாதரும் திருப்புகழில் இந்தத் தலத்தைக் குறித்த பாடல்கள் பாடியுள்ளார்.  இங்குள்ள விநாயகர் வலம்புரி விநாயகர். இவர் அம்பிகைக்கு தவம் செய்கையில் உதவியதால் கன்னி விநாயகர் என்ற பெயருடன் பாதிரி மலர்க்கொத்துக்களோடு காணப்படுகிறார்.

பாடல் எண் : 10

உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.
பொழிப்புரை :

ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தை உடைய சமணரும் , புத்தரும் எரிவினால் சொல் லும் உரைகளைக் கொள்ளாது , திருவெண்ணீறு அணிந்த திருப்பாதிரிப் புலியூர் அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள் .
குறிப்புரை :

உரிந்த ... நோன்பர் - ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தையுடையவர் என்னும் சமணர் . எரிந்து சொன்ன உரை :- எரிவினாற்சொன்னார் .

திருஞானசம்பந்தர் திருப்பாதிரிப் புலியூர் தேவாரம்

Thursday, June 28, 2012

பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோயில்


மத்தியந்தன முனிவரின் மகன் ஆன வியாக்ரபாதர் தினம் அதிகாலையே எழுந்து சிவபூஜை செய்வது வழக்கம்.  அதற்கு வேண்டிய மலர்களைப் பாதிரி மரங்களிலிருந்து அவர் பெற்றார்.  ஆனால் மரத்தின் மேலே ஏறிப் பூக்களைப் பறிக்க அவரால் இயலவில்லை.  ஆகையால் ஈசனை வேண்டித் தனக்குப் புலிக்காலும், புலிக்கையும் வாய்க்கப்பெற்றார்.  அது முதல் பாதிரி மரங்களின் மேலேறிப் பூக்களைப் பறித்துப் பூசித்து வந்தார்.   இவர் பூசித்த இடம் பின்னர் திருப்பாதிரிப் புலியூர் என வழங்கப் பட்டது.  அங்கிருந்த ஈசன் தோன்றாத் துணை நாதரும் எப்போது எனத் தெரியாத கால கட்டத்திலேயே கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.  இந்தத் திருப்பாதிரிப் புலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதியாகும்.  பழைய நகரம் எனவும் சொல்லலாம்.  கெடில நதிக்கரையில் அமைந்த இந்நகரில் கோயில் மிகப் பழமையானதாய்க் காணப்படுகிறது.

நான்கு நாட்கள் முன்னர் கடலூர் சென்றிருந்த போது பாடலீஸ்வரர் கோயிலைத் தரிசிக்கச் சென்றிருந்தோம்.   இந்தக் கோயில் தேவார மூவர் தோன்றும் முன்னர் இருந்தே இருந்து வந்த கோயில் எனத் தெரிய வந்தது.  ஈசனின் பெயர் தோன்றாத் துணை நாதர், கன்னிவன நாதர், பாடலீஸ்வரர்,  கடைஞாழலுடைய பெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன் , கரையேற்றும் பெருமான் ஆகிய பெயர்களால் அழைக்கப் படுகிறார்.  திருநாவுக்கரசரை இங்கே தான் கரையேற்றியதால் கரையேற்றும் பெருமான் என அழைக்கப் படுகிறார்.  சமண மதத்தைச் சேர்ந்த மகேந்திர பல்லவன், சைவ சமயத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசரைச் சமணர்களின்  தூண்டுதலால் கல்லைக் கட்டிக்   கடலுக்குள் தள்ளியபோது, அந்தக் கல்லே தெப்பமாக மாறி மிதந்து அவரைக் கரை சேர்த்தது.  திருநாவுக்கரசர் கரை சேர்ந்த இடம் இந்த ஊரில் தான் என அறிய வருகிறோம்.   அப்பர் கடலில் இருந்து கரை ஏறிய இடம், “கரையேற விட்ட குப்பம்” என்னும் பெயரால் அழைக்கப் படுவதாகவும் அறிகிறோம்.  இங்குள்ள தீர்த்தங்களில் கடலும் ஒன்று.  இது கர தீர்த்தம் என அழைக்கப் படுகிறது.  சிவ தீர்த்தம் எனவும் பிரம்ம தீர்த்தம் எனவும் அழைக்கப் படுகிறது.   ஈசன் சித்தராக வந்து விளையாடித் தன் கையை வைத்த இடம் சிவகர தீர்த்தம் என அழைக்கப் படுகிறது.  இது ஈசான்ய மூலையில் இருப்பதாகவும், கங்கையின் ஒரு கூறு இதில் இருப்பதாகவும் ஐதீகம்.  இதோடு கூட கோயிலின் தெப்பக்குளம் பாலோடை எனவும் அழைக்கப் படுகிறது.  கெடில நதியும், தென்பெண்ணையாறும் கூட இங்கு தீர்த்தங்களாக விளங்குகின்றன.  

ஐயனும், அம்பிகையும் சொக்கட்டான் விளையாடும் போதினிலே ஐயனை எல்லா விளையாட்டிலும் வென்று வர,  ஐயனோ தனக்கே வெற்றி எனக் கூற, விளையாட்டாக அவரின் இரு கண்களையும் அம்பிகை பொத்தினாள்.  அவ்வளவு தான் உலகம் இருண்டது. சிருஷ்டி நின்றது.   இயக்கமே அறவே இல்லை.  இதைக் கண்டு கலங்கிய அன்னை தன் விளையாட்டு வினையானது கண்டு வருந்த, ஈசன் அன்னையை பூமிக்குச் சென்று தன்னை நினைந்து தவம் இருக்கும்படியும், எங்கே அம்பிகையின் இடது தோளும், கண்ணும் துடிக்கிறதோ அவ்விடத்தில் அவளை ஏற்பதாகவும் கூறி அனுப்பி வைத்தார்.  அது போல அம்பிகையும் எல்லாத் தலங்களுக்கும் சென்று வழிபட்டு இந்தத் தலம் வந்தபோது இடத்தோளும், இடக்கண்ணும் துடிக்க இங்கே தான் ஈசன் தன்னைத் தடுத்தாட் கொள்ளப் போகும் இடம் எனப் புரிந்து உருவில்லாமல் அருவமாய்த் தவம் இருக்கிறாள்.   இறைவன் வந்து அன்னையை ஆட்கொள்ளுகிறார்.

அம்பிகை தவம் இருந்த இடம் கோயிலிலே சுவாமி சந்நிதிக்கு வெளியே பிராகாரத்தில் காணப்படுகிறது.  அங்கே வெறும் பிண்டி உருவில் அம்பிகை காணப்படுகிறாள். மேலும் பள்ளியறையும் இங்கே சுவாமி சந்நிதியில் இருக்கிறது.   நாள் தோறும் அம்பிகையே இந்தப் பள்ளியறைக்கு ஈசனை நாடி வருகிறாள்.  இது எந்தக் கோயிலிலும் இல்லாத தனிச் சிறப்பு.  இந்தக் கோயிலில் பள்ளியறை வழிபாட்டின் போது திருமணம் ஆகாத ஆணோ, பெண்ணோ வழிபாட்டுக்கான நிவேதனப் பொருட்களாக, பழங்கள், மலர்கள், தின்பண்டங்கள் அடங்கியவற்றை வாங்கிக் கொடுத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.


தொடரும்

Friday, June 08, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அச்வாரூடர்!

2825. யாவரும் புனத்து இயங்கு குறு நரி எலாம் ஈட்டித்  
தாவரும் பரி ஆக்கி அத் தாம் பரி நடாத்தும்  
சேவகம் செய்வோர் ஆகி முன் செல்லும் முன் யாமும்  
பாவகம் பட வருதும் அப்படியே எனப் பணித்தான். 
 
2826. ஏக நாயகன் ஆணை பூண்டு எழு கணத்தவரும்  
நாக நாடரும் வியப்பு உற நரி எலாம் திரட்டி  
வேக வாம் பரி ஆக்கி அவ் வெம் பரி நடாத்தும்  
பாகர் ஆயினார் அவர் வரும் பரிசு அது பகர்வாம்.  

வந்தவன் வெகு அலக்ஷியமாகப் பரிசுப்பொருட்களைக் குதிரை ஓட்டும் கோலால் வாங்க, மன்னனுக்குக் கோபம் மூண்டது.  வாதவூரர் அவர்கள் ஊர் வழக்கமாய் இருக்கலாம் என சமாதானம் செய்தார். குதிரை வல்லுநர்களைக் கொண்டு குதிரைகள் நன்கு சோதிக்கப்பட்டன. குதிரைகளின் கம்பீரமும், நடையழகும் பார்த்து வியந்த வல்லுநர்கல் குதிரைகள் பலமடங்கு விலை பெற்ற குதிரைகளே என உறுதி மொழி கொடுக்க மன்னனும் குதிரைகளை லாயத்துக்குக் கொண்டு சேர்க்கக் கட்டளையிட்டான். குதிரைச் சேவகன் விடைபெற்றுச் சென்றான். சென்றான் எங்கே சென்றான்.  சிறிது தூரம் போவது போல் போக்குக் காட்டி மறைந்தார் ஈசன். அன்றிரவு, லாயத்தில் கட்டப்பட்டிருந்த புதுக்குதிரைகள் அனைத்தும் குதிரையாக இல்லாமல் நரியாக மாறின.  ஊளையிட்டன.  அங்கிருந்த பழைய குதிரைகளைக் கடித்தன. சில தப்பி ஓடின.  அவற்றைப் பார்த்த மற்ற நரிகளும் தொடர்ந்து ஓட அனைத்தும் காட்டுக்குள் சென்று மறைந்தன.
 
2940. நாடிக் காவலன் தமர் உளார் நகர் உளார் கண்டால்  
சாடிக் காய்வரே புலரும் முன் சங்கிலித் தொடர் நீத்து  
ஓடிப் போவதே சூழ்ச்சி என்று ஊக்கம் உற்று ஒருங்கே  
கூடிப் பேசின ஊளை வாய்க் குறு நரிக் குழாங்கள்.  
 
2941. வெறுத்த காணமும் கடலையும் விரும்பின கோழ் ஊன்  
துறுத்த நாகு நம் தலைவனைச் சங்கிலித் தொடரை  
முறித்த கால்களில் கட்டிய கயிற்றொடு முளையைப்  
பறித்த ஊளை இட்டு எழுந்தன போம் வழி பார்ப்ப. 

நரிகள் ஊளையிட்ட வண்ணம் சென்றது அந்த நடு இரவில் மொத்த மதுரை மக்களையும் எழுப்பி விட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.  பகலில் குதிரைகள், இரவில் நரிகளா என வியந்தனர்! என்னவோ மாயம் செய்து இந்தத் திருவாதவூரர் நரிகளைப் பரிகளாக்கி இருக்கிறார் என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.  மன்னனையே ஏமாற்றி விட்டாரே என ஆச்சரியம் அடைந்தனர்.  சினம் கொண்ட மன்னன் வாதவூராரை அந்த நள்ளிரவிலேயே கைது செய்து சிறையில் அடைத்துச் சித்ரவதை செய்தான்.  கண்ணீர் பொங்க ஈசனையே நினைந்த வண்ணம் சிறையில் இருந்தார் வாதவூரார்.  அவரின் வேதனையை உணர்ந்த ஈசன், மன்னனுக்கும் பாடம் புகட்ட வேண்டும்; அதே சமயம் வாதவூராரின் பெருமையும் உலகறிய வேண்டும் என எண்ணிக் கொண்டு மதுரை நகரில் ஓடிய வைகையில் வெள்ளம் பெருகச் செய்தார். வெள்ளமோ வெள்ளம்.  கட்டுக்கடங்காத வெள்ளம். கரை புரண்டு ஓடியதோடு அல்லாமல் மெல்ல மெல்ல ஊருக்குள் புகுந்த வெள்ளம் நேரம் ஆக ஆக வேகமாய் ஊருக்குள் புகுந்து விட்டது.

மன்னன் இது வாதவூராரைச் சிறையில் அடைத்ததன் விளைவோ என எண்ணிக் கொண்டு அவரைச் சிறையிலிருந்தும் விடுவிக்கச் செய்ய, வாதவூரார் இறைவனை வேண்டிப் பிரார்த்திக்க வெள்ளம் கொஞ்சம் வேகம் குறைந்தது.  எனினும் முற்றிலும் மறையவில்லை.  வெள்ளத்தினால் ஏற்பட்ட கரை உடைப்பை அடைக்க முயன்றால் அது பெரிதாகிக் கொண்டே வந்தது.  மன்னனும் வீட்டுக்கு ஒரு ஆண்பிள்ளை வந்து வெள்ளத்தை அடைக்க வேண்டும் எனக் கட்டளையிட்டான். மதுரையில் பிட்டு செய்து விற்றுப் பிழைக்கும் வந்தி என்னும் கிழவிக்கு வீட்டில் ஆண்பிள்ளைகள் எவரும் இல்லை.  என்ன செய்வது எனக் கலங்கினாள். அந்தச் சொக்கேசன் தான் அருள் புரிய வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டாள். தன் திருவிளையாடலை நீட்ட வேண்டும் என விருப்பம் கொண்ட ஈசன் ஒரு கூலியாளாக மாறினார்.   
3007. அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து  
                                   விழுத்தொண்டர்  
குழுக் கடந்த இண்டை நிகர் சுமை அடை மேல் கூடை  
                                   கவிழ்த்து  
எழுக் கடாந்து திசை கடந்திட்டு இணை கடந்த  
                                 திருத்தோள் மேல்  
மழுக்கடைந்து விளங்கிய வாய் மண் தொடு திண் படை  
                                   ஏந்தி.   

தலையில் சும்மாடு கட்டிக் கொண்டு கூலியாட்கள் வைத்திருக்கும் கூடையையும், அதோடு மண்வெட்டி ஒன்றையும் சுமந்து கொண்டு தெருவில் கூவிக் கொண்டு வந்தார்.  கூலி வேண்டுமா கூலி? எனக் கூவ, வந்தி அந்தக் கூலியாளை அழைத்தாள்.  வந்தியும் விஷயத்தைக் கூற அவளுக்காகத் தான் சென்று கரை உடைப்பை அடைப்பதாக ஒத்துக்கொண்டார் ஈசன்.  தன்னிடம் கூலி கொடுக்க எதுவுமே இல்லையே என ஏங்கிய வந்தியிடம் பிட்டையே கூலியாகக் கொடுக்கும்படி கூறினார் ஈசன்.

3012. பிட்டு இடுவேன் உனக்கு என்றான் அதற்கு இசைந்து  
                                   பெரும் பசியால்  
சுட்டிட நான் மிக மெலிந்தேன் சுவைப் பிட்டில் உதிர்ந்த  
                                   எலாம்  
இட்டிடுவாய் அது முந்தத் தின்று நான் இளைப்பாறிக்  
கட்டிடு வேன் நின்னுடைய கரை என்றார் கரை இல்லார். 

Tuesday, June 05, 2012

நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அச்வாரூடர்!


இறைவனின் சேவையிலேயே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மாணிக்க வாசகர் தம் சொந்த உடமைகள், மற்றும் அரசன் குதிரைகள் வாங்கக் கொடுத்திருந்த பொருள் அனைத்தையும் ஈசனின் திருப்பணிக்கே செலவு செய்தார்.  ஈசனுக்குக் கோயில் எழுப்பினார்.  ஆபரணங்கள் வாங்கிப் பூட்டி அழகு பார்த்தார். பாமாலைகள் பாடி மகிழ்ந்தார்.  உடன் வந்த  அரசனின் பணியாட்களும், வீரர்களும், அரச சேவையில் தாங்கள் வந்திருப்பதை மாணிக்கவாசகருக்குப் பல முறை நினைவூட்டினார்கள்.  அரசனின் கருவூலப் பொருளை எடுத்துச் செலவு செய்வதை ஆக்ஷேபித்தனர்.  ஆனால் மாணிக்க வாசகரோ தமக்குப் புதிதாய்க் கிடைத்த இந்தப் பேரின்பத்தைச் சற்றும் இழக்க விரும்பாதவராய் சிவானந்தப் பேரின்பத்திலேயே லயித்து அதிலேயே ஆழ்ந்திருந்தார். வீரர்கள் மதுரை திரும்பினார்கள்.  அரசனிடம் நடந்தவற்றைக் கூறினார்கள்.  மன்னனுக்கு மாணிக்கவாசகரின் இந்தச் செயலினால் கோபம் தலைக்கேறியது.  உடனே குதிரைப் படைகளோடு மதுரை வந்தடைய வேண்டும் என்ற ஆணையுடன் கூடிய முத்திரை ஓலையை அவருக்கு அனுப்பி வைத்தான்.

ஓலையைக் கண்ட மாணிக்கவாசகர் கலங்கிப் போனார்.  ஈசனிடம் முறையிட்டார்.  “என் செய்வேன்!” எனப் புலம்பினார்.  அப்போது அசரீரி மூலம் ஈசன், “மாணிக்கவாசகா! கலங்காதே, நீ மதுரை செல்வாயாக! ஆவணி மாதம் மூல நக்ஷத்திரத்தன்று குதிரைகள் மதுரைக்குவந்து சேரும்.” என்று கூறி மாணிக்கவாசகருக்கு ஆறுதல் கூறினார்.  மாணிக்கவாசகரும் அவ்வாறே செய்வதாய்க் கூறிக் கிளம்ப ஒரு மாணிக்கக் கல்லை அவரிடம் கொடுத்து மன்னனுக்கு நம்பிக்கை வரவேண்டி இந்தக் கல்லைப் பரிசாய்க் கொடுக்கும்படி கூறினார்.  மாணிக்கவாசகரும் அந்தக் கல்லைப் பெற்றுக் கொண்டு மதுரை திரும்பினார்.  அரசனிடம் அனைத்தையும் கூறி மாணிக்கக் கல்லையும் பரிசாய்க் கொடுக்க மன்னன் மனம் மகிழ்ந்தான்.  மாணிக்கவாசகர் தம்மை ஏமாற்றவில்லை என நினைத்து இன்புற்றான்.

ஆவணி மூலமும் நெருங்கிக் கொண்டிருந்தது.  மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் சந்தேகம்.  அதற்குள்ளாக எப்படிக் குதிரைகளைக் கொண்டு வர முடியும், இயலாது என நினைத்து மன்னனிடம் சென்று வாதவூரார் பொய் சொல்வதாகவும் குதிரைகள் வாங்கவே இல்லை என்றும், இவற்றைத் தாம் ஒற்றர் மூலம் உறுதி செய்து கொண்டதாகவும் சொல்ல, மன்னனும், தீர விசாரித்தபோது குதிரைகள் வாங்கக் கொடுத்த பொருள் அனைத்தும் கோயில் கட்டுவதில் செலவானதும், மாணிக்க வாசகர் கீழைக்கடற்கரைக்குச் செல்லவே இல்லை என்பதும் உறுதியாயிற்று.  அவரைத் தண்டிக்கவேண்டும் என நினைத்து வீரர்களை அழைத்து வைகையாற்று மணலில் நடு மதிய வெயிலில் நிறுத்திச் சுட்ட செங்கல்லை அவர் கைகளில் கொடுத்து நிற்கச் செய்தான்.  அனைத்தையும் தாங்கினார் மாணிக்கவாசகர்.  பின்னர் சிறையில் தள்ளிக் கொடுமைகள் செய்தான்.  எல்லாவற்றுக்கும் அவர் ஒரே பதிலாக, “ஈசா, ஆவணி மூல நாளில் வருவதாய்ச் சொன்னாயே?  வர மாட்டாயா?  குதிரைகள் வராதா? நீயும் பொய்யுரைத்தாயா?” என்று கேட்டுக் கேட்டுக் கண்ணீர் சிந்தி அழுதார். “சொன்னபடி குதிரைகள் வரும் “ என அசரீரி ஒலித்தது.

ஆவணி மூல நாளும் வந்தது.  பாண்டியன் அவை.  மன்னன் அரியணையில் அமர்ந்திருக்க, அன்றுதான் மாணிக்கவாசகர் குதிரைகளைக் கொண்டு வருவதாய்ச் சொன்ன நாள் என்பதை உணர்ந்து அது குறித்தும், மாணிக்கவாசகர் சிறையில் இருப்பது குறித்தும் அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு சேவகன் வந்து, அரசே, யாரோ பெரிய படைத்தளபதி போலும் இருக்கிறான். அரசன் போலும் இருக்கிறான்.  அவனுடைய பரிவாரங்களே பெரிதாக இருக்கின்றன.  அப்படிப்பட்ட ஒருவன் பல்லாயிரக்கணக்கான குதிரைகளை ஓட்டி வந்திருக்கிறான்.  நம் வாதவூரார் பெயரைச் சொல்லி அவர் தாம் இந்தக் குதிரைகளை வாங்கியதாகவும், பாண்டிய மன்னனின் குதிரைப்படைகளுக்கு எனச் சொன்னதாகவும், குதிரைகளைக் கயிறு மாற்றிக் கொடுக்கத் தானே நேரில் வந்திருப்பதாகவும் கூறுகிறான்.  தங்களை நேரில் சந்தித்தே ஆகவேண்டும் என்கின்றான்.” என்று கூறி வணங்கி நின்றனர்.

மன்னன் மனம் துடித்தது.  ஆஹா, நாம் தவறல்லோ செய்துவிட்டோம்.  மாபெரும் குதிரைப்படையே வந்து கொண்டிருக்க நாம் மாணிக்க வாசகரைச் சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்து விட்டோம். என எண்ணி வருந்திய மன்னன் உடனடியாக மாணிக்கவாசகரைச் சிறையிலிருந்து விடுவிக்கக் கட்டளையிட்டுவிட்டு, அந்தக் குதிரைப்படைத் தலைவனைச் சபைக்கு அழைத்தான்.  அவனுடைய வீரம் செறிந்த முகத்தையும், தோரணையையும், கம்பீரத்தையும் பார்த்ததுமே அசந்து போன பாண்டியன், அவனையே குதிரைகளை நடத்திக் காட்டிவிட்டுப் பின்னர் கயிறு மாற்றிக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டான். குதிரைகளைப் பழக்குபவர்கள் அவற்றை ஐந்து விதமான நடைகளில் ஐந்து நிலைகளில் நடக்கும்படிப் பழக்கி இருப்பார்கள்.  அந்த ஐந்து நிலைகளையும் நடத்திக்காட்டினார் ஈசன்.  மன்னனுக்கு மிகவும் மகிழ்ச்சி.  வந்தவனுக்குப் பல பரிசுப் பொருட்களை அளித்தான்.

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அச்வாரூடர்!


அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது இறைவன் குதிரை வியாபாரியாய் வந்த கோலத்தை.  இதை அச்வாரூடர் என்றும் கூறுவார்கள்.  இவரைக்குறித்து அறியும் முன்னர் இறைவன் அச்வாரூடராய் வர நேர்ந்த காரணத்தையும், எவருக்காக அச்வாரூடராய் வந்தார் என்பதையும் அறிய வேண்டும்.  “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது ஆன்றோர் வாக்கு.  அத்தகைய திருவாசகத்தை நமக்குத் தந்தவர் மாணிக்க வாசகர்.  மாணிக்க வாசகர் என்ற பெயர் இவரின் மாணிக்கம் போன்ற அதே சமயம் மனதையும் உருக்கும் வாசகங்களினால் ஏற்பட்டதே ஆகும்.  இவரின் இயற்பெயர் என்னவென ஒருவரும் அறியவில்லை.  இவரின் காலமும் சரிவரத் தெரியவில்லை.  எனினும் முதல் மூவருக்கு முந்தியவர் என்பது ஆன்றோர் கருத்து. மதுரைக்கு வடகிழக்கே திருவாதவூர் என்னும் ஊர் உள்ளது.  வாயு வழிபட்ட இந்தத் தலத்தின் ஈசன் வாதபுரீஸ்வரர் ஆவார்.  இவ்வூரில் அமாத்ய பிராம்மண குலத்தில் தோன்றியவரே மாணிக்க வாசகர்.  தகப்பனார் பெயர் சம்புபாதசிருதர், தாயார் சிவஞானவதி அம்மை.  இவரின் உண்மையான பெயர் என்னவென்று தெரியாத காரணத்தால் இவரைத் திருவாதவூரர் என்றே அழைத்தனர்.

வாதவூரர் அறிவாற்றலும், இயல்பாகவே கைவரப் பெற்ற சிவபக்திச் செல்வமும், அதனால் விளைந்த ஞானத்தோடும் விளங்கினார்.  இவரைப் பற்றிக் கேள்விப் பட்ட அரிமர்த்தன பாண்டியன் இவரைத் தனது முதலமைச்சராக ஆக்கிக் கொண்டான். இவருக்குத் “தென்னவன் பிரமராயன்” என்னும் பட்டமும் அளித்துச் சிறப்பித்தான்.  அமைச்சர் பதவியைச் செவ்வனே நிறைவேற்றி வந்தார் வாதவூரார்.  ஆனாலும் அவர் மனம் இவ்வுலக வாழ்க்கையிலும், அமைச்சர் பதவிக்குரிய சுகபோகங்களிலும் லயிக்கவே இல்லை.  தக்கதொரு குரு கிடைத்தால் அவர் மூலம் பிறவிப் பெரும்பயனை அடையவே விரும்பினார்.  சிவலோக சாம்ராஜ்யத்தைக் குறித்தே சிந்தித்து வந்தார்.

மன்னன் தன் குதிரைப் படையை விரிவு செய்து மேலும் பல புதிய குதிரைகளைச் சேர்க்க விரும்பினான்.  அந்தச் சமயம் கீழைக் கடற்கரையில் நல்ல குதிரைகள் அரபு நாட்டில் இருந்து வந்து இறங்கி இருப்பதாய்ச் சில தூதுவர்கள் தெரிவிக்க மன்னனும் அவற்றைத் தன் படைக்குச் சேர்க்க விருப்பம் கொண்டான்.  அரசன் முதலமைச்சராகிய வாதவூரரைப் பார்த்து, கருவூலத்தில் இருந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கீழைக் கடற்கரைக்கு வந்திருக்கும் குதிரைகளைப் பார்த்து வாங்கி வரும்படி கேட்டுக் கொண்டான்.   வாதவூராரும் மன்னனின் விருப்பத்திற்கிணங்கக் கருவூலத்திலிருந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கொண்டு குதிரைகள் வாங்கப் புறப்பட்டார்.   சுந்தரேஸ்வரரை வணங்கிவிட்டுப் பயணம் புறப்பட்ட அவர் பயணத்தில் திருப்பெருந்துறை என்னும் ஊரை அடைந்தார்.  அவ்வூரை நெருங்க, நெருங்க அவருக்குத் தம் பிறவிப் பயன் பூர்த்தி அடையப் போகிறது என்ற எண்ணமே மேலோங்கியது.   ஆம், இறைவன் திருவாதவூரரைத் தடுத்தாட்கொள்ள விரும்பினான்.

திருப்பெருந்துறையின் ஒரு சோலையில் குருந்த மரத்தடியில் சிவகணங்களெல்லாம் சீடர்களாகக் காட்சி கொடுக்க ஈசன் மானுட வடிவம் தாங்கி அங்கே அமர்ந்திருந்தார்.  சிவ நாமம் எங்கும் ஒலித்தது.  அந்தச் சிவநாமம் காதில் விழ விழ திருவாதவூரருக்கு மனம் பொங்கியது.  எல்லையில்லாப் பேரின்பம் உண்டாயிற்று.  ஆஹா, என்ன காரியம் செய்யத் துணிந்தோம்! மன்னனுக்குக் குதிரைகள் வாங்கிக் கொடுத்து அவன் படை பலத்தைப்பெருக்குவதன் மூலம் போர்களும் பெருகுமே.  உயிர்கள் சேதமடையுமே!  பலரும் உயிர் துறப்பரே.  ஒரு மன்னனின் வெற்றிக்காக இவ்வுலகில் எண்ணற்ற உயிர்கள் அன்றோ பலியாகும்? வேண்டாம், வேண்டாம். உலகில் சிவநாமம் எங்கும் ஒலித்த வண்ணம் சிவபக்திச் செல்வம் பல்கிப் பெருகி அன்பும், அறமும் செழிக்க வேண்டும் என்று எண்ணினார். அங்குள்ள திருக்குளத்தில் நீராடி, திருநீறு தரித்துக் கொண்டு சிவ நாமம் ஒலித்துக் கொண்டிருக்கும் சோலையை நோக்கி நடந்தார்.

அங்கே குருந்த மரத்தடியில் ஞானகுருநாதனாகப் பரம்பொருளே வீற்றிருந்தார்.  வலக்கை சின் முத்திரை காட்ட சாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியே அங்கே அமர்ந்திருந்தார்.  திருவாதவூரர் அவரைக் கண்டதும் மெய் சிலிர்த்து, மேனியெல்லாம் புளகாங்கிதம் பொங்க, வணங்கினார்.  அவரின் செவியில் ஈசன் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, முக்திப் பேறும் அருளினார்.  திருவாதவூரரின் அகஒளி ஜோதி மயமாய்ப் பிரகாசித்தது.  அகத்தினுள்ளே உள்ளொளியில் சிவபக்தி சாம்ராஜ்யத்தைக் கண்ட திருவாதவூரர் அக்கணமே துறவுக் கோலம் பூண்டார்.  அமைச்சர் பணியை உதறினார்.  ஈசன் மேல் அருந்தமிழ்ப் பாமாலைகளைச் சூட்டி வணங்கினார்.   மனதை உருக்கும் மணி மணியான வாசகங்கள் நிறைந்த அந்தப் பாடல்களைக் கேட்ட ஈசன், “இன்று முதல் நீ மாணிக்க வாசகன்!” என்றும் பெயரைச் சூட்டினார்.