எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, June 28, 2012

பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோயில்


மத்தியந்தன முனிவரின் மகன் ஆன வியாக்ரபாதர் தினம் அதிகாலையே எழுந்து சிவபூஜை செய்வது வழக்கம்.  அதற்கு வேண்டிய மலர்களைப் பாதிரி மரங்களிலிருந்து அவர் பெற்றார்.  ஆனால் மரத்தின் மேலே ஏறிப் பூக்களைப் பறிக்க அவரால் இயலவில்லை.  ஆகையால் ஈசனை வேண்டித் தனக்குப் புலிக்காலும், புலிக்கையும் வாய்க்கப்பெற்றார்.  அது முதல் பாதிரி மரங்களின் மேலேறிப் பூக்களைப் பறித்துப் பூசித்து வந்தார்.   இவர் பூசித்த இடம் பின்னர் திருப்பாதிரிப் புலியூர் என வழங்கப் பட்டது.  அங்கிருந்த ஈசன் தோன்றாத் துணை நாதரும் எப்போது எனத் தெரியாத கால கட்டத்திலேயே கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.  இந்தத் திருப்பாதிரிப் புலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதியாகும்.  பழைய நகரம் எனவும் சொல்லலாம்.  கெடில நதிக்கரையில் அமைந்த இந்நகரில் கோயில் மிகப் பழமையானதாய்க் காணப்படுகிறது.

நான்கு நாட்கள் முன்னர் கடலூர் சென்றிருந்த போது பாடலீஸ்வரர் கோயிலைத் தரிசிக்கச் சென்றிருந்தோம்.   இந்தக் கோயில் தேவார மூவர் தோன்றும் முன்னர் இருந்தே இருந்து வந்த கோயில் எனத் தெரிய வந்தது.  ஈசனின் பெயர் தோன்றாத் துணை நாதர், கன்னிவன நாதர், பாடலீஸ்வரர்,  கடைஞாழலுடைய பெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன் , கரையேற்றும் பெருமான் ஆகிய பெயர்களால் அழைக்கப் படுகிறார்.  திருநாவுக்கரசரை இங்கே தான் கரையேற்றியதால் கரையேற்றும் பெருமான் என அழைக்கப் படுகிறார்.  சமண மதத்தைச் சேர்ந்த மகேந்திர பல்லவன், சைவ சமயத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசரைச் சமணர்களின்  தூண்டுதலால் கல்லைக் கட்டிக்   கடலுக்குள் தள்ளியபோது, அந்தக் கல்லே தெப்பமாக மாறி மிதந்து அவரைக் கரை சேர்த்தது.  திருநாவுக்கரசர் கரை சேர்ந்த இடம் இந்த ஊரில் தான் என அறிய வருகிறோம்.   அப்பர் கடலில் இருந்து கரை ஏறிய இடம், “கரையேற விட்ட குப்பம்” என்னும் பெயரால் அழைக்கப் படுவதாகவும் அறிகிறோம்.  இங்குள்ள தீர்த்தங்களில் கடலும் ஒன்று.  இது கர தீர்த்தம் என அழைக்கப் படுகிறது.  சிவ தீர்த்தம் எனவும் பிரம்ம தீர்த்தம் எனவும் அழைக்கப் படுகிறது.   ஈசன் சித்தராக வந்து விளையாடித் தன் கையை வைத்த இடம் சிவகர தீர்த்தம் என அழைக்கப் படுகிறது.  இது ஈசான்ய மூலையில் இருப்பதாகவும், கங்கையின் ஒரு கூறு இதில் இருப்பதாகவும் ஐதீகம்.  இதோடு கூட கோயிலின் தெப்பக்குளம் பாலோடை எனவும் அழைக்கப் படுகிறது.  கெடில நதியும், தென்பெண்ணையாறும் கூட இங்கு தீர்த்தங்களாக விளங்குகின்றன.  

ஐயனும், அம்பிகையும் சொக்கட்டான் விளையாடும் போதினிலே ஐயனை எல்லா விளையாட்டிலும் வென்று வர,  ஐயனோ தனக்கே வெற்றி எனக் கூற, விளையாட்டாக அவரின் இரு கண்களையும் அம்பிகை பொத்தினாள்.  அவ்வளவு தான் உலகம் இருண்டது. சிருஷ்டி நின்றது.   இயக்கமே அறவே இல்லை.  இதைக் கண்டு கலங்கிய அன்னை தன் விளையாட்டு வினையானது கண்டு வருந்த, ஈசன் அன்னையை பூமிக்குச் சென்று தன்னை நினைந்து தவம் இருக்கும்படியும், எங்கே அம்பிகையின் இடது தோளும், கண்ணும் துடிக்கிறதோ அவ்விடத்தில் அவளை ஏற்பதாகவும் கூறி அனுப்பி வைத்தார்.  அது போல அம்பிகையும் எல்லாத் தலங்களுக்கும் சென்று வழிபட்டு இந்தத் தலம் வந்தபோது இடத்தோளும், இடக்கண்ணும் துடிக்க இங்கே தான் ஈசன் தன்னைத் தடுத்தாட் கொள்ளப் போகும் இடம் எனப் புரிந்து உருவில்லாமல் அருவமாய்த் தவம் இருக்கிறாள்.   இறைவன் வந்து அன்னையை ஆட்கொள்ளுகிறார்.

அம்பிகை தவம் இருந்த இடம் கோயிலிலே சுவாமி சந்நிதிக்கு வெளியே பிராகாரத்தில் காணப்படுகிறது.  அங்கே வெறும் பிண்டி உருவில் அம்பிகை காணப்படுகிறாள். மேலும் பள்ளியறையும் இங்கே சுவாமி சந்நிதியில் இருக்கிறது.   நாள் தோறும் அம்பிகையே இந்தப் பள்ளியறைக்கு ஈசனை நாடி வருகிறாள்.  இது எந்தக் கோயிலிலும் இல்லாத தனிச் சிறப்பு.  இந்தக் கோயிலில் பள்ளியறை வழிபாட்டின் போது திருமணம் ஆகாத ஆணோ, பெண்ணோ வழிபாட்டுக்கான நிவேதனப் பொருட்களாக, பழங்கள், மலர்கள், தின்பண்டங்கள் அடங்கியவற்றை வாங்கிக் கொடுத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.


தொடரும்

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

சைவ சமயத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசரைச் சமணர்களின் தூண்டுதலால் கல்லைக் கட்டிக் கடலுக்குள் தள்ளியபோது, அந்தக் கல்லே தெப்பமாக மாறி மிதந்து அவரைக் கரை சேர்த்தது. திருநாவுக்கரசர் கரை சேர்ந்த இடம் இந்த ஊரில் தான் என அறிய வருகிறோம்.

அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..