எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, September 05, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 10


மாலிக்காபூரின் படையெடுப்புக்குப் பின்னர் பத்துப் பனிரண்டு வருடங்கள்வரையிலும் ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் நடைபெற்று வந்தது.   நடுவில் ஒரு சிறிய முஸ்லீம் படையெடுப்பு இருந்தாலும் அதில் இருந்து ஸ்ரீரங்கமும், மக்களும் தப்பினார்கள்.  திருவிழாக்கள் கொண்டாடப் பட்டன.  மக்கள் அரங்கன் திருவுரு முன்னர் ஆடிப் பாடிக் களித்தனர்.  அழகிய மணவாளன் வீதி உலா வந்தான்.  எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.  அப்போது ஓர் நாள் அந்த மோசமான செய்தி வந்தடைந்தது.   ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ரோத்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அழகிய மணவாளர் அருகிலுள்ள ஆதிநாயகன் கோயிலுக்கு எழுந்தருளி இருந்தார்.  அடியார்கள் பலரும் அழகிய மணவாளரோடு சென்றிருந்தனர்.  இங்கே ஸ்ரீரங்கத்தில் சிலர் மட்டுமே இருந்தனர்.  இன்னும் சிறிது நேரத்தில் அழகிய மணவாளர் திரும்ப வரப் போகிறார் என்பதால்  பவித்ரோத்சவ மண்டபத்தில் அவரை எழுந்தருளப் பண்ண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.  ஊர் தனக்கு நேரிடப் போகும் கலவரத்தை உணராமல் கோலாகலத்திலும், கொண்டாட்டத்திலும் ஆழ்ந்து போயிருந்தது.  பாண்டியர்களின் நிலை இன்னதெனப் புரிபடாமல் சிறந்ததொரு தலைவன் இன்றித் தான் நாடுஇருந்தது.  என்றாலும் கோயிலின் அன்றாட நிர்வாகம் ஸ்தம்பிக்கவில்லை. 

அப்போது தான் வடநாட்டுப் படையெடுப்பைக் குறித்த தகவல்கள் வந்து சேர்ந்தன.  ஹொய்சள மன்னன் எதிர்த்து நின்றதாகவும், அவனை மதம் மாறக் கட்டாயப் படுத்தியதாகவும், அவன் தன் நாடு, குடிபடைகள், கஜானா என அனைத்தையும் சமர்ப்பித்துவிட்டுத் தன் மதத்தைக் காப்பாற்றிக் கொண்டதாகவும் செய்தி வந்தது. எதிரிகள் சமயபுரத்தை நெருங்கி விட்டதாகவும் கேள்விப் பட்டனர்.  கோயிலில் அப்போது நிர்வாகியாக இருந்தவர் ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர் என்பார், யோசிக்க நேரமில்லை, உடனடியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்.  ஊர்ப் பெரியோர் சிலரோடு  அப்போது அங்கிருந்த வேதாந்த தேசிகரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.  அவர்களைக் காக்கவேண்டிய பாண்டியர்களோ ஐந்து கூறுகளாகப் பிரிந்து தனித்தனியே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.  ஹொய்சள மன்னர் வீர வல்லாளருக்கோ எதிர்த்து நிற்க முடியவில்லை.  என்ன செய்வது!  நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார்கள்.   அங்கேயே இருந்து மூலவரைக் காக்க வேண்டிய ஏற்பாடுகளையும் அரங்கனோடு செல்ல வேண்டியவர்களையும் அவர்கள் முடிவு செய்தனர்.  அதன்படி பிள்ளை லோகாசார்யர் தலைமையில் அரங்கனை ஸ்ரீரங்கத்தை விட்டுத் தென் திசைக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்யப் பட்டது. 

அங்கிருந்த பலருக்கும் அரங்கனைப் பார்க்காமல், அவன் ஆராதனைகளைக் காணாமல் அன்றைய நாள் கழியாது.  அரங்கனைப் பார்த்துவிட்டே அன்றாட உணவை அருந்தும் வழக்கம் உள்ளவர்கள்.  இப்படிப் பட்டவர்களிடம் தாங்கள் எடுத்திருக்கும் முடிவை எப்படிச் சொல்வது?  ஆனாலும் வேறு வழியில்லை.  மக்கள் கூட்டத்தினரிடம் முகலாயப் படையெடுப்பைக் குறித்தும், கண்ணனூர் அருகே நெருங்கி விட்டதாகவும் இப்போது செய்ய வேண்டியது அரங்கனை எவ்வாறேனும் காப்பது தான் என்றும் விவரிக்கப் பட்டது.  விழாக் காணச் சென்றிருந்த அரங்கனை அவசரம் அவசரமாகக் கோயிலில் உள்ள அணிமா மண்டபத்துக்கு எடுத்து வந்தார்கள்.  அரங்கனின் அலங்காரங்கள் களையப்பட்டன.  ஒரே ஒரு பூமாலையுடன் தோளுக்கு இனியானில் மீண்டும் அமர்த்தப்பட்டார் அழகிய மணவாளர்.  அரங்கனை ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லும் ஏற்பாடுகள் துவங்கின. 

மக்கள் கூட்டம் கூடி இருந்தாலும் யாரும் அரங்கனை விட்டுப் பிரிய மறுத்தனர்.  அனைவரின் உயிருக்கு உயிரான அரங்கனை விட்டுப் பிரிந்து நம் உயிரைக் காத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்றே நினைத்தனர்.  அவர்களிடம் அரங்கனை ஊரை விட்டு வெளியே எடுத்துச் செல்லப் போகும் செய்தியைத் தெரிவிக்கவும், அவசரம் அவசரமாக அரங்கனோடு செல்லத் தயாரானார்கள்.  அவர்களின் லக்ஷியம், வாழ்க்கையின் நம்பிக்கை, உயிர் அந்த அரங்கனிடம் தான் உள்ளது.  தோளுக்கு இனியான் என்னும் பல்லக்கில் அமர்ந்து கொண்டு நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறார் அவர்.  சிறிது நேரத்துக்குள்ளாக அழகிய மணவாளரும், உபய நாச்சிமார்களும் பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிய கோயில் நிர்வாக அதிகாரிகள்வேத்திர பாணிகள் என்னும் கூட்டத்தை ஒழுங்கு செய்வோர் மூலம் கூட்டத்தைக் கட்டுப் படுத்திய வண்ணம் அரங்கன் பல்லக்கைக் கோயிலை விட்டு நகர்த்தினார்கள்.  பல்லக்கு மெல்ல நகர்ந்தது.

“ஓ”வென்ற இரைச்சல்.  மக்கள் விசும்பி விசும்பி அழுதனர்.  திருச்சின்னங்கள் ஊத, வேதியர்கள் மறை ஓத, பிரபந்தங்கள் பாடப்பட, மங்கள வாத்தியங்கள் முழங்க, அதிர்வேட்டு சப்திக்க, யானை முன்னால் அசைந்து சென்று அரங்கன் வரவைத் தெரிவிக்க, ஊர்வலம் எழுந்தருளும் அரங்கன் இன்று எந்தவிதமான சப்தமும் இல்லாமல், அணிமணிகள் பூணாமல், பட்டாடைகள் தரியாமல், வண்ண மலர்மாலைகள் பூணாமல், எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் ஓர் ஏழை, எளியவனைப் போல் மறைந்து, ஒளிந்து இரவோடிரவாகத் திருட்டுத் தனமாகக் காவிரியைக் கடந்து தெற்கே செல்லப் போகிறார்.  அதைக் காணச் சகியாமல் கூடி இருந்த கூட்டம் ஓவென அழுது ஆர்ப்பரிக்க, அரங்கனைத் தொடர்ந்து சென்றார் பலர்;  அங்கேயே மயங்கி விழுந்தார் சிலர்.  மார்பில் அடித்துக் கொண்டு அழுதார் பலர்.  அரசனைக் காண வந்தோமே, இப்படி ஆண்டியைப் போலச் செல்கிறீரே எனக் கதறிய வண்ணம் மக்கள் கூட்டம் அரங்கன் பல்லக்கைப் பின் தொடர்ந்தது.  (இதை எழுதும்போது எனக்கும் கண்ணீர்)

அன்று ஸ்ரீராமன் நாடு விட்டுக் காடு ஏகியபோது அயோத்தியில் நிகழ்ந்த அனைத்தும் இன்று ஸ்ரீரங்கத்தில் நடந்தது.  அரங்கன் உலாக் கிளம்பியது.

அரங்கனோடு நம் உலாவும் தொடரும்.



10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண் முன் அப்படியே காட்சிகள் தெரிகின்றன...

தசாவதாரம் படமும் ஞாபகம் வந்தது...

வல்லிசிம்ஹன் said...

ஓ கீதா.எத்தனை அழகாக எழுதுகிறீர்கள்.திருமாலிருஞ்சோலையில் வைத்துக் காப்பாற்றினார்கள் அல்லவா. எத்தனை துயரம் . ஆண்டவனுக்கு அப்போதுஇத்தனை அநீதி. இப்போ காவிரிக்கு அநீதி.இதுவும் கடந்துபோகும்.கண்ணனுக்கு வந்த இன்னல்களைவிடப் பெரிய இன்னல்களை அரங்கன் ஏற்றீருக்கிறாரே.

Geetha Sambasivam said...

வாங்க திண்டுக்கல் தனபாலன், வரவுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

ஆமாம், வல்லி, போன வருஷம் எங்க சொந்த வீட்டில் தண்ணீர் வந்து வீட்டைக் காலி செய்து கொண்டு சொந்தக்காரங்க வீட்டுக்குக் குடித்தனம் போனப்போ நொந்து போயிருந்த என் மனசை அரங்கனின் இந்த உலாதான் மாற்றியது. ஆனானப் பட்ட அரங்கனுக்கே சொந்த இடத்துக்குத் திரும்ப வந்து சேர நாற்பதாண்டுகளுக்கும் மேல் ஆகி இருக்கிறச்சே, நாமெல்லாம் எம்மாத்திரம் எனப் புரிந்தது. மனசிலே தைரியத்தைக் கொடுத்தது அரங்கனின் இந்த உலா தான்.

ஸ்ரீராம். said...

//அரங்கனைக் காணாது அன்றைய பொழுது கழியாது.யாரும் அரங்கனைப் பிரிய மறுத்தனர்.//

அந்தக் காலத்தைப் பற்றி நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்நாளில் எத்தனை பேர் இப்படிப் பட்ட பக்தியில் ஆழ்கின்றனர்? யாருமே இருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். நான் என்னை வைத்து உலகை அளவிடுகிறேனோ என்னமோ? உங்களை வைத்து நீங்கள் சொல்லும்போது 'இருக்கிறார்கள் அப்படியும் இன்னும் சில பேர்' என்று சொல்லலாம். 'தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவரா அரங்கன்' என்று கேள்வி எழுப்ப அன்று யாரும் இல்லை போலும்! அரங்கன் மக்களுக்கு இதன் மூலம் என்ன செய்தி சொல்லியிருப்பார்?

ஸ்ரீராம். said...

தொடர...

Geetha Sambasivam said...

'தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவரா அரங்கன்' என்று கேள்வி எழுப்ப அன்று யாரும் இல்லை போலும்! அரங்கன் மக்களுக்கு இதன் மூலம் என்ன செய்தி சொல்லியிருப்பார்?//

ஸ்ரீராம், உங்க இந்தக் கேள்விக்குப் பதில் பெரிசா இருக்கிறதாலே பதிவா வருது. இங்கே போட்டால் கூகிளார் மிரட்டல்! :))) அரங்கன் இதன் மூலமாவது மக்கள் ஒற்றுமையாக இருக்கணும்னு சொல்லி இருப்பார்.

நெல்லைத் தமிழன் said...

ஶ்ரீராம்... "இன்றைய நாளில் எத்தனைபேர் அப்படிப்பட்ட பக்தி" - நானும் அப்படி நினைத்ததுண்டு. ரஞ்சனி நாராயணன் (அவங்க இடுகைனுதான் ஞாபகம். செயதி சரி) அவங்களோட சகோதரியைப் பற்றி எழுதும்போது நம்பருமாளை வீதி உலாவில் சேவித்துவிட்டு குடுகுடுவென்று திரும்பவும் தெருமுனையோ அல்லது பின்பக்கத் தெருவிலோ மீண்டும் ஓடிப்போய் சேவித்துவிட்டு வருவார் என எழுதியிருந்தார். (அவ்வளவு ஆசை அரங்கன் சேவையில். எனக்கு ரஞ்சனி மேடம் எழுதுன மாதிரி எழுத்த்தெரியலை. என் மனதைப் பாதித்த எழுத்து). கீதா சாம்பசிவம் மேடமும் தன் சில இடுகைகளில், நம்பெருமாள் நமட்டுச் சிரிப்போடு முகத்தை வைத்திருந்தார் என எழுதியிருக்கிறார்கள். மதியம் வெயில் சூட்டில் படுத்திருக்கும் அரங்கன் அயர்ச்சியுறக் கூடாது என்று, கர்ப்பக்கிரஹத்தின் அருகிலிருக்கும் கிணறிலிருந்து அரங்கன சேவையில் ஆழ்த்திக்கொண்டவர்கள், தினமும் கர்பக்கிரஹத்தின் சுற்றுப்பாதையில் வாளி வாளியாக நீர் ஊற்றும் காணொளியைக் கண்டிருக்கிறேன். நம்பெருமாளுக்கு சாமரம் வீசுபவர்களும் குழந்தையைப் பாதுகாப்பதுபோல சின்சியராக சாமரம் வீசுவதைக் கண்டிருக்கிறேன். நிறைந்த ஆத்மார்த்தமான பக்தி உள்ளவர்கள் நிறைய இருக்கின்றனர். எனக்கும் அந்தமாதிரி பக்தி வரணுமே என்று நாளும் நினைத்துக்கொள்வேன். ஶ்ரீரங்கத்தில் குறிப்பாக அத்தகையவர்கள் (தவறாச் சொல்லலை... கோவிலைக் காத்தான் தென் கலையான் என்ற சொல்வழக்கே உண்டு. அவங்களை, அவங்க கோவில், சிலாரூபம் இவற்றின்மேல் வைத்திருக்கிற அபிமானத்தைப் பார்த்து அசந்திருக்கிறேன். We have to come across to realize this. 12,000 பேர் கோவிலுக்காக இறக்குமளவு பக்தி நிச்சயமா அப்போது இருந்தது. இப்போதும் இருக்கும்)

நெல்லைத் தமிழன் said...

ஶ்ரீராம்... "இன்றைய நாளில் எத்தனைபேர் அப்படிப்பட்ட பக்தி" - நானும் அப்படி நினைத்ததுண்டு. ரஞ்சனி நாராயணன் (அவங்க இடுகைனுதான் ஞாபகம். செயதி சரி) அவங்களோட சகோதரியைப் பற்றி எழுதும்போது நம்பருமாளை வீதி உலாவில் சேவித்துவிட்டு குடுகுடுவென்று திரும்பவும் தெருமுனையோ அல்லது பின்பக்கத் தெருவிலோ மீண்டும் ஓடிப்போய் சேவித்துவிட்டு வருவார் என எழுதியிருந்தார். (அவ்வளவு ஆசை அரங்கன் சேவையில். எனக்கு ரஞ்சனி மேடம் எழுதுன மாதிரி எழுத்த்தெரியலை. என் மனதைப் பாதித்த எழுத்து). கீதா சாம்பசிவம் மேடமும் தன் சில இடுகைகளில், நம்பெருமாள் நமட்டுச் சிரிப்போடு முகத்தை வைத்திருந்தார் என எழுதியிருக்கிறார்கள். மதியம் வெயில் சூட்டில் படுத்திருக்கும் அரங்கன் அயர்ச்சியுறக் கூடாது என்று, கர்ப்பக்கிரஹத்தின் அருகிலிருக்கும் கிணறிலிருந்து அரங்கன சேவையில் ஆழ்த்திக்கொண்டவர்கள், தினமும் கர்பக்கிரஹத்தின் சுற்றுப்பாதையில் வாளி வாளியாக நீர் ஊற்றும் காணொளியைக் கண்டிருக்கிறேன். நம்பெருமாளுக்கு சாமரம் வீசுபவர்களும் குழந்தையைப் பாதுகாப்பதுபோல சின்சியராக சாமரம் வீசுவதைக் கண்டிருக்கிறேன். நிறைந்த ஆத்மார்த்தமான பக்தி உள்ளவர்கள் நிறைய இருக்கின்றனர். எனக்கும் அந்தமாதிரி பக்தி வரணுமே என்று நாளும் நினைத்துக்கொள்வேன். ஶ்ரீரங்கத்தில் குறிப்பாக அத்தகையவர்கள் (தவறாச் சொல்லலை... கோவிலைக் காத்தான் தென் கலையான் என்ற சொல்வழக்கே உண்டு. அவங்களை, அவங்க கோவில், சிலாரூபம் இவற்றின்மேல் வைத்திருக்கிற அபிமானத்தைப் பார்த்து அசந்திருக்கிறேன். We have to come across to realize this. 12,000 பேர் கோவிலுக்காக இறக்குமளவு பக்தி நிச்சயமா அப்போது இருந்தது. இப்போதும் இருக்கும்)

நெல்லைத் தமிழன் said...

"தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவரா அரங்கன்?" - நமக்குத்தான் முஸ்லீம் இந்து வைணவன் என்ற வேற்றுமை. அரங்கனுக்கு எல்லாரும் ஒன்றல்லவா? நமக்குத்தான் அரங்கன் நகை கொள்ளை போகிறதே, அவருக்குக் காப்பாற்றத் தெரியாதா என்றெல்லாம் கேள்வி. உலகமே அவன் வீடுதானே. நமக்குத்தான் பொன், மாணிக்கங்கள் பெரிசு. இந்த கான்செப்ட் பெருசா எழுதலாம். வாய்ப்பு இருக்கும்போது எழுதறேன்.